இந்தியாவின் தடை செய்யப்பட்ட காதல்
உடுமலைப்பேட்டை சங்கர் (கவுசல்யா), ஜாதியால் தாழ்ந்தவர் என்பதாலேயே பட்டப்பகலில், மக்கள் கூடியிருக்கும் போதே, கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இது போன்ற சூழலில் சம்பந்தப்பட்ட பெண்கள், சமூகத்தின் கொடூரமான இன்னொரு பக்கத்தைக் காணச் சகிக்காமல் தங்களை, தங்களுக்குள்ளேயே சுருக்கிக் கொள்வதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதனாலேயே எவ்வளவு கொடூரமான நிகழ்வாக இருந்தாலும், காலவெள்ளத்தில் நம் நினைவிலிருந்து அந்த நிகழ்வுகள் மறைந்து போகும்; இல்லையென்றாலும் மறக்கடிக்கப்பட்டுவிடும். சங்கரின் படுகொலை அப்படி விடப்பட்டுவிடவில்லை. காரணம், சங்கரின் காதல் மனைவி கவுசல்யா, ஜாதிவெறி பிடித்த தன் பெற்றோரையே எதிர்த்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றப் படிகளில் ஏறி சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருகிறார். அதுமட்டுமல்லாமல், ஜாதி ஒழிப்புக்காக கவுசல்யா தன் வாழ்நாளையே ஒப்படைக்க உறுதி பூண்டு களத்தில் இறங்கிப் போராடுகிறார். இந்த நிகழ்வுகளை உடனிருந்து உயிர்ப்புடன் ஓர் ஆவணப் படமாக ஆக்கித் தந்துள்ளார் இயக்குநர் சாதனா சுப்பிரமணியம். ஆணவப் படுகொலை செய்ய எண்ணுகிறவர்களுக்கு கவுசல்யாவும், இந்த ஆவணப்படமும் ஓர் எச்சரிக்கையாகவே இருக்கும். அனைவரும் காணவேண்டிய ஒன்று.
– உடுமலை வடிவேல்