வடமாநிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகம் கான்ஷிராம் முழக்கம்!
கி.வீரமணி
16.08.1994 ‘தடா’ சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு இருந்த கோவை இராமகிருஷ்ணன் உள்பட 9 பேர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் தமிழக அரசு கைது செய்து சிறையிலடைத்துள்ளது. அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசை கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அதில்,
கோவையில் ‘தடா’கைதிகளாக சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்த கோவை இராமகிருஷ்ணன், ஆறுச்சாமி, சண்முகம், கவுரிசங்கர், லோகநாதன், ஜெயபால், ரவி மற்றும் சிலர் உள்பட 9 பேர்களை கோவை ‘தடா’ நீதிமன்ற நீதிபதி அவர்கள் ‘தடா’ சட்டத்தின்படி அவர்கள் மீது சாட்டப்பெற்ற குற்றச்சாட்டுகள் சட்டப்படி நிரூபணம் ஆகவில்லை என்று கூறி, பல சட்டப் பிரிவுகளையெல்லாம் விளக்கி 112 பக்கங்கள் தீர்ப்பு எழுதி விடுதலை செய்துள்ளார் – ஒருவாரத்திற்கு முன்பு.
அவர்களது விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – அப்பீல் செய்யப்போவதாக தமிழக அரசின் சார்பில் காவல்துறை டைரக்டர் – ஜெனரல் திரு. சிறீபால் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது சில நாள்களுக்கு முன்பு நாளேடுகளில் வந்துள்ளன.
‘தடா’ சட்டத்தின் விதிகளின்படி இவ்வழக்கின் சாட்சி சட்டப்படி சரி இல்லை என்று விரிவாக, விளக்கமாக நீதிபதி அவர்கள் ஓர் ஆழமான தீர்ப்பைத் தந்துள்ள நிலையில், தமிழக அரசு, அவர்களை பழி வாங்க வேண்டும் என்பதுபோன்று அதற்கு எதிராக அப்பீல் செய்வோம் என்று கூறுவது, மனித உரிமைக் கண்ணோட்டத்திலும், மனிதநேய அடிப்படையிலும், தேவையற்றதும், முறை அற்றதும் ஆகும்.
ஏற்கெனவே இதுபோன்ற இரண்டு, மூன்று ‘தடா’ வழக்கு கைது ஜாமீன் வழக்கில் தமிழக அரசு வெற்றி பெறவில்லை என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.
‘தடா’ சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்ற உரத்த சிந்தனை தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ரங்கநாத்மிஸ்ரா அவர்களால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. இப்படி நாடே மனித உரிமைகள் பறிப்பு குறித்தும், கறுப்புச் சட்டங்கள் குறித்தும் மிகப் பெருங்கவலையும், அக்கறையும் கொள்ளுகின்றன. வடநாட்டில் உள்ளதுபோல தமிழ்நாடு இல்லை: தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று ஒருபுறம் தமிழக அரசின் சார்பில் கூறிக்கொண்டே மறுபுறம் ‘தடா’ போன்ற காட்டுமிராண்டித்தன சட்டத்தைப் பிரயோகப்படுத்துவது மக்களாட்சிக்கு மாண்பாகாது.
சிறையில் அடைக்கப்பட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசினையும், குறிப்பாக தமிழக முதல்வர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.
16.08.1994 மேற்கு வங்க மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பொதுக்கூட்டம், பேரணியில் கலந்து கொண்டேன். கூட்டத்திற்கு தேசிய சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் யாதவ் எம்.பி. தலைமை வகித்தார். மேற்கு வங்க மாநில ஒடுக்கப்பட்ட அமைப்பின் செயலாளர் கார்த்திக் சந்திர போஸ் அனைவரையும் வரவேற்றார். 18 சமூக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற பேரணி – பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் மற்றும் சமூக அமைப்பின் தலைவர்கள்
அங்கு உரையாற்றுகையில், தமிழ்நாடு இந்தியத் துணை கண்டத்திலேயே சமூகநீதிக் கொள்கைக்கு வழிகாட்டும் மாநிலம், தமிழ்நாட்டில் தான் இடஒதுக்கீடு 69 சதவிகிதம் இருந்து வருகிறது என்று கூறிய போது மக்கள் பலமாக கைதட்டி வரவேற்றனர். அதனை மேற்கு வங்க மாநிலத்திலும் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கூறுகையில், பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களும் ஆமோதித்து பெருத்த கரவொலி எழுப்பினர். மண்டல் குழுப்பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள 27 சதவிகிதத்தையாவது மேற்கு வங்கத்தில் அமல்படுத்த வேண்டும் என எடுத்துக் கூறினேன்.
டெல்லியில் சமூக நலத்துறை அமைச்சர் சீதராம் கேசரி
உடன் உரையாடும் ஆசிரியர்
முன்னதாகப் பிற்பகல் 2:00 மணிக்கு மேற்கு வங்க ஆளுநர் திரு.ரெகுநாத ரெட்டியை 18 பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளின் தலைவர்களுடன் சந்தித்தோம். அப்போது என்னை திரு.சந்திரஜித் யாதவ் அறிமுகப்படுத்த முயன்ற போது மேற்கு வங்க ஆளுநர்,
“வீரமணியைப் பற்றி நான் அறிவேன். நானும் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன்தான்’’ என்ற ஆளுநர் மகிழ்ச்சியோடு தமிழிலேயே பேசினார். பெரியார் பற்றி ஆங்கில நூல்களை ஆளுநருக்கு வழங்கினோம்.
மேற்கு வங்க ஆளுநர் திரு.ரெகுநாத ரெட்டியை சந்தித்து
மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை
மனு தரும் ஆசிரியர் உடன் சந்திரஜித் யாதவ்
17.08.1994 அன்று புதுடில்லியில் சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரியை சந்தித்து, அய்.பி.எஸ், அய்.ஏ.எஸ்களுக்கான நுழைவுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவிகிதம் மட்டுமே இடம் கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினோம். அடுத்து முக்கிய தேர்வு, நேர்முகப் போட்டி எல்லாம் கடந்து வெற்றி பெறுகிறவர் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும். அதனால் நுழைவுத் தேர்விலும் – பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தது 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அவரிடம் கொடுத்தேன். அவரும் அதில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.
சி.சிகாமணி – ச.மோகனாவுக்கு வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவிக்கும் ஆசிரியர்
23.08.1994 சென்னை எழும்பூர் மோத்தி மகாலில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைத் தலைவர் சி.சிகாமணி மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். மணமக்கள் சி.சிகாமணி – ச.மோகனாவுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து உரையாற்றுகையில்,
நாளும் கிழமையும் பார்க்காமல் நடைபெறுவதே தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைத் திருமண முறையாகும். லண்டன் தொலைக்காட்சி பி,.பி.சி.யில் இருந்து என்னைப் பேட்டி காண்பதற்காகப் பெரியார் திடலுக்கு வந்தார்கள். அவர்களிடம் கழகத்தின் சமூகப்பணியைப் பற்றியும், சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றியும் விளக்கிக் கூறினேன். அங்கு நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணத்தையும் அவர்கள் படம் எடுத்தார்கள். இன்றைக்கு டில்லியில் இருந்து லண்டன் பி.பி.சி.நிருபர் ஆன்ட்ரூ ஒயிட் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்த போது அங்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தைப் பார்த்து, நானும் அதுபோல சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். லண்டனில் இருக்கும் பி.பி.சி. நிருபர் இதுபோன்ற திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் இந்த அளவுக்கு உலக மக்களையும் கவர்ந்துள்ளது என வாழ்த்துரையில் குறிப்பிட்டோம்.
கோ.இமயவரம்பன்
28.08.1994 சென்னை சைதாப்பேட்டை வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயல் வீரர் தே. தமிழ்ச்செல்வன் – விஜயாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.
1.09.1994 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று நடத்தினேன். கனத்த உள்ளத்தோடு கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கலந்து கொண்டார். அந்தப் படத்திறப்பில் உரை நிகழ்த்துகையில், பேச இயலாமல் கண் கண் கலங்கியபடி பேசினேன். அதிக துக்கத்தினால் சில நேரம் பேசமுடியாமல் நின்றேன். புலவர் அவர்கள் மறைவின் போது குழந்தைகள் கதறி அழுத காட்சிகள் கண்முன்னே நிற்கிறது. அதுமட்டுமல்ல; இவர்களுக்கெல்லாம் தாயாக, தந்தையாக, அண்ணனாக, தாதியாக, ஆசிரியராகத் திகழ்ந்தார்கள். இந்தக் கட்டடங்கள் எல்லாம் இந்த அளவுக்கு உருவாகி உயர்ந்து இருக்கின்றன என்றால் அதற்குப் புலவர் அவர்களின் கடுமையான உழைப்பே காரணம். ஒவ்வொரு செங்கல்லிலும் அவரின் வியர்வைத்துளி, உழைப்பு இருக்கிறது. அப்படி இந்நிறுவனங்கள் வளர்வதற்கும், இயக்கம் வளருவதற்கும் காரணமாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல; அய்யா அவர்களின் அன்புக்கும், அய்யா அவர்களின் மகிழ்ச்சிக்குரிய செயலாளராக இறுதி வரை இருந்தார்கள். எத்தனையோ பேர் அய்யா அவர்களுடன் இருந்தாலும் இறுதிவரையில் அய்யா அவர்களுடன் புலவர் இருந்தார்கள். என நினைவு கூர்ந்து உரையாற்றினேன்.
குன்றக்குடி அடிகளார்
புலவர் இமயவரம்பன் அவர்களின் பெயரால் ஆண்டுதோறும் நினைவுப்பரிசு வழங்கப்படும் எனக் கூறினேன். அவ்வகையில் முதல் நினைவுப் பரிசை தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்குக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் எனக் கூறி அவருக்குப் பரிசு வழங்கினேன். மேலும், பெரியார்- -மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தில் ‘புலவர்
கோ.இமயவரம்பன் நினைவுக்கூடம்‘ என்று பெயரிட்ட கட்டட பெயர்ப் பலகையை குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார். நிகழ்வில் குன்றக்குடி அடிகளார் உரையாற்றுகையில்,
“புலவர் அவர்கள் அதிகமாகப் பேச மாட்டார். நாம் பத்து தடவை பேசினால் அவர் ஒரு தடவை தான் பேசுவார். அது அவருடைய இயல்பு. பிடிவாதமும் உண்டு. அதற்குக் காரணம் கொள்கைப் பிடிப்பே தவிர, அதைப் பிடிவாதம் என்று சொல்ல முடியாது. தன்னுடைய கொள்கையிலும், கோட்பாட்டிலும் இருந்தவர்கள். செயல்திறன் மிக்கவர்கள். அவர்களை நாம் இழந்திருப்பது மிகப்பெரிய இழப்பு. அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு, செயல்கூட பலர் செய்துவிடலாம், வெற்றி பெறலாம். ஆனால் நன்றி. – கடப்பாடு எதுவுமே தனக்கு வேண்டாம் என்ற உணர்வுடன் கழகத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதில் முதன்மையானவர் புலவர் அவர்கள். அவர் சிறந்த ஆளுமையாளர். அவரின் இழப்பு கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்’’ எனப் புகழாரம் சூட்டினார்.
2.09.1994 தஞ்சாவூர் காவேரி திருமண மண்டபத்தில் வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் ந.கோவிந்தராசுவின் மணவிழாவை நடத்தி வைத்தேன். பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளரும் கழகப் பொருளாளருமான கா.மா.குப்புசாமி முன்னிலை வகித்தார். மணமக்கள் கோவிந்தராசு – பிரேமலதா இருவருக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தினேன். வாழ்த்துரையில் சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தேன்.
கனடா நாட்டின் சிறப்பு அழைப்பாளர் செல்வி.எலைன் எம்.ஹான் அவர்களுக்கு நினைவுப் பரிசு அளிக்கும் ஆசிரியர்
6.09.1994 வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர்கள் மூலமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் சமுதாய தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தினை செயல்படுத்தினோம். அதில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.தனவேல், கனடா நாட்டின் கேபட் (Cabot) கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.எலைன் எம்.ஹான் அவர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் தலைமையுரையாற்றுகையில் “கனடா நாட்டிலுள்ள கேபட் கல்லூரியும் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கும் இணைந்து சமுதாய தொழில் பயிற்சியளிக்கும் திட்டம் கிராமத்திலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட நலிந்த சமுதாயத்திற்கும், பெண்களுக்கும் கல்வியறிவு புகட்டக்கூடிய பெரியார் கண்ட கனவு”த் திட்டமாகும். பூதலூர் போன்ற 30 கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு இந்த சமுதாய தொழிற்பயிற்சி அளிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை விளக்கிக் கூறினேன்.
திருமதி.எலைன்ஹான் பேசுகையில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுத்த அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார். பேராசிரியர்களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர்.
8.09.1994 சமூகநீதி பாதுகாப்புப் பேரவையின் சார்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவ்விழாவில் அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை எனப் பாராட்டி பட்டம் கொடுத்தோம்.
முதல்வர் ஜெ.ஜெயலலிதா பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்
அந்தப் பாராட்டு விழாவின் போது, தந்தை பெரியார் அவர்களது பெயரில் தமிழக அரசு சார்பில் சமூகநீதிக்காக உழைத்த ஒருவருக்கு பெரியார் விருது அளிக்கப்பட வேண்டுமென்று நமது இயக்கச் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை அங்கேயே ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் ஆண்டு, 1995 முதல் தமிழக அரசு சார்பில் பெரியார் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். நமது முதலமைச்சரின் இந்த முடிவினை செய்தி வாயிலாக அறிந்த சமூகநீதிக்காகப் பாடுபடும் வடபுலத் தலைவர்களில் சிலர் கூட என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பெரிதும் பாராட்டினர். வெளிநாட்டுத் தமிழர்களும் தங்களது பெருமகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
“5 சவரன் பதக்கம் மற்றும் ஒரு பாராட்டு இதழுடன் கூடியது பெரியார் விருது என்பது அறிந்து பெரியார் தொண்டர்களும், சமூகநீதி விரும்பிகளும் மிகவும் மகிழ்வது திண்ணம்.
9.09.1994: அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் நுழைவுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரிக்கு -கழக சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து தந்தி அனுப்பினோம். அந்த தந்தியில்,
அய்.ஏ.எஸ். நுழைவுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் தங்களிடம் நேரில் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்து அதை அமல்படுத்தியதற்காக உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்; சமூகநீதியில் மற்றொரு சாதனையை நிகழ்த்தியதற்கு எங்கள் நன்றி’’ என அந்த தந்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சால்வை
போர்த்தி பாராட்டு தெரிவிக்கும் ஆசிரியர்
10.09.1994 பிரெஞ்சு அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி கணேசனை அவரது இல்லத்துக்குச் சென்று பாராட்டினோம். நான் பொன்னாடை போர்த்தும் போது, அவர் நான் விளைந்த பூமி அல்லவா என்று கூறி என்னை அன்புடன் ஆரத்தழுவி மகிழ்ந்தார். உலகத் தமிழர்கள் சார்பாகத் தாய்க் கழகம் உங்களை மனமாரப் பாராட்டுகிறது என்றேன். சிறிது நேரம் நாட்டு நடப்புகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி மனம் விட்டுப் பேசினார். விடை பெறும் போது வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார். என்னுடன் கழகப் பொறுப்பாளர்களும் வந்திருந்தனர்.
10.09.1994 பொன்னேரி கடைவீதியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் முழு உருவச்சிலையை தோழர்களின் பலத்த வாழ்த்து முழக்கங்களோடு திறந்து வைத்தேன். கழக துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கழகத் தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க என ஒலி முழக்கம் செய்தனர். பொன்னேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.சந்திரராசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க அவ்விழாவில் சிறப்புரையாற்றுகையில், மூடநம்பிக்கைகளைச் சாடியும், கடவுளர் கதைகளின் பித்தலாட்டங்களையும், 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டுக்காக கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் விளக்கிப் பேசினேன். முடிவில் கழகச் செயல் வீரர் கா.வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
சமூக நீதிக்காவலர் கான்ஷிராம்
உடன் ஆசிரியர்
17.09.1994 அன்று மயிலை மாங்கொல்லையில் பகுஜன் சமாஜ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சமூகநீதிக் காவலர் கான்ஷிராம் அவர்கள் பேசுகையில், இனி இந்தியாவை ஆளப்போகிறவர்கள் பெரியார் -அம்பேத்கர் வழி நடப்பவர்கள் தாம். பார்ப்பனியத்தால் வஞ்சிக்கப்பட்ட மக்கள் பெரியார் வலியுறுத்திய சுயமரியாதைக்காகப் போராடக் கிளம்பி இருக்கிறார்கள். இந்த சுயமரியாதைத் தத்துவத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய உரிய நேரம் வந்துவிட்டது. அதில் தமிழ்நாடு தனித்து விளங்குகிறது. நாங்கள் தமிழ்நாட்டுக்கு கருத்தைச் சொல்ல வரவில்லை; கருத்துகளைப் பெற்றுச் செல்லவே வருகிறோம். பெரியார் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பாடுபட்டு வருபவரும் மிகச்சிறந்த தலைவருமான திரு.கி.வீரமணி அவர்களின் சிறந்த வழிகாட்டுதலால் தமிழகம் சிறந்து விளங்குகிறது’’ என கழகத்தின் சமூகப் பணியைப் பாராட்டி உரையாற்றினார்.
19.09.1994 விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் புலவர் ந. தங்கவேலன் இல்லத்து மணவிழா என் தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வட்டம் புலவர் ந.தங்கவேலன்—–சரோஜா ஆகியோரின் மகன் இராவணனுக்கும், மலைக்கோட்டாலம் நயினா — சிவகாமி ஆகியோரின் மகள் கவிதாவுக்கும், மலைக்கோட்டாலம் கருப்பன் — முனியம்மாள் ஆகியோரின் செல்வன் செம்மலைக்கும் புலவர் ந. தங்கவேலனின் மகள் கவிதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, இரண்டு மணவிழாக்களையும் நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினேன்.
சுயமரியாதை திருமண நிலையத்தில் மணமக்கள் எம்.பாஸ்கர் – என்.கலைச்செல்விக்கும் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவினை நடத்தும் ஆசிரியர்
21.09.1994 பெரியார் திடலில் அத்திப்பட்டை அடுத்த வள்ளூர் முனுசாமி – லட்சுமி ஆகியோரின் மகன் எம்.பாஸ்கருக்கும், திருவொற்றியூர் விம்கோ நகர் ஆர்.நரசிம்மன் – விஜயா ஆகியோரின் மகள் என். கலைச்செல்விக்கும், ஜாதி மறுப்புத் திருமணம் நடத்தி வைத்தேன். மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து; சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் சிறப்பாக நடந்தது. மணமக்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தேன்.
29.9.1994 சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், வேறு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றோம். அவர் என்னை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்குச் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தேன். விமான நிலையத்தில் ஜனதா தள தலைவர் ஜி.ஏ. வடிவேலு, இரா. செழியன், தி.மு.க. பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, முரசொலிமாறன், முகமது சகி, ஆலடி அருணா ஆகியோரும் அவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர். வி.பி.சிங்கும் நானும் ஒரே காரில் விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். வழிநெடுக வி.பி.சிங் அவர்களை வரவேற்று எழுதிய சுவரெழுத்துகளையும், பதாகைகளையும் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். சிறிது நேரம் கழகத் தோழர்களோடு உரையாடிவிட்டுச் சென்றார்.
30.9.1994 திராவிடர் கழகப் பொன்விழா மாநாடு இரண்டு நாள்கள் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. சென்னை பெரியார் திடலில் காலை 9:00 மணியளவில் புலவர் கோ. இமயவரம்பன் நினைவரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளோடு மாநாடு துவங்கியது. தந்தை பெரியார் சிலைக்கு கழக மத்திய நிருவாகக் குழு தலைவர் சிதம்பரம் கு. கிருட்டினசாமி மாலை அணிவித்தார். கழக மகளிரணி செயலாளர் க. பார்வதி திராவிடர் கழகக் கொடியை ஏற்றிவைத்தார். தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! பொன் விழா காணும் திராவிடர் கழகம் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கச் செய்தனர். கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தோழர்களின் உரை வீச்சுடன் கருத்தரங்கம், பட்டிமன்றம், உரையரங்கம், கலைநிகழ்ச்சிகள் சிறப்புற நடத்தப்பட்டன. துணைப் பொதுச் செயலாளர் கோ. சாமிதுரை தலைமையில் தீர்மான அரங்கம் நடத்தப்பட்டு 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆசிரியர்
மாலை கழகப் பொன்விழா மாநாட்டில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து இந்திய சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் யாதவ் உரையாற்றுகையில், “சமுதாயத்தில் உள்ள எல்லா சுரண்டல்களையும் எதிர்த்துப் போராடக் கூடிய இயக்கம் பெரியார் இயக்கம். இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் 60-ஆம் ஆண்டு, 70-ஆம் ஆண்டு என்று விழா கொண்டாடுகின்றனர். அதனால் அந்த அமைப்புகள் எல்லாம் சாதிக்காததைச் செய்து முடித்து, பொன் விழாவைக் கொண்டாடுகிற திராவிடர் கழகம் ஏராளமான நன்மைகளை மக்களுக்கு அளித்துள்ளது. இந்தப் பொன்விழா மாநாட்டில் ஒன்றைத் தெரிவித்து கொள்கிறேன் உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் முலாயம் சிங் யாதவ் அவர்களின் ஒத்துழைப்புடன் தந்தை பெரியார் சிலையை விரைவில் நிறுவும் முயற்சியில் நான் ஈடுபடுவேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவ் ஆகியோர் 69 சதவிகிதத்தை ஏற்றுக் கொண்டனர் என்றால் உங்கள் தலைவர் வீரமணி அவர்களின் முயற்சியால்தான் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
தந்தை பெரியார் சமுக காப்பணி வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கும் ஆசிரியர்
மதவெறிகொண்ட வகுப்புவாத சக்திகள், இந்தியாவைப் பிளவுபடுத்தும் சக்திகள்- – அவற்றை முறியடிக்கும் வரை நமக்கு ஓய்வே இல்லை. தந்தை பெரியார் அவர்கள் கண்ட ஒரு புரட்சிகர மாறுதல்களை நாம் உண்டாக்கும் வரை நம் பணி முடியாது தொடர வேண்டும்“ என கழகத்தின் சாதனைகளைப் பாராட்டி, பல கருத்துகளை எடுத்துரைத்தார்.
திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்ட சந்திரஜித் யாதவ் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஆசிரியர்
மாநாட்டு நிகழ்வில் பங்கேற்ற செனல் இடமருகு – டில்லி, முருகு சீனிவாசன்- – சிங்கப்பூர், கே.ஆர். இராமசாமி– – மலேசியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முதல்நாள் நிகழ்வில் நான் உரையாற்றுகையில்,
“திராவிடர் கழகம் வன்முறையை விரும்பாத இயக்கம், ரகசியம் என்பது இல்லாத இயக்கம், பயங்கரவாதம் என்றோ, தீவிரவாதம் என்றோ இளைஞர்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிற இயக்கம் அல்ல இந்த இயக்கம். நாம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கிப் போகப் போகிறோம்; போய்க் கொண்டிருக்கிறோம். 21 ஆம் நூற்றாண்டு வேறு யாருடைய நூற்றாண்டும் கிடையாது; தந்தை பெரியாருடைய நூற்றாண்டு; திராவிடர் கழகத்தினுடைய நூற்றாண்டு! சமூகநீதியின் நூற்றாண்டுக்கு நடைப்பயணத்தைத் துவக்கிவிட்டோம்; நடப்போம், கடப்போம்; நம்முடைய பணிகளை முடிப்போம், முடிப்போம்!” என்று உணர்ச்சி பொங்க பல கருத்துகளை விளக்கிப் பேசினேன்.
(நினைவுகள் நீளும்…)