பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு

செப்டம்பர் 16-30 2019

பேராசிரியர். அருணாசுந்தரம்

பன்முகங்கள் கொண்ட தந்தை பெரியார், மொழியிலும் தன் தடத்தைப் பதித்தவர். அவருடைய ‘எழுத்துச் சீர்திருத்தம்?’ எனும் நூல் இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. நூலின் பின்னட்டையில், “மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனமல்ல. அது இயற்கை வளமும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை.’’ “மொழி மனிதனுக்கு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்குத் தேவையானதே ஒழிய, பற்றுக் கொள்வதற்கு அவசியமானதல்ல’’ என்று கூறியுள்ளார். இச்சிந்தனையுள்ள பெரியார், இந்நூலுக்கு ‘எழுத்துத் திருத்தம்?’ என்று பெயரிட்டிருந்தால் பொருத்தமாயிருக்கும். மாறாக, ‘எழுத்துச் சீர்திருத்தம்’ என்றது முரணாகவும் ஆராயத் தூண்டுவதாகவும் உள்ளது. ஒருமொழி காலங்கடந்து வாழ்ந்தால் அம்மொழி பேசும் இனத்தவரின் கலாச்சாரமாக, பண்பாடாக மாறிவிடும். சான்றாக, ‘நீரின் தன்மை ஈரம்’  என்றால் மொழி. ‘அவன் நெஞ்சில் ஈரமே இல்லையா?’ என்று கேட்டால் கலாச்சாரம், பண்பாடு என்பார் படைப்பாளர் பிரபஞ்சன். மொழி, மக்களின் பண்பாடாக மாறுவதால் தான் இந்நூலின் பெயர் ‘எழுத்துச் சீர்திருத்தம்’ என்றாயிற்று. மனிதன் மட்டும் மொழி பேசவில்லை. பிற உயிரினங்களும் பேசுகின்றன என்கிறார். எடுத்துக்காட்டாக, கோழி, குரங்கு போல்வன தம் பிள்ளைகளை ஒலியால் அழைப்பதைக் கூறுகிறார். எறும்புகள் கூட அசைவு மொழியில் பேசுவதைக் குறிப்பிடுகிறார்.

‘இந்தியை ஏன் எதிர்த்தேன்?’ என்று பேசுகிறார். “தாய்மொழி இந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. மூட நம்பிக்கையை உண்டாக்கும் கருத்துகளுக்கு தமிழ் மொழியில் இடமில்லை. இந்திய மொழிகளைவிட நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழில் பேசுபவர்கள் மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் பல நன்மையடைவோம் என்பதோடு; நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது’’ என்கிறார். இப்படி மொழி குறித்துத் துல்லியமான பார்வையுள்ள தந்தை பெரியார், ‘மொழி மீது பற்று வேண்டாம்’ என்பது அதிசயமாக உள்ளது. ஒரு மனிதன் காலத்துக்குக் காலம் மாறுபடுவான். ஒரே காலத்தில் ஒரு கருத்தில் முரண்படுவது  அக்கருத்தை மேம்படுத்துவது இவர் மட்டும் தான் எனலாம்.

மேலும், “நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழைவிட, மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல’’ என்கிறார். தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி என்னும் சொற்களே இல்லை. மொழிக்குச் சக்தி உண்டு என்று பிடிவாதம் செய்வது அறியாமை என்கிறார். இதேபோல தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் பெற்றெடுத்ததும் தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ, உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக தமிழ் தானாக வெளிவருமா? என்று தாய்மொழிப் பற்றும் பாசமும் கொண்ட என்னை இவர் கேட்கும் கேள்விகள் சாட்டை கொண்டு அடித்தன; என் மூளையைச் சலவை செய்தது போலாயிற்று. ‘வடமொழி சேர்ப்பும் பிரிப்பும்’  என்னும் பகுதியில் வடமொழிச் சொற்களால் நம் பண்பாட்டுச் சீர்குலைவை எடுத்துக்காட்டுகிறார். வடசொற்கள் தமிழில் வழங்கி வருவதால் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைப் பேசுகிறார். இங்கு தமிழில் உள்ள வடசொற்களின் பட்டியல் அவர் நூலில் இருந்து தரப்படுகின்றன.

வடமொழிச்சொல்லான ‘ஜாதி’ தமிழில் இல்லை. ஜாதிப் பிரிவினையில்லை. அதுபோலவே திவசம், திதி, கல்யாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய போன்ற சொற்களும் தமிழில் இல்லாதவை. தாராமுகூர்த்தம், கன்னிகாதானம் போன்ற சொற்களும் இல்லை. பெண்ணடிமையும் தமிழில் இல்லை. கன்னிகாதானம் _- தானம் கொடுக்கும் உயிரா பெண்? இதற்குத் திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை’ என்றுதானே கூறுகிறார். அதாவது புருஷனும் மனைவியும் நண்பர்கள் என்றுதானே பொருள். எவ்வளவு கருத்து வேறுபாடு பாருங்கள் என்கிறார். ‘மோக்ஷம்’ என்பதற்கு தமிழ்ச் சொல் ஏது? மோக்ஷத்தினை நாடி எத்தனைத் தமிழர் காலத்தையும், கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள் கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்னும் சொல்லால் ஏற்பட்டதுதானே மதவெறி? நெறி; கோள் என்றால் வெறி ஏது?’’ என்று சாடுகிறார். ‘பதிவிரதம் உண்டெனில் சதிவிரதம் உண்டல்லவா? இது வடமொழித் தொடர்பால் ஏற்ற விளைவுதான்’ என்கிறார். ‘ஆத்மா’ என்னும் சொல்லுக்கு தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூடநம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன. தமிழ்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண்_பெண் இருபாலர்க்கும் சம உரிமை என்கிற அடிப்படையின் மீதும் பகுத்தறிவு என்கிற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். வடமொழி ஆதிக்கம் புகுந்துதானே நாம் பல மூடநம்பிக்கைக்கும் இழிவுகளுக்கும் ஆட்பட்டுத் தவிக்கிறோம்?

தமிழ்ச் சமூகம் தேவையற்றவைக்காகப் படும்பாடுகள் அனைத்துக்கும் பிறமொழியான வடமொழியே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தித் திணிப்பின் இக்காலக் கட்டத்துக்கு இச்சிந்தனை முக்கியமானதாகப்படுகிறது. வடமொழிச் சொற்களின் செயல்பாடுகளைக் கருதினாலும், தமிழ்மொழிமேல் பற்றற்ற தன்மையும், அம்மொழியின் சிறப்புத் தன்மையால் தமிழை விரும்புகிறேன் என்னும் நடுவுநிலையுமே தந்தை பெரியார் என்னும் அடையாளம்! ஆளுமை! எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *