நேயன்
அடுத்த 10ஆவது குற்றச்சாட்டும் தலித் சார்ந்ததாக இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து உரிய பதிலைத் தர விரும்புகிறோம்.
10. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஈ.வெ.ரா. இருந்ததில்லை.
தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?
1. ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்ல முடியாது.
2. ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.
3. தங்க நகைகள் அணியக் கூடாது.
4. மண்குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.
5. ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
6. அடிமையாக இருக்க வேண்டும்.
7. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
8. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
9. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.
10. குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது.
11. வண்டி ஏறிச் செல்லக் கூடாது.
12. பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
13. சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.
14. பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.
15. மேல் அங்கியோ, துண்டு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது.
16. பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.
17. நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.
பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதி வைத்தனர்.
தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்று தலைப்பில் 24.11.1929 “குடிஅரசில்” எழுதினார்.
அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதினார்.
ஆதிதிராவிடர், தீயர், தீண்டாமை விலக்க மாநாடுகளை பெரியார் நடத்தினார்.
21.7.1929இல் சென்னையிலும், 25.8.1929இல் இராமநாதபுரத்திலும், 10.6.1930இல் திருநெல்வேலியிலும், 16.5.1931இல் சேலத்திலும், 7.6.1931இல் லால்குடியிலும், 5.7.1931இல் கோவையிலும், 4.7.1931இல் தஞ்சையிலும், 7.12.1931இல் கோவையிலும், 7.2.1932இல் லால்குடியிலும், 28.8.1932இல் அருப்புக்கோட்டையிலும், 7.8.1933இல் சென்னையிலும், 1.7.1938இல் சீர்காழியிலும், 7.3.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.5.1936இல் கொச்சியிலும், 2.9.1936இல் சேலத்திலும், 6.5.1937இல் சிதம்பரத்திலும், 4.7.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டனத் தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.
மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்ப்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.
ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும் பழங்குடி மக்களும் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.
தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 9.2.1982இல் ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’, தலித்திய ஏடுகள் போன்றவற்றைப் படியுங்கள்.
பெரியார் பேசுகிறார்: “நானோ, திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை; இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாகக் கருதவேண்டாம். ஆதிதிராவிடன் – திராவிடன் என்கிற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.
இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன்: திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதைச் செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.
தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்று வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்கிற உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர, தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்று மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர்.
நான் மிக எதிர்பார்த்திருந்தேன் _ அவரின் ஒத்துழைப்பை – இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால், எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாள்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்ற நான் அஞ்சுகிறேன்.
எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?
என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இருக்கும் இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.
தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.
திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு.
(‘விடுதலை’ 8.7.1947)
(தொடரும்)