கே: உச்சநீதிமன்றமே மத்தியில் ஆளும் பாஜக அரசின் அஜெண்டாக்களை நிறைவேற்ற பச்சையாக நீதியைக் கொன்று தீர்ப்பு வழங்கும் நிலையில் நீதியை நிலைநாட்டுவது எப்படி?
– கந்தன், சிவகாசி
ப: மக்கள் மன்றம்தான் இறுதி பதில்! நிலைமை இப்படியே போகாது! ஏதாவது மாறும் நிலையும் ஏற்படும் _ மக்கள் மன்றத்தின் விழிப்புணர்வுதான் எல்லாவற்றிற்குமான மூலபலம்! அதை அனைவரும் ஒருங்கிணைத்து திரட்டிட வேண்டும்.
கே: அறுபது சதவிகித வாக்குகளுக்கு மேல் தி.மு.க.விற்குக் கிடைக்கும் நிலையில் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் அவர்கள் எச்சரிக்கையுடன் பேச வேண்டாமா? எதிரிகள் அந்தரத்தில் கோட்டை கட்டுபவர்கள் என்பதை மறக்கலாமா?
– மகிழ், சைதை
ப: உண்மைதான். அவரே பொறுப்பை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். என்றாலும் எப்போதும் பொறுப்பில் உள்ளவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதனை மற்றவர் பின்பற்ற வழிகாட்டிகளாக அமைய வேண்டும். அதுதான் இயக்கத்தினை வலுவுள்ளதாக ஆக்கும்.
கே: தமிழகத்தில் கொலை, கொள்ளை, வறுமையால் தற்கொலை போன்றவை எல்லை மீறி நாளும் நடக்கிறதே… அ.தி.மு.க. அரசுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
– ஞானசேகரன், வேலூர்
ப: எந்த அறிவுரையையும் ஏற்கத் தயாராக இல்லாத அரசிடம் அறிவுரை வீண். மாற்றம்தான் ஒரே மருந்து. அதனை நோக்கி மக்களை ஆயத்தப்படுத்துவதே அறிவர் தொழிலாக அமைய வேண்டும்.
கே: 7.5 சதவிகித மருத்துவ உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது எதைக் காட்டுகிறது?
– நடராசன், மதுரை
ப: தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. அரசின் “சக்தியை’’ காட்டுகிறது. அரசியல் அடிமைத்தனத்தைக் காட்டுகிறது. ‘அம்மா அரசு’ என்பது உண்மையில் இப்படியா இருக்கும்? என்று அவர்களைக் கேளுங்கள்.
கே: பா.-ஜ.க. தமிழகத் தலைவர் முருகன், பெரியாரின் பெரும்பாலான கொள்கைகளை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் என்றதற்கு அகில இந்திய பா.ஜ.க. தலைவர்கள் கண்டித்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
– சோமு, அம்பத்தூர்
ப: பா.ஜ.க.விலும் பார்ப்பனர்_பார்ப்பனரல்லாதார் பிரச்சனை வெடிக்கக் காரணமாகி நிற்கிறார் பெரியார்! பெரியார் புகாத இடமே இல்லை. ஆரிய – திராவிடப் பிரச்சனையின் வெளிப்பாடு ஒரு வகையில் இது! ‘பெரியார்’ என்று கூறினாலே பூணூல் திருமேனிகளுக்கு அதிர்ச்சி தருகிறது போலும்!
கே: கிராமசபைக் கூட்டங்களை திடீரென இரவோடு இரவாக தமிழக அரசு ஒத்தி வைத்தது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மீது கொண்டுள்ள அச்சத்தின் காரணமாகவா?
– செந்தில், மணலி
ப: பா.ஜ.க. அரசின் வேளாண்மைச் சட்டங்களைக் கண்டித்து கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டால் தங்களது டில்லி எஜமான் கோபித்துக் கொள்வார் _ கோபித்தால் தங்கள் நிலை என்னவாகும் என்று அவர்களை உலுக்கும் அச்சமே அடிப்படை! மகா வெட்கக் கேடு! இதற்கு கொரோனோ ஒரு சாக்கு என்பது அதைவிட பெரும் கேலிக்கூத்து!
கே: ஜி.எஸ்.டி தொகையில் மாநிலத்திற்குரிய பங்கைக் கொடுக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டப்படி எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?
– மது, திருப்பூர்
ப: தங்களுக்குரிய அதிகாரத்தைக் கூட மறந்து ‘பிச்சாந்தேகி’ என்று சலுகை போல கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. இந்த நிலை மாறவேண்டும். முதுகெலும்பை நிமிர்த்தி உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்.
கே: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தமிழக தலைவர் உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண் கூட்டு வல்லுறவு செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண நிகழ்வு எனக் கூறுவது பச்சைத் துரோகமல்லவா?
– யாழினி, தருமபுரி
ப: விபீஷண ஆழ்வார்கள் எப்போதும் இராமன் பக்கமே! இராவணனின் சகோதரன் என்பதை இழந்ததால்தானே ஆழ்வார் பட்டம். அதை ஒப்பிட்டால் விடை தானே கிடைக்கும்!
கே: திருக்குறள் ‘ஹிந்து’ சமய நூல் என்றும், திருவள்ளுவர் ‘ஹிந்து’தான் என்றும் ஆர்.பி.வி.எஸ்.மணியன் என்பவர் உளறியுள்ளது பற்றி…
– கல.சங்கத்தமிழன், செங்கை
ப: எம்.எஸ்.கோல்வால்கர் _ ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியதைத்தான் இவர் வாந்தி எடுத்துள்ளார்! பொருட்படுத்த வேண்டாம். சிங்கக் கர்ச்சனை முன் நரிகளின் உளறல்கள்!