ஜாதி ஒழிப்புப் புரட்சி செய்த தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் – தாழ்த்தப்பட்டோர் – உயர்ஜாதிக்காரர்கள் என்ற பிறவி பேதத்தை ஒழிக்க எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாண்டார் என்பதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு ‘குடிஅரசு’ இதழில் பதிவாகியுள்ள ஒரு நிகழ்வு இது.
திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கிராமம் மங்கலம். 30.7.1947 அன்று காலை 9 மணிக்கு மங்கலம் கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வரவேற்பு: கே.எஸ்.ராமச்சந்திரன்
தலைமை: தோழர் அருணாசல அய்யர்
மணியம்மையார், என்.வி.நடராஜன் ஆகியோர் உரைக்குப் பின் தந்தை பெரியார் அவர்கள் ‘சமுதாய இழிவும் பார்ப்பனியமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர் பெரியார் அவர்களை நோக்கி, “பார்ப்பனர் நம்மை மதிக்காததிருக்கும்போது நம் இனத்தவரைத் தலைவராகக் கூட்டத்திற்கு வைக்காமல் ஓர் ஆரியரை நியமித்தது ஏன்?’’ என்று கேட்டார்.
பெரியார் அவர்கள் உடனே பதிலளிக்கையில், “ஓர் ஆரியரே தலைமை வகிக்கிறாரென்றால், அவர் நாம் கூறும் கொள்கைகளை ஒப்புக்கொண்டு, இனி ஜாதித் திமிருடன் அதற்கு ஆதாரமான நடவடிக்கைகளின் மூலம் மற்றவர்களைத் தாழ்மையாக நடத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாக ஆகுமென்றும், தவிர நமக்கு பார்ப்பனியம்தான் விரோதமேயன்றி பார்ப்பனர்கள் அல்ல என்றும், பார்ப்பனியத்தை உயர்ஜாதிக்காரர்கள் சிலர் கையாண்டாலும் அவர்களும் நமது கொள்கைக்கு விரோதிகள்தான்’’ என்றும் விளக்கிப் பதில் கூறினார்.
சான்று: 1.8.1947 ‘விடுதலை’
‘கடவுளை மற மனிதனை நினை’ என்று அறிவுறுத்தியவர் பெரியார்,
‘எனக்கு மனிதப் பற்று ஒன்றுதான் உண்டு’ என்று உரத்துக் கூறிய தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த மனித நேயத்திற்கு பல்வேறு சான்றுகளில் ஒரு சிறுதுளி இந்த நிகழ்வு.
– வை.கலையரசன்