ஏ.வி.பி.ஆசைத்தம்பி
திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர். தனி அரசு, திராவிட சினிமா இதழ்களின் ஆசிரியர். வாலிபப் பெரியார் எனப் புகழப்பட்டவர்.சிறந்த பேச்சாளர், நாடக ஆசிரியர் என்பதுடன் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக சுற்றுலா வாரியத் தலைவராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மதுரைக் கல்லூரியிலே படித்தாள் கட்டழகி மீனாட்சி. வகுப்பிலே வெளியூர் மீனாட்சிகள் இரண்டு பேர் இருந்தனர். அதனாலேதான் மதுரை மீனாட்சி என்று அவளுக்குப் பெயர் அமைந்துவிட்டது. காலையிலே கல்லூரிக்கு வருவாள்; துணைக்குச் சில ஆண்கள் அவள் நிழலை ஒட்டியே வந்து, கல்லூரி வரை கொண்டு வந்துவிட்டுத் தினமும் திரும்புவார்கள். தெருவிலே நடந்து மீனாட்சி செல்லும்போது அவள் கூந்தலில் இருந்து ஒரு மயிர் உதிர்ந்தாலும், அவர்கள் கண்களுக்கு அது தெரிந்துவிடும். கண்களின் பயனை அந்தக் காளைகளிடந்தான் காண வேண்டும்! ஊருக்குக் காவலர்களாக அந்த உத்தமர்களைப் போட்டால் உலகில் திருட்டு என்பதே இருக்காது! ஊர் என்ன ஊர்வசியா கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க? பைத்தியம்! அழகு அழைக்கிறது; அவைகள் விளையாடுகின்றன. இதிலென்ன விசித்திரம்? இரு இளைஞர்கள் மீனாட்சியின் நிழலாக, நீண்ட நாள் மீனாட்சிக்குத் தொண்டு செய்து வந்தார்கள். ஒருவன் மோகன்! கல்லூரியிலே கூடப் படிப்பவன், நல்ல சீர்திருத்தவாதி; பகுத்தறிவாளன். மற்றொருவன் சொக்கநாதன்! ஜோக் பேர்வழி என்றாலும், வைதீக உள்ளம் படைத்தவன். மீனாட்சி கல்லூரியிலிருந்து மாலையில் வீடு திரும்பும்போது, தினமும் மீனாட்சிசொக்கநாதர் ஆலயத்துக்குப் போய், அய்யர் கையால் அர்ச்சனை செய்யாமல் போகமாட்டாள். சொக்கநாதனும் தக்க ஏற்பாட்டோடு சென்று, அதே நேரத்தில் ஆண்டவன் சந்நிதியில் காத்திருப்பான். அவள் வருவாள். மீனாட்சி! கற்சிலை சொக்கநாதனை ஏன் பார்க்கிறாய்? இதோ என்னைப் பார் என்று கண்ணால் ஜாடை காட்டுவான், அவள் பார்க்கும்போதெல்லாம்.
ஆனால், மோகன், பாவம்!
பகுத்தறிவு அவனைப் பாழ்படுத்தியது. ஆலயம் முதலைகள் வாழும் பெரிய அகழிகளாக அவன் அறிவுக்குப் பட்டது. மீனாட்சி கூடவே வருவான்; ஆலய வாயிலை அவள் கால் தொட்டதும் பரிதாபம், இந்தக் கோட்டைத் தாண்டக்கூடாது என்ற சீதைக்கு ஸ்ரீராமசாமி தம்பி போட்ட உத்தரவு அவனுக்கு நினைவுக்கு வருமோ என்னமோ, பட்டென நின்றுவிடுவான், கோவில் முகப்பில்.
சொக்கநாதனைவிட மோகன் எல்லா வகையிலும் சிறந்தவன்தான். இருந்து என்ன செய்ய?
மழை பெய்கிறது; எல்லா இடத்திலும் புல் முளைப்பதில்லை. ஏனோ சில இடத்தில் மட்டும் முளைக்கிறது. அந்த நிலையில்தான் மோகன் இருந்தான்!
மீனாட்சி சொக்கநாதனையே காதலித்தாள். இந்த இருபதாம் நூற்றாண்டில், காதலின் திறவுகோல் கடிதப் போக்குவரத்துத்தானோ என்னவோ! இருவரும் எழுத ஆரம்பித்தனர்.
“இதயராணி!” என்றான்.
“இதயராஜா” என்றாள்.
“மீனாட்சி! மதுரை மீனாட்சி சொக்கநாதர் போல் மணம் புரிந்து வாழ்வோமா?’’ என்றான்.
“சொக்கநாதரே! இந்த மீனாட்சி ஒரு தாசியின் மகள்! மணம்புரியச் சம்மதந்தானா?’’ என்றாள்.
“அன்பே! நான் ஓர் அன்னக்காவடி உனக்கு மணக்கச் சம்மதந்தானா?’’ என்றான்.
“இன்பமே! பணம் எனக்குத் தேவையில்லை; மனம் ஒப்பிய திருமணமே!’’ என்றாள்.
“காதலி! நீ தாசி மகளாய் இருக்கலாம்; ஆனால் வேசியில்லை. நான் தயார்; நீ?’’ என்றான்.
“காதலரே! தாயாரைக் கேட்டு நாளை கூறுகிறேன்; ஆயத்தமாய் வாருங்கள்!’’ என்றாள்.
அன்றிரவு மணி பத்து இருக்கும். மோகன் முகத்தில் சோகம் குடி கொண்டிருந்தது. காதல் வேகம் அவனை வேதனைப்படுத்தியது. இருப்புக் கொள்ளவில்லை; விறுவிறு என்று மீனாட்சி வீட்டை நோக்கி ஒரு முடிவோடு வந்தான். வீட்டுக்குள்ளும் போய்விட்டான். அவளையும் அகங்குளிரப் பார்த்தான். மீனாட்சி என்று மெல்லிய குரலில் கூப்பிட்டான் திடுக்கிட்டுத் திரும்பினாள் மீனாட்சி. மோகனைக் கண்டதும் அவள் தேகம் பதறியது.
“மோகன்! இங்கு உனக்கு என்ன வேலை?’’
“என் நிலையை எடுத்துச் சொல்ல வந்தேன் மீனாட்சி!’’
“எதையும் கேட்க நான் தயாராயில்லை; வீட்டை விட்டு உடனே போ! என் வாழ்க்கையில் கல்லைப் போட்டு விடாதே!’’
இவ்வளவுதான் சொன்னாள் மீனாட்சி. மோகன் நிற்கவில்லை; வேகமாக ஓடிவிட்டான். மோகன் போவதை மீனாட்சியின் தாய் கண்டுவிட்டாள். கடுங்கோபங் கொண்டாள். மகளின் மானம் போய்விட்டதே என்றல்ல.
“அடி பாதகி! இனி நீ படித்ததுபோதும்! நம் குலத்தொழிலை ஆரம்பி!’’ என்றாள்.
“ஏனம்மா இப்படிப் படபடன்னு பேசறே? விஷயத்தைச் சொல்லேன்.’’
“அனந்தர் மகன் மோகனை ஏன்டி விரட்டினாய்?’’
“அவனை எனக்குப் பிடிக்கவில்லை!’’
“ஏன்டி! தாசிவீடு என்றால் பிடித்தவனும் வருவான்; பிடிக்காதவனும் வருவான்! அதைப் பற்றி நமக்கென்னடி? பணந்தானே நமக்கு வேண்டும்? அனந்தரிடம் இருக்கிற பணம்போல் நம்ம ஊருலே யாருட்டடி பணமிருக்கு?’’
“மானங்கெட்ட வாழ்வு நான் நடத்த முடியாது; மணம் புரிந்து வாழ்வேன்.’’
“நம்ப குலத் தொழில் என்னடி ஆவது?’’
“குலம் நாசமாகப் போகட்டும்!’’
“ஏன்டி! ஒரே பிள்ளையாக இருந்தும் இப்படிப் பேசறே? இதுக்குத்தானா உன்னைப் படிக்க வைத்தேன்?’’
“அம்மா! குடிகெடுக்கும் தொழில் இனி நமக்கு வேண்டாம்; இன்றிலிருந்து எவனும் இங்கே உள்ளே நுழையக் கூடாது. உனக்குச் சம்மதமில்லையெனில் என்னை மறந்துவிடு, இப்போதே போகிறேன்.’’
“ஏன்டி மீனாட்சி! இப்படிப் பேசிறியே, ஊர் பூராவும் நீயும் நானும் தாசிகுலம் என்று தெரியுமே, யாரடி வருவா உன்னை மணக்க?’’
“அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம்.’’
“என்னமோடி! இரண்டு பணம் காசு உள்ளவனாய்ப் பார்த்துக்கோ’’ என்று சொல்லிவிட்டு மீனாட்சியின் தாய் போய்விட்டாள். ஒரே பிள்ளையானதாலும், செல்லமாய் வளர்த்துவிட்டதாலும் மீனாட்சியின் தாயால் வேறு ஒன்றும் கூற முடியவில்லை.
நாளும் நிச்சயிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில், “மீனாட்சி சொக்கநாதன்’’
திருமணம் அய்யர்களின் ஆசீர்வாதத்தோடு ஜாம்ஜாமென நடந்தேறியது.
மோகன் வேதனை அடைந்தான். அமைதிபெற வெளியூர் புறப்பட்டான். புண்பட்ட மனத்தைப் பண்படுத்தப் பலமான பகுத்தறிவுப் பிரச்சாரத்தைப் பல ஊர்களில் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தான்.
நாட்டில் நல்ல ஆதரவையும் மோகன் கண்டான்.
சொக்கநாதனை மீனாட்சியின் தாய்க்கு ஏனோ பிடிக்கவில்லை. பரம ஏழையாக அவன் இருப்பதைக் கண்டு கவலை அவளுக்கு உண்டாகியது.
இந்த நிலையில் இருக்கும்போது விவாகமாகி இருபது நாள் கடந்திருக்காது, சொக்கநாதன் “டைபாயிட்’’ காய்ச்சலில் படுத்து, இரண்டு நாளில் இறந்தான்.
இருபதே நாளில் தன் ஒரே மகள் விதவையானாளே என்ற வேதனை மீனாட்சியின் தாய்க்கும் ஏற்பட்டது. படுக்கையில் படுத்தாள். அடுத்த மாதமே அவளும் பரலோகம் பயணமாகிவிட்டாள்.
மீனாட்சி பாவம்! விதவையானாள். வெள்ளைப் புடவை கட்டினாள்.
“ஏ, மீனாட்சி! சொக்கநாதா! கால் கடுக்க நாள்தோறும் வந்து உங்கள் தாள் பணிந்த எனக்கு இக் கதியா? உங்கள் ஆலயத்தில் அரும்பிய காதல் கருகிப் போகலாமா? மீனாட்சி சொக்கநாதர் என்ற பெயர், சரியான பொருத்தம் என்று படுபாவி ஜோசியன் சொன்னானே. நீர் கடவுள்தானே! உம் கண் என்ன குருடா, அன்றி காது செவிடா _ இல்லை என்று சொல்லி என்னை ஏன் காப்பாற்றவில்லை? மாலையிட்டேனே உங்களுக்கா அல்லது கற்சிலைக்கா? நீங்கள் வெறும் கல்தானா? உங்களைக் கும்பிடுவதில் தம்பிடி பிரயோஜனம் இல்லை என்பது உண்மைதானா? உங்கள் முன்னிலையில் காதல் கொண்டேன்; கல்யாணம் செய்தேன்; இருபது நாளில் என் கணவர் இறந்தார்! உங்களைத் தினமும் அர்ச்சிக்கிற அய்யர் “சுமங்கலி’’யாய் இரு என்றார்! நீங்களும் அய்யரும் பொய்யர்களா? அல்லது புரட்டர்களா?
இப்படி ஏதேதோ புலம்பினாள் மீனாட்சி. சொக்கநாதனும் மவுனமாய் இருந்துவிட்டான். இறந்தவர்களும் வரவில்லை.
மீனாட்சியிடம் பணம் இருந்தது; ஆனால், வாழ மனமில்லை.
பணத்தை என்ன செய்வது என்று சிந்தித்தாள்.
“கோவிலுக்கு எழுதி வையுங்கள்!’’ என்று குருக்கள் சிலர் கூறினர்.
“கோவிலைக் குணப்படுத்த அணுகுண்டு வாங்க பணத்தை எழுதி வைக்கப் போகிறேன்’’ என்று சுருக்கமாகக் கூறி குருக்களை விரட்டியடித்தாள்.
கடைசியாக அவளுக்கோர் எண்ணம் பிறந்தது. பகுத்தறிவு இயக்கத்தை நாட்டில் பரப்பும் மோகனிடம் பணத்தை ஒப்படைத்து விடுவது என்ற முடிவுக்கு வந்தாள்.
ஆனால், மோகனை எப்படிக் கூப்பிடுவது? முன்பே விரட்டினோமே? _ என்றெல்லாம் எண்ணினாள்.
முடிவில் மோகனை அழைத்துவர ஆள் அனுப்பினாள். ஆனால், அவன் ஊரிலில்லை என்றறிந்து வருந்தினாள். அதைரியமடையாமல், தினசரி பத்திரிகைகளை வாங்கிப் புரட்டிப் பார்த்தாள்; இருக்குமிடம் அறிந்தாள்.
அன்று பிரம்மாண்டமான கூட்டம் கூடி இருந்தது. மோகன் மூடநம்பிக்கைகளை விளக்கி, மக்கள் தெளிவடைய வேண்டிய அவசியத்தை அழகுபடப் பேசிக் கொண்டிருக்கும்போது, வெள்ளையுடை அணிந்த ஒரு பெண் மோகனிடம் மேடைக்கு வந்து, “இதில் இருக்கும் என் சொத்து யாவும் உங்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படட்டும்’’ என்று சொல்லிக் கொடுத்தாள்.
மோகன் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தான்.
“மீனாட்சியா? என்ன, நீ விதவையா?’’ _அவ்வளவுதான் சொன்னான். அதற்குள் மயங்கி விழுந்துவிட்டான்.
சிகிச்சைக்குப் பின் மோகன் எழுந்தான்; சித்த சுவாதீனம் இல்லாதவன் போலவே பிதற்றினான்.
“மோகன்! அன்று ஒரு வெறியில் விஷயம் என்ன என்றுகூடக் கேட்காமல் உங்களை வீட்டைவிட்டு விரட்டினேன்; ஆனால் இன்று தேடி வந்திருக்கிறேன். மோகன்! என் சொத்து பூராவையும் அறிவைப் பரப்பப் பயன்படுத்துங்கள்: நான் வருகிறேன்’’ என்று சொல்லி மீனாட்சி எழுந்தாள்.
“மீனாட்சி! சொத்தெல்லாம் கொடுத்து விட்டால் உன் கதி? எங்கே போகப்போகிறாய்?’’
“எங்கே போவது? இனி இவ்வுலகில் எனக்குக் கதி ஏது? அவர் இருக்கும் இடத்திற்கு…!’’
“மதி இருந்தால், மனத் தைரியமிருந்தால் மருந்து உண்டு. உன் காதல் தீயால் கருகினேன், ஊரில் இருக்கும்போது அமைதி இல்லை. அதற்காகவே வெளியூரில் வழக்கத்திற் கதிகமாகச் சுற்றுகிறேன். நீ விதவையானது கண்டு என் மூளையே இன்று கலங்கிவிட்டது மீனாட்சி! உன்னை உள்ளன்போடு கேட்கிறேன், நாம் இருவரும் மறுமணம் புரிந்து…’’
“மரணத்தைத் தவிர என் போன்ற விதவைகளுக்கு வேறு மருந்தேது?’’
“மீனாட்சி!…..’’