கே: விவாதம் ஏதுமின்றி காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கிய மோடி அரசு, அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியை நீக்காதது எதைக் காட்டுகிறது?
– பெ.கூத்தன், சிங்கிபுரம்
ப: மனித குலம் ஒன்று _ இந்தியாவில் ‘ஒரே ஜாதி’ என்று சட்டம் நிறைவேற்றினால் நாம் தாராளமாக வரவேற்போம். மநுதர்ம விரும்பிகளிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
கே: பள்ளி மாணவர்களின் கைகளில் ஜாதிக் கயிற்றுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டாமா? – நெய்வேலி க.தியாகராசன்
ப: தடைசெய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வில் உள்ள பார்ப்பனர்கள் கூச்சல் போடுகிறார்கள். தமிழக கல்வித்துறை தடுமாற்றமின்றி இதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
ப.சிதம்பரம்
கே: ப.சிதம்பரம் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அமித்ஷாவின் பழிவாங்கும் நடவடிக்கையா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கும் மிரட்டலா?
– தனபால், வேலூர்
ப: எல்லாமும் இணைந்ததே என்பது உலகறிந்த செய்திதானே!
அமித்ஷா
கே: வெங்கட் கிருஷ்ணன் என்கிற பார்ப்பனர், ஜாதியில் உயர்வு தாழ்வு உண்டு என்று பார்ப்பன மாநாட்டில் பேசியதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வீர்களா?
– காந்திமதி, தஞ்சை
ப: சில ஊர்களில் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். வழக்குகள் தொடரலாம் _ பாதிக்கப்பட்ட நாம்!
கே: காஷ்மீர் பிரச்சனையில் தாங்கள் கருதும் சரியான தீர்வு என்ன?
– சீனிவாசன், சாலவாக்கம்
ப: ஏற்கெனவே வந்த அறிக்கையைப் படியுங்கள். அரசமைப்புச் சட்டப்படி அம்மாநில மக்களின் _ சட்டமன்றத்தின் கருத்தறிந்து முடிவு எடுத்திருந்தால் சரியானதாக அமையும். அரசமைப்புச் சட்டம் மீறப்படலாமா?
கே: நாட்டின் பொருளாதாரத்தைப் பொருட்படுத்தாது ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்கிற பா.ஜ.க. அரசின் துடிப்பு நாட்டை நிலைகுலையச் செய்யாதா? தடுக்க வழி என்ன?
– கோ.மணிகண்டன், திருவண்ணாமலை
ப: நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் கவலையை எல்லா வட்டாரங்களுக்கும் தரும் அளவுக்கு அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டுள்ளது.
கே: திராவிடக் கட்சிகள் ஆளும் நிலையில் தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தில் ‘திராவிட இயக்க வரலாறு’ முறையாகப் பதிவு செய்யப்படவில்லையே! வலியுறுத்துவீர்களா?
– ம.மகிழ், சென்னை
ப: உண்மையான திராவிட உணர்வுடன் கூடிய ஆட்சியால் மட்டுமே அது முடியும்!
கே: கல்வி நிறுவனங்களில் சமூகப் பணி என்னும் போர்வையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கும் முயற்சியை சட்டரீதியாக முறியடிக்க முடியாதா?
– முகமது, மாதவரம்
ப: மத்திய ஆட்சி யாருடைய கையில் இப்போது _ மறந்துவிட்டு இக்கேள்வியை கேட்கிறீர்களே!
கே: அண்ணா பெயரைச் சொல்லி ஆள்வோருக்கு ‘அண்ணா பிறந்த நாள் கடமையாக’ எதை வலியுறுத்த விரும்புகிறீர்கள்?
– யாழினி, ஆவடி
ப: குறைந்தபட்சம் அண்ணா கொள்கை என்னவென்றாவது தெரிந்து வைத்துக்கொள்வது ஆளும் அ.தி.மு.க.வுக்குத் தேவை இப்போது!