இந்தியாவைப் பொறுத்தவரை பக்தி, சூதாட்டம்,மது என எதுவாக இருந்தாலும் அவை மக்கள் மத்தியில் வெறி பிடிக்கும் அளவுக்குப் பரவிப் பலர் அதிலேயே மூழ்கிப் போய் அவற்றுக்கு அடிமையாகிக் கிடப்பதை நாம் காணமுடியும். இந்த வரிசையில் தற்பொழுது விளையாட்டு என்று நாம் நினைக்கும் கிரிக்கெட்கூட அதோடு சேர்ந்துவிட்டது. நானும் இந்த கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதில் மூழ்கிக் கிடந்தவன். ஒரு நாள் மேட்ச் மட்டுமல்ல: அய்ந்து நாள்கள் நடக்கும் ‘டெஸ்ட் கிரிக்கெட்’ கூட விடமாட்டேன். அதுவும், இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் பயணம் செய்து அங்கு அவர்கள் விளையாடும் ‘டெஸ்ட் மேட்ச்’சைக் கூட விட்டு வைக்க மாட்டேன். இரவு முழுவதும் கண்விழித்து மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்த காலங்கள் உண்டு. தந்தை பெரியார் கொள்கையை அறிந்த, முடிந்த அளவு வாழ்வில் பின்பற்றுகிற நானே இப்படி என்றால் மற்றவர்கள் இந்த கிரிக்கெட்டுக்கு அடிமையாக இருப்பது பற்றிச் சொல்லவா வேண்டும்!
சரி, அவ்வளவு கிரிக்கெட் அடிமையாக இருந்த நான் எப்படி இன்று ‘கிரிக்கெட் போதை’ பற்றி எழுதும் அளவுக்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறீர்கள் தானே? நான் கிரிக்கெட் போதையில் சிக்கி அடிமையாக இருந்த காலத்தில், குறிப்பாக 1997- – 2000ஆம் ஆண்டுகளில் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, திராவிடர் கழகம் சார்பாக அரசு கல்லூரிகள் முன் “மாணவர்களே பான்பராக், சினிமா, கிரிக்கெட் போதையில் சிக்கி சீரழியாதீர்!” என்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது. அந்தத் தலைப்பைப் பார்த்ததுமே நான் விழிப்புணர்வு பெற ஆரம்பித்துவிட்டேன். அதற்கு ஏற்றாற் போல, 1996 இல் உலகக் கோப்பை போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா- – இலங்கை இடையே நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் நடுவே ரசிகர்கள் வீசிய செருப்பு, கல் வீச்சு கலவரம் பார்த்தேன். பிறகு அந்தப் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் பற்றி பத்திரிகைச் செய்தி மூலம் அறிந்த பின்பு கிரிக்கெட் பார்ப்பதையே அடியோடு விட்டுவிட்டேன்.
கிரிக்கெட் என்பது போதை. அதற்கு நாம் அடிமையாகக் கூடாது என்று எழுதும் பொழுது நானே அதற்குள் சிக்குண்டு இருந்தது நினைவுக்கு வந்ததால் மேலே அதை குறிப்பிட்டுள்ளேன்.
நிற்க. கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் அதுவும் வயது வித்தியாசம் இல்லாமல் அதன் மீது ஒரு ஈர்ப்பும் மோகமும் ஏற்படக் காரணம், அதற்குக் கொடுக்கப்படும் விளம்பரம் தான். பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர், ‘சினிமா ஸ்டார்ஸ்’ ஆகியோரல்லாம் கிரிக்கெட் பார்த்து ரசித்தனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வெகு மக்களைத் தூண்டுவதும் ஒரு காரணம்.
ஒரு முறை, பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கிரிக்கெட் பார்ப்பதற்காக இந்தியா வந்தார் என்கிற செய்தியைக் கூட படித்திருக்கேன். அதிக வேலைப் பளு உள்ள இவர்களே அவை அனைத்தையும் விட்டுவிட்டு கிரிக்கெட் பார்த்தார்கள் என்கிற பொது யுக்தியை சாதாரண மக்கள் மத்தியில் திணிக்கவே கிரிக்கெட் வியாபாரிகள் இதை திட்டமிட்டுச் செய்கின்றனர். இன்றும் இது போன்ற வி.அய்.பி கள் மூலம் கிரிக்கெட் விளம்பரம் தொடர்கிறது. இதுவே வெகு மக்கள் கிரிக்கெட் போதையில் சிக்க பெரிதும் காரணம்.
எந்த ஒரு விளையாட்டும் என்பது அதிகபட்சம் ஒரு மணிநேரம் விளையாடலாம். அதுதான் அதில் பங்கேற்கும் வீரர்களுக்கும் சிறந்தது! அந்த விளையாட்டைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் நல்லது. ஆனால், கிரிக்கெட் அப்படிப்பட்ட விளையாட்டா? இல்லவே இல்லை!
அய்ந்து நாள் ‘டெஸ்ட் கிரிக்கெட்’ -இது அய்ந்து நாள் நடக்கும் (40 மணிநேரம்) அதையும் சலிக்காமல் உட்கார்ந்து பார்ப்பார்கள்.
ஒரு நாள் போட்டி – இது ஒரு நாள் முழுவதும் நடக்கும். குறைந்தது 8 மணிநேரம் தொலைக்காட்சி முன் தொலைந்து விடும்.
தற்பொழுது அய்.பி.எல் என்கிற 20 ஓவர் கிரிக்கெட் போட்டி. இதுவும் குறைந்தது 2.5 மணி நேரம் நடக்கும்.
கிரிக்கெட் விளையாடுபவர்கள் மேற்சொன்ன எந்தப் போட்டிகளில் பங்கேற்றாலும் கோடி கோடியாய் பணம் பெறுவார்கள். அதையும் தாண்டி விளம்பரம் மூலம் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். ஆனால், கிரிக்கெட் பார்க்கும் சாதாரண மக்களாகிய நமக்கு என்ன பயன்? சிந்தித்ததுண்டா?
இப்படி நம் பொன்னான நேரத்தைச் சாப்பிடும் தறி கெட்ட தற்குறி விளையாட்டு இந்த கிரிக்கெட். உயிர் போன பிறகு எப்படி திரும்பி வராதோ, அது போல கடந்து போன நேரம் திரும்பி வராது. நம் அலுவலக வேலை நேரம் 8 மணி நேரமாகும். அப்படிப்பட்ட விலை மதிக்க முடியாத நேரம் முழுவதையும் கிரிக்கெட் என்கிற விளையாட்டைப் பார்க்கச் செலவழிக்கிறோம் என்றால், இது விளையாட்டா? இல்லவே இல்லை, இது ஒரு போதை!
போதை என்பதையும் தாண்டி, அதுவும் குறிப்பாக இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி என்றால், நாடே ‘டென்ஷனாகி’ விடுகின்றது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா கும்பல் இதை ஒரு விளையாட்டாகப் பார்ப்பதை விட்டு, இந்தியா பாகிஸ்தான் போராகவே பார்க்கின்றனர். தூண்டி விடுகின்றனர். வட இந்தியாவில் மட்டும் மேலோங்கி இருக்கும் மதவெறி, இந்த இந்தியா– பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்கும் நேரங்களில் தென்னிந்தியாவில் சிறிது எட்டிப் பார்ப்பதைக் காணலாம். அப்படியென்றால், கிரிக்கெட் என்பது விளையாட்டா? இல்லவே இல்லை. ஒரு போதை!
தற்பொழுது வருடா வருடம் நடக்கும் அய்.பி.எல் போட்டி என்பது பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் பெயரில் அணிகளை உருவாக்கி (சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ்..) அவற்றுக்கு இடையில் போட்டி நடத்துகின்றனர். இப்படிப்பட்ட போட்டி நடக்கும் மைதானங்களில் நடனம் ஆட பெண்கள் நியமிக்கப்படுகின்றனர். இன்னும் பல கூத்துகள் நடந்தேறுகின்றன. அதில் ரூபாய் பல லட்சம் கோடிகள் புரளுகிறது. அதில் பங்கேற்கும் வீரர்கள் முதல் அதை விளம்பரம் செய்யும் பெரும் நிறுவனங்கள் வரை பெரும் லாபம் பெறுகின்றனர். அதனாலேயே அதற்கு ஏகப்பட்ட விளம்பரங்கள். ஏதோ ஒரு நாட்டு விளையாட்டு வீரர் சென்னை என்கிற பெயரில் விளையாடுகிறார். இதில் விளையாட்டு என்பதற்கு ஏதாவது எள் முனையளவாவது அறிகுறி இருக்கா? ஆட்டக்காரர்கள் கோடியில் புரள, இந்த மானங்கெட்ட விளையாட்டை வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பவன் அன்றைய வருமானத்தை இழக்கின்றான்.அப்போ கிரிக்கெட் என்பது விளையாட்டா? இல்லவே இல்லை. ஒரு போதை!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளை எடுத்துக் கொண்டால் கூட அதில் கிரிக்கெட்டுக்கு இடமில்லை. ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் முன்னணி வகிக்கும் நாடுகளைப் பார்த்தால் அவை பொருளாதாரத்திலும், உழைப்பிலும் முன்னிலை வகிப்பதைக் காண முடியும்.
ரஷ்யா,சீனா,ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தான் ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.அதிகப்பட்சம் ஒரு மணி, அல்லது இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்து விடும் விளையாட்டுகளை அந்த நாடுகள் தேர்ந்தெடுத்துள்ளன.கிரிக்கெட்டை அந்த நாடுகள் கண்டு கொள்ளவே இல்லை. காரணம், கிரிக்கெட் நமது நேரத்தைச் சாப்பிடுவதைக் கணக்கில் கொண்டு தான். இதனால் விளையாடுபவர்கள் மட்டுமல்ல. பார்ப்பவர்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகி விடுகின்றார்கள்.சோம்பேறி ஆகிவிடுகின்றனர். அவ்வளவு ஏன், கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் கூட மக்கள் அவரவர் வேலைகளை விட்டுவிட்டு வெறி பிடித்து இப்படித் திரண்டு வந்து கூடிக் கும்மாளம் போட்டு நேரத்தை வீணடிப்பதில்லை. ஏனென்றால், கிரிக்கெட் ஒரு விளையாட்டல்ல என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். அமெரிக்காவின் பெப்ஸி, கோகோ கோலா கம்பெனிகள் தான் இந்தக் கிரிக்கெட்டின் மூல தனமாக உள்ளன. ஆனால், அமெரிக்காவில் கிரிக்கெட் கிடையாது. புரிந்துகொள்ளுங்கள்.
இறுதியா, இந்த கிரிக்கெட் என்பது ஒரு போதை. அதற்கு அடிமையாகக் கூடாது என்பதற்கு – அதில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக – கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சொல்லிய சிலவற்றை நினைவு படுத்துகிறேன்.
“ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் டி.வி.முன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கும் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது. கிரிக்கெட் குறித்து பெர்னாட்ஷா, 11 முட்டாள்கள் ஆடுகிறார்கள். அதை 11 ஆயிரம் முட்டாள்கள் கண்டுகளிக்கிறார்கள் என்று கூறியிருந்தார். அவர் கூறியிருந்த 11 ஆயிரம் முட்டாள்களில் நானும் ஒரு முட்டாளாகிவிட்டேன். பெர்னாட்ஷாவின் வாசகங்கள் தற்போது, ஒப்புக் கொள்ளக் கூடிய வாசகமாகவே ஆகிவிட்டது. கிரிக்கெட் ஆடுகிறேன் என்ற பெயரில் திரை மறைவில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தோற்றுப் போகிறேன், இவ்வளவு தொகை கொடு என்று லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் பெற்று தேசத் துரோகம் செய்து விட்டார்கள்.இவர்கள் துரோகிகள். கோடி கோடியாகக் குவித்து நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் அவமானம் தேடித் தந்தவர்கள். இன்னமும் தங்களை உத்தம புத்திரர்களாகக் காட்டிக் கொண்டு, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூதாட்டக்காரர்களின் கையில் இதுவரை இருந்தது கிரிக்கெட் மட்டையல்ல: டாலரும், பவுண்டும் உறிஞ்சிய அட்டை என்பது தெளிவாகி விட்டது’’.
இது கிரிக்கெட்டில் நடைபெற்ற முறைகேடு பற்றிய செய்தி அறிந்து, 2000ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த பொழுது கலைஞர் சொன்னது.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது, கிறுகிறுக்கும் மதுவின் போதையை விட,பொருளைச் சூறையாடும் சூதாட்டத்தின் போதையை விட இந்தக் கிரிக்கெட் போதை மிகக் கொடுமையானது.இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை உள்ள நாடுகளில் இது போன்ற கிரிக்கெட் போதையைத் தூண்டி விட்டால் பணம் பார்க்கலாம் என்பதுதான் பன்னாட்டு கம்பெனிகள் திட்டம். அந்தப் போதையில் வீழ்ந்து நாம் கிரிக்கெட் அடிமைகளாகி விடக்கூடாது. கிரிக்கெட் விளையாடுபவர்கள் விளையாடட்டும். அதில் யார் வெற்றி – தோல்வி, அதில் என்ன நடந்தது என்பதை விளையாட்டுச் செய்திகள் மூலம் அறிந்து கொள்வோம். அதுதான் புத்திசாலித்தனம்!