அய்யாவின் அடிச்சுவட்டில்…
கி.வீரமணி
28.8.1988 தொண்டராம்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு பேசுகையில், தஞ்சையில் நிகழ்ந்த ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வைச் சுட்டிக்காட்டிப் பேசினேன்.
முப்பத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு 1957லே தஞ்சையிலே அய்யா அவர்களுக்கு முதன்முதலாக எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவிலே, அய்யா அவர்கள் ஜாதி ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியல் சட்டத்தில் எவையெல்லாம் ஜாதியைப் பாதுகாப்பனவாக இருக்கின்றதோ அவற்றை எதிர்த்து அரசியல் சட்ட எரிப்புப் போரை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிவித்தார் என்பதைக் குறிப்பிட்டு பேசினேன்.
எனவே, இந்த மாநாடு இயக்க வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளது என்று குறிப்பிட்டேன்.
கும்பகோணம், வலங்கைமானில் நடை பெற்ற (29.8.1988) பேராசிரியர் நம்.சீனிவாசன்-ஜோதி மண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன். அப்போது, “மணமகன் அருமை நண்பர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள், பெரியார் திடலிலே, தந்தை பெரியார் அறக்கட்டளையின் சார்பாக நடைபெறக்கூடிய தந்தை பெரியார் தத்துவக் கொள்கை பரப்பு பன்னாட்டு மய்யப் (Periyar International Institute of Periyar Philosophy and Ideology) பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர் அந்தத் துறையிலே இருந்து பல அற்புதமான பணிகளைச் செய்யக் கூடியவராக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மாணவப் பருவந்தொட்டே இந்தக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட காலத்திலே ‘நமது குடும்பம்’ என்கிற உணர்வோடு இருந்து வருகிறார்.
நாங்கள் இந்த மணவிழாவில் கலந்து கொள்வது உரிமையோடு கூடிய ஒரு செயலாகும்.
இந்த மணவிழாவிற்கு தலைமை ஏற்கும் பொறுப்பை எனக்கு நீங்கள் சுமத்தி இருந்தாலும், உங்கள் அனைவரையும் மணவீட்டார் சார்பில் ‘வருக வருக’ என வரவேற்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
வரவேற்புரையாற்றக்கூடிய அளவிற்கு உரிமையோடு – கடமையாகக் கருதக்கூடிய அளவிலே நான் ஈடுபாடு கொண்டவன் என்பதை மகிழ்ச்சியோடு உங்கள் அனைவர்க்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திருமணத்திற்கு என் துணைவியார், மகள் ஆகிய அனைவரோடும் வரவேண்டுமென்று முயற்சித்தாலும் _ அவர்களுக்கு கடைசி நேரத்திலே உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இருந்தாலும் சங்கடத்தோடு அவர்கள் சொன்னார்கள், “நான் மணவிழாவிற்கு வரவேண்டுமென்று விரும்பினேன். நீங்கள் இயலாமையைத் தெரிவித்து வாழ்த்துகளையும் சொல்லுங்கள்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவ்வளவு ஈடுபாடு கொண்ட குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்து கொண்டிருக்கின்றது.
இங்கே மணமக்கள் இருவருமே ஆய்வுப் பட்டங்களைப் பெற்றவர்கள். இதுவே பெரிய புரட்சி, பெரியாரின் புரட்சி!
நம்முடைய நாட்டின் 50 ஆண்டுகளுக்கு முன்பு ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்ட ஒரு சமுதாயத்திலே _ இன்றைக்குப் பெண்கள் படித்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, ஆய்வு செய்யக் கூடியவர்களாகவும் படித்திருக்கிறார்கள்.
மணமகன்தான் ஆய்வுக்குரியவர் என்று சொல்லும்போது உங்களுக்கு கொஞ்சமும் நான் சளைத்தவர் அல்ல என்று சொல்ல வேண்டிய அளவிற்கு அவரும் பேராசிரியை ஆக இருக்கக் கூடிய அளவிற்குத் தகுதி படைத்தவர்.
நம்முடைய தம்பி சீனிவாசன் அவர்கள் அடக்கமும் பண்பும் உள்ளவர்கள். அதேபோல செல்வியார் இருக்கலாம். எனக்கு நேரடியாகத் தெரியாத காரணத்தினாலே, அவருடைய குடும்பச் சூழ்நிலைகளை மற்றவர்கள் மூலமாக அறிகிறபோது, அவர்கள் எள்ளளவும் அதற்குக் குறைந்தவர்களாக இருக்க முடியாது.
நாங்கள் பெருமைப்படுகிற இளைஞர்களிலே ஒருவர் நம்முடைய பேராசிரியர் சீனிவாசன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த நேரத்திலே சொல்லுகின்றேன். அவர்கள் இருவரையும் மணமக்களாகப் பார்க்கிற நேரத்தில் இன்னும் மகிழ்ச்சியடைகின்றோம்.
சீனிவாசன் அவர்கள் என்னை வைத்து ஆய்வு செய்தவர்கள். என்னுடைய குறைபாடுகள் என்ன, நிறைபாடுகள் என்ன என்று எனக்குத் தெரியாது.
ஆனால், எந்தக் கரணத்தினாலோ அவர்கள் என் மீது பற்றுக்கொண்டு, என்னுடைய பேச்சுமுறை என்பதை ஆய்வாக எடுத்துக்கொண்டு ஆய்வாளராக ஆனவர்.
அவர் ஆய்வாக எடுத்துக்கொண்டதே எனக்குத் தெரியாது. பிறகுதான் வந்து சொன்னார்கள். இந்த இல்லத்துக்கு வரும்போதெல்லாம் என்னுடைய இல்லத்திற்கு வருவதாகத்தான் நினைப்பேனே தவிர, அவர்களை வேறொருவராக நினைக்க மாட்டேன்.
பன்னாட்டு மய்யத்தில் அவர்களிடம் நாங்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும், தெளிவாகவும் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவர். எதை எடுத்தாலும் செம்மையாகச் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். அவருக்கு அருந்துணையாக ஓர் அம்மையார் வந்திருக்கிறார் என்று சொல்லும்போது, “பொன்மலர் நாற்றமுடைத்து’’ என்று சொல்வதைப்போல மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக, இன்னும் மணமுள்ள மலராக அவரை ஆக்கக்கூடிய வாய்ப்பு இன்றைக்கு கிடைத்திருக்கிறது.
தந்தை பெரியாருடைய பகுத்தறிவுக் கொள்கையிலே அவர்கள் எவ்வளவு ஈர்க்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல ஈர்க்கப்படக் கூடியவராக அந்தச் சகோதரியாரை முழுமையாக தன்னுடைய நிலைக்கு ஆளாக்குவார்கள் என்பதும் எனக்கு நன்றாக, தெளிவாகத் தெரியும்’’ என்று உரையாற்றினேன்.
தந்தை பெரியாரின் 111 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.9.1988 அன்று கொண்டாடப்பட்டது. காலை அய்யா, அன்னையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து அய்யா, அன்னையார் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். அகில இந்திய ஜனதா தள கட்சித் தலைவர் அஜீத் சிங், முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் ராம் நரேஷ், ஜனதா முன்னாள் பொதுச் செயலாளர் சுபோத் காந்த் ஆகியோரும் எங்களுடன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் பெரியார் திடலில் புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நீதிபதி வேணுகோபால் தலைமை வகித்தார். மய்யத்தை துவக்கி வைத்து டாக்டர் ராமச்சந்திரா உரையாற்றினார். அன்று காலை தமிழ்நாட்டின் வட முனையான தலைநகர் சென்னையில் காலையில் பங்கேற்ற நான், மாலையில் தென் முனையான நாகர்கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
கன்சிராம்
அந்த நிகழ்ச்சி வடநாட்டில் கன்சிராம் அவர்கள் தலைமையில் இயங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பகுஜன் சமாஜ் கட்சியின் சைக்கிள் பேரணி தொடக்க விழாவாகும் .
இந்த சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றும்போது, “தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை இன்றைக்கு எல்லோரும் ஏற்றுக் கொண்டு வருகின்றார்கள். அந்த உணர்வை வடபுலத்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் கூட பெற்று விட்டார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான் எங்கிருந்து கிளம்பினால் இந்தப் புரட்சியைக் கொண்டு போக முடியும் என்று எண்ணி அவர்களுடைய சைக்கிள் பேரணியை இங்கிருந்து துவக்க கன்சிராம் அவர்கள் வந்து இருக்கிறார்கள்’’ என்று கூறி தொடங்கி வைத்தேன்.
மேலும் “ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களே கட்சியால் பிரிந்து நிற்காதீர்கள், ஜாதிகளால் பிரிந்து நிற்காதீர்கள்; மதங்களால் பிரிந்து நிற்காதீர்கள்; இந்த நாட்டில் கருப்புச் சட்டைக்காரன் இல்லாவிட்டால் கொஞ்சம் அசந்தால் கூட மீண்டும் சங்கராச்சாரிகள் எந்த நிலைக்குப் போவார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆரியத்தின் ஆணிவேரை அசைத்துக் காட்டி அதனை அடியோடு அழிக்க வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டேன்.
அம்பேத்கர்
ஜோதிபா ஃபூலே
சாகுமகராஜ்
நாராயணகுரு
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று கன்னியாகுமரியில் தொடங்கிய நூறு தொண்டர்களைக் கொண்ட இந்த சைக்கிள் பேரணி அக்டோபர் 4ஆம் தேதி மதுரை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜோதிபா ஃபூலே, சாகுமகராஜ், நாராயண குரு ஆகியோரின் சமூகநீதி கருத்துகள் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டன.
சென்னை அடையாறு பகுதிகளில் 19.9.1988 அன்று காலையிலிருந்து மதியம் வரை 16 இடங்களில் திராவிடர் கழகக் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினேன். இந்தக் கொடி ஏற்று நிகழ்ச்சி இந்திரா நகர் 16ஆவது குறுக்குத் தெருவில் தொடங்கி பாலவாக்கம், கந்தன்சாவடி, நீலாங்கரை வரை தொடர்ந்து நடைபெற்றது. முடிவாக திருவான்மியூரில், பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அப்போது விரிவான உரையாற்றினேன். தாழ்த்தப்பட்ட சகோதரர்களும், பிற்படுத்தப்பட்ட சகோதரர்களும், தமிழர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று இனமானம் காப்போம்; கட்சிகளாலோ, ஜாதிகளாலோ, மதத்தாலோ நாம் வேறுபடாமல் தமிழராய் இனமானம் கொள்வோம் என்று எடுத்துரைத்தேன்.
ஈழப் போரில் காயமடைந்து மருத்துவ உதவிக்காக தமிழகத்தில் தஞ்சம் புகுந்த விடுதலைப்புலிகளை ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு (ஆளுநர்) அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது. இது குறித்து நாம் கடும் கண்டனத்தை பதிவு செய்தோம்.
இந்த நிலையில் கழகம் வழக்கு தொடர்ந்தது. அதன் அடிப்படையில் 8.9.1998 அன்று வழக்கறிஞர் என்னும் முறையில் நான் எப்போது வேண்டுமானாலும் அவர்களை சந்திக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் பாஸ்கரன் தீர்ப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து சென்னை மத்திய சிறையில் உள்ள விடுதலைப் புலிகளைச் சந்தித்து அவர்களது உடல் நிலை, உணவு ஆகியவற்றை அனைத்தையும் கேட்டு அறிந்தேன். தொடர்ந்து 10.9.1988 அன்று விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்து கட்டைகள், இரும்புத் தூண்கள் ஆகியவற்றை அமைத்து சந்திக்க விடாமல் தடுத்தனர். அதனை எதிர்த்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தேன். பின்பு நானும் வழக்கறிஞர் துரைசாமி அவர்களும் கைது செய்யப்பட்டு, எங்களை காவல் நிலையத்தில் வைத்து இருந்தனர். இந்தப் பிரச்சனையில் உடனே தலையிட வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர், அட்வகேட் ஜெனரல், பார் அசோசியேஷன் தலைவர் ஆகியோருக்கு தந்திகள் அனுப்பப்பட்டன. மீண்டும் வழக்கு தொடரப்பட்டு அதில் தளபதி கிட்டுவைச் சந்திக்க அனுமதி பெற்று அவரை சந்தித்தோம்.
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதான விடுதலைப்புலிகளை விடுவிக்கவும் ஈழத்தில் போர் நிறுத்தத்தை நீடித்து விடுதலைப்புலிகளை அழைத்துப் பேசுமாறும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு 19.9.1988 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தி அனுப்பினேன். தொடர்ந்து 26.9.1988 அன்று தியாகச்சுடர் திலீபன் நினைவு நாளையொட்டி சென்னை மதுரை, மத்திய சிறைச்சாலைகளின் முன் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தஞ்சமடைந்த ஈழப் போராளிகளை விடுதலை செய்யக் கோரி விடுதலைப் புலிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து நடைபெற்ற இம்மாநாட்டில் சென்னை நிகழ்ச்சிக்கு ஆவடி மனோகரன் தலைமை தாங்கினார். எம்.கே.டி.சுப்பிரமணியம், மணியரசன் ஆகியோர் கட்சியினருடன் பங்கேற்றனர். சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புலவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழநெடுமாறன், மாவட்ட செயலாளர் வரதராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
கலி.பூங்குன்றன்
வந்தியத்தேவன்
இந்தக் கைதுப் படலம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 28.9.1988 அன்று மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை அன்றைய ஆளுநர் அரசு கைது செய்து சிறைகளில் அடைத்தது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் 3 வார காலத்திற்குள் கைதானவரை நீதிபதிகள் முன் நிறுத்தி கைதானவர் கருத்து கைதானவர் சார்பில் மக்கள் கருத்து ஆகியவற்றை நீதிபதிகள் குழு கேட்டு அரசுக்கு அறிக்கை தர வேண்டும் என்கிற விதியின் அடிப்படையில், இது தொடர்பான நீதிபதிகள் குழுவின் முன் புலிகள் முறைகேடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத்தின் அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், கவிஞர் சிகாமணி, செங்கை அண்ணா மாவட்ட கழக செயலாளர் ஆவடி மனோகரன் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
மதுரையில் இதற்கான ஒரு மாபெரும் மாநாடு நடத்தப்பட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 21.9.1981 சென்னை வந்திருந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் சங்கரானந்தை சந்தித்து நீதிபதி பதவிகளில் சமூகநீதி வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மனுவை வழங்கினேன்.
சிலம்பொலி செல்லப்பனார்
பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சியில் 22.9.1988 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று புரட்சிக்கவிஞர் பற்றி தொடர் சொற்பொழிவு நிகழ்த்திய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாருக்கு பாராட்டு செய்தேன்; நினைவுப் பரிசு வழங்கினேன்.
புதுடெல்லியில் 25 மற்றும் 26.9.1988 ஆகிய இரு நாள்களும் இடஒதுக்கீட்டுக்கான தேசிய மாநாடு (National Conference for Reservation) மிகவும் சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றது. 25ஆம் தேதி காலை தொடங்கி 26ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு முடிந்தது. இரண்டு மாநாடுகளிலும் நாங்கள் கலந்துகொண்டோம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டில்லி, அரியானா, அசாம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, ஒரிசா, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கட்சி வேறுபாடு இன்றி காங்கிரஸ், லோக்தளம், கம்யூனிஸ்ட் (டாங்கே பிரிவு), ஜனதா போன்ற கட்சிகள் ஒரே மேடையில் இடஒதுக்கீட்டுக்காக வடநாட்டில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாக அமைந்தது.
சந்திரஜித்(யாதவ்)
வெறும் பொதுமக்கள் மாநாடு என்று இதனை அமைக்காமல், பெரிதும் மக்கள் பிரதிநிதிகள் கூடும் மாநாடாகவே இதனை திரு.சந்திரஜித் (யாதவ்) அவர்கள் ஏற்பாடு செய்து அனைத்துப் பகுதியினருக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். சமுதாயத்தின் பல்வேறு பகுதியினரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், அந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், டாக்டர்கள், இஸ்லாமிய சமுதாயத்தினர், கிறிஸ்துவ பிரதிநிதிகள், சீக்கியப் பிரதிநிதிகள், ஷெட்யூல்டு சமுதாயத்தைச் சார்ந்த பல்வேறு தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட நல அமைப்பாளர்கள் உள்பட பல்வகைப் பிரதிநிதித்துவம் கொண்ட மாநாடாக (A good cross section of the society) இம்மாநாடு அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கோ.சாமிதுரை
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் மாநிலங்களின் சமூக நீதிக்கான சங்கத்தின் (President, Southern State Society for Social Justice) தலைவர் மாண்புமிகு நீதிபதி திரு.பெ.வேணுகோபால் அவர்களும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, தேவசகாயம் உள்ளிட்டோர் என்னுடன் கலந்துகொண்டார்கள். மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தை தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற மக்களவை கட்சித் தலைவரும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அமைப்புகளின் உறுப்பினருமான தோழர் சி.டி.தண்டபாணி அவர்கள் முன்மொழிந்தார். சமூகநீதியை வற்புறுத்தும் மாநாட்டுத் தீர்மானத்தை மவுலானா ஆஸ்மி (முன்னாள் எம்.பி.) முன்மொழிந்தார். மாநாட்டில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பல பிரதிநிதிகள் உரையாற்றினார்கள். மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது.
தேவசகாயம்
1.10.1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியின் தலைவர் சிவாஜி கணேசன் அவர்களின் மணிவிழாவை முன்னிட்டு அவரது இல்லத்திற்குச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தேன்.
கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் வீட்டுத் திருமண விழாவும், கழகப் பொருளாளர் அவர்களின் துணைவியார் திருமதி கு.ஞானாம்பாள் அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் 2.10.1988 அன்று வைதிகர்கள் அஞ்சி நடுங்கும் இராகுகால நேரத்தில் தஞ்சையில் சிறப்புடன் நடைபெற்றது.
கா.மா.குப்புசாமி
தஞ்சை கீழவாசல் நெல்லுமண்டி மேலத் தெருவில் அவர்களின் வீட்டு வாசலில் நிர்மாணிக்கப்பட்ட பந்தலில் விழா நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் மாநில மாநாட்டில் கலந்துகொள்வது போல, பெருந்திரளாக வந்திருந்தார்கள்.
திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து கழகப் பொருளாளர் அவர்களும் வரவேற்புரை நிகழ்த்தினார். நான் விழாவில் பேசும்போது, கழகப் பொருளாளர் அவர்கள், இந்த இயக்கத்திற்குப் பெரும் நிதி போன்றவர் _ அவரது ஒத்துழைப்பும் பணியும் இயக்கத்தை நடத்திச் செல்வதிலும், கல்வி நிறுவனங்களை நடத்திச் செல்வதிலும் தமக்குப் பேருதவியாக இருக்கிறது என்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டுக் காட்டினேன்.
கழகத்தின் சார்பில் ஞானாம்பாள் அம்மையார் அவர்களுக்கு நான் சால்வை போர்த்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டேன். விழாவில் கழகப் பேச்சாளரும், கழகப் பொருளாளரின் தம்பியுமான கே.எம்.தங்கவேலு_ வசந்தா ஆகியோரும், அவரது மகன் காமராஜ் உள்ளிட்டோர் மற்றும் குடும்ப நண்பர்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.
(நினைவுகள் நீளும்…)