முத்தையா வனிதா
ரித்து கரிதால்
தேசிய அளவில் ஒரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கான சாதனைச் செயல் என்னும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் பெண்கள் என்பதை நிரூபிக்கும் விதமாகக் கடுமையாக உழைத்து உலக அரங்கில் நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார், தமிழக பெண் விஞ்ஞானி முத்தையா வனிதா.
உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 30 சதவிகிதம் பெண்கள் பணியாற்றினாலும் கடந்த 5 ஆண்டுகளில் விண்கலன்களை உருவாக்கும் திட்டப் பணிகளில் பெண்களுக்கு வெறும் 15 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 20 சதவிகிதம் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தாலும், விண்கலன் உருவாக்கத்தில் பெண்களுக்கு சுமார் 30 சதவிகிதம் வாய்ப்பு வழங்கியுள்ளது இஸ்ரோ.
இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்னும் பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த முத்தையா வனிதா பெறுகிறார். ஆரம்பத்தில் திட்ட இயக்குநர் பொறுப்பை வனிதா ஏற்கத் தயங்கினார். பின்னர், சந்திரயான்_1இன் திட்ட இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரையின் ஊக்கத்தின் பேரிலேயே துணிந்து பணியாற்றி, தற்போது வெற்றி கண்டிருக்கிறார்.
சிக்கல்களை உடனடியாகக் கண்டறிந்து சரி செய்யும் திறனுக்குச் சொந்தக்காரர் வனிதா. குழுவை நிருவாகிக்கும் திறனில் சிறந்து விளங்குவதால் வனிதா சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் சேர்க்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார், மயில்சாமி அண்ணாதுரை.
வனிதா, பல்வேறு விண்கலங்களின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, கார்டோசாட் 1, ஓசன்சாட் 2 உள்ளிட்ட விண்கலங்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். Astronautical Society of India, இவருக்கு 2006ஆம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி என்னும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. ‘Nature’ எனும் சர்வதேச ஜர்னல் வெளியிட்ட 2019ஆம் ஆண்டின் கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில், வனிதா இடம்பெற்றிருந்தார். இஸ்ரோவில் 32 ஆண்டுக்கால அனுபவம் கொண்ட வனிதா, நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இங்கு ஒன்றாகப் பணிபுரிகிறோம். எனவே, அவர்களது மனநிலையை நன்கு அறிவேன். ஒவ்வொருவரின் பங்கும், பொறுப்பும் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் பெறும் ஆலோசனைகளை மதிக்கிறேன் என்கிறார்.
மற்றொரு பெண் விஞ்ஞானியான ரித்து கரிதால், இந்தியாவின் ராக்கெட் பெண்மணிகளில் ஒருவர். சிறு வயதில் வானியல் மீது கொண்ட ஆசையால் விஞ்ஞானத்துக்குள் நுழைந்த ரித்து, 1997ஆம் ஆண்டு இஸ்ரோவில் விண்வெளிப் பொறியாளராக தன் பயணத்தைத் தொடங்கினார். சந்திரயான் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டின் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி என்னும் விருதை ரித்து வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது, செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் திட்டத்திலும் இவரது பங்கு அளப்பரியது.
விஞ்ஞானத்துக்குள் நுழைய, இஸ்ரோவே எனது ஒரே தேர்வாக இருந்தது. எனது குழந்தைப் பருவத்திலிருந்தே இஸ்ரோ மற்றும் அவற்றின் செயல்பாடுகளைச் செய்தித்தாள் மூலம் சேகரித்து வைப்பேன் என்று ரித்து தெரிவித்துள்ளார்.
மண்ணைத் தாண்டி விண்ணிலும் பெண்ணால் சாதிக்க முடியும் என்பதற்கு இவைகள் சிறந்த எடுத்துக்காட்டு.
தகவல் : சந்தோஷ்