ஆசிரியார் பதில்கள்

Uncategorized

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் இந்துக் கடவுளர்க்கே விடுதலை!

கே:       பிரிட்டனில் சார்லஸ் பிராட்லா அரசியலுக்குச் சென்று வெற்றி பெற்ற நிலையிலும் தனது பகுத்தறிவுக் கொள்கையில் சற்றும் பின்வாங்காதவராக இருந்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் அரசியலுக்காக எதையும் விடுகிறார்களே? ஏன்?

– சி.இலட்சுமிபதி, தாம்பரம்

ப:           “பதவி என்பது மேல்துண்டு; கொள்கை என்பது வேட்டி’’ என்றார் அண்ணா. தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளில் பலர், வேட்டியை, துண்டுக்காக இழக்க என்றும் தயார் என்கிறார்களே! பிராட்லா மாதிரி இமயங்களை, இவர்களுடன் ஒப்பிடலாமா? உங்களுக்கு அபராதம் போட வேண்டுமா?

கே:       “திருமண பந்தத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமல்ல’’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களுக்கு எதிராக உள்ளது என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவல் கருத்து தெரிவித்திருப்பது சரியா?

– கவின், திருநெல்வேலி

ப:           பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்-களின் அந்தப் பழைய பத்தாம் பசலித்தனம்; அவர்கள் வழிபடும் ஹிந்துக் கடவுளர், கடவுளச்சிகள் எல்லோரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் விடுதலையாவார்களே _ மறந்து-விட்டாரா அவர்?

கே:       “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும்’’ என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறுவது நம்பிக்கைக்குரியதா?

                – மலர்விழி, தர்மபுரி

ப:           எல்லோரும் அங்கே _ ஜெயலலிதா மறைவுக்குப் பின் சுதந்திரத்தை ஏராளமாக அனுபவிக்கிறார்கள்! பாவம்! ஓ.பி.எஸ். _ பழனிச்சாமி!

கே:       “இந்து_முஸ்லீம் ஒற்றுமைதான் முக்கியம்; சுதந்திரம் எனக்கு முக்கியமல்ல’’ என்று  காந்தியடிகள் கூறியதும், “பார்ப்பன ஆதிக்கம் தவிர்க்கப்பட, ஆங்கில ஆட்சியே நீடிக்கலாம்’’ என்ற பெரியார் முடிவும் ஒன்றா?

– தமிழருவி, திருச்சி

ப:           வெவ்வேறு காரணங்கள்; வெவ்வேறு கோணங்கள்! இறுதியில், முடிவுக்கு _ சுடப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு காந்தியார் பெரியார் வழியில் நடைபோட முயன்றார்; பார்ப்பனியத்தால் அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை!

கே:       புதுச்சேரி அரசு விழாவில் கவர்னர் கிரண்பேடியுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., அன்பழகன் கடும் வாக்குவாதம் செய்துள்ள நிலையில், தமிழக சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் பா.ஜ.க.வுக்கு பயந்து நடுங்குவது மடியில் கனத்தாலா?

– அன்புச்செல்வன், வேலூர்

ப:           ‘ஆமென்!’ ஊரறிந்த ரகசியம் அது!

கே:       “சபரிமலை கோயிலுக்கு செல்ல மாட்டோம்’’ என்று சில  பெண்கள் உறுதிமொழி எடுத்திருப்பது ஆரிய பார்ப்பனர் பின்னணிதான் காரணம் என்ற என் கருத்தை ஏற்கிறீர்களா?

– நன்மதி, தஞ்சாவூர்

ப:           சில பெண்கள் செல்லாமல் இருக்கிறார்களா? செல்லுகிறார்களா? என்பது முக்கியம் அல்ல; ஓர் உரிமையை நிலைநாட்டுவதில் முற்போக்குக் கருத்து _ பாலின வேற்றுமை ஒழித்துக் கட்டப்படுகிறது என்பதே முக்கியம்!

கே:       நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரமாண்ட ஊர்வலம் நடத்தியபோது அவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை வீசியது பற்றி தங்கள் கருத்து என்ன?

– மகாமதி, சென்னை

ப:           விவசாயிகளின் அரசு மோடி அரசு என்று இனிமேலாவது காவிகள் சொல்லாமல் இருந்தால் நல்லது!

கே:       ‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு’ என்று ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் கூக்குரலிடுவது ஏன்?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           பார்ப்பனர்களின் பகல் கொள்ளை _ வடநாடு போல் இங்கே வரவேண்டும் என்ற நப்பாசை காரணமாகவே!

கே:       எங்கள் தந்தை பெரியாரையும், எங்களையும் பாதுகாத்துக்கொள்ள சட்டப்படியான பெரியாரின் கத்தியை வைத்துக் கொள்ளலாமா?

                – வ.க.கருப்பையா, பஞ்சம்பட்டி

ப:           சட்டத்திற்குட்பட்ட கத்தியை பாதுகாப்புக்காக வைத்துக்கொள்வதை எவரும் தடுக்க முடியாது; அது நமது வாழ்வுரிமை! எல்லாவற்றிற்கும் மேலாக அறிவாயுதமும் அவசியம் – மறந்து விடாதீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *