விடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் – பாராட்டும்!

நவம்பர் 01-15

‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் அவர்கள்மீதும், நக்கீரனில் பணியாற்றுவோர் 35 பேர் மீதும்  எந்த முக்கிய பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் தனிச் செயலாளர் மூலமாக மாநகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சென்னை மாநகரகாவல் துறை சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்தது.

இந்நிகழ்வை கண்டித்து சென்னை பெரியார் திடலில் 11-.10.-2018 அன்று மாலை 84 ஆண்டு வரலாறு படைத்த விடுதலை’ ஏட்டின் சார்பில் ‘விடுதலை’ ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில், “பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்பும் _ பாராட்டும்’’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டம் _ பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்பு ஆற்றினார்.

இந்நிகழ்வில் ‘முரசொலி’ சார்பில் தி.மு.க. தலைவர் தளபதி ஸ்டாலின், ‘ஜனசக்தி’ சார்பில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ‘மக்கள் உரிமை’ ஆசிரியர் ஜவாஹிருல்லா, ‘மணிச்சுடர்’ ஆசிரியர் அபுபக்கர், ‘இந்து’ குழுமத்தின் ஆசிரியர் ராம், ‘தீக்கதிர்’ சார்பில் மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன், கலைஞர் தொலைக்காட்சி செய்தியாசிரியர் ப.திருமாவேலன் ஆகியோர் உரையாற்ற, ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் ஏற்புரையாற்றினார். பத்திரிகை உரிமைக்கு எதிரான ஒடுக்குமுறையைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அறிஞர்களின் உரைகளிலிருந்து சில துளிகள்

ப.திருமாவேலன்

நக்கீரனில் ஒரு கட்டுரை வெளிவந்தது; அது தங்களைப் பாதிக்கக் கூடியது என்று ஆளுநர் கருதினால், முதலில் குறைந்தபட்சம் விளக்கம் கேட்க-வேண்டாமா? அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டாமா? எடுத்த எடுப்பி-லேயே கைது நடவடிக்கைதானா?

பி.ஜே.பி.யின் சித்தாந்தத்துக்கு எதிராக யார் எழுதினாலும் அவர்கள்மீது வழக்கு என்ற நிலை இன்று நாட்டில் பொதுவாக நிலவுகிறது.

தோழர் அ.குமரேசன்

இந்தப் பிரச்சினையில் நக்கீரன் கோபால் அவர்களைப் பாராட்டுவதைவிட, முன்ஜாமீன் கொடுக்காமல் விடுதலையே செய்த மாஜிஸ்ட்ரேட் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகம் இல்லை. இது பத்திரிகையாளர்களுக்குக் கிடைத்த வெற்றியே!

பத்திரிகை சுதந்திரம் என்ற வரிசையில் உலக அளவில் 138 ஆம் இடத்தில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

‘இந்து’ என்.ராம்

‘நக்கீரன்’ கோபால் கைது என்பது சட்டப்படி தவறானது _ முட்டாள்தனமானது _ மூர்க்கத்தனமானது.

“இந்தப் பிரிவின்கீழ் ‘நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டு இருப்பது சற்றும் பொருத்த-மானதல்ல. ஆளுநர் பணிகளை கோபால் எங்கே தடுத்தார்? எப்படி தடுத்தார்? என்பதற்கு நியாயமான ஆதாரங்கள் இருக்கின்றனவா? இந்தப் பிரிவின்கீழ் தண்டனை அளிக்கப்-பட்டால் கருத்துரிமைக்கு எதிரான அபாயகரமான முன்னுதாரணமாக ஆகிவிடும்.’’

கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ.,

ஆளுநர் தமக்கென்று உள்ள பணிகளைச் செய்யாமல் இதுபோன்ற காரியங்களில் ஏன் இறங்கவேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா

“நக்கீரன் கோபால் வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புப் புத்துணர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. “கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தவர்கள் மீது ஏன் வழக்குத் தொடுக்கக் கூடாது?’’

தோழர் இரா.முத்தரசன்

தமிழ்நாட்டில் விசித்திரமான சில காரியங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அதுதான் பூணூல் போட்டவர்களுக்கு ஒரு நீதி _ பூணூல் போடாதவர்களுக்கு வேறொரு நீதி என்னும் நிலையாகும். இந்த நிலை நீடித்தால் சட்டத்தின் மீதும், ஆட்சியின் மீதும் எப்படி நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட முடியும்?

‘நக்கீரன்’ கோபால் ஏற்புரை

எனக்கு நீதிமன்றத்தில் விடுதலை’ கிடைத்தது என்றால், அதற்குக் காரணம் மக்களின் எழுச்சி, பத்தரிகையாளர்களின் ஆதரவு, இங்கு மேடையில் அமர்ந்துள்ள தலைவர்களின் பங்களிப்புதான் என்றும் குறிப்பிட்டார்; ‘நக்கீரன்’ பணி வழக்கம்போல தொடரும்’’ என்றார்.

‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி

நாட்டில் கருத்துரிமைக்கு இடம் கிடையாதா? அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையா நாட்டில் நடந்து கொண்டுள்ளது?

மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் தந்தை பெரியார், கடைசியில் என்ன கூறி முடிப்பார் தெரியுமா?

“நான் எனக்குப் பட்ட கருத்துகளைக் கூறியிருக்கிறேன். அவற்றைத் தள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதால், எனக்குச் சொல்லுவதற்கும் உரிமை உண்டு’’ என்றும் கூறுவார்.

“அத்தகு நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் யாரையும் காப்பாற்றுவதற்கல்ல – கருத்துரிமையை, ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காகவே கூட்டப் பெற்றது’’ என்றார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாட்டின் எந்த உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும், முதல் குரலைக் கொடுப்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் என்று குறிப்பிட்ட தி.மு.க. தலைவர், “தமிழ்நாட்டின் ஆளுநர் பதவி விலகும்வரை நமது போராட்டம் தொடரும்’’ என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.  “அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை உடைப்போம்’’ என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? அப்படி ஒருவர் இருந்துகொண்டு அரசியலமைப்பு சட்டத்தினை இழிவாகவும், தொடர்ந்து அவமதித்து வரும் எச்.ராஜாவுக்கு ஒரு சட்டமும், ‘நக்கீரன்’ கோபால் அவர்களுக்கு ஒரு சட்டமும் இருப்பது மோடியின் (பி.ஜே.பி.) ஆட்சியில்தான்.

ஒரு நாள் இடைவெளியில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. உரிய கால அவகாசம் இல்லாவிட்டாலும் அரங்கம் நிறைந்து காணப்பட்டது. இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் பிரமுகர்களும் திரளாக பங்கேற்றனர்.

– முடப்பள்ளி க. கலைமணி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *