ஆசிரியர் பதில்கள் : அன்னை நாகம்மையாருக்கு ஈரோட்டில் முழு உருவச் சிலை!

மார்ச் 16-31 2020

அன்னை நாகம்மையார்

கே:       ‘வைக்கம் போராட்ட’த்திலும், ‘கள்ளுக்கடை மறியல்’ போராட்டத்திலும் ‘வீரப்பெண்மணியாக’ விளங்கியவரும், காந்தியாராலேயே பாராட்டப்பட்டவருமான அன்னை நாகம்மையாருக்கு அய்யா பிறந்த ஈரோட்டிலே ‘முழு உருவச் சிலை’ அமைக்கப்படுமா?

                – சீழ்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

ப:           அவசியம் செய்வோம். அநேகமாக இவ்வாண்டு இறுதியில் _ இதற்கென தனியே ஈரோட்டில் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக் கட்சி உள்ளூர் பிரமுகர்கள், மற்றும் பொதுவானவர்கள் அனைவரையும் அழைத்து அதை நாங்களே முன்னின்று செய்வோம். அருமையான யோசனைக்கு நன்றி! அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் இருவருக்கும் சிறப்புகள் செய்வோம்!

கே:       இதுவரை 69 பேர் உயிரிழந்தும், ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதிலிருந்து பின்வாங்க மாட்டேன்’ என்கிறாரே மோடி… தங்கள் கருத்து என்ன?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

நரேந்திர மோடி

ப:           அதிகாரத்திலிருப்பவர்களின் அதிகார போதை பல நேரங்களில் மக்களின் தீர்ப்பு _ எழுச்சிக்கு பின்னேதான் தெளிவடையும் என்பது வரலாற்று உண்மை! பொறுத்துப் பார்க்கும் மக்கள் பாடம் புகட்டுவர் _ தேர்தல் மூலம்!

கே:       வெளியூர் சுற்றுப்பயணத்தில் தந்தை பெரியாரோடு தாங்கள் சென்றிருந்தபோது மறக்க முடியாத நிகழ்ச்சி என்று எதைக் கூறுவீர்கள்?

                – காரை.புரட்சிமணி, வடவேர்

ப:           15.4.1970 அன்று இரவு 8 : 00 மணிக்கு சேலம் ராவ்பகதூர் பி.இரத்தினசாமி பிள்ளை காலமாகி விட்ட நிகழ்ச்சிக்கு காரில் செல்லும் போது உளுந்தூர்பேட்டை அருகில் கார் ரிப்பேராகிவிட்டது. நான் ஒரு மெக்கானிக்கை பிடித்து வருவதற்குள் நேரமாகிவிடவே சேலம் செல்வதால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த பெரியார் சென்னை செல்லும் லாரி ஒன்றில் டிரைவருக்கு அருகில் ஏறி அமர்ந்து கொண்டு புறப்படுகிறார். வழியில் நின்று கொண்டிருந்த எனக்கு  செய்கை காட்டியபடியே பெரியார் லாரியில் விரைகிறார். நான் திகைத்து போய் லாரியை வெகுதூரம் துரத்திச் சென்று வழி மறித்து முந்தி நின்று பெரியாரை இறங்கி வருமாறு வேண்டினேன். அதற்கு அய்யா அவர்கள், “இந்த லாரிக்காரர் எவ்வளவு பிரியத்தோடு என்னை அழைத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டார். சென்னையில் கொண்டு போய் விடுவதாக அவர் அன்புடன் ஒப்புக்கொண்டுள்ளார். பாதியில் இறங்கி வந்துவிட்டால் அவர் மனம் நோகாதா?”  என்று பெரியார் மறுக்கிறார். பிறகு லாரி டிரைவரே முன்வந்து பெரியாரிடம் வேண்டி இறங்கி வந்து காரில்  ஏற்றிவிடுகிறார். இதுவே எம் நீங்கா நினைவு – மறக்கமுடியாத நிகழ்ச்சி! புலவர் கோ.இமயவரம்பன் இதுபற்றி விடுதலை மலரில் பெட்டிச் செய்தியாக எழுதிய முழுவிவரம் வெளிவந்துள்ளது. நான் உடன் சென்றிருந்தேன்.

 கன்னிமாடம் இயக்குநர்

போஸ் வெங்கட்

கே:       ஆணவக் கொலையை நியாயப்படுத்த திரைத்துறையில் முதலீடு செய்வது பற்றி?

                – செல்வகுமார், போரூர்

ப:           பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் பெரியாரின் ஜாதி ஒழிப்பு -_ பல ‘கன்னிமாடங்கள்’ திரைப்படங்களாகவே வருகிறபோது, அவர்கள் தோற்கிறார்கள்! _ என்பதே நிதர்சனம்.

கேரள முதல்வர்

பினராய் விஜயன்

கே:       ஜாதி மறுப்பு மணம் புரிவோருக்குக் காப்பகம் அமைக்கப்படும் என்ற கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் திட்டம் பற்றித் தங்கள் கருத்து என்ன?

                – அப்துல் காதர், கோவை

ப:           வரவேற்று பாராட்டப்பட வேண்டிய செய்தி. அடுத்த தி.மு.க. ஆட்சியில் பின்பற்றப்பட வேண்டிய திட்டமும்கூட!

கே:       இந்து அறநிலையத் துறை அதிகாரிகளைக் கேவலப்படுத்தும் காவிக் கூட்டத்தின் உள்நோக்கம் என்ன?

                – மகிழ், சைதை

ப:           அத்துறையை ஒழித்து, தங்களது சுரண்டலை, 1925க்கு முன் கொள்ளை அடித்ததுபோல் தொடர ஆசைப்படுவதே!

கே:       தமிழகப் பல்கலைக்கழகங்களை வடமாநிலத்தவர் ஆளுகையில் கொண்டுவருவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

                – மரியா ஸ்டீபன், சேலம்

ப:           ஓர் நல்லாட்சி _ வல்லாட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். சரணாகதி தெரியாத உரிமை ஆட்சி _ தி.மு.க. தரும்!

கே:       தந்தி தொலைக்காட்சியில் தங்கள் பேட்டி ஓர் அரசியல் ஒளிவிளக்கு! அதை ஆவணப்படுத்திப் பரப்புவீர்களா?

                – பாலசுப்பிரமணியம், மதுரை

ப:           வெளிவருகிறது _ வாங்கிப் பார்த்து மகிழலாமே!

மம்தா பேனர்ஜி

கே:       மதவாத மத்திய அரசை எதிர்ப்பதில் மம்தாவுக்கு உள்ள உணர்வும் தீவிரமும் மற்றவர்களுக்கு இல்லாமல் போகக் காரணம் என்ன?

                – குமரேசன், வேலூர்

ப:           பெண்களின் துணிவுக்கு முன் ஆண்கள் எப்போதும் பின்தங்கியவர்களே! மற்றபடி அவர் ஓர் ஆண் சிங்கமும் அல்லவா!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *