நம்பிக்கை தரும் திரைப்படங்கள் : கன்னிமாடம்

மார்ச் 16-31 2020

சமா.இளவரசன் – உடுமலை

 

நன்கு அறிமுகமான நடிகரும், அறிமுக இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான கன்னிமாடம் திரைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அழுத்தமான கதை, சீரிய திரைக்கதை, எளிய மாந்தர்கள், இயல்பான நடிப்பு என ஈர்ப்புக்கு ஏராளமான காரணங்கள்!

சென்னையில் பட்டப்பகலில் நடந்த கொலை ஒன்று குறித்து காவல்துறை பரபரப்போடு தொடரும் படத்தில், கல்லூரிக் காலத்தில் காதலாகி, காதலன் கதிர் குடும்பத்தின் ஜாதி வெறி காரணமாக, கடும் எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் காதலி மலர் குடும்பம் இலக்காகிட, இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னை வந்து சேருகின்றனர் என்பதில் தொடங்குகிறது கதை. சென்னைக்கு இப்படி ஓடிவரும் இளவயது ஜோடிகளுக்கான வீடு, குடும்பத்திற்குத் தேவையான பொருள்கள் ஏற்பாடு செய்து தருவதைத் தொழிலாகச் செய்துவருபவரிடம் வந்து சேருகின்றனர். அது ஆட்டோ ஓட்டுநர் அன்புவின் அறைக்கு அருகில் உள்ள அறை. தந்தை பெரியார் ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த அன்பு, அவருடைய நண்பர், அன்புவை ஒருதலையாக விரும்பும் ஸ்டெல்லா என கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன.

பணக்காரக் குடும்பத்தில் பிறந்த கதிர், வேலை செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். இவர்களுக்குத் தங்களாலான உதவியைச் செய்கின்றனர் அன்புவும், அவர் நண்பரும் (ஆடுகளம் முருகதாஸ்). இச் சூழலில் ஒரு விபத்தில் கதிர் இறந்துவிட, அதுவரை சென்னையில் அவர்கள் இருவரையும் தேடிவந்த கதிரின் உறவினர்கள் கதிரின் உடலை எடுத்துக் கொண்டு ஊருக்குச் சென்றுவிடுகின்றனர். கர்ப்பிணியாக தனித்து விடப்பட்ட மலரைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அன்புவுக்கு ஏற்படுகிறது.

அன்புவுக்கு ஒரு பின் கதை உண்டு. ஜாதி மறுத்து காதல் திருமணம் செய்துகொண்ட அன்புவின் தங்கையையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையையும் ஆணவக் கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் தன் அப்பாவின் வழக்கை சென்னையிலிருந்தபடி நடத்திக் கொண்டிருக்கிறார் அன்பு.

ஜாதி ஆணவக் கொடுமைகளுக்கெதிராக அவர் படைத்திருக்கும் ஆயுதம் அன்புதான்! பகுத்தறிவின் உச்சம் மனிதநேயம் என்பதுபோல. அனைத்தையுமே மாற்றிவிடுகிற வல்லமை கொண்ட அந்த அன்பையே கதையை நகர்த்துகிற முக்கிய கதாபாத்திரத்துக்கும் பெயராக வைத்திருக்கிறார்

இயக்குநர். இதன்மூலம் ஜாதி ஒழிப்பின் வேர் எது  என்கின்ற தெளிவு அவருக்கு இருப்பதைக் காட்டுகிறது. அதனால்தான், கதையில் ஜாதி வெறிகொண்ட தனது அப்பாவையே காப்பாற்ற வழக்கு நடத்துகிறது அந்த அன்பு கதாபாத்திரம்! ஜாதி வெறியால் பாதிக்கப்பட்ட மலரையும் பல நெருக்கடிகளுக்கிடையேயும் ஆதரிக்கிறது அந்த அன்பு கதாபாத்திரம்! அதனாலேயே தனது காதலையும் தாளாத சோகத்துடன் விட்டுக்கொடுக்கிறது அந்த அன்பு கதாபாத்திரம். இப்படி தன்னை இழந்து மனிதநேயத்துக்காகப் போராடுகிறது அந்த அன்பு கதாபாத்திரம்! அந்த அன்புக்கும் சோதனை மேல் சோதனையை ஏற்படுத்தினால் என்னவாகும் என்கிற வகையில் கதை வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஜாதி ஆணவக் கொலைகளை காணொளியில் கண்கள் விரிய பார்க்கும் யாருக்கும், அந்த ஜாதிவெறியின் கொடுமை அவ்வளவாகப் புரிவதில்லை. கொலை நடப்பது எப்படி என்று ஒரு முன்னோட்டம் காட்டுவது போலக்கூட அத்தகைய காட்சிகள் ஆகிவிட்டனவோ என்கிற அச்சம்கூட ஏற்படுகிறது. ஒரு வேளை பகுத்தறிவாளர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த வலி புரியக்கூடும். ஆனால், கன்னிமாடம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அந்த வலி புரியும். அந்த அளவுக்கு அன்பின் மகத்துவத்தைச் சொல்லி, அதையும் தாண்டி அந்த ஆணவக்கொலை நடப்பதைக் காட்டும் போது பார்ப்பவர்களின் நெஞ்சம் நைந்து போகிறது. நெஞ்சைப் பிசையும் அந்த உணர்வே ஒவ்வொருவரின் மனதிலும் ஜாதிக்கெதிரான போர்க்குணத்தை உருவாக்குகிறது. அதுதான் இயக்குநருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

ஆணவக் கொலையால் சீரழிந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும் அன்புவும், அவர்களை ஆதரிக்கும் கவுன்சிலரும், ஸ்கொயர் ஸ்டாரும், ஸ்டெல்லாவும், கதாநாயகி மலரும், இன்ன பிற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாகத் தந்திருக்கிறார்கள். இனியன் ஹாரிஸின் ஒளிப்பதிவு, ஹரி சாயின் இசை ஆகியவை தேவையான அளவில் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர்.

கடவுள் நம்பிக்கையாளர்தான் இயக்குநர் போஸ் வெங்கட். அதனாலென்ன? ஜாதி ஒழிப்புக்காகப் போராடிய தந்தை பெரியாரின் கருத்துகளால் பயன்பெற்ற நாங்கள் அதைப் பரப்புவதற்கு கடன்பட்டுள்ளோம் என்கிறார் திராவிட இயக்கத்தவரான இயக்குநர்.

தந்தை பெரியாரின் சிலை, திராவிடர் கழகத் தோழர்கள் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமணம். திராவிட இயக்க தலைவர்களின் படங்கள், அண்ணல் அம்பேத்கர், சேகுவேரா படங்கள், தந்தை பெரியார் ஆட்டோ நிறுத்தம் என தொடக்கக் காட்சிகளிலேயே படம் என்ன பேசவிருக்கிறது என்கிற மனநிலையை உருவாக்கி விடுகிறது.

ஜாதிக் கொடுமையின் தீவிரத்தை அழுத்தமாகத் தந்ததோடு, அதை திரை வடிவத்தில் தருவதிலும் தெளிவோடு இருந்தமைக்காக இயக்குநரைப் பாராட்டிடவேண்டும். கொள்கைப் பூர்வமாக படமெடுக்க விரும்பும் பலர், திரை மொழியைத் தவறவிட்டு, திரைப்பட உருவாக்கத்திலும் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம். அது இரண்டுக்கும் கேடு. அடுத்து இதே போன்ற சமூகசிந்தனையுள்ள படங்களை உருவாக்க நினைப்போருக்கும் தடங்கல். அதைத் தன்னுடைய திரை அனுபவத்தால் கவனமாகக் கடந்திருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.

ஜாதி வெறி கொண்டவரின் பாதகச் செயலை, மனம் பதற காட்சிப் படுத்திவிட்டு, அதை இன்னும் அழுத்திச் சொல்ல, ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்; மதம் மனிதனை மிருகமாக்கும் என்று தந்தை பெரியாரின் வரிகளைப் பயன்படுத்தி படத்தை நிறைவு செய்கிறார் போஸ்வெங்கட். கன்னிமாடம் திரையில் நிறைவடைந்தாலும், அது உருவாக்கிய தாக்கம் நம் மனதில் நிலைகொண்டுவிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *