கவிதை : இந்தி எதற்கு?

அக்டோபர் 16 - 31,2020

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

சீர்மிகுந்த நாட்டினிலே

 இந்தி எதற்கு?

சிக்கலினை வளர்ப்பதற்கு

 ஆட்சி எதற்கு?

 

ஊர்கள்தோறும் வடவர்இந்தி

 ஓட்டம் எதற்கு?

ஒற்றுமையைக் கெடுப்பதற்கு

 ஆட்சி போதாதோ?

 

சூழ்ச்சியொடும் இந்தியினைக்

 கொணர்வ தெதற்கு?

தொல்லையினை விலைகொடுத்து

 வாங்கல் எதற்கு?

 

வெற்றிபெற்ற தமிழிருக்க

 இந்தி எதற்கு?

வீரர்களின் தோள்தினவால்

 வீழ்ச்சியுறற்கா?

 

கற்பதற்கு வழிகளில்லை

 கலகம் எதற்கு?

காப்பதற்குத் திட்டமில்லை

 கருத்துமில்லையே,

 

தெம்பில்லாத மக்களிடை

 தீமை எதற்கு?

திராவிடத்தில் ஒற்றுமையைத்

 தீர்ப்பதெதற்கு?

 

வம்புசெயும் தீங்குவட

 இந்தி எதற்கு?

வளரும்இளம் தலைமுறையை

 ஒழித்துக் கட்டவா?

 

அருவருப்பு வறுமையினை

 அறுக்க மாட்டாமல்

அதிகார வாள்எடுத்தே

 அச்சுறுத்தல் ஏன்?

 

கரும்பிருக்க கனியிருக்க

 வேம்பும் எதற்கு?

கன்னித்தமிழ் இருக்க இந்திக்

 கழுதை எதற்கு?

 

தாழ்வுயர்வு மாறவில்லை

 சாதி சமயத்தின்

தறுதலைகள் ஒடுக்கவில்லை

 தலைமை எதற்கு?

 

வாழ்வுயர்த்தும் தாய்மொழியின்

 வன்மை இருக்க

வடமொழியின் வைப்பாட்டி

 இந்தி எதற்கு?

 

கமழ்உரிமை விடுதலையின்

 கட்ட விழ்க்காமல்

கலக நச்சுக் கண்ணீர்ப்புகை

 இந்தி கலப்பதேன்?

 

தமிழ்மொழிக்கே உலகையாளும்

 தகுதியிருக்கு

தமிழ்மகனே இந்திப்பாம்பின்

 தலையை நறுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *