இழந்தது போதும்!

செப்டம்பர் 16-30

கார்த்திகா தனது வீட்டில் தடபுடலாக நடைபெற்று வரும் பூசையை கடுப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள். கார்த்திகாவுக்கு அதில் சற்றும் விருப்பம் இல்லை. தனது கணவன் விசுவும் அண்ணன் காளியும் இதே பிழைப்பாக இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. விதவிதமான நிறங்களில் வேட்டிகளைக் கட்டிக் கொண்டு மேற்சட்டைகூட அணியாமல் எப்போதும் சாமிக்கு பூசை, பூசை என்று திரிந்து கொண்டு பணத்தையெல்லாம் செலவு செய்து வருகிறார்களே என்று மனம் புழுங்கினாள்.

அது மட்டுமல்ல, கணவனும் அண்ணனும் ஒன்று சேர்ந்து பல மாதங்கள் தொடர்ச்சியாக மது அருந்துவார்கள். கோயிலுக்குச் செல்லும் நாட்களில் மட்டும் அல்லது பூசை செய்யும் நாட்களில் மட்டும் குடிப்பதை நிறுத்தி வைப்பார்கள்.

வேலை வெட்டி இல்லாமல் சோம்பேறித்தனமாக சுற்றித் திரியும் சிலரையும் வீட்டிற்கு அழைத்து வந்து பூசை செய்வதும் அவர்களுக்குச் சாப்பாடு செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் அவருக்கு பல நாட்கள் பெரும் பிரச்சனையாக இருந்தது.

நான்காம் வகுப்பில் படிக்கும் தன் மகனையும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் மகனையும்கூட விட்டு வைக்கவில்லை. அவர்கள் கழுத்திலேயும் மாலைகளைப் போட்டு ஊர் ஊராக, கோயில் கோயிலாக அழைத்துச் செல்கிறார்கள் அண்ணன் காளியும் கணவன் விசுவும். இதனால் அவர்களது கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டது..

அவள் அண்ணன் காளிக்கும் ஒரு பையன் இருக்கிறான். பள்ளியில் சேர்க்க வேண்டிய வயது. ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் அவனையும் கோயில் கோயிலாக அழைத்துச் சென்று வந்தனர்.

ஒரு நாள் அல்ல பல நாட்கள் அவள் காளியுடனும் விசுவுடனும் சண்டை போட்டுப் பார்த்து விட்டாள்.

“அண்ணே! நீங்க ரெண்டு பேரும் கெட்டுப் போறதுமல்லாம புள்ளங்களையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குறீங்களே! இது நியாயமா?’’ என்று ஒரு நாள் தனது அண்ணனைக் கடுமையாகச் சாடினாள்.

“தங்கச்சி, நாங்க எங்களுக்காகவா கோயிலுக்குப் போறோம்? புள்ளங்க நல்லா இருக்கணும்னுதானே போறோம்! அவங்க நோய் நொடி இல்லாம வாழணும் இல்லையா?’’ என்று பதில் சொன்னான் காளி.

“படிக்க வேண்டிய பிள்ளைகளைக் கெடுக்காதீங்க. நாம எல்லோருமே படிக்கல. புள்ளங்களாவது படிச்சி பட்டம் வாங்கி வேலைக்குப் போகணும். பணத்தை இப்படி வீணா செலவழிக்கிறீங்களே!’’ என்று அழுகையை அடக்கியவாறே கேட்டாள் கார்த்திகா.

ஆனால், அதற்கெல்லாம் செவிமடுக்க அவர்கள் தயாராக இல்லை. அடுத்த மாதம் முருகன் கோயிலுக்குப் பாத யாத்திரை செல்லும்போது மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் செல்ல திட்டம் போட்டு விட்டார்கள்.

அடுத்த மாதம் வரும்வரை எவ்வளவு மது குடிக்க முடியுமோ அவ்வளவும் குடித்துத் தீர்த்தார்கள். விசு நிறைய பேர்களிடம் கடன் வாங்கி பாத யாத்திரைக்குத் தேவையான பொருட்களை வாங்க முற்பட்டான். அவன் வாங்கிய கடன்களையெல்லாம் கார்த்திகா தனது நகைகளையும் மற்ற பொருட்களையும் விற்று அடைத்துவந்தாள். ஒரு கட்டத்தில் நிலங்களையும் விற்க வேண்டியதாகிவிட்டது. சொத்துக்கள் சிறுகச் சிறுக கரையலாயின. அதேபோல் காளியும் நிலங்களையும் பிற பொருட்களையும் விற்க ஆரம்பித்தான். அவன் மனைவி லட்சுமி ஒரு அப்பாவியாக இருந்தாள். பயந்த சுபாவம் உள்ளவள். அவளை காளி எளிதாக ஏமாற்றி விடுகிறான். மேலும் அவரும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போனவளாகக் காணப்பட்டாள். பக்திக்கு அடிமையாகி விட்டாள். இதனால் காளியின் வேலை எளிதாகி விட்டது. நிலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கின.

பாத யாத்திரை செல்லும் நாளும் நெருங்கியது. விசுவும் காளியும் தங்கள் பிள்ளைகளுக்கு நீண்ட தலைமுடியை வளர்த்து விட்டிருந்தனர். கோயிலுக்குச் சென்று மொட்டையடிக்க வேண்டுமாம்.

ஒரு நாள் காளியும் விசுவும் தங்கள் பிள்ளைகளை ஊர் கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது வழியில் அவர்களின் பிள்ளைகளின் ஆசிரியர் சம்பத் எதிரில் வந்தார். படிக்கும் பிள்ளைகளின் நிலை கண்டு வருந்தினார்.

“ஏம்பா பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாம இப்படி பண்றீங்க? படிப்பு வீணாகுதே’’ என்று கேட்டார்.

“வாத்தியாரைய்யா, நீங்க படிச்சவங்க. கோயிலுக்குப் போறதைத் தடுக்குறீங்களே! இது நியாயமா?’’ என்று காளி கேட்டான்.

“படிச்சதால்தான் சொல்றேன். நீங்க ரெண்டு பேருமே அதிகமா படிக்கல. உங்க பிள்ளைகளையாவது படிக்க விடுங்க. அவங்க படிச்சுட்டு வேலைக்குப் போக வேண்டாமா?’’ என்று கேட்டார் ஆசிரியர் சம்பத்.

“அதுக்காகத்தான் நாங்க இப்படி கஷ்டப்படறோம். ஆண்டவன் சக்தி இல்லாம படிக்கவும் முடியாது, வேலைக்குப் போகவும் முடியாது. எங்க அப்பா என்னை இப்படியெல்லாம் அழைச்சிகிட்டுப் போகல. அதனால்தான் படிக்காமப் போயிட்டேன்’’ என்றான் விசு.

“நம்ம ஊரிலும்தான் கோயில் இருக்கே. இங்கேயே வேண்டிகிட்டு உன் பிள்ளைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாதா?’’ என்று மீண்டும் வினவினார் சம்பத்.

இதற்குப் பதில் ஏதும் கூறாமல் காளியும் விசுவும் அவரை சுட்டெரிக்கும் விழிகளால் முறைத்துப் பார்த்தனர். இனி இவர்களுடன் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த ஆசிரியர் சம்பத், “எப்படியாவது போங்க’’ என்று முனகியவாறே அவ்விடத்தை விட்டு அகன்றார்.

பாத யாத்திரை நாளும் வந்தது—-.  உள்ளூர் கோயில் பூசாரி அய்ந்து பேர்களுக்கும் பரிவட்டம் கட்டி கழுத்தில் மாலைகள் போட்டு மேளதாளங்கள் முழங்க புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அவர்கள் செல்ல வேண்டிய முருகன் கோயில் அங்கிருந்து இரு நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. ஊர் மக்கள் பலரும் வந்திருந்து வழியனுப்பினார்கள். காளியின் மனைவி பக்தி போதையில் இருந்ததால் அவள் பக்தி சிரத்தையுடன் காணப்பட்டாள். ஆனால், கார்த்திகா அவர்களின் செயல் பிடிக்காமல் கண் கலங்கியபடியே நின்று கொண்டிருந்தாள். அவள் பேச்சைத்தான் யாரும் கேட்பதில்லையே!

ஊர் எல்லைவரை அனைவரும் வந்து வழியனுப்பி வைத்தனர். அதற்குப் பிறகு காளி, விசு, அவர்களது பிள்ளைகள் மூவர் என அய்வரும் விடுவிடுவென நடக்க ஆரம்பித்தனர்.

சுமார் இருபது கிலோ மீட்டர் தூரம் சென்றிருப்பார்கள். அதற்கு மேல் அவர்களது பிள்ளைகளால் நடக்க முடியவில்லை. அழத் தொடங்கினர். மேலும் இருள் சூழும் நேரமும் வந்தது. அங்கிருந்த கோயில் ஒன்றில் தங்கி மறுநாள் அதிகாலை புறப்பட்டுச் செல்லலாம் என முடிவெடுத்தனர். அன்று இரவு அங்கேயே படுத்துத் தூங்கினர்.

இரண்டு நாட்கள் கடந்தன. பாத யாத்திரை மிகவும் மெதுவாகவே நடைபெற்றது. சிறுவர்கள் மூவரும் களைப்படைந்துவிட்டனர். ஒரு நாள் அதிகாலை அவர்களைத் தூக்கத்திலிருந்து கிளப்பி நடத்திச் சென்றனர். கால்வலி தாங்காமல் அவர்கள் அழுதுகொண்டே நடந்தனர். காளி, விசு இவர்களின் கவனமெல்லாம் பிள்ளைகள் மீதே இருந்தது. எப்படியாவது பாத யாத்திரையை நிறைவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்திலேயே இருந்ததால் எதிரில் வந்த லாரியை அவர்கள் கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று மறைந்தது. அதிகாலை நேரமாக இருந்ததால் லாரி ஓட்டுநரும் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த அய்வரையும் அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு மாதம் கடந்தது. அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நல்ல மருத்துவ வசதி கிடைத்ததால் காளி, விசு மற்றும் பிள்ளைகள் உயிர் பிழைத்தனர். ஆனால், இன்னமும் நடக்கமுடியாத அளவிற்கு கைகால்களில் கட்டுகளுடன் அருகருகே ஒரே அறையில் படுக்கையில் கிடந்தனர். மற்றபடி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. கார்த்திகாவும், காளியின் மனைவியும் அவர்களைப் பார்க்க வந்தனர். தற்போது அவர்களின் முகங்களில் ஒருவித தெளிவு காணப்பட்டது.

“சொன்ன பேச்சைக் கேட்காமல் நீங்க ரெண்டு பேரும் கெட்டதோடு இந்தப் பிள்ளைகளையும் இப்படி ஆக்கிட்டீங்களே’’ என்று கணவன் விசுவிடம் புலம்பினாள் கார்த்திகா.

அருகில் படுத்திருந்த அவள் அண்ணன் காளி பேசினான். “தங்கச்சி, ஏதோ தெய்வகுத்தம் நடந்துடுச்சின்னு நெனைக்கிறேன். பரிகார பூசை செய்ஞ்சா கஷ்டமெல்லாம் போயிடும்’’

இப்படி அவன் சொன்னதும் விசுவும் அதை ஆமோதித்து, ”ஆமாம், ஆமாம். பரிகார பூசை செய்யணும்’’ என்றான். இவன் சொல்லி வாய்மூடிய அடுத்த வினாடி அவனது மூத்த மகன் வலியையும் பொருட்படுத்தாமல் படுக்கையிலிருந்து வெகுண்டு தலையை உயர்த்தி,

“அப்பா, நீ கேடுகெட்ட சாமிகளை நம்பி பண்ணின பூசைகள் எல்லாம் போதும். இனிமே வீட்டில் பூசைகள் ஏதும் பண்ணினா எல்லாரையும் தொரத்தி அடிப்பேன் பாரு’’ என்று கத்தினான். அதைக் கேட்ட காளியும், விசுவும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏதும் பேசவில்லை.

கார்த்திகா காளியிடம் பேசினாள்.

“அண்ணே! நம்ம குடும்ப சொத்துக்களையெல்லாம் அழிச்சிகிட்டு வர்றே. நீங்கயெல்லாம் பாத யாத்திரை போனதுக்கு அப்புறமா நம்ம ஊரில் ஒரு கூட்டம் நடந்துச்சி. கருப்புச் சட்டை போட்டவங்க பேசினாங்க. பொம்பளைங்களுக்கு உள்ள உரிமைகள் பத்திப் பேசினாங்க. அதன்படி நம்ம குடும்ப சொத்துக்களில் பாதியை எனக்கு பிரிச்சி கொடுத்திடு. இல்லாட்டி நான் கோர்ட்டுக்குப் போக வேண்டிவரும். அண்ணியும் அப்படியே செய்யப் போறாங்க’’ என்றாள்.

“ஆமாம்மா, விடாதேயம்மா. அப்பாவும் மாமாவும் கோயில், பூசைன்னு எல்லாத்தையும் வித்துடுவாங்க. எங்களையும் படிக்க வைக்க மாட்டாங்க. விடாதே அவங்கள’’ என்று மீண்டும் கத்தினான் மூத்த மகன்.

காளி, விசுவின் கண்களில் கண்ணீர் வடிந்தது. சற்று நேரம் கழித்து காளி பேசினான்.

“என் மருமகனே சொல்லிவிட்டான். இனிமே நாங்களும் கோயில், பூசைன்னு போக மாட்டோம். அதோட இல்லாம உனக்கு சேர வேண்டியதையும் நான் பிரிச்சிக் கொடுத்து விடுகிறேன். நீயே பாதுகாப்பா வைச்சுக்க’’.

இவ்வாறு கார்த்திகாவிடம் காளி கூறியதும், விசுவும் கார்த்திகா பக்கம் திரும்பி, “நானும் உன் அண்ணன் சொன்னதுபோலவே நடந்து கொள்கிறேன். பிள்ளைகளைப் படிக்க வைக்கிறேன்’’ என்றான்.

கார்த்திகா நிம்மதியடைந்தாள்.  

 – ஆறு.கலைச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *