அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? – 14

டிசம்பர் 16-31

 

சு.அறிவுக்கரசு

“இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு பார்ப்பனியம். பார்ப்பனியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும்.’’ (பக்கம் 114) என்ற யோசனையை ஏற்றீர்களா? இன்றைக்காவது ஏற்பீர்களா? ஏற்காமல் அவரைச் சொந்தம் கொண்டாடலாமா? இனியாவது மோசடிகளை நிறுத்துங்கள். கேள்விகளை எழுப்பி, பதிலடியாக நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டவர் காந்தி. அவரது நிலையே அப்படி என்றால், இந்துத்வச் சிறுவர்கள் எம்மாத்திரம்?
உபநிடதப் பித்தலாட்டம்

உபநிஷத்கள் மீது நல்லெண்ணம் இருந்த காரணத்தால், அவற்றை நிராகரிக்குமாறு அம்பேத்கர் கோரவில்லை என்கிறார்கள். இந்து மதத்தின் வேதங்கள், ஸ்ருதிகள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், உபநிஷத்கள் என்பனவற்றில் எதன்மீதும் மதிப்போ மரியாதையோ வைத்தவரில்லை அவர். இந்து மதத்தின் புதிர்கள் பற்றி எழுதியவர் இந்துமத இலக்கியங்கள் என வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிஷத்கள், சூத்திரங்கள், இதிகாசங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டார். பொய்யே சொல்லாதவை என்றார் வேதங்களை! சுருதிகளை ஒருவகையாகவும் மற்றவற்றை சுருதியல்லாதவை என்றும் இரண்டு வகையாக இந்து இலக்கியங்களைப் பிரித்தனர். பிரம்மா முதலில் புராணங்களை உரைத்ததாகவும் அதன் பின்னர் வேதங்கள் வாயிலிருந்து வந்ததாகவும் வாயு புராணம் கூறுகிறது. இதை மத்ஸ்ய புராணமும் கூறுகிறது. வேதத்திற்குச் சமமான அதிகாரம் இருப்பதாக பாகவத புராணம் கூறிக் கொள்கிறது. இப்படிப் பார்த்தால் புராணப் புளுகுகளைவிடக் கீழானவை வேதங்கள்!

உபநிஷத்களுக்கு வேதாந்தம் என்று ஒரு பெயர். வேதங்களின் முடிவுகள் என்றும் வேதங்களின் பிழிவு (சாறு) என்றும் இரு பொருள்படும் சொல் உபநிஷத் என்பது. க்ஷீரிகோப உபநிஷத்தில் “புண்டரிகேதி வேதாந்தேஷூ நிகத்யதே’’ என்று வருகிறது. இது வேதங்களில் கடைசி என்று பொருள்படவில்லை. வேதாந்தங்களிலிருந்து உபநிஷத்கள் வேறாகத்தான் கருதப்படுகின்றன.

பிருகதாரணியக உபநிஷத் கூறுவது இது: “ஆழ்ந்த உறக்க நிலையில் தந்தை தந்தையல்ல. தாய் தாயல்ல. உலகங்கள் உலகங்களல்ல. கடவுள்கள் கடவுள்களல்ல. வேதங்கள் வேதங்கள் அல்ல. யாகங்கள் யாகங்களல்ல. திருடன் திருடனல்ல. கருவை அழிப்பவன் கருவை அழிப்பவனல்ல. பவுலகசன் பவுலகசனல்ல. சண்டாளன் சண்டாளனல்ல. சிரமணன் சிரமணனல்ல. பக்தன் பக்தனல்ல.’’ ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? புரியாமல் இருப்பதுதான் வேதாந்தம் என்றார் கவிஞர் கண்ணதாசன்.

உபநிஷத்கள் வேத இலக்கியத்தின் பகுதியாக ஏற்கப்படவில்லை என்பதும் வேதப் பார்ப்பனர்கள் மிகக் குறைந்த மதிப்பையே தந்தார்கள் என்பதும் தெளிவாகிறது. வேதங்களும் உபநிஷத்களும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த காலமும் இருந்தது என்கிறார் அம்பேத்கர்.

போதாயணரின் தர்ம சூத்திரங்களின்படி, சிரார்த்தம் செய்யத் தகுதிபெற்ற பார்ப்பனர்கள் கிடைக்கவில்லை யென்றால் மட்டுமே, உபநிஷத்தில் தேர்ச்சி பெற்ற ரகசிய வித் எனும் பார்ப்பனர்களை அழைக்கலாம் என்கிறது. அப்படியானால் வேதப் பார்ப்பனன் ஷிளீவீறீறீமீபீ என்றும் உபநிஷத் பார்ப்பனன் uஸீsளீவீறீறீமீபீ என்றும் பொருளா? பிறகென்ன மரியாதை உபநிஷத்துக்கு? இதற்கும் மரியாதையில்லை; இதைப் படித்தவனுக்கும் மரியாதை இல்லை என்ற நிலையில் அம்பேத்கர் மரியாதை கொடுத்தார் என்பது மோசடிதானே! பொய்தானே!

வேதங்களும் உபநிஷத்களும் நேரெதிர்க் கருத்துகளைப் பேசுகின்றன. யாகம் தேவை என்கிறது வேதம்! தேவையில்லை என்கிறது உபநிஷத்! “வேதங்களைப் படித்துத் தெரிந்து கொண்டவர்கள் யாகம் செய்யலாம். உபநிஷத் யாகம் பற்றிக் கூறவில்லையாதலால் யாகம் பொருந்தாது என்று சங்கராச்சாரி கூறுகிறார்.

இந்த நிலையில் இந்து மதத்திலேயே மரியாதை கெட்ட உபநிஷத்களைப் பற்றி அம்பேத்கர் கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற கரிசனம் இந்துத்வர்களுக்கு ஏன்? நமக்கு விளங்கவில்லை!

பார்ப்பனர்க்கு ஏன் உயர்வு?

இறுதியாக ஒரு சொல். இந்து மதம் பார்ப்பன மேலாண்மையைக் கூறுகிறது. நான்கு வருணப் பிறப்புகளில் அவனே மேலானவன், முதன்மையானவன் என்கிறது. இதனால்தான் பார்ப்பனர் இந்து மதத்தைத் தாங்கிப் பிடிக்கின்றனர். உயர்த்திப் பிடிக்கின்றனர். உலகில் எவரும் உண்மை பேசுவதை ஒழுக்கமாகவும் உயர் கொள்கையாகவும் கருதிக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், பார்ப்பனர் பொய் பேசுவதை சரி என்றும் நியாயப்படுத்தியும் இந்துமதச் சாத்திரங்கள் கூறுகின்றன. பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கும் பார்ப்பனரைக் காப்பாற்றிட வாக்குறுதி அளித்தது பற்றியும் பொய்சாட்சி சொல்வது தவறல்ல, பாவமல்ல என்கிறது மனுசாத்திரம். “சமத்துவமின்மையே இந்து மதம். இந்து மதத்தின் விதிகள் மனிதத் தன்மையற்றவை. நன்னடத்தை அற்றவை. இகழ்ச்சிக்குரியவை’’ என்கிறார் அம்பேத்கர். (தொகுப்பு நூல்-பாகம் 6 – பக்கம் 119) மனிதாபிமானமே அற்ற மதம் இந்துமதம் என்றார்.

பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியவனாதலாலும் முதலில் தோன்றியவனாதலாலும் பார்ப்பனன் உலகில் படைக்கப்பட்ட யாவற்றுக்கும் தலைவன் எனும் உரிமையைப் பெற்றிருக்கிறான் என்று மனுசாத்திரம் கூறுகிறது. படைப்புகளில் உயிர் உள்ளவை சிறந்தவை. மரம், மட்டை, கல், புல், செடி, கொடி இவற்றை நீக்கிடவும். உயிர் உள்ளவற்றிலும் அறிவுள்ளவை சிறந்தவை. ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, அய்ந்தறிவு உள்ளவை உலகில் உள்ளன. ஆறறிவு படைத்த மனிதனும் உள்ளான். மனு எந்த அறிவுள்ளதை உயர்ந்தது என்கிறான்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்திருக்கின்றன. என்றாலும், மானுடர் சிறந்தவர்களாம். மானுடருள் பார்ப்பனர் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது மனுசாத்திரம். இதற்குப் பெயர் இந்து மதமா? பார்ப்பன மதமா?

                     (கேள்விகள் தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *