முகப்புக் கட்டுரை: மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட தமிழ்-பண்பாடு புறக்கணிப்பு!

அக்டோபர் 16 - 31,2020

தமிழ் உலகின் உயர்மொழி, செம்மொழி. உலகின் பல மொழிகளின் மூலமொழி என்று நாம் தமிழர்கள் என்பதால் தூக்கி நிறுத்திக் கூறவில்லை. உண்மை அது என்பதால்தான் கூறுகிறோம். உலகின் மொழியியல் ஆய்வாளர்கள் அத்துணை பேரும் இதை ஒத்துக் கொள்கின்றனர்; உறுதி செய்துள்ளனர்.

10 ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் உள்ள இங்கிலாந்தல் பேசப்பட்டு உலகம் முழுவதும் பரவிய மொழியான ஆங்கிலம் (ணிஸீரீறீவீsலீ) தமிழிலிருந்து உருவானது. ஆங்கிலத்தில் உள்ள 70% சொற்கள் தமிழிலிருந்து வந்தவை என்று ஆங்கில மொழியியல் அறிஞரே கூறியுள்ளார்.

ஜப்பானிய மொழி தமிழிலிருந்து வந்தது என்று அந்நாட்டு மொழியியல் அறிஞர் சுசுமோ ஓனோ கூறியுள்ளார்.

இப்படி உலகின் பல மொழி அறிஞர்கள் தங்கள் மொழியின் மூலமொழி தமிழே என்று உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவின் ஆதிமொழி தமிழ் மட்டுமே. சமஸ்கிருதம் தமிழிலிருந்து உருவாக்கப்பட்டது. ஹிந்தி : தமிழ், சமஸ்கிருதம், உருது கலந்து உருவானது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழில் சமஸ்கிருதம் கலந்து உருவானவை.

இப்படிப்பட்ட பெருமையும், தொன்மையும், வளமையும் உடைய தமிழை ஒதுக்கி ஒழித்துவிட்டு, சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டிச் செயல்படுகிறது. அதை பா.ஜ.க. அரசு பகுதி பகுதியாகச் செய்து வருகிறது.

அவர்கள் ஹிந்தியைத் திணிப்பதுகூட ஹிந்தியின் மீதுள்ள அக்கறையால் அல்ல. ஹிந்தியை முதலில் திணித்துவிட்டால், பின் ஹிந்தியை நீக்கிவிட்டு  அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை எளிதில் கொண்டுவந்து விடலாம் என்கிற சூழ்ச்சித் திட்டத்தின அடிப்படையில்தான். எனவே, இந்தத் திணிப்பு ஓர் இடைக்கால ஏற்பாடுதான். இதை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே கூறியுள்ளனர்.

இந்தியாவில் மொத்தமாக 24,000 பேர் மட்டுமே பேசக்கூடிய செத்த மொழியான சமஸ்கிருதத்தை 140 கோடி மக்கள் மீது திணிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஆபத்தை இந்திய மக்கள் உணர்ந்து – குறிப்பாக தமிழர்கள் உணர்ந்து – அதை முறியடிக்க வேண்டும்.

மோடி அரசின் தொடர் படையெடுப்பு…

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு இடையூறு செய்யும் வகையில் இந்தி மொழி திணிப்பில் மோடி அரசு முனைப்புக் காட்டி வருகிறது.  புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருத மற்றும் இந்தி மொழி திணிப்புக்கு வழிவகுக்கும் மத்திய அரசு ஒவ்வொரு நாளும் அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தி மொழி திணிப்பில் ஈடுபட்டுள்ளது.  ரயில்வே சம்பந்தப்பட்ட குறுந்தகவல்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கும் இந்தி மொழியில் மட்டுமே அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முன்பதிவு நிலவரம் உட்பட எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அறிந்த பயணிகள் தள்ளப்படுகின்றனர்.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிலும் இந்தித் திணிப்பு தீவிரமடைந்துள்ளது. நேஷன் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் தன்னுடைய பாலிசிதாரர்களுக்கு நினைவூட்டல் கடிதங்களை எழுதிய அதில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அந்நிறுவனத்தின் தலைவருக்கு கடிதம் எழுதி கவனப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாய்வுப் பணிகளிலிருந்து தன்னை மத்திய அரசின் அகழ்வாய்வுத் துறை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது. ஆனால், மாநில அகழ்வாய்வுத் துறையின் மூலம் நடைபெற்று வரும் பணியின் மூலம் ஏராளமான தொன்மச் சான்றுகள் கிடைத்து வருகின்றன.  முற்றிலும் ஓரவஞ்சனைப் போக்குடன்தான் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளில் மோடி அரசு நடந்து கொள்கிறது. இந்திய பண்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களோ பெண்களோ,  சிறுபான்மையினரோ, தலித்துகளோ இடம் பெறவில்லை.  இந்தக் குழுவை முற்றாகக் கலைத்துவிட்டு இந்தியாவின் பன்முக வரலாற்றை எழுதும் வகையில் புதிய குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

அடுத்தடுத்து பன்முகப் பண்பாடு மற்றும் மொழி சமத்துவத்தின் மீது தொடர் தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில் மத்திய அரசின் சார்பில் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையில் உலகின் செம்மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகள் இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ள நிலையில் திட்டமிட்டே இந்த வேலை நடந்துள்ளது. தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையில் தமிழ்மொழி பயின்றவர்களும் பயன்பெறும் வகையிலும் தமிழும் சேர்க்கப்பட வேண்டும்.

மத்திய அரசு சமஸ்கிருத மற்றும் இந்தி மொழித் திணிப்பை கைவிட்டு அனைத்து மொழிகளும் செழித்து வளர சமவாய்ப்பை வழங்கும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

12 ஆயிரம் ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத் துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக்குழுவில் பன்மைத் தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபான்மையினரோ, தலித்தோ, பெண்ணோ இடம் பெறவில்லை.  இந்து உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இதில் இடமில்லை. ஆனால் சாதிச் சங்கத் தலைவருக்கு இடமிருக்கிறது. விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதத்தை தவிர ஆதிமொழி இங்கு இல்லையா? ஜான்மார்ஷல், சுனிதிகுமார் சட்டர்ஜி துவங்கி அய்ராவதம் மகாதேவன், டோனிஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் நிராகரித்து புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ அதேபோல இந்த மண்ணின் பண்பாட்டினை ஜாதியத்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒருபோதும் எழுத முடியாது. எனவே இந்தக் குழுவைக் கலைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியிலேயே தேர்ச்சி பெறாத நிலையில் வடமாநிலத்தவர் தமிழ் தேர்வில் வென்று பணியில் சேர்வது எப்படி என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளே கேட்டுள்ளனர்?

தமிழகத்தில் சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் உரிய வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர். அதேநேரம் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் பணியிடங்களுக்கு சுமார் 1,600க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டது கடந்தாண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதோடு தபால்துறை,  மின்துறையிலும் பல வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2011லிருந்து மத்திய அரசு துறைகளில் நடந்த பணி நியமனங்களில் 99 சதவிகிதம் பேர் வடமாநிலத்தவர்கள் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணகுமார்,  நீலகிரி அரவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலையில் கெமிக்கல் பிராசசிங் ஒர்க்கர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இவர், 40 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற 6 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த வழக்கில், மனுதாரருக்கு 4 வாரத்தில் பணி வழங்க தனி நீதிபதி கடந்த டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தரப்பில் அய்கோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், ‘‘மத்திய அரசு பணி தொடர்பான எந்தப் பிரச்சனைக்கும் அதற்கென உள்ள மத்திய நிருவாக தீர்ப்பாயத்தில்தான் முறையிட முடியும். ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது’’ என வாதிடப்பட்டது. வக்கீல் சரவணன் ஆஜராகி, ‘‘ரிட் மனு மீதான விசாரணையின்போது பணி வழங்க ஒத்துக்கொண்டனர். அவர்களது பதில் மனுவில் நிருவாக தீர்ப்பாயம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அம்மாநில மக்களுடன் எளிதாக தகவல் பரிமாறிக் கொள்ளும் வகையில் அம்மாநில மொழியை அறிந்திருக்க வேண்டும். அதே நேரம் வடமாநிலத்தவர்கள் இந்தியிலேயே போதிய தேர்ச்சி பெறாத நிலையில் தமிழ்மொழி தேர்வுகளில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்று பணியில் எப்படி சேர்கின்றனர் எனத் தெரியவில்லை. ஆனால், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கின்றனர். மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வெழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். தேர்வு நடைமுறையில் நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் தேவை. தமிழக மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தவர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர்.

உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.  இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆயுதத் தொழிற்சாலை பணியிடத்திற்கு நடந்த எழுத்துத் தேர்வின் விடைத்தாள்கள், முடிவு வெளியான 3 நாள்களில் அழிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் கூறுகின்றனர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 178 பேரின் விடைத்தாள்கள் இருக்கிறதா, இல்லையா? அழிக்கப்பட்டிருந்தால் அதற்கான அவசியமும் தேவையும் என்ன? நியமனம் எதன் அடிப்படையில் நடந்தது என்பது குறித்து, ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையின் பொதுமேலாளர் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தவர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

குஜராத்தில் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது.

தமிழைப் போற்றிய காந்தி பிறந்த மண்ணில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியில் தமிழும் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த உச்சகட்டம்தான் தமிழ்ப் பள்ளியை மூடிய குஜராத் அரசின் செயல்பாடு, தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் தமிழ் படித்துவந்த பள்ளிகளை மூடுவது என்பது அப்பிள்ளைகளின் கல்வியைப் பறிக்கும் செயலாகும். இதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவிலும் தமிழ்ப் பள்ளிகள் மூடல்

கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாகத் தொடங்கும் தனியார் தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. சுரங்கம், காபித் தோட்டம், கட்டுமானத் தொழில், வேளாண்துறை ஆகியவற்றின் மூலம் கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தமிழர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர்.

இலட்சக்கணக்கான கர்நாடக மாநிலத்தினர் தமிழகத்தில் வணிகம் செய்கின்றனர். கல்வி கற்கின்றனர். வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக கர்நாடக அரசு தமிழ்க் கல்வியை முடக்குவது கண்டிக்கத்தக்கதாகும்.

கர்நாடகாவில் தமிழ் வழியாகக் கல்வி கற்கும் தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும். கர்நாடகாவில் அண்மையில் மூடப்பட்ட தமிழ் வழிப்பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தமிழ் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரும் கடிதம் எழுதி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழும் தமிழ்ப் பண்பாடும் புறக்கணிப்பு! தமிழர் தலைவர் கண்டனம்!

“புதிய கல்விக் கொள்கை என்ற மனுதர்மத் திட்டம் திணிக்கப்படுவதற்கு அடுத்த கட்டத் திற்கும் மத்தியில் பெரும்பான்மை பெற்றுள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி ஆயத்தமாகி விட்டது!

12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சாரத்தைத் தோண்டி ஆராய முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு

இந்திய கலாச்சாரம் – 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எப்படிப்பட்ட தொன்மை வாய்ந்த வரலாறு உடையது என்பதை ஆராய்ந்து நிறுவிட, 16 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய கலாச்சார நிபுணர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதாக எழுத்துபூர்வ பதில் ஒன்றினை நாடாளுமன்றத்தில் கலாச்சார, சுற்றுலாத் துறை ஸ்டேட் அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் அறிவித்துள்ளார்!

யார் யார் உறுப்பினர்கள்?

இக்கமிட்டியின் உறுப்பினர்களின் பட்டியலை நன்கு ஆழ்ந்து படித்துப் பாருங்கள்.

1.            கே.என்.தீட்சித், இந்திய தொல்பொருள் துறை தலைவர், மற்றும் முன்னாள் தொல்பொருள்துறை சர்வே ஜாயிண்ட் டைரக்டர் ஜெனரல்.

2.            டாக்டர் ஆர்.எஸ்.பிஷ்த், முன்னாள் ஜாயிண்ட் டைரக்டர் ஜெனரல், ஆர்க்கியால ஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா.

3.            டாக்டர் பி.ஆர்.மணி, முன்னாள் டைரக்டர் ஜெனரல் நேஷனல் மியூசியம், புதுடில்லி, முன்னாள் அடிஷனல் டைரக்டர் ஜெனரல், ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா.

4.            பேராசிரியர் சந்தோஷ் சுக்லா – ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டி, புதுடில்லி.

5.            டாக்டர் ரமேஷ் குமார் பாண்டே, சிறீ லால்பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யா பீடம், புதுடில்லி.

6.            பேராசிரியர் மக்கன்லால், டைரக்டர் டில்லி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், விவேகானந்தா இன்டர் நேஷனல் பவுண்டேசன், புதுடில்லி

7.            டாக்டர் ஜி.என்.சிறீவத்சவா, முன்னாள் அடிஷனல் டைரக்டர் ஜெனரல், ஜியோ கிராபிகல் சர்வே ஆஃப் இந்தியா.

8.            ஜஸ்டிஸ் முகுந்த்காம் சர்மா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, வேந்தர், சிறீ லால்பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யா பீடம், புதுடில்லி.

9.            பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, துணை வேந்தர், ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான், புதுடில்லி.

10.         பேராசிரியர் ஆர்.சி.சர்மா, தலைவர், டிபார்ட்மெண்ட் ஆஃப் லிங்குஸ்டிக்ஸ், டில்லி பல்கலைக் கழகம்.

11.         பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டீன், ஆந்த் ரோபலஜி, அய்தராபாத் பல்கலைக் கழகம், முன்னாள் டைரக்டர் ஆந்த்ரோபலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா.

12.         டாக்டர் பல்ராம் சுக்லா,  சமஸ்கிருதத் துறை, டில்லி பல்கலைக் கழகம்.

13.         பேராசிரியர் ஆசாத் கவுஷிக், விஞ்ஞானி, பன்னாட்டு சிந்தனையாளர், கனடா.

14.         பண்டிட் எம்.ஆர்.சர்மா, தலைவர், ‘‘சங் மார்க்‘’, உலக பிராமணர்கள் பேரவை, புதுடில்லி, இந்தியா.

15.         பிரதிநிதி, மத்திய கலாச்சாரத் துறை, புதுடில்லி அமைச்சகம், டில்லி.

16.         பிரதிநிதி, ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா.

மேற்கண்ட அறிவிப்பில் வெளியான நிபுணர்கள் என்பவர்களில் ஒருவர் அல்லது இருவரைத் தவிர மற்ற அத்தனைப் பேரும் பச்சைப் பார்ப்பனர்களே!

அதுமட்டுமல்லாது, சமஸ்கிருத மொழியே பிரதானம் என்கிற கொள்கை கொண்ட சமஸ்கிருத வடமொழியாளர்களே!

இதிலுள்ள பி.ஆர்.மணி என்பவர் ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா குழுவின் தலைவராக இருந்து, இராமஜென்ம பூமி பாபர் மசூதி இடத்தை 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் தோண்டுகின்ற பணியைச் செய்தபொழுது, அலகாபாத் உயர்நீதி மன்றம் 2003, மே மாதம் மேற்கண்ட நபரை விலக்கிவிட்டு, வேறொரு நபரை அந்த இடத்திற்கு நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது என்றால், அவரைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்; அவர் எதற்காக இதில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பது, புரிகிறதா?

உலகப் பிராமணர் சங்கத் தலைவரும் இந்தக் குழுவிலாம்!

இதில் உலக பிராமணர்கள் சங்கப் பெடரேஷன் தலைவர் என்று ஒருவர் இருப்பது இப்போதுதான் வெளிச் செய்தியாகி உள்ளது! அவரும் இதில் உறுப்பினர்!

இதில் தென்னாடு, மேற்கு வங்காளம், கிழக்குப் பகுதிகள் போன்ற எந்தப் பகுதியிலும் இருக்கக்கூடிய பலவித கலாச்சாரங்களின் பிரதிநிதிகளோ, அவற்றில் ஊறித் திளைத்தவர்களோ, செம்மொழி, தகுதி பெற்ற மொழி சார்ந்த விற்பன்னர்களோ எவரும் மருந்துக்குக்கூட இடம்பெறவே இல்லை!

வேதக் கலாச்சாரம் என்பதுதான் இவர்களின் முடிவு!

வெளிப்படையாகவே எங்கள் வேதக் கலாச்சாரம் – ஆரியக் கலாச்சாரம் மட்டும்தான் இந்திய கலாச்சாரம் என்று திட்டமிட்ட வகையில் ஓர் அறிக்கை தந்து, அயோத்தியில் இராமன் கோவில் கதைபோல ஒன்றை வலுக் கட்டாயமாக இந்த ‘பூதேவர்கள்’ குழு மூலம் வரலாறு, மற்றும் தரவுகளை தலைகீழாக மாற்றிட, கால்கோள் விழாதான் இந்தக் கலாச்சார ஆராய்ச்சி!

அடிவேரையே அழிக்கும் ஆபத்தான முயற்சி!

இந்திய கலாச்சாரம் என்பது பன்முகத்தன்மையது என்பதைத் துளியளவாவது ஒப்புக் கொள்ள இன்றைய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மத்திய ஆட்சி தயாராக இல்லை என்பதையும், நாங்கள் திணிப்பதை நீங்கள் – மற்ற குடிமக்கள் – ஏற்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ‘‘பிஞ்சராப் போல்கள்’ நிறைந்த ஒரு அக்கிரகாரக் கமிட்டி!

இந்த முயற்சி மிகவும் ஆபத்தானது, அடி வேரையே அகற்றிடச் செய்யும் மிகப்பெரிய ஆபத்து!

இதனைப் புரிந்து உடனடியாக மற்ற கலாச்சாரத்தினர்கள் எதிர்ப்புக் குரலைப் பதிய வைக்கவேண்டும்.

இதில் பிரபல  வரலாற்றாசிரியர்களோ, ஆய்வாளர்களோ, பொதுவானவர்களோ எவருக்கும் இடமில்லாது செய்திருப்பதால், புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

முறியடிக்க வேண்டியது அவசியம்! அவசரம்!!

இந்திய கலாச்சாரம் என்றால், வேத கலாச்சாரம், சமஸ்கிருத கலாச்சாரம், பார்ப்பனிய, ஆரிய கலாச்சாரம் என்று நிறுவிட இது கால்கோள் விழா – இதனை முறியடிப்பது நம் மக்களின் அவசரப் பணி! – அலட்சியம் வேண்டாம்!

ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்களே!

டோனி ஜோசப் போன்றவர்கள் எழுதியுள்ள மரபணு ஆராய்ச்சிமூலம் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள்தான் என்பதும், மொகஞ்சாதாரோ, ஹரப்பா கலாச்சாரங்கள் ஏற்கெனவே பழைமை வாய்ந்த கலாச்சாரம் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தொடரிலேயே எதிர்ப்பைப் பதிவு செய்க!

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கீழடி தோண்டல்களும், கிடைக்கும் பொருள்களும் தொன்மை வாய்ந்த திராவிடர் நாகரிகத்தினை உறுதிப்படுத்தும் சான்றுகளாக உள்ளனவற்றை மறைத்தோ, திசை திருப்பியோ, எப்படி சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்ற ஓர் அண்டப் புளுகை, திட்டமிட்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனரோ அதுபோல செய்வதற்கும், அரசு செலவில் இந்த அக்கிரகார ‘‘பிஞ்சராப் போல்கள்’’ (கிழட்டு மாடுகளின் அடைக்கலம்). மற்ற அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும். தி.மு.க. மற்றும் தென்னாட்டு எம்.பி.,க்கள் இதற்குத் தங்கள் எதிர்ப்பை இத்தொடரிலேயே பதிவும் செய்ய வேண்டும்’’ என்று தமிழகத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். (மொழித் திணிப்பு, தமிழ்ப் புறக்கணிப்பு பற்றி தமிழர் தலைவரின் அறிக்கையை தலையங்கத்தில் காண்க).

மத்திய அரசுத் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு! தி.மு.க தலைவர் கண்டனம்!

“மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தத் தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல, ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

நூறு சதவீதம் ‘அப்ஜெக்டிவ்’ கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

தபால் துறையில் ஏற்கெனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆகவே தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிறபோது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அதேபோல் ‘குரூப் சி’ பதவிகளுக்கான தேர்வுகள் தொடர்பாக தென்மேற்கு ரயில்வேயின் சார்பில், ஆங்கிலத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தவர், இந்தி மொழியில் சில கேள்விகளுக்கு தேர்வு எழுதியிருந்தால் அந்தத் தேர்வுத்தாளைத் திருத்தலாமா? அப்படி திருத்தலாம் என்றால் எவ்வளவு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த ஆங்கிலத்தில் எழுதியுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்கள் போட வேண்டுமா அல்லது இந்தியில் பதிலளித்துள்ள கேள்விகளுக்கும் சேர்த்து அனைத்துக் கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் போட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், விருப்பம் தெரிவித்த ஆங்கிலம் தவிர, வேறு மொழியில் கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் அந்தக் கேள்விகளுக்கு மதிப்பெண் போட வேண்டியதில்லை என்று பதிலளித்திருக்கிறது.

ஆனால் அடுத்த வரியில், இந்தியில் எழுத விருப்பம் தெரிவித்து விட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் எழுதியிருந்தால் அதற்கு மதிப்பெண் போட வேண்டும் என்று கூறியிருப்பது, ‘ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்று ரயில்வே வாரியம், வஞ்சக எண்ணத்துடன் செயல்படுவதைக் காட்டுகிறது.

குறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்லாமல் பஞ்சமா பாதகம் எனக்கூறியுள்ளார்.

கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பாஜக ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித் திட்டமாகவே இதை தி.மு.க. கருதுகிறது.

இந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்யும் ரயில்வே வாரியத்தின் இந்தப் பாரபட்சமான நடவடிக்கையை தி.மு.க.வால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, தபால்துறை தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் அதேவேளையில், ரயில்வேயில் நடைபெறும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள் அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும், குரூப் சி பதவிகளுக்கான தேர்வினை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்தவர்கள் இந்தியில் பதில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் ‘குரூப் சி’ தேர்வு எழுதுவோருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மொழியை, புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம்’’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆரிய – திராவிடப் போர் என்பது தற்போது உச்ச நிலையில் உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு ஆர்.எஸ்.எஸ் செயல் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு சிறப்புகளை அழித்து சமஸ்கிருதத்தை சனதான தர்மத்தை நிலை நாட்டத் துடிக்கிறது. எனவே, தமிழர்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் காக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *