முனைவர் வா.நேரு
மதுரையில், ஒரு கல்லூரியில் உளவியல் படிக்கும் ஒரு மாணவி சில பதில்களுக்கான கருத்துகளை என்னிடம் கேட்டார். இந்தக் கேள்விகள் எல்லாம் அவர் கடவுள் நம்பிக்கையாளர்களிடம் கேட்டது. கடவுளை நம்பக்கூடிய (பல மதம் சார்ந்தவர்கள்) நம்பிக்கையாளர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பேட்டி எடுத்திருக்கிறார். அவர்கள் சொல்லியிருக்கக்கூடிய பதில்கள், கருத்துகளுக்கு,அவருக்குத் தெரிந்த நாத்திகர் என்ற முறையில், என்னிடம் கருத்துகள் கேட்டார். எனக்கும் கூட ஓர் ஆர்வம் வந்தது. கடவுளை நம்பாத நம்மைப் போன்றோரைப்பற்றி கடவுளை நம்புகிறவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்? அதுவும் மதுரையில் உள்ள புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியில் இப்படி ஒரு செய்முறைப் பயிற்சி (Project) கொடுத்திருக்கிறார்களே, நன்று என நினைத்து அவருக்கு பதில்கள் சொன்னேன்.
1. கடவுளை நம்பாதவர்கள் மிகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் சொல்லியிருப்பது சரியா? எனக்கேட்டார்.
மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார்கள். தங்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே நாத்திகர்களாக இருக்க முடியும், தந்தை பெரியார், அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பாருங்கள்..இன்னும் தெளிவாக நீங்கள் இதனை உணர்வீர்கள் என்றேன்.
2. “நாத்திகர்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் (Proof) கேட்பார்கள். எல்லாவற்றையும் அறிவியல் அடிப்படையில்தான் பார்க்கவேண்டும் என்று சொல்வார்கள்.”
உண்மைதான். நாத்திகர்கள் நாங்கள் ஆதாரங்கள் அடிப்படையில்தான் எதையும் சரி என்றோ தவறு என்றோ முடிவுசெய்கிறோம்.வெறுமனே நம்பிக்கை அடிப்படையில் நம்புவதில்லை.அறிவியல் அடிப்படையில் அனைத்தையும் பார்க்கவேண்டும் என்று சொல்வார்கள் என்பதும் சரியே.
3. எல்லா நாத்திகர்களும் ஆத்திகர்களாக இருந்தவர்கள்தான். அவர்கள் கடவுளிடம் சில வேண்டுதல்களை வைத்திருப்பார்கள். அவை நிறைவேறாமல் இருந்திருக்கும்..அல்லது அவர்களது குடும்பத்தில் ஏதாவது விபத்து , உயிரிழப்பு போன்றவை நடந்திருக்கும். அதனால் கடவுளின் மேல் உள்ள வெறுப்பினால் நாத்திகர்களாக மாறியிருப்பார்கள் என்று சொன்னார்கள்; நீங்கள் அப்படித்தான் நாத்திகர்களாக மாறினீர்களா?
இல்லை. அப்படி நான் மாறியவன் இல்லை. எனது அப்பா கடவுள் நம்பிக்கையாளர்தான். கடவுள் இல்லை என்று படிக்கும் காலத்தில் தோன்றியது. திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிப் பேராசிரியர்.கி.ஆழ்வார் அவர்கள் நாத்திகர் – பெரியார் கொள்கைக்காரர். மிக நேர்மையான, எடுத்துக்காட்டான மனிதர்.அங்கு நான் இளம் அறிவியல் படித்தபோது அவரிடம் இருந்து பெரியார் புத்தகங்கள் பெற்றுப் படிக்க ஆரம்பித்தேன். படிக்க,படிக்க உண்மை புலப்பட ஆரம்பித்தது. நான் நாத்திகவாதி ஆனேன். நான் கடவுளிடம் வேண்டி,அவர் நிறைவேற்றாததால் அப்படி எல்லாம் மாறவில்லை. சில பேர் அப்படி வேண்டுதல் கேட்டு, ஒன்றும் நடக்கவில்லை என்பதால் மாறியிருக்கலாம். அப்படி மாறினால் கூட தொடர்ந்து கடவுள் தத்துவத்தைப் பற்றி படித்து, பொய்மை கட்டுக்கதைகளை உணர்ந்தால்தான் தொடர்ந்து அவர்கள் நாத்திகர்களாக இருக்க முடியும். கடவுள் இல்லை என்று சொல்வது வெறுப்பினால் வருவது அல்ல,மாறாக உண்மையைத் தேடுவதால் வருவது. கடவுள் இருப்பதாகவும்,அவர் செய்யவில்லை என்றும் நினைத்து மாறுபவர்கள் நிலையான நாத்திகவாதிகளாக இருக்க மாட்டார்கள்.என்னைச்சுற்றி இருக்கும் நாத்திகர்களிடம் எப்படி நீங்கள் நாத்திகர்களாக மாறினீர்கள் என்ற கேள்வியைக் கேட்பதற்கான தூண்டுதல் கொடுத்திருக்கிறீர்கள்.நன்றி.
நாத்திகர் வீட்டுப்பிள்ளைகள் நாத்திகர்களாகத்தான் வளர்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஆத்திகர்களாக இருந்து நாத்திகர்களாக மாறுபவர்கள் இல்லை. எங்களது இயக்கத்தில் மூன்றாம் தலைமுறை, நான்காம் தலைமுறையென பரம்பரையாக நாத்திகவாதிகளாக வாழ்கிற குடும்பங்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் இது பொருந்தவே பொருந்தாது.
4. கடவுளை நம்பாதவர்கள், தப்பை ஒத்துக்கொள்வார்கள். தப்பு நடந்தால், அதற்கு பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் உண்மைதான், சரியாகத்தான் ஆத்திகவாதிகள் நாத்திகவாதிகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.ஆத்திகவாதிகள் பாவம் செய்தால், பாவ மன்னிப்பு பெற்றுக்கொள்ளலாம்.மறுபடியும் பாவம் செய்யலாம். இந்து மதத்தில் மகாமகக் குளத்தில் குளித்து விட்டால் பாவம் எல்லாம் போய்விடும்..செய்த தப்பை எல்லாம் கடவுள் மன்னித்துவிடுவார் என்று நம்புகிறார்கள். ஆனால், நாத்திகவாதிகளைப் பொறுத்தவரை தப்பு செய்யக்கூடாது மீறிச்செய்தால் அதற்கான விளைவுகளை,தண்டனைகளை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கை என்பது ஒருமுறைதான், முறையாக,மகிழ்ச்சியாக, மற்றவர்களுக்கு உதவியாக வாழவேண்டும் என்பதனை எங்களைப் போன்றவர்களுக்கு பெரியாரியல் சொல்லிக்கொடுத்திருக்கிறது.
5. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை இருக்கும் என ஆத்திகவாதிகள் சொல்லுகிறார்கள்..உங்களுக்கு அப்படி எதன் மீது நம்பிக்கை இருக்கிறது?
எனக்கு உடன் இருக்கும் மனிதர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நாம் அன்பு செலுத்தினால் அவர்களும் நம் மீது அன்பு செலுத்துவார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது. எல்லா நாத்திகர்களுமே தங்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள். நேர்மறையான சிந்தனைகள் நல்ல விளைவுகளைத் தரும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. எங்கிருந்தோ ஒருவர் இயக்குகிறார்,அவர்தான் எனது வாழ்வின் நல்லது கெட்டதை தீர்மானிக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.அடுத்த உலகம் என்பது பற்றிய நம்பிக்கை இல்லை. சொர்க்கம், நரகம், பேய்,பிசாசு, ஜோதிடம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.பெரியாரியல், நாத்திகம் என்பது ஒரு வாழ்வியல் நெறி. அது நம்மை செம்மைப்படுத்தும்,செழுமைப்படுத்தும்.
6. நாத்திகர்கள் மற்றவர்கள் சொல்வதை எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்நான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பார்கள் என்று சொல்கின்றார்கள்.
மனித வாழ்க்கையில் மற்றவர்களைப் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் நாத்திகர்கள்.
குடும்பத்தில்,உறவுகளிடத்தில் பணம், சொத்து போன்றவற்றில் விட்டுக் கொடுத்து பெருந்தன்மையாக வாழ்பவர்கள் நாத்திகர்கள்.திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகளைப் படித்துப் பாருங்கள். மனித உறவுகளைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் ,விட்டுக்கொடுத்தல் பற்றியும் எத்தனை செய்திகளும் அறிவுரைகளும் இருக்கிறது என்று பாருங்கள். ஆனால் மற்ற எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்கும் நாத்திகர்கள், கொள்கை என்று வருகின்றபோது விட்டுக்கொடுப்பதில்லை.மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்வதில்லை. மறுப்பினைச் சொல்வார்கள். ஆதாரங்களைக் கேட்பார்கள். அறிவியல் அடிப்படையற்ற செய்திகளை சரி என்று சொல்லமாட்டார்கள். உண்மையில் பிடிவாதம் பிடிப்பது ஆத்திகர்கள்தான். அடுக்கடுக்கான உண்மையான ஆதாரங்களை – செய்திகளைச் சொன்னாலும் அவர்கள்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை.
7. மிக சுதந்திரமாக (Highly Independent…) நாத்திகர்கள் இருப்பார்கள், இருக்க விரும்புவார்கள் எனச்சொல்கிறார்கள்
தனித்துவமான, சுதந்திரமானவர்களாக இருப்பார்கள் எனச்சொல்கிறார்கள் உண்மைதான். தந்தை பெரியார் அவர்கள்,
“மனிதன் தானே பிறக்கவில்லை. எனவே அவன் தனக்காக மட்டும் வாழக்கூடாது” என்றார். அப்படி சமூகத்திற்காக உழைக்கக்கூடிய நாத்திகர்கள்,சுதந்திரமானவர்களாகத்தான் இருப்பார்கள். தனித்துவமாக இருப்பதால் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். இந்தக் கணிப்பு சரியென்றே நினைக்கின்றேன்.
ஏறத்தாழ ஒரு 45 நிமிடங்கள் இந்த உரையாடல் நடந்தது. மாணவர் என்பதாலும் ,பார்ப்பன வீட்டுப்பெண் என்பதாலும் சில கேள்விகளை அவரும் கேட்டார்.
கடவுள் இல்லை என்பதனை நாத்திகர்களால் நிரூபிக்க முடியாது என்ற கருத்தைச்சொல்கிறார்கள் என்றார்.
எனது வீட்டு வரவேற்பறையில் நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். ஒருவர் வருகிறார். நாம் உட்காந்திருக்கும் இந்த அறையின் நடுவில் ஒரு மிகப்பெரிய மர அலமாரி இருக்கிறது என்று சொல்கிறார். நாம் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாமல் வெறும் தரையாக இருக்கிறது. ஆனால் அவர் ஒரு 100 சதவிகித நம்பிக்கையோடு இல்லை, மர அலமாரி இருக்கிறது என்று சொல்கிறார். யார் இப்போது நிரூபிக்கவேண்டும்.? சொல்லுங்கள் என்றவுடன், “இருக்கிறது என்று சொல்பவர்தான் நிரூபிக்க வேண்டும் “.என்றார் மாணவி. அதனைப்போலத்தான் கடவுள் இல்லை என்று தெரிகிறது. அதனால் இல்லை என்று நாங்கள் சொல்கிறோம்..ஆனால் ஆத்திகவாதிகள் கடவுள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்அப்படியானால் இருக்கிறது என்று சொல்பவர்கள்தானே நிரூபிக்கவேண்டும். ஆனால் இல்லை என்று நிரூபி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இல்லை அதனால் இல்லை என்று சொல்கிறோம்.அவ்வளவுதான்.
8. கடவுள் இல்லை என்பதனை ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும்? அவரவர் நம்பிக்கை என்று விட்டுவிடலாமே ?
கடவுள் இருக்கிறார் என்பதே பிரச்சாரத்தால் நிலை நிறுத்தப்படுவதுதான். எந்த மத வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் அது ஒரு மத,கடவுள் பிரச்சார வாகனம்தான். மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக மீண்டும் மீண்டும் கடவுள் குறித்து பொய்ப்பிரச்சாரத்தை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
நாத்திகவாதிகள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்வது மனித நேய அடிப்படையில்தான். இல்லாத கடவுளை நம்பி,மனிதர்கள் தங்களுக்குள் மதச்சண்டைகளை போடுகிறார்கள். உலகப் போர்களினால் அழிந்த உயிர்களைவிட உலகில் மதப்போர்களினால் அழிந்த உயிர்கள் அதிகம்.சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத் நகரில் நடந்த மதக்கலவரத்தில், 3 வயதுக் குழந்தை முகத்தில் வெட்டப்பட்டு கொல்லப்பட்டது. மிகப்பெரிய குடிபோதையில் உள்ளவன் கூட 3 வயதுக் குழந்தையை இப்படிக் கொல்ல மாட்டான். ஆனால் மதபோதை இப்படிக் கொல்ல வைக்கிறது. அந்தக் குழந்தை என்ன அறியும்? என்ன கொடுமைஏன் கொல்லப்படும் குழந்தையை கடவுள் வந்து தடுக்கவில்லை? கடவுள் என்று ஒரு ஆள் இருந்தால், அவன் அனைத்து வல்லமைகளும் உடையவன் என்றால் வந்து குழந்தை கொல்லப்படுவதை தடுத்திருப்பான் அல்லவா? தடுக்கவில்லையே. ஏனென்றால் கடவுள் இல்லை. இந்த உண்மைகளை மக்கள் மத்தியில் சொல்லவேண்டியிருக்கிறது.அதனால் மக்களின் நல்வாழ்விற்காக, மக்களின் ஒற்றுமைக்காக,மனித நேய அடிப்படையில் கடவுள் இல்லை என்பதனை பிரச்ச்சாரம் செய்யவேண்டியிருக்கிறது.
எத்திஸ்ட்(ATHEIST)களுக்கும் அக்னாஸ்டிக்குகளுக்கும் என்ன வேறுபாடு? நாத்திகவாதிகள் வெளிப்படையாக கடவுள் இல்லை என்று சொல்லி, அதனை வெளிப்படுத்துபவர்கள். அக்னாஸ்டிக்குகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருக்கிறதா? இல்லையா என்பதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொல்பவர்கள்.
இந்தியா முழுவதும் நாத்திகர்கள் இருக்கிறார்கள்..அவர்கள் பல மாநிலங்களில் அமைப்புகளாக இருக்கிறார்கள். மொத்தம் இந்தியா முழுவதும் இருக்கிற 78 நாத்திக அமைப்புகளை இணைத்து இந்திய நாத்திக அமைப்புகளின் கூட்டமைப்பு (FIRA) இருக்கிறது. இதனுடைய தலைவராக இருப்பவர் திரு.நரேந்திர நாயக். இவர் பிறப்பால் ஆரியர். 2006-இல் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு , முழுக்க முழுக்க ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சி நடத்தி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துப் பிரச்சாரம் செய்கிறார். சாய்பாபா போன்ற சாமியார்கள் கையில் இருந்து ஒரு லட்டு எடுத்துக்கொடுத்தால், இவர் தனது கையில் இருந்து இரண்டு லட்டு எடுத்துக்கொடுப்பார். இவரது உயிருக்கு மிரட்டல் இருக்கிறது.
மகாராஷ்டிராவைச் சோர்ந்த நரேந்திர தபோல்கர், அவரும் பிறப்பால் ஆரியரே. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அமைப்பை ஏற்படுத்தி விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தார்.சாமியார்களின் பொய்,பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். அவர் ஒரு டாக்டர்.2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாறு முழுக்க உண்மையைக்கூறும் நாத்திகவாதிகள் கொல்லப்படுகிறார்கள்.கடவுள் இல்லை என்று சொன்னால் மரண தண்டனை விதிக்கும் சட்டம் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருக்கிறது. அங்கு நீங்கள் கடவுள் இல்லை என்று சொன்னாலே கொல்லப்படுவீர்கள். அப்படிப்பட்ட இடங்களில் இருப்பவர்களுக்கு நெருக்கடி அதிகம். அவர்களால் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்ய இயலாது. அதே நேரத்தில் கடவுள் இருக்கிறார் என்று சொல்ல அவர்களது அறிவு ஒத்துக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட இடத்தில் கடவுளைப் பற்றிக் கண்டுகொள்ளாத, கவலைப்படாத தன்மையை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் அக்னாஸ்டிக் என்று அழைக்கப்படுகிறார்கள்.
எங்களது தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின் உயிருக்கு நான்குமுறை குறிவைக்கப்பட்டது. அய்யய்யோ, நம்மைக் கொல்ல முயற்சி செய்துவிட்டார்களே என்று வீட்டிற்குள் முடங்கிவிடவில்லை. தொடர்ந்து அவர் கடவுள் இல்லை என்பதனை, பிரச்சாரம் செய்துகொண்டுதான் உள்ளார்.
“கடவுள் இல்லை என்று சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்,இல்லையா அங்கிள்..” என்றார்.. ஆமாம்,கட்டாயம் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் நமக்கு எதிரான கருத்தைச் சொல்வார்கள். உறவினர்கள் எதிராகச் சொல்வார்கள். சமூகம் நிர்ப்பந்திக்கும். இதையெல்லாம் எதிர்த்து தொடர்ந்து தைரியமாக உண்மைக்காகப் பணியாற்றுபவர்கள்தான் நாத்திகர்கள். ” என்றேன். “மிக விரிவாக கருத்தினைச் சொன்னீர்கள். எனக்கும் நாத்திகர்களைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. நன்றி, என்று கூறி விடைபெற்றுக்கொண்டார்.