திரை பார்வை

நவம்பர் 01-15

மனுசங்கடா

 

பெயரே நெஞ்சைப் பிசைகிறதே? மனுசங்கடா என்று எதற்குச் சொல்ல வேண்டும்? எல்லோரும் மனிதர்களாகவே இருப்பதால் இதை யாரிடம் சொல்வது? அதற்கான தேவை என்ன? ஒருவேளை வேற்றுகிரக மனிதனாக இருந்தால் அவனுக்கு நம்மை அறிமுகம் செய்விக்க நேரலாம். சக மனிதனிடமே எதற்காக நான் ‘மனுசங்கடா’ என்று சொல்ல வேண்டும். இப்படி சிந்திப்பதற்குக்கூட நமக்கு யோக்கியதை இல்லாமல் ஆக்கி வைத்திருக்கிறதே இந்த அர்த்….தமுள்ள இந்து மதம்? அப்படிப்பட்ட அர்த்தமுள்ள இந்துமதத்தின் வேரை (ஜாதியை) வெட்ட முயற்சித்திருக்கிறது இந்த ‘மனுசங்கடா’ திரைப்படம். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

கிராமத்தில் இன்றைக்கும் இருக்கும் ஜாதி அரசியலை ஒரு உண்மைச்சம்பவத்தின் பின்னணியோடு சொல்கிறது இது. அதாவது, கிராமத்தில் இறந்துபோன தன் தகப்பனை புதைப்பதற்கு பொதுப்பாதையில் எடுத்துச் செல்வதற்கு ஜாதியோடு மோதி  முடியாமல் தோற்றுப்போகிற ஒரு மகனின் கதைதான் இது..

ஜாதியை ஒழிப்பதற்கான தீர்வு இதில் சொல்லப்படவில்லை. கோலப்பனால் (நாயகன்) தானே முடியவில்லை. அதற்காக இதை அப்படியே விட்டுவிடுவதா? இதில் நமது பங்கு என்ன? என்கின்ற ஆரியத்தைத் தகர்க்கின்ற கூரிய கேள்விகளை பார்வையாளர்களிடம் மடைமாற்றி விட்டிருக்கிறார் இயக்குநர் அம்சன் குமார். இவர் நாடறிந்த ஆவணப்பட இயக்குநர். சமூகநீதியில் ஆழ்ந்த பற்றுடையவர். இதற்கு முன் “ஒருத்தி” என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் முழுக்கவும்  பாதிக்கப் பட்டவர்களின் கோணத்திலிருந்தே கதையை பேசியிருக்கிறது. ஆதிக்க ஜாதியினர் தூரத்தில-யேதான் காட்டப்படுகின்றனர். பெரும்பாலும் படப்பிடிப்புத் தளத்திலேயே ஒலிப்பதிவு (Live sound) செய்யப்பட்டிருக்கிறது. நாயகன் நாயகிக்கென்று குலோசப் காட்சிகள் கிடையாது. பாடல்களுக்கும் தேவை ஏற்பட-வில்லை. நேரில் நடப்பதுபோன்றே காட்சிகள் இருப்பதால் காட்சியின் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. உதாரணத்திற்கு பிணத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அதை எடுத்துக்கொண்டு முள் பாதையில் ஓடும்போது நமக்கும் பதறுகிறது. அதேபோல கோலப்பன் உட்பட மற்றவர்களை கைது செய்துகொண்டு போகும்போது இடைநிலை ஜாதியினர் வண்டிக்குள்ளிருப் போரின் மீது கற்களை வீசும்போது நாமும் கூனிக்குறுகிப் போகிறோம். கதைக்களம் மிகவும் கனமானது. ஆதலால்  காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி யிருந்தால் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆனாலும் தமிழகத்தில் பரவலாக மக்களிடம் சென்று சேரவில்லை. நாயகி ரேவதியாக நடித்திருக்கும் ஷீலா ராஜகுமார், நாயகனாக நடித்திருக்கும் ராஜீவ் ஆனந்த் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள். பெரும்பாலும் கேமரா கைகளிலேயே வைத்து (பிணீஸீபீஹ்) எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற படங்களை பார்க்கின்ற வாய்ப்பை ‘படப்பெட்டி திரைப்பட இயக்கம்‘ முன்னெடுத்திருக்கிறது. அதற்கு மக்களும் நல்ல ஆதரவைக் கொடுத்துவருவதைக் காண்கையில் ‘மனுசங்கடா’ திரைப்படமும் மக்களிடம் சென்று சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இக்கதையை திரைப்படமாக எடுத்ததற்காக இயக்குநர் அம்சன் குமாரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்..

– உடுமலை வடிவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *