‘உண்மை’ (செப்டம்பர் 1-15, 2018) இதழின் அட்டைப் படத்தில் தந்தை பெரியாரும் – பேரறிஞர் அண்ணாவும் சிரித்து மகிழும் ஒளிப்படம் இளைஞர்களையும், மாணவர்களையும் காந்தமாய்க் கவர்ந்தன. எண்ணற்ற அரிய செய்திகளை உள்ளடக்கிய ‘உண்மை’ இதழ் கருத்துக் கருவூலமாக, பாதுகாத்துப் போற்றப்பட வேண்டிய பெட்டகமாகத் திகழ்கிறது.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின், ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ தொடர் கட்டுரையில், “அண்ணா பெயரிலான அரசு சங்கராச்சாரிக்கு வரவேற்பளிக்கலாமா?’’ எனும் அறிவார்ந்த தலைப்பில் தந்துள்ள தகவல்கள் அனைத்தும் இளைய தலைமுறையினருக்கு தித்திக்கும் தேனாய், தேன் கரும்பாய் இனிக்கிறது. குறிப்பாக, மதுரையில் 17, 18.12.1983 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் ஈழ விடுதலை மாநாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய ஒளிப்படங்கள், சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ அலுவலகத்தில் ஆசிரியர் உரையாடும் அரிய நிகழ்வுகள், புதுவண்ணை பெரியார் மாளிகை திறப்பு விழா மாட்சிகள், எம்.ஆர்.ஆர்.வாசுவின் மறைவையொட்டி ராதாரவிக்கு ஆறுதல் கூறும் நெகிழ்ச்சியான ஒளிப்படம் மற்றும் 20.03.1984 அன்று லண்டன் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தம்பதிகள் ஃபிராங்ரோவ், திருமதி பவுலின்ரோவ் ஆகியோர் தமிழர் தலைவருடன் சந்திப்பு உள்ளிட்ட ஒளிப்படங்கள் காணக் கிடைக்காத அரிய பொக்கிஷங்கள் ஆகும்.
இளைஞர்களையும் – மாணவர்களையும் நல்வழிப்படுத்தி அவர்கள் சரியான பாதையில் பயணிக்க உறுதுணையாகத் திகழும் ‘உண்மை’ இதழை உயர்த்திப் பிடிப்போம்! ‘உண்மை’ இதழின் மேன்மையை உலகுக்குப் பறைசாற்றுவோம்!
வாழ்க பெரியார்! வெல்க சமூகநீதி!
– சீ.இலட்சுமிபதி
தாம்பரம்


Leave a Reply