ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பகவத் அவர்கள் 18.8.2019 அன்று புதுடில்லியில் ஞான உத்சவ் நிகழ்ச்சி நிறைவுரையாற்றும்போது, இடஒதுக்கீடு – தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்கு தற்போது இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைப்படி வழங்கப்பட்டு வருவதை நீக்கிவிட, இடஒதுக்கீடு வேண்டும் என்பவர்களும், வேண்டாம் – கூடாது என்பவர்களும் சுமுகமான சூழ்நிலையில் அமர்ந்து விவாதித்து அதுபற்றி ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்! என்று பேசியுள்ளார்.
விஷ உருண்டையை தேனில் கொடுப்பதுபோல
இது சமூகநீதிக்குக் குழிபறிக்கும் ஆபத்தான முயற்சி என்பதால், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் இதைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் பெறுவோர் ஏழைகளாம்!
ஏற்கெனவே இடஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15(4), 15(5) ஆகிய பிரிவுகளிலும், 16ஆவது பிரிவிலும் உள்ள, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்கள் நீங்கிய மற்ற ”உயர் ஜாதியில் ஏழைகளுக்கு” 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்துள்ளபடி (ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் மற்றும் மாதம் ஒன்றுக்கு ரூ.66,000 சம்பாதிப்பவர்கள் அந்த ஏழைகள் என்று சட்டத்தில் வரையறுத்த நிலை) அரசமைப்புச் சட்டத்தின்படி பெரிய நிருவாகப் பதவிகளில் இடஒதுக்கீட்டினைப் பின்பற்றாமல் நேரடி நியமனங்கள், மாநில அரசுகளுக்குரிய நியமன அதிகாரப் பறிப்புகள் ஆகியவை மூலம் – முன்பே சமூக நீதிக்கு உலை வைக்கும் முயற்சி தொடங்கப்பட்டு விட்டது.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ஆபத்தான ’மயக்க பிஸ்கட்’
இடஒதுக்கீட்டினை – சமூக நீதியை அடியோடு ஒழித்துக் கட்டி, வெறும் பொருளாதார அடிப்படை என்பதை சில காலம் வைத்து – இறுதியில் இடஒதுக்கீடே தேவையில்லை என்கிற முடிவை இந்த அய்ந்தாண்டு ஆட்சி காலத்திற்குள் நிறைவேற்றிடும் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இநத் ஆபத்தான பேச்சு அனைவரும் ஒன்றுபட்டு எதிர்த்து, தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்!
1951இல் நடந்தது என்ன!
1951இல் தந்தை பெரியார் காலத்தில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று உச்சநீதிமன்றம் உள்பட தீர்ப்புக் கூறிய பின், தந்தை பெரியார் தலைமையில் வெடித்துக் கிளம்பிய தமிழ்நாட்டு சமூகநீதிக் கிளர்ச்சியால்தான் முதன் முறையாக, ஜனநாயகவாதியான அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியவர்கள் அரசமைப்புச் சட்டம் 15ஆவது பிரிவில் 4 என்னும் உட்பிரிவினை – சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று நீண்ட விவாதத்திற்குப் பின் பொருளாதார அடிப்படையை அறவே விலக்கி நிறைவேற்றினர்!
அதன் பிறகு இந்திரா சஹானி வழக்கு என்கிற மண்டல் கமிஷன் வழக்கில் – 9 நீதிபதிகளைக் கொண்ட முழு அமர்வில் இடஒதுக்கீடு பற்றியதான பல பிரச்சினை அலசி ஆராயப்பட்டு தீர்ப்புத் தரப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் என்ன சொன்னார்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானப் பகுதியாகவும் (Basic Structure of the Constitution) இது ஆகி நிலைத்துள்ளது – அடிப்படை ஜீவாதார உரிமைகள் பகுதியைப்போலவே. (கேசவானந்த பாரதி வழக்கு)
எனவே இடஒதுக்கீடு – சமுகநீதி என்பது பிச்சை அல்ல; சலுகை அல்ல; ஒடுக்கப்பட்ட, காலங்காலமாக கல்வி உத்தியோகம் மறுக்கப்பட்ட அடிமை வகுப்புகள் உரிமையாகும்; பிறப்புரிமை ஆகும். இது – அம்பேத்கர் பயன்படுத்தும் சொல்.
இடஒதுக்கீடு மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல!
இதுபற்றி ஒரு முக்கிய தகவல். மண்டல் கமிஷன் பரிந்துரை செயலாக்கம்பற்றி திருமதி. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, மண்டல் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு, விவாதம் தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேலும் குறிப்பாக மக்களவையில் நடைபெற்றபோது, இன்று மோடி கூட்டணி அரசில் அமைச்சராக உள்ள நண்பர் ராம்விலாஸ் பஸ்வான்தான் இந்தத் தீர்மானத்துக்கான விவாதத்தை அன்று துவக்கினார்.
நாடாளுமன்றத்தில் அத்துணை உறுப்பினர்களும் – கட்சி பேதமின்றி, பிரதமர் இந்திரா காந்தி மூலம் இடஒதுக்கீடு என்பது மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல (Not Negotiable) என்று உறுதி கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு மத்தியில் அமைச்சராக இருக்கும் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களே சாட்சியும்கூட!
அந்தப்படி அரசமைப்புச் சட்டம் அதன் அடிக்கட்டுமானப் பகுதியாக வைத்துள்ள இடஒதுக்கீட்டினைப் பற்றி இப்போது எதற்குத் தேவையற்ற விவாதம்?
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எதிர்ப்பும் – ஆதரவும்
இதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் சில ஆண்டுகளுக்கு முன், பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது இப்படி மறுபரிசீலனை செய்யவேண்டிய ஒன்றே இடஒதுக்கீடு என்று பேசி – அது பெரும் எதிர்ப்பை, எதிர் கொண்டது. நிதிஷ்குமார், லாலுபிரசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தங்கள் நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டு இடஒதுக்கீடு அவசியம் தேவை என்று கூறவில்லையா? அதன்பின் டில்லியிலேயே ஆர்.எஸ்.எஸ். தலைவர் தனது நிலையை மாற்றி இடஒதுக்கீடு தேவை என்று கூறவில்லையா?
இப்போது தங்களுக்கு புல்டோசர் மெஜாரிட்டி கிடைத்து விட்டது; இதைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டினை ஒழித்துவிடலாம் என்கிற திட்டத்தின் முன்னோட்டம்தானே, அண்மையிலான ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ஆழம் பார்க்கும் வேலை?
5000 ஆண்டு சமுக நீதிக்கான தீர்வே இடஒதுக்கீடு
5000 ஆண்டு கால ஜாதிவருண தர்மக் கொடுமையிலிருந்து மீளும் எளிய முயற்சியே இடஒதுக்கீடு. அது சட்டப்படியேகூட நிரப்பப்படாத கொடுமை உள்ளது. இந்நிலையில் இப்படி ஓர் ஆரிய சூழ்ச்சியா? இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்; இது துரோணச்சாரியார்கள் காலமும் அல்ல; ஒடுக்கப்பட்டோர் ஏகலைவன்களும் அல்ல!
தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் உள்ள சமூகநீதியாளர்களும், தலைவர்களும் உரிய கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருப்பதே சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும் நாம், தர வேண்டிய விலையாகும்.
ஆபத்து – வருமுன்னரே தடுத்தாக வேண்டும்.
– கி.வீரமணி,
ஆசிரியர்