“பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய
‘உண்மை’ பொன்விழா மலர்”
தந்தை பெரியாரால் 1970ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிடப்பட்ட உண்மை இதழின் அட்டைப் படத்தில் கவுதம புத்தரின் ஒளிப்படம் இடம் பெற்றிருப்பது தெவிட்டாத தேனாய், தேன் கரும்பாய் இனித்தது. அனைத்துப் பக்கங்களும் வழவழப்பான காகிதத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் அச்சு பயன்படுத்தி இருப்பதாலும், எண்ணற்ற அரிய-புதிய செய்திகள் இடம் பெற்றிருப்பதாலும் இளைய தலைமுறையினர் மலரை வாங்கி விரும்பி ஆவலுடன் படித்து வருகின்றனர்.
தந்தை பெரியார் முதல் தலையங்கத்திலேயே ‘உண்மை’ இதழின் நோக்கம் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதழின் கொள்கை மக்களைப் பகுத்தறிவாதிகளாக உருவாக்க வேண்டும் என்பதே என்று தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டி இருப்பது பெரியாரின் மானுடப் பற்றைப் பறைசாற்றுகிறது.
‘உண்மை’ இதழின் வளர்ச்சி எனும் பட்டியல் படிப்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. 25 பைசாவில் தொடங்கப்பட்ட மாத இதழான ‘உண்மை’ இன்று அபார வளர்ச்சி பெற்று மாதமிருமுறை இதழாக பாரெங்கும் பகுத்தறிவைப் பரப்பி வருவது ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அயராத உழைப்புக்கு, ஆளுமைக்கு, ஆற்றலுக்குக் கிடைத்த அளப்பரிய அங்கீகாரமாகும்.
தந்தை பெரியார் ‘உண்மை’ இதழில் எழுதிய (14.1.1971) கட்டுரைகள் மற்றும் ‘இனி நமது கடமை என்ன?’ (14.4.1972) என்னும் தலையங்கம், அன்னை மணியம்மையாரின், ‘துணிந்து செயலாற்றுவோம்’ எனும் தலைப்பில் உண்மை இதழில் (14.3.1974) முதல் தலையங்கம் உள்ளிட்டவற்றை இளைஞர்களும், மாணவர்களும் ஊன்றிப் படித்து அய்யா -,
அம்மா ஆகியோரின் தன்னலமற்ற உழைப்பை வியந்து பாராட்டுகின்றனர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பூணூல் மகிமை! சிறுகதை சிந்திக்கத் தூண்டிய சிந்தனை முத்துக்களாக இருந்தன.
‘உண்மை’ இதழின் முதல் ஆசிரியர் புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் படைப்புகள் அடங்கிய பட்டியலின் தலைப்புகளைப் படித்த மாத்திரத்தில், அந்நூல்களை வாங்கிப் படித்து பகுத்தறிவு பெற வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நாவலர்
நெடுஞ்செழியன் அவர்களின் பகுத்தறிவு நெறியே! பண்பட்ட நெறி!
பேரறிஞர் அண்ணா அவர்களின் கடைசிக் கடிதமான (15.1.1969) ‘தமிழர் திருநாள்’ என்று தலைப்பிட்டு தம்பிக்கு எழுதிய கடிதம் இளைஞர்களையும் -மாணவர்களையும் காந்தமாய்க் கவர்கிறது. முத்தாய்ப்பாக, பொன்விழா மலரில் தமிழர் தலைவர் அவர்களின் செறிவான நிறைவான கருத்துகள் அடங்கிய பகுத்தறிவுக் கட்டுரைகள் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின், வைகோ, தோழர் முத்தரசன், எழுச்சித் தமிழர் திருமாவளவன் உள்ளிட்ட ஏனைய தலைவர்களின் கருத்துரைகள் பகுத்தறிவு விருந்து படைத்திடும் கருத்தோவியமாய் ஒளிர்ந்து மிளிர்கின்றன.
– சீ.இலட்சுமிபதி,
தாம்பரம்.
******
கடந்த உண்மை இதழ் படித்தேன் (பிப்ரவரி 16-29) ஆசிரியர் அவர்களின் தலையங்கம், தந்தை பெரியார் எழுதிய சிவராத்திரியின் யோக்கியதை, “கல்வியில் கண்ணிவெடிகள் எச்சரிக்கை எச்சரிக்கை’’ என்று நமது கவிஞர் அய்யா அவர்கள் எழுதிய முகப்புக் கட்டுரை, ஜாதி ஒழிப்பில் காதல் திருமணங்களின் பங்கு என்ற கட்டுரை, ஆசிரியரின் கேள்வி பதில்கள், பேராசிரியர் வெற்றியழகன் எழுதிய தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள் ஆய்வுக் கட்டுரை, ‘நீட்’ தேர்வை ஒழிக்க நமது ஆசிரியர் அவர்கள் நாகர்கோவிலில் தொடங்கிய நெடும் பயணம் குறித்த அய்யா மஞ்சை வசந்தன் அவர்கள் தீட்டிய நிகழ்வுகள் பகுதி, நமது மருத்துவர் அய்யா கவுதமன் எழுதிய மருத்துவப் பகுதி, ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ என்று நமது வணக்கத்திற்குரிய ஆசிரியர் அவர்கள் எழுதிவரும் இயக்க வரலாறான தன் வரலாறு இவை அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன. பொய்மைகளை வேரறுக்க மேன்மேலும் உண்மைகளை உரைக்கட்டும் ‘உண்மை’
– கோ.வெற்றிவேந்தன்,
கன்னியாகுமரி