அய்யாவின் அடிச்சுவட்டில்…

உங்களுக்குத் தெரியுமா? நவம்பர் 16-30

இயக்க வரலாறான தன்வரலாறு(214)

’துக்ளக்’ ’சோ’ இராமசாமியின் கேள்விகளும் எனது பதிலும்

கி.வீரமணி

தென்னார்க்காடு (தெற்கு) மாவட்ட கழகச் செயலாளர் துரை.சந்திரசேகரன் (தற்பொழுது திராவிடர் கழக பொதுச் செயலாளர்) அவர்களின் தங்கை திராவிடமணிக்கும் _ சிதம்பரம் வட்டம் சாலியத்தோப்பு கழகத் தோழரும், என்.எல்.சி. பாதுகாப்புப் படை ஊழியர் இரா.கோபாலகிருஷ்ணனுக்கும் வாழ்க்கைத துணைநல ஒப்பந்த விழா 01.02.1985 அன்று குறிஞ்சிப்பாடி பார்வதியம்மன் திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது.

“இந்தத் திருமணத்தினுடைய தத்துவம் ஆண் எசமானன் அல்ல, பெண் அடிமை அல்ல என்று சொல்லக்கூடிய நிலையிலும் இந்தச் சிறப்பை பெண் இனத்திற்கு பெற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள் என்று எடுத்துக் கூறினேன். முடிவில் தோழியர் கலைச்செல்வி சந்திரசேகரன் நன்றி உரையாற்றினார்.

பெரியார் மாவட்டம் ஈரோட்டில் கவின் மருத்துவமனை பா.பொ.இளங்கோ  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியும், ஈழ விடுதலைப் புலிகளுக்குப் பெரியார் மாவட்டத்தில் 1000 நெல் மூட்டைகள் வழங்கும் விழா நிகழ்ச்சியும் 13.3.1985 அன்று இரவு நடைபெற்றது. நினைவுநாள் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கல்வெட்டு திறந்து வைத்து உரையாற்றினேன். பெரியார் மாவட்ட தி.க. தலைவர் கி.நடேசனார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். ஈரோடு நகரத் தி.க. தலைவர் ஆ.மாரப்பனார் வரவேற்புரையாற்ற நான் சிறப்புரை ஆற்றினேன். பகுத்தறிவுச் செம்மலாக வாழ்ந்தவர் டாக்டர் இளங்கோ எனவும், பகுத்தறிவுவாதியாக இருந்து தமிழ்ச் சமுதாயத்திற்கான நோய்களைக் குணப்படுத்தப் பாடுபட்டார்கள் என்று குறிப்பிட்டேன்.

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பிரார்த்தனை மோசடி விளக்க நிகழ்ச்சியில் 14.03.1985 அன்று ‘அண்ணா நாளங்காடி’ என்ற இடத்தில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த மா.கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பக்தி மோசடி _ பார்ப்பன பித்தலாட்டங்களை விளக்கி உரையாற்றினேன்.

மறுநாள் கோவை மாவட்டம் திருப்பூரில் திராவிடர் கழக வழிநடைப் பிரச்சாரப் படை துவக்க விழா பொதுக்கூட்டம் 15.3.1985 இரவு 6 மணிக்கு நகர மண்டபத் திடலில் நடைபெற்றது. மூடநம்பிக்கையால் தமிழினம் சீரழிவது கண்டு வேதனையைக் குறிப்பிட்டு உரையாற்றினேன்.

கீழத்தஞ்சை மாவட்டம் திருவாரூருக்கு அருகிலுள்ள மருங்கூரில் 24.03.1985 இரவு நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் என்னை அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாட்டு வண்டி ரதத்தில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊர்வலம் கழக துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இரவு 12.40 மணிக்கு பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றி முடித்து பின்பு நிறைவடைந்தது.

மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் உடுமலை கபிலன் ஜெகநாதன் அவர்களது செல்வன் கபிலன் அவர்க-ளுக்கும், வி.டி.கோபாலகிருஷ்ணன் அவர்களது செல்வி மனோன்மணி அவர்க-ளுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா நிகழ்ச்சி 27.03.1985 அன்று காலை 10 மணிக்கு உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி. கலையரங்கில் என் தலைமையில் நடைபெற்றது. நான் உரையாற்றும்போது, “தந்தை பெரியார் அவர்கள் இந்தச் சமுதாயம் மானமும் அறிவும் பெற வேண்டுமென்று தனது இறுதி மூச்சு அடங்குகின்றவரை தள்ளாடிய வயதிலும் தாங்கிக்கொண்டு பிரச்சாரம் செய்தார்கள்’’ என்று எடுத்துரைத்தேன். விழாவில், ஒரே மணமேடையில் மகன் மணவிழாவும், தந்தை மணி விழாவும் சிறப்புடன் நடைபெற்றது.

‘புரோப்’ (Probe) என்ற ஆங்கில மாத இதழ், அதன் ஏப்ரல் மாத இதழுக்காக என்னிடத்தில் பேட்டி கண்டு அதனை ஒரு கட்டுரையாக வெளியிட்டிருந்தது. என்னுடைய உருவப்படத்டன் வெளியிட்டுள்ள அந்தச் சிறப்புக் கட்டுரையிலிருந்து தமிழாக்கம் செய்து ‘விடுதலை’ இதழில் 28.03.1985 அன்று வெளியிட்டிருந்தோம். சென்னை நிருபர் திரு.நரேஷ்குமார் என்பவர் எழுதிய கட்டுரையில், “திரு.வீரமணி ஈழ விடுதலையை மிகத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருபவர். ஈழ விடுதலை கேட்பது நியாயந்தானா என்று கேட்ட உடன் அவர் எரிமலையாக வெடிக்கிறார்!’’

“கொழும்பில் உள்ள ஒரு முக்கிய சாலையில் தமிழன் மாமிசம் இங்கே விற்கப்படும் என்று போர்டு போட்டார்களே, அது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். அவரின் இந்த உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடு, ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல.’’ என்று கூறியிருந்தார்.

இந்தப் பேட்டியில் நான், ‘ஈழம்’ தனி நாடாக விடுதலை பெறுவதுதான் ஒரே விடிவு என்று நான் திட்டவட்டமாக பிரகடனப்படுத்தினேன். இலங்கை விடுதலை பெற்ற ஈழத் தமிழகம் அமைய வேண்டும் என்பதில் நான் உறுதியான தெளிவான நம்பிக்கை கொண்டிருப்பவன். இல்லாவிட்டால் அந்த நாட்டில் உள்ள தமிழ் சமுதாயமே பூண்டோடு அழிக்கப்பட்டுவிடும்’’ என்றும் அவர்களிடத்தில் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தேன். மேலும் இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்திருந்தேன்.

ஈழப் பிரச்சினையில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது என்பதனை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி  29.03.1985 அன்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கு குறித்து, தமிழர்களுக்கு மத்திய அரசு இழைக்கும் துரோகத்தையும் விளக்கி, தமிழர்கள் ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி இதைப் புரிந்து எச்சரிக்கையாக செயலாற்ற வேண்டும்! என்று கேட்டுக் கொண்டேன்.

உலகத் தமிழர் மாமன்றத்தின் சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் 30.03.1985 மாலை சென்னை தியாகராயர் நகர் சங்கரதாஸ் சாமிகள் கலை அரங்கத்தில் நடைபெற்றது. டாக்டர் டேவிட் (மலேசியா) நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ‘திருச்சுடர்’ கே.ஆர்.ராமசாமி, அமைச்சர் ராசாராம், குமரிஅனந்தன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் உரையாற்றும்போது, தமிழர்கள் வடநாட்டை நோக்கித் தொடர்ந்து மண்டியிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். எங்கள் தமிழ் இளைஞர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயாராகிவிட்டார்கள். அவர்கள் விடுதலைப் புலிகளாக மாறப் போகிறார்கள் என்று  குறிப்பிட்டு உரையாற்றினேன்.

தலித் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரும் ‘தலித் வாய்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியருமான வி.டி.ராஜசேகர் எழுதிய, “இந்துயிசம் _ பாசிசம் _ காந்தியிசம்’’ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா 31.03.1985 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. ‘தலித் கலாச்சார முன்னணி’ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் இரு மொழிகளிலும் சிறப்புரை ஆற்றினேன்.

நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியை ஹில்டா ராஜா அவர்களின் கருத்தாழமிக்க பேச்சு _ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ‘தலித் வாய்ஸ்’ பத்திரிகை ஆசிரியர் வி.டிராஜசேகர், சென்னை தொலைக்காட்சியின்  முன்னாள் இயக்குநர் சவ்டேக்கர் ஆகியோர் உரையாற்றிய பிறகு நான் உரையாற்றினேன். அப்போது, சிந்திப்பதற்கு இடம் தராதது ‘இந்துயிசம்’, சிந்திப்பதற்கு தடைபோட்டது ‘பாசிசம்’, சிந்திப்பதற்கு எதுவுமே இல்லாதது ‘காந்தியிசம்’ என்று குறிப்பிட்டேன். மக்கள் கடல்போல் கூடியிருந்தனர்.

01.04.1985 அன்று ‘துக்ளக்’ இதழில் தி.மு.க.வின் இன்றைய நிலைக்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் என்னிடத்தில் ‘துக்ளக்’ ஆசிரியர் ‘சோ’ இராமசாமி அவர்கள் பேட்டி கண்டார். ‘விடுதலை’யில் 02.04.1985 அன்று பக்கம்   3, 4லிலும் வெளியிடப்-பட்டுள்ளது. அதிலிருந்து சில முக்கிய குறிப்புகள் மட்டும் தருகின்றேன். இது தனி நூலாக திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

கேள்வி: தி.மு.க. வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். அதற்காகப் பிரச்சாரம் செய்கிறீர்கள். அ.இ.அ.தி.மு.க. பிரிந்த பிறகு இந்தக் கட்சி எந்த திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது? அதன் கரணம் என்ன? எம்.ஜி.ஆர் கவர்ச்சிதான் காரணம் என்று சொன்னால் அது மேலேழுந்தவாரியான ஒரு காரணமாகத்தான் தெரிகிறது. இந்த அளவுக்கு சரிவுக்குக் காரணமென்ன?

வீரமணி: திராவிட இயக்கத்தைப் பொருத்தவரையில் அதற்கு செல்வாக்கு ஏற்பட்டு 1967இல் இருந்து மாறுதல்கள் தொடர்ந்து வந்ததன் விளைவுதான் தி.மு.க. இரண்டு தேர்தல்களிலும் வெற்றிபெற்றது. 1971இல் எல்லா தேசிய சக்திகளும் ஒன்று திரண்டு திராவிட சக்திகளை வீழ்த்த முயற்சி செய்தன. அதில் அவர்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தார்கள். 1971 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. 184 இடங்களைப் பெற்றது. அப்படி 184 இடங்களைப் பெற்ற தி.மு.க இப்பொழுது தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பதற்குக் காரணங்கள் என்ன என்பதற்கு அடிப்படையிலான ஒரு காரணம் உண்டு. இந்த இயக்கம் தொடர்ந்து அப்படியே இருந்தால் தாங்கள் வெற்றி பெற முடியாது என்று அகில இந்தியக் கட்சி என்ற பெயரில் குறிப்பாக இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டு மோகன் குமாரமங்கலம் போன்றவர்களையும் மற்றவர்களையும் பயன்படுத்தி அந்தக் கட்சியை உடைப்பதற்கு எம்.ஜி.ஆரைப் பயன்படுத்தி அந்தக் கட்சியை இந்திராகாந்தி உடைத்தது ஒரு காரணம். உடைந்தது மட்டுமல்ல, நெருக்கடி நிலைக் காலத்தில் தி.மு.க ஆட்சி மீது லஞ்சக் குற்றச்சாட்டுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் என்று லட்சக்கணக்கான நோட்டீசுகளை அச்சடித்து, டெலிவிஷனைப் பயன்படுத்தி மற்ற சாதனங்களைப் பயன்படுத்தி மிகவும் தீவிரமாகவும் மக்கள் மத்தியில் தி.மு.க. மீது ஒரு அருவெறுப்பு உண்டாக்கக்கூடிய அளவுக்கு பிரச்சாரத்தைச் செய்யலாம் என்பதற்காக, தொடர்ந்து அதைச் செய்து, அந்த எண்ணத்தை அதிகப்படுத்தினார்கள். ஆனால், தனக்கு வேண்டாத ஒரு கட்சி தலையெடுக்கிறது என்று நினைத்து அதை அழிப்பதற்காகவே இந்த ஏற்பாட்டைச் செய்தார்கள். செய்தது மட்டுமல்ல அவர்களுக்கு வாய்ப்புகள் வரும்போது என்ன செய்தார்கள் என்றால், அ.தி.மு.க.வை சரிப்படுத்திக் கொண்டு ஒரு முறை வெற்றியடைந்தார்கள்.

     

இன்னொரு முறை என்ன செய்தார்கள்? அதாவது, 1980 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டு இல்லை என்றவுடன் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தார்கள். இப்படி மாற்றி மாற்றி கூட்டு வைத்துக் கொண்டதால் இந்த இயக்கம் உடைந்தது மட்டுமல்ல, காங்கிரஸ் எ-திர்ப்பு உணர்ச்சி நாளுக்கு நாள் குறையக்கூடிய அளவுக்கு, இங்கே தமிழ்நாட்டிலே அந்தக் குற்றத்தை திராவிட முன்னேற்றக் கழகமும் செய்தது. அதனுடைய விளைவு காங்கிரசில் எதிர்ப்புணர்ச்சி குறையக்கூடிய அளவுக்கு வந்துவிட்டது.’’

இதுபோன்று பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் பேட்டி அளித்திருந்தேன். தனி நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

மயிலாடுதுறையில் நகர, திராவிடர் கழக முன்னாள் தலைவர் தி.கோ.இராசன் அவர்களின் மகள் அன்புமணி, பட்டீஸ்வரம் எஸ்.வரதையா அவர்களின் மகன் சாரநாதன் ஆகியோருக்கும் நடைபெற்ற வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை ஒன்றியத் திராவிடர் கழகத் தலைவர் என். வடிவேலு, கோ.சீனுவாசன், இ.ரெ.ஜோசப், எம்.மணி, எஸ்.சிவசங்கரன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், நா.இரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தென்னார்க்காடு மாவட்டம் கடலூரில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் கண்டனப் பேரணி 9.4.1985 அன்று நடைபெற்றது. திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் அய்யா நினைவுத் தூண் அருகே ஊர்வலம் தொடங்கப்பெற்று ஊர்வலத்தை நான் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தேன்.

என்னுடன் துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, கடலூர் நகர திராவிடர் கழக செயலாளர் இரா.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். நகரத்தையே குலுங்கச் செய்த எழுச்சிப் பேரணி ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

திராவிடர் கழக மகளிர் அணியினர் சார்பாக 11.04.1985 அன்று வடசென்னையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் வந்தபோது, ஆர்.எஸ்.எஸ் முன்னணியைச் சேர்ந்த காலிகள், சந்துக்களில் மறைந்து சோடா புட்டிகளை வீசினார்கள். சோடாபுட்டி வீசினால் ஊர்வலத்தில் பயந்துபாய் களைந்து விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டது அந்தக் கூட்டம்! ஆனால், கழக இளைஞர்கள், சோடாபுட்டிகள் வீசப்பட்ட பக்கம் நோக்கி காலிகளைப் பிடிக்கச் சென்றபோது நடுங்கிப் போன காலிகள், தப்பி ஒடி மறைந்து விட்டனர். தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உணர்ச்சிகரமாகத் திட்டமிட்டபடி நடந்தது-.

எம்.சி.சாலைப் பகுதியில் கூட்டம் திரண்டிருந்தது. ஹேமலதாதேவி தலைமையில் நடந்த உணர்ச்சிகரமான அந்தக் கூட்டத்தில் பேராசிரியர் இறையன், டாக்டர் நன்னன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நான் உரையாற்றும்போது, மார்பில் குண்டு பாய்ந்தவுடன் ‘ராமனை’ அழைப்பதற்கு, நாங்கள் ‘காந்தி’ அல்ல. ஒரு வீரமணி கொல்லப்பட்டால், ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரன் கொல்லப்-படுவான். ஒரு திராவிடர் கழகத்துக்காரன் கொல்லப்பட்டால், அக்கிரகாரங்கள் எரியும். ஆர்.எஸ்.எஸ். கோழையே ‘ஓடாதே!’ என்று எச்சரிக்கை நாதம் செய்தேன். மக்கள் கடல்போல் கூடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

13.04.1985 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “இடஒதுக்கீடு பாதுகாப்பு’’ மாநாட்டில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். டாக்டர் இராமதாஸ், டாக்டர் வீ.கிருட்டிணன், டி.ஏ.பிரகாசம் அய்.ஏ.எஸ். (ஓய்வு), திரு.சுப.சீதாராமன், டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு, எஸ்.டி.சோமசுந்தரம், பேராசிரியர் க.அன்பழகன் (தி.மு.க. பொதுச்செயலாளர்), வழக்கறிஞர் த.வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து-கொண்டனர்.

                         

மாநாட்டில், இடஒதுக்கீடு சார்பான முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாநாட்டில் உரையாற்றும்போது, தாழ்த்தப்பட்டோரின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எம்.சிவராஜ் 1957 ஏப்ரல் 27இல் கான்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்பொழுது, அவர் கூறியதை சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.

“நாட்டில் நாம் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது. அந்த மாற்றம் இந்தியாவின் 90 சதவீதம் மக்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் கையில் உண்மையான சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும். நமது நாட்டில் பத்துகோடிப் பேர்கள் பல நூற்றாண்டுகளாக பலவிதமான கொடுமை களுக்கு ஆளானாவர்கள். இன்று தாழ்த்தப் பட்டோர் என்ற பெயரால் மோசமான நிலையிலே உழன்று கொண்டிருக்கின்றனர். துன்பமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களைத் தவிர, 12 கோடி மக்கள் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற பெயரில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வாக்குரிமை இருந்து இவ்வளவு பெரும் எண்ணிக்கையுள்ளவர்கள் அவர்களின் தொகையின்படி அரசாங்கப் பதவிகளில் ஏன் அமர்த்தப்படவில்லை.

எல்லாத் துறைகளிலும் இவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று கேள்வியை எழுப்பி உரையாற்றினேன்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தலித் சங்கர்ஷ் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவும், மாபெரும் பொதுக்-கூட்டமும் 14.04.1985 அன்று பிற்பகல் 3 மணிக்கு (விதான் சவுதா) பெங்களூர் சட்டசபை வாயில்படியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்-கூட்டத்திற்கு பி.கிருஷ்ணப்பா அவர்கள் தலைமை தாங்கினர்கள்.

கர்நாடக மாநில தலித் அமைப்பாளர் தேவனூர் மகாதேவ, பெங்களுர் யுனிவர்-சிட்டியின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் நரசிம்மய்யா, வழக்கறிஞர் போஜ்ஜதாரக்கம், தலித்  கவிஞர் சித்தலிங்கய்யா,  புத்தபிக்கு மகாபோதி ஆகியோர் ஒடுக்கப்பட்ட மக்களுடைய  உரிமைக்கான கருத்துகளை எடுத்துக் கூறினார்.

நான் சிறப்புரை ஆற்றுவதற்கு முன்பாக மேடையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குரியப்பா, முனியம்மா என்ற மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை மாலையில் நடத்தி உரையாற்றினேன். இந்தத் திருமணம் பொதுக்கூட்ட மேடையில் நடத்தப்படுகிறது என்று சொன்னவுடன் ஏராளமான மக்கள் முண்டியடித்துக்கொண்டு பொதுக்கூட்ட மேடையை நோக்கி வந்து மிகவும் ஆச்சரியத்துடன் இத்திருமணத்தைப் பார்வையிட்டனர்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். காந்தியார் அவர்கள் இடஒதுக்கீடு என்பது கூடாது என்று ஒருமுறை சொன்னார்கள்.

                      

தனித் தொகுதி முறையை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தபோது அந்த மிரட்டலுக்குப் பணிந்துவிடக் கூடாது என்று தந்தை பெரியார் அம்பேத்கர் அவர்களுக்கு தந்தி கொடுத்தார்கள். ஒரு காந்தியாரின் உயிரைவிட கோடானகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைதான் முக்கியம் என்று தந்தை பெரியார் அந்தத் தந்தியிலே குறிப்பிட்டிருந்தார்.

நாம் போராடித்தான் நம்முடைய உரிமைகளைப் பெற்றுத் தீரவேண்டும் என்பதற்காகத்தான் நாம் அனைவரும் இங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றோம் என்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைக் கோடிட்டு விளக்கினேன்.

                    

24.04.1985 அன்று கல்பாக்கத்தில் நடந்த அம்பேத்கர் விழாவில் கலந்துகொண்டேன். இந்த இருபதாவது நூற்றாண்டில் முதலாவதாக டாக்டர் அம்பேத்கர் செய்த பணி என்னவென்றால் அரசியலை, பதவியை முன்னாலே நிறுத்திக் கொள்ளாமல், காலங்காலமாக இருந்துவந்த சமூகக் கொடுமையை, ஜாதி இழிவை, வர்ணசிரம தர்மத்தை எதிர்த்து அதனாலே பாதிக்கப்பட்ட மக்களுக்காக தம் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார்கள்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள் விழா என்று சொன்னால், அவர்களைப் பற்றிய சிந்தனை என்றாலும் அவர்களுடைய கருத்தை விமர்சிக்கும்போது, அவரைத் தாழ்த்தப்பட்ட சமுதாய அல்லது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய தலைவர் என்று பார்க்கிற பார்வை இருக்கிறதே, அது அவருக்கும் செய்கிற துரோகம், நாட்டுக்கும் செய்கிற மிகப் பெரிய துரோகம் என்பதை நாம் எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவரை ஒரேயொரு சமுதாயத்திற்கு _ சாதிக்கு _ குழுவிற்குத் தலைவர் என்று குறுகிய வட்டத்திற்குள்ளே யாரும் அடக்கக் கூடாது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத்தான் அவர் தலைவர் என்பதுபோல அவரைச் சொல்லிச் சொல்லி உயர்த்துவதுபோல ஒரு புள்ளியை வைக்கிறார்கள். அவர் மிகப் பெரிய சட்ட வல்லுநர் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தித்தான் இந்திய அரசியல் சட்டமே உங்களிலே உருவாக்க முடிந்தது.

அரசியல் சட்டத்தை உருவாக்க அவருடைய அறிவைப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு வழக்கம் போல் ஆதிக்கச் சக்திகள் அவரை உதறக்கூடிய சூழ்நிலையை செய்தார்கள்.

எனவேதான், அவர்கள் இல்லாவிட்டால் இத்தகைய பெரிய வாய்ப்புகள் அனைத்து மக்களுக்கும் வந்திருக்காது என்று விரிவான விளக்கமளித்து உரையாற்றினேன்.

வடசென்னை பாலு முதலித் தெருவில் 27.04.1985 அன்று நடைபெற்ற சர்.பிட்டி.தியாகராயர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிவிட்டு நான் வேனில் திரும்பும்போது இரவு 11.35 மணியளவில் ஜி.ஏ.ரோடு, ரெய்னி மருத்துவமனை அருகில் உள்ள கனரா வங்கியை ஒட்டியுள்ள சந்திலிந்து சுமார் 5 நபர்கள், நான் உட்காந்திருந்த வேனின் இடது பக்கத்தில் சுவரை நோக்கி இரும்பாலும் கல்லாலும் தாக்கினர். வேனின் வெளிப்புறத்தில் இருந்த கம்பி வலைகள் அறுந்து, உட்பக்கம் இருந்த கண்ணாடியும் தூள் தூளாக நொறுங்கியும் சிதறியது. “வீரமணியைக் கொல்லுங்கள்! கொலை செய்யுங்கடா?’’ என்று கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டு திடீரெனத் தாக்கினார்கள். வேன் டிரைவர் பாலு வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்று-விட்டார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சே.ஏழுமலை, சென்னை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி அமைப்பாளர் அ.குணசீலன்,  வழக்கறிஞர் வீரசேகரன், மு.தாந்தோணி முதலியோர் அப்போது என்னுடன் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.

ராயபுரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் த.வீரசேகரன் இரவு 11:30 மணிக்கு எழுத்து மூலமாக இதுபற்றி புகார் கொடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த 11.4.1985 அன்று வடசென்னையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கிட்டத்தட்ட இதேபோன்று இதே பகுதியில் என்னைத் தாக்க சோடாபுட்டி வீசியதும், இதே காவல் நிலையத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.இ.அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், அடுத்தடுத்த கொலை முயற்சிகள்!

இதனைக் கேள்வியுற்று தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள், புதுவை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காலை சென்னை திரும்பிய கலைஞர் நேராக எங்கள் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள். காலிகளால் சேதம் அடைந்த வேனை பார்வையிட்டுச் சென்றார். பின்னர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தக் கொலை முயற்சிக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். தங்கள் சமுதாய நலனுக்கும் பிழைப்புக்கும் ஏமாற்று மோசடி-களுக்கும் பகையாக இருந்து தமிழ் இனத்துக்காக ஓய்வறியாது பணியாற்றும் வீரமணியையும் அவரைப் போன்ற மற்றவர்களையும் குறிபார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தப் பயங்கர வன்முறை செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் கண்டிப்பதோடு, காவல்துறை கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென கேட்டுக்-கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

(நினைவுகள் நீளும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *