தந்தை பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம், பண்பாட்டு அடிப்படையில், நீதிக்கட்சி _ சுயமரியாதை இயக்கம் இணைந்த பரிணாம வளர்ச்சி காரணமாகவே, 1944இல் தந்தை பெரியார் அவர்கள், அறிஞர் அண்ணா பெயரில் ஒரு தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து சேலத்தில் ‘திராவிடர் கழகம்’ ஆக மாறி, ஜரிகை குல்லாய்க்காரர், ஆடம்பர ஜமீன்கள், ராஜாக்கள் உள்ள கட்சி நீதிக்கட்சி _ அது சாமான்ய மக்களின் கட்சி அல்ல _ என்ற தொடர் (பார்ப்பனப்) பிரச்சாரத்தை எதிர்கொண்டு முறியடித்ததோடு, அம்மாநாட்டின் மூலம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணடிமை நீக்கம், சமூகநீதி, _ எல்லாவற்றிற்கும் மேலாக மனிதநேய அடிப்படையில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திர சிந்தனை, அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்று மூலம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
தன்னுடைய சமூகப் புரட்சி இயக்கம் துவக்கத்தில் அதன் பணி நம் நாட்டிலிருந்து துவங்கி நடந்து வந்தாலும், காலப்போக்கில் இது ஓர் உலகளாவிய இயக்கமாக மானிடகுலம் முழுவதும் அதன் உரிமைகளைக் காத்துக் கொள்ளும் ஓர் அரணாக அமையும் என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு என்றுமே பொய்த்ததில்லை!
வட இந்தியாவில் மேற்கும் கிழக்கும் தந்த இரு பெரும் சிந்தனையாளர்கள் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், வங்கத்தைத் தாய் மண்ணாகக் கொண்ட எம்.என்.ராய் அவர்களும், அழைத்து, அவர்களைச் சந்தித்ததும் சமூக மாற்றத்தை உருவாக்கும் வகையில் ஒரு புதிய ஒளி வடக்கே செல்லவும் _ தெற்கின் திராவிட இயக்கமும் அதன் மூலத் தலைவருமான _ தந்தை பெரியார் வித்திட்டார்.
1924இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்து வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடமாடும் உரிமைக்கான சத்தியாகிரகப் போரின் முக்கிய தளநாயகனாக தந்தை பெரியார் திகழ்ந்ததை, அமெரிக்காவில் படித்துவிட்டுத் திரும்பிய புரட்சியாளர் அம்பேத்கரை, ‘குரல் அற்றவர்களின் குரல்’ (மூக் நாயக்’) வார ஏட்டின் மூலம் வியந்து பாராட்டியதோடு அதையே ஒரு செயல் ஊக்கியாக்கி, அடுத்து ‘மகத்’ குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுக்கும் போராட்டத்திற்கு அம்பேத்கர் தலைமை தாங்கி, இழிவு விலங்கை உடைப்பதான _ உரிமை பறிப்புக்கு எதிரான _ போர் முழக்கமாக அமைந்து, ஜாதி வெறியர்களை _ சனாதனிகளை மிரளச் செய்தது என்பது வரலாறு!
அதன் பிறகு அய்யாவின் பணியின் எல்லை அகிலம்தான் என்பதைப் பறைசாற்றுவது போல, கம்யூனிஸ்ட் அறிக்கையை, 1931லேயே தமிழில் மொழிபெயர்த்து வெளியிடச் செய்ததோடு, அதன் பின் சோவியத் ரஷ்யாவுக்கும் சென்று திரும்பினார்!
அது மேலும் விரிவடைந்து 1929லேயே ‘குடிஅரசு’ ஏட்டின் பரவல் மூலம், மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள் _ புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கல்வி அறிவும், பகுத்தறிவும் புகட்டி, சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை, தமிழர் சீர்திருத்த சங்கம், திராவிடர் கழகம் மூலம் பரவிடச் செய்தார்.
தென்கிழக்காசியாவில் மட்டுமல்லாது அவரது மறைவுக்குப் பின்னர் அவரது கொள்கை _ அவர் ஏற்றிய அறிவுச் சுடரின் ஒளி, உலகின் மேற்குப் பகுதியில் மேலும் பொலிவுடனும் வலிமையுடனும் பரவியுள்ளது.
அதற்கான எடுத்துக்காட்டுதான் வடஅமெரிக்காவின் சிகாகோ நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பினை 1994இல் நவம்பர் 13ஆம் தேதி, சமூகநீதிப் போரை வடபுலத்தில் நடத்திட்ட சந்திரஜித் அவர்களையும், என்னையும் அழைத்துத் துவக்கினார் _ டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதுபோலவே பல நண்பர்கள், பெரியாரிஸ்ட் குடும்பங்களை இணைத்தார். பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்கள், ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ என்று தொடங்கி, உலகமெங்கும் சமூகநீதிக்காகப் பாடுபடும் தொண்டறச் செம்மல்களுக்கு விருது வழங்கி 1 லட்ச ரூபாய் நிதி அளிப்பும் செய்து, முதல் விருதாளர் சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தொடங்கி, பல உலக நாட்டவர், மியன்மார், சிங்கப்பூர், குவைத், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியாவின் பல மாநிலத்தவரும் பெற்றுவரும் தன்மையில் ஆண்டு தவறாமல் நடத்தி வருவதன் மூலம் சமூகநீதிக் கொடியேற்றி பெரியாரும் அவரது தொண்டர்களும் பெருமைப்பட வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த (Periyar International) என்னும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் 2017இல் ஜெர்மனியில் பெரியார் _ சுயமரியாதை மாநாடு 2 நாள் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் 21, 22இல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகில் சில்வர் ஸ்பிரிங்ஸில் ‘அமெரிக்க மனிதநேய சங்கம்’ என்னும் பிரபலமான அமைப்புடன் இணைந்து அருமையான மாநாடு நடத்தி வரலாறு படைத்துள்ளது.
அமெரிக்காவின் முக்கிய பெருநகர்களில் பெரியார் பன்னாட்டு அமைப்பு பரவி வருகிறது!
சிகாகோ,
வாஷிங்டன்(டி.சி.),
மேரிலாந்து,
பென்சில்வேனியா,
நியூஜெர்சி,
கனக்டிக்கட்,
கலிபோர்னியா,
மிக்ஷிகன்,
வர்ஜினியா
போன்ற பல மாநிலங்களிலும் பெரியார் பன்னாட்டு அமைப்புகள் உருவாகி, சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பெரியார்_அம்பேத்கர் படிப்பு வட்டம் என்னும் துணை அமைப்பும் அதன் பணிகளுக்கும் மிகப் பெரிய அளவில் உதவி வருகிறது!
அவ்வளவு பெருமையும் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும், அவர் போன்ற நூற்றுக்கணக்கான பெரியாரிய_அம்பேத்கரிய, மனிதநேய பகுத்தறிவுக் குடும்பங்களுக்கும் உரியதாகும். அதன் வெள்ளி விழா வரும் 13 நவம்பர் 2019இல் வருகிறது. அதற்கு நாம் வாழ்த்துக் கூறுகிறோம்.
தொண்டறத்தால் நாளும் சாதனை படைக்கும் நல் முத்துக்களாக அதன் பொறுப்பாளர்கள் பால், இன, வேற்றுமையும் இன்றி, பணியை மகிழ்வுறச் செய்து பெரியார் உலக மயமாவதும், உலகம் பெரியார் மயமாவதும் இன்று நம் கண்கூடு! பூரித்துப் புளங்காகிதம் அடைந்து அவர்களை வாழ்த்துகிறோம் _ பணி வெல்க! வாழ்க பெரியார்!
– கி.வீரமணி,
ஆசிரியர்.