மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்தவுடன், முதல் வேலையாக நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு இந்தியாவுக்கே ஒரே தேர்வு முறைதான்; அதைக்கூட மெடிக்கல் கவுன்சில் என்னும் ஓர் அமைப்பினால் உருவாக்கப்படும் ஒரு குழுதான் நடத்தும் என்று கூறி, இதற்கு உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு மனுவின் தீர்ப்பை தங்கள் திட்டத்திற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
மேல்நடவடிக்கை என்ன?
மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்து ஊழல் செய்தார் என்பதற்காக வெளியேற்றப்பட்ட கேத்தன் தேசாய் என்பவரின் வீடு, அலுவலகங்களில், வருமான வரித் துறை மற்றும் சி.பி.அய். போன்ற அமைப்புகளால் சோதனையிடப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் அங்கிருந்து கைப்பற்றிய செய்திகள் வந்தன. ஆனால், எந்த மேல்நடவடிக்கையும் தொடர்ந்ததாகத் தெரியவில்லை.
அவருடைய திட்டம்தான் மருத்துவக் கல்லூரிக்கான ‘நீட்’ தேர்வுத் திட்டம்!
‘பார்கவுன்சில்’ வழக்குரைஞர்களை ஒழுங்குபடுத்தி அங்கீகரிக்கும் வழக்குரைஞர்கள் குழுவா _ சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகங்களில் தேர்வுகளை நடத்துகிறது? இல்லையே!
இந்த கேத்தன் தேசாய்தான் இதன் மூலவர்; இதை ஓர் உலக வர்த்தக அமைப்புக்கு (மருத்துவ பட்டப் படிப்புக்கு) கதவு திறந்து விட்டுள்ளார்! இதுவே கொடுமை; பல படித்தவர்களுக்குத் தெரியாத ஒரு புதிர்.’
நிலையான பார்ப்பனரின் மேலாண்மை!
‘கார்ப்பரேட்டுகளின்’ கொள்ளை ஒருபுறம்; பார்ப்பனரின் மேலாண்மைக்கான ஏக போகமும் ‘நீட்’ தேர்வின்மூலம் நிலை பெற்ற கொடுமை இன்னொருபுறம்!
கல்வியை _ நெருக்கடி காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து, ஒத்திசைவு (கன்கரண்ட் லிஸ்ட்) பட்டியலுக்கு 1976இல் 42ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தம் மூலம் மத்தியில் உள்ள ‘தேசியத்தவர்கள்’ தங்கள் வசம் எடுத்து, கூட்டாட்சித் தத்துவத்தை ஊனப் படுத்தினார்கள்.
இதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வரவேண்டும் என்கிற நிலைப்பாடுபற்றி மாநிலங்களுக்கு நாம் சுட்டிக்காட்டியும்கூட _ போதிய கவனஞ் செலுத்தப்படவில்லை. அதற்குத்தான் இவ்வளவு கடும் விலை _ உயிரிழப்புகள் முதல் மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு வரை தொடர்ந்து கொண்டே உள்ளன!
அதிர்ச்சியூட்டும் நிதிக் கமிஷன் பரிந்துரை
இன்று வந்துள்ள அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தி _ “மருத்துவமனைகள் _ பொது சுகாதாரம்’’ என்னும் தலைப்பில், மாநிலப் பட்டியலில் 6 ஆவதாக உள்ளதை ஒத்திசைவு (கன்கரண்ட் லிஸ்ட்) பட்டியலுக்கு மாற்றுவது அவசியம் என்கிற பரிந்துரையை நிதிக் கமிஷன் கூறியுள்ளது!
இனி இங்குள்ள பொது சுகாதாரம், மருத்துவமனைகளை எல்லாம் மத்திய அரசே, ‘நீட்’ தேர்வில் எப்படி _ மத்திய யூனியன் அதிகாரப்பட்டியலாக ஆக்கிக் கொண்டார்களோ, அதுபோல, கபளீகரம் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
அப்படி மாநிலப் பட்டியல் உரிமையை ஒத்திசைவு (கன்கரண்ட் லிஸ்ட்) அதிகாரத்திற்குக் கொண்டு போவது, யூனியன் லிஸ்டுக்கு நடைமுறையில் மாற்றிக் கொண்டதாக ஆகிவிடும்.
‘நீட்’ தேர்வைப்போல் ஒத்திசைவுப் பட்டியல் நடைமுறையில் _ இதனையும் டில்லி மத்திய அரசின் ஒரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடக் கூடிய பேரபாயம் இதன்மூலம் வரக்கூடும்.
இதனை மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்கவேண்டும். தமிழ்நாடு அரசு முதலில் எதிர்ப்புக் குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
வெறும் கடிதம் எழுதினால் மட்டும் போதாது;
எனவே, கருவில் உருவாகும்போதே இதனை அழித்தல் மிகவும் அவசியம், அவசரம்!
சுடுகாடு – இடுகாடுகளே மிஞ்சும்!
பிறகு எல்லாம் போக, மாநிலங்களின் அதிகாரம் வெறும் சுடுகாடுகளும், இடுகாடுகளும் என்கிற அளவுதான் மிஞ்சும் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறக்கூடாது.
உடனடியாக நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முதல், அனைத்துக் கட்சியினரும் எதிர்த்துக் குரல் கொடுத்து உரிமைப் பறிமுதலை’த் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
– கி.வீரமணி,
ஆசிரியர்.