கேரளாவில் உள்ள கல்பாத்தி என்ற இடத்தில் பொது சாலையில் நடந்து சென்றமைக்காக சங்கரன் என்ற இளைஞர், நம்பூதிரிப் பார்ப்பனரால் தாக்கப்பட்டு தீட்டுக்காக அபராதம் விதிக்கப்பட்ட கொடுமை 1926இல் நடைபெற்றது. இதனைப் பற்றி ‘குடிஅரசு’ ஏடு தரும் அரிய தகவல்:
மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு முனிசிபல் எல்லைக்குள் கல்பாத்தி என்கிற பாகம் பிராமணர்கள் முக்கியமாய் வசிக்கும் பாகம். அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள் எல்லாம் முனிசிபாலிட்டியாரைச் சேர்ந்தது. அதைப் பழுது பார்த்தல், பராமரித்தல் எல்லாம் முனிசிபல் செலவிலேயே நடந்து வருகிறது. அப்படி இருந்தும் அங்கிருக்கும் பிராமணர்கள் அத்தெருவின் வழியாய் பஞ்சமர்கள் என்று சொல்லுவோர்களையும் தீயர் என்று சொல்லுவோர்களையும் நடப்பதற்கு விடுவ தில்லை. அத்தெருக்களின் முகப்புகளில் உள்ள பல வியாபாரக் கடைகளிலும் பிராமணர்கள் வந்து சாமான்கள் வாங்கினால் அதைத் தங்கள் வீட்டுக்குத் தூக்கிச் செல்ல மகமதியக் கூலிகளையாவது, கிறிஸ் தவக் கூலிகளையாவது அமர்த்தி எடுத்துக் கொண்டு போவதே தவிர மேற்படி இந்துக் கூலிகளை எடுக்க விடுவதில்லை.இதற்காகவே அக்கடைகளுக்குப் பக்கத்தில் மகமதிய கிறிஸ்தவக் கூலிகள் அதிகமாய் நின்று கொண்டிருப்பார்கள்.
அல்லாமலும் அந்த வீதிகளில் உத்தியோகஸ்தர்களும் குடி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கும் ஆபீஸ் சம்பந்தமான காகிதம் போக்குவரத்து முதலிய வைகளுக்கும் மகமதிய, கிறிஸ்தவ, பிராமண, நாயர் ஆகிய ஜாதியிலேயே குமாஸ்தா, பியூன் முதலியவர்களை நியமித்துக் கொள்ளுவதே அல்லாமல் தீயர், ஈழவர் என்கிற வகுப்பார்களை நியமிப்பதில்லை. தவிரவும் சென்னையிலிருந்து கள்ளிக்கோட்டைக்குப் போய்க் கொண்டி ருக்கும் நேர் ரஸ்தாவில்தான் பாலக்காடு டவுன் பெரிய கடைவீதி இருக்கிறது. அக்கடைவீதிதான் பெரிய மண்டிக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, பலகாரக்கடை, வெத்திலை பாக்குக்கடை, புகையிலை மண்டி முதலிய வியாபாரங்கள் நடக்கும் வியாபார ஸ்தலமாய் இருக்கிறது. இதுவும் முனிசிபல் பொது ரஸ்தாவாகும். இதிலும் சேரி மக்கள் முதலிய சிலதாழ்ந்த ஜாதியார் என்போர்கள் நடக்கக்கூடாது. இந்தக் கடை வீதிகளிலும் மேற்படி தாழ்ந்த ஜாதியார் கூலிவேலை செய்யவுங் கூடாது.
தங்களுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கவும் கூடாது. வேறு யாரிட மாவது, ஒரு மகமதியர் மூலமாகவோ, கிறிஸ்தவர் மூலமாகவோ உயர்ந்த ஜாதி இந்து மூலமாகவோதான் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தக் கடைவீதியில் தான் சர்க்கார் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது.
திருட்டு, கொலை, கொள்ளை, போர்ஜரி, விபச்சாரம் முதலிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியாகவோ, தண்டித்த கைதியாகவோ இருந்தால் அந்த வீதி வழியாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போலீஸ்காரர்கள் கைவிலங் கிட்டோ சங்கிலியில் பிணைத்துக் கட்டியோ கூட்டிக்கொண்டு போவதை அடிக்கடி பார்க்கலாம். யோக்கியமானவன்தான் அவ்வழியில் நடக்கக் கூடாது. இவ்விஷயங்களைப் பற்றி சுமார் 7,8 வருஷங்களுக்கு முன் ஒரு தடவை சில கனவான்கள் யோசித்து கல்பாத்தி வழியாக சில தாழ்ந்த வகுப்பார் என்கிறவர்களை அழைத்துச் செல்ல முயற்சித்தார்கள். அதுசமயம் கல்பாத்தி பிராமணர்கள் பொது கடை வீதிகளில் பிராமணரல்லாதவர்கள்தான் மகமதியர், கிறிஸ்தவர்கள், ஈழவர்கள் உள்பட அநேகம்பேர் இருக்கிறார்கள். அந்த வழியிலேயே தாழ்ந்த ஜாதியார் நடக்கக்கூடாது என்று அவர்கள் சொல்லும் போது, நாங்கள் மாத்திரம் எப்படி எங்கள் தெருவில் நடக்கவிடுவோம் என்றார்கள். அதன் பிறகு உடனே சிலர் தாழ்ந்த ஜாதியாரை அழைத்துக் கொண்டு கடைவீதியின் வழியாய் நடக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் அந்தக் கடைவீதியானது பெயருக்கு மாத்திரம் பல வகுப்புக் காரர்கள் அடங்கிய வியாபாரக் கூட்டக்காரரால் வியாபாரம் செய்யப்பட்ட வீதியாயிருந்ததே ஒழிய ஏறக்குறைய எல்லா முக்கிய வியாபாரிகளும் கல்பாத்தி முதலிய பிராமண அக்கிரகாரங்களில் உள்ள பிராமணர் களிடத்தில் கடன் வாங்கியவர்களாகவே இருந்ததால் அந்த பிராமணர்களின் இஷ்டத் திற்கு விரோதமாய் நடக்க சக்தியற்றவர்களாகவே இருந்து அந்தப் பிராமணர்கள் தயவுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டியவர்களானதால் இந்த வியாபாரிகள் கடைவீதியிலும் தாழ்ந்த ஜாதிக்காரர் பிரவேசித்ததைத் தடுத்தார்கள். தடுத்ததோடு பிரவேசித்த தாழ்ந்த வகுப்பார்களை நன்றாய் அடித்தார்கள். அதன்மேல் பிராது ஏற்பட்டு அடித்ததற்காக சில செல்வமும் செல்வாக்கும் உள்ள வியாபாரிகள் அபராத தண்டனையும் அடைந்தார்கள். அதற்குப் பிறகு எவரும் செல்லவும் தடுக்கவும் பிரவேசிக்கவுமில்லை. சென்ற வருஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு மறுபடியும் கல்பாத்தி அக்கிரகாரத்திற்குள் ஈழவர்கள் பிரவேசிக்க முயன்றார்கள்.
அதுசமயம் சட்ட சபையிலும் எல்லா பொது ரஸ்தாவிலும் எல்லா ஜாதியாரும் போகலாம் என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார்கள். அது அமுலுக்கு வரும்போது சட்ட மெம்பர் சர். சி.பி. ராமசாமி அய்யர் தயவில் வேலையிருந்தால்தான் போகவேண்டும் என்கிற வியாக்கியானம் செய்யப்பட்டுப்போய் அந்தத் தீர்மானம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
பிறகு சில ஈழவர்கள் ஆரிய சமாஜத்தில் சேர்ந்து மதம்மாறி அவ்வழியே நடந்தார்கள். அவர்கள் மீதும் பிராது கொடுக்கப்பட்டு விடுதலை ஏற்பட்டது.
இப்போது மறுபடியும் விடுதலை பெற்ற அதே ஆசாமி, அதாவது ஸ்ரீமான் சங்கரன் என்னும் பத்திரப் பதிவு இலாகா குமாஸ்தா தன் எஜமானன் வீட்டுக்குச் சர்க்கார் காரியமாய்ப் போகும் போது சில பிராமணர்கள் அவரை வழிமறித்து உபத்திரம் செய்து அவர் நடந்த வீதியை பரிசுத்தம் செய்வதற்கென 10 ரூபாய்க்கு ஒரு பிராமிசரி வாங்கிக் கொண்டு விட்டு விட்டார்கள். இதைப்பற்றி நியாய ஸ்தலத்தில் பிராது நடந்து கடைசியாக இவ்வாரத்தில் தடுத்த பிராமணர்களுக்கு ஆள் ஒன்றக்கு 30 ரூபாய் வீதம் அபராதமும் போடப்பட்டது. இத்தோடு இது முடியும் விஷயமாகவும் இல்லை. மறுபடியும் கடைவீதிகளில் தாழ்ந்த ஜாதியார் நடக்கக்கூடாது என்பதைச் சிலர் வற்புறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனாலும் இதுசமயம் பாலக்காடு பெரிய கடைவீதி வியாபாரிகள் சுலபத்தில் ஏமாறக்கூடியவர்கள் அல்ல. தாங்கள் சென்ற தடவை தடுத்ததே நியாயமில்லை என்பதை நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். ஆதலால் சீக்கிரத்தில் தாழ்ந்த வகுப்பாருக்குக் கடைவீதி பிரவேசமாவது கிடைக்குமென்று நம்புகிறோம்.
– ‘குடிஅரசு’ – கட்டுரை – 16.05.1926
இதன்பிறகு ஏழு மாதங்களுக்குப் பின் இதுகுறித்த தீர்ப்பு தரப்பட்டது. அதுகுறித்த பதிவு…
பார்ப்பனரல்லாத ஜட்ஜுகளின் தீர்ப்பு
ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலையாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர் அவரைத் தடுத்து, நிறுத்தி மிரட்டி ரோட்டிற்குப் புண்ணியார்ச்சனை கும்பாபிஷேகம் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வண்டியையும் மேல்வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக, போலீசார் இவ்விஷய மறிந்து ஸ்தலத்திற்குப் போய் பைசைக்கிளையும் வேஷ்டியையும் பிடுங்கிக் கொடுத்துவிட்டு அந்தப் பார்ப்பனர்மீது கிரிமினல் நடவடிக்கை நடத்தினார்கள். அதில் பார்ப்பனருக்கு 30 ரூபாய் அபராதம் விழுந்தது.
அதன் பேரில் பார்ப்பனர்கள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்து கொண்டார்கள். அப்பீலில் பார்ப்பனரல்லாத இரண்டு அய்கோர்ட்டு ஜட்ஜ்கள் பார்ப்பனர் செய்தது அக்கிரமமென்றும் ஜனங்கள் வரிப்பணத்தில் முனிசிபாலிட்டி யாரால் பரிபாலிக்கப்படும் எந்த ரோட்டிலும் யாரும் நடக்கலாம் என்றும், பார்ப்பனர் 30 ரூபாய் அபராதம் கொடுக்கவேண்டியது தான் என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டார்களாம். இது மிகவும் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இதே அய்கோர்ட் ஜட்ஜ் ஸ்தானத்தில் வர்ணாசிரமப் பார்ப்பனரோ அல்லது தன்னை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரோ அல்லது பார்ப்பனர் சொல்லும்படி ஆடுகிற பார்ப்பனரல்லாதாரோ (நமது மந்திரிகளைப்போல்) ஜட்ஜுகளாய் இருந்திருந்தால் இந்த கேசின் முடிவு இப்படியிருக்குமென்று உறுதிகூற முடியுமா? ஜட்ஜுமெண்டு என்பது மிக பரிசுத்த ஜட்ஜுமெண்டு என்பதே அவரவர்கள் மனச்சாட்சியைப் பொறுத்ததாகத்தானே இருக்கும்.
மனச்சாட்சி என்பதே எல்லோருக்கும் ஒன்று போல் இருக்காது. அய்ரோப்பியருக்கு மாடு சாப்பிடுவது மனச்சாட்சிக்கு விரோதமாகாது. பார்ப்பனரல்லாதவருக்கு ஆடு தின்பது மனச்சாட்சிக்கு விரோதமென்பதாகத் தோன்றாது. பார்ப்பனருக்கு இவர்கள் சாப்பிடுவதைக் கண்ணில்கூட பார்க்கக்கூடாது என்பது மனச்சாட்சிக்கு விரோதமாகத் தோன்றாது. ஆதலால் இதே ஐகோர்ட் ஜட்ஜு ஸ்தானத்தில் ஒரு வர்ணாசிரம பார்ப்பனர் இருந்தால் அவர் கண்டிப்பாய் இந்த ரோட்டில் நடந்தது தப்பு என்றும் போட்ட அபராதம் வாப்பீஸ் செய்து நடந்தவனை தண்டிக்க வேண்டும் என்று சொன்னால்தான் அவர் மனச்சாட்சிப்படி நடந்தவராவார். அதனால்தான் நாமும் நமது சுயமதிப்பையும் மனச்சாட்சியையும் உத்தேசித்து அய்கோர்ட் ஜட்ஜு முதல் எல்லா ஸ்தானங்களிலும் பார்ப்பனரல்லாதாரே இருக்க வேண்டுமென்று கோருகிறோமே அல்லாமல் வேறில்லை.
இதுபோலவேதான் பார்ப்பனர்களுக்குத் தங்களது ஆதிக்கத்தை உத்தேசித்து பார்ப்பன ஜட்ஜுகளே இருக்க வேண்டுமென்று கோருகிறார்கள். அவர்கள் கோருவதைப் பற்றி நாம் அவர்கள் பேரில் குற்றம் சொல்ல வரவில்லை. ஆனால் அது நிறைவேறினால் நமது சமுகத்திற்கும் நமது சுயமரியாதைக்கும் ஆபத்து என்றுதான் சொல்வதோடு நம்மால் கூடுமான வரை தடுக்க வேண்டியதும் நம்முடைய கடன் என்கிறோம். அவர்கள் 4000, 5000 ரூபாய் சம்பளம் வாங்குவதாலும் அவர்கள் ஜாதி வக்கீல்களையே முன்னுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து அவர்களுக்கு அனுகூலம் செய்து நம்ம ஜாதி வக்கீல்களை சிறுமைப்படுத்தி விரோதம் செய்வதினாலும் மற்றும் அவர்கள் ஜாதியாருக்கே முனிசீப்பு, சப்-ஜட்ஜு, ஜட்ஜு முதலிய உத்தி யோகங்கள் கொடுத்து நம்முடைய ஜாதியாரின் உரிமையை ஒழிப்பதினாலும் நமக்கு அவ்வளவு ஆபத்திருப்பதாய் நாம் நினைப்பதில்லை. ஆனால் கல்பாத்தி பொது ரோட்டு, வழிநடை உரிமை போன்ற விஷயங்களில், பார்ப்பன ஜட்ஜுகளிடம் இருந்தும் பார்ப்பன சட்ட மெம்பர்களிடமிருந்தும் நமது சுயமரியாதைக்கு அனுகூலமான தீர்ப்பு பெற முடியுமா என்கிற விஷயத்தில் தான் பயமாயிருக்கிறது. உதாரணமாக கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்கலாம் என்று சட்டசபையில் தீர்மானம் ஏற்பட்டும் சட்ட மெம்பர் ஸ்ரீமான் சர்.சி.பி. பார்ப்பனர், வேலையிருந்தால்தான் போகலாம் என்று சொல்லி வியாக்கியானம் செய்யவில்லையா? அது போலவே இந்த வழக்கும் பார்ப்பன ஜட்ஜாயிருந்தால் ஈழவர் அந்த ரோட்டில் நடந்தது குற்றமானாலும் நடக்க உரிமையில்லை ஆனாலும், அதற்கு வேறு மார்க்கம் செய்து நடக்கவிடாமல் செய்துவிட வேண்டுமே அல்லாமல் தடுத்தது குற்றம் என்றாவது சொல்லி அபராதத்தைக் காயம் செய்ய அவரது மனச்சாட்சி சொல்லுமே அல்லாமல் பார்ப்பனரல்லாத ஜட்ஜுயைப்போல் சர்க்கார் பொது ரோட்டில் யாரும் தாராளமாய் போகலாம் என்று துணிந்து இயற்கை தர்மத்தைச் சொல்லியிருப்பார் என்று எண்ண நமக்கு தைரியமில்லை.
இது எப்படியோ இருக்கட்டும். இனியாவது பாலக்காட்டு பார்ப்பனர்கள் கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்க சுதந்திரம் கொடுப்பார்களா? அல்லது அந்த தீர்ப்பை வாங்கி பாலக்காட்டு முனிசீப்பு கோர்ட்டில் நிறைவேற்றி சர்க்கார் பந்தோபஸ்துடன் போய்க்கொண்டு இருக்கவேண்டுமா என்று தான் கேட்கிறோம். அதுபோலவே திருநெல்வேலி சந்நியாசி அக்கிரஹாரப் பார்ப்பனர்களுக்கும் கும்பகோணம் அய்யங்கார் தெரு வியாசராய மடத்தெரு, பட்டாச்சாரி தெரு பார்ப்பனர்களுக்கும் இந்த தீர்ப்பே போதுமா அல்லது அங்கும் பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனர்களின் அட்டூழியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி சத்தியாக்கிரகம் செய்து ஜெயிலுக்குப்போய் அய்கோர்ட்டுக்குப்போய் ‘நீதி’ பெறவேண்டுமா என்றுதான் கேட்கிறோம். அல்லது மகாத்மா இந்த ஊர்களுக்கு வந்த சமயம் பார்த்து இந்தத் தெருவுகளில் நுழைந்து இந்த பார்ப்பனர்களின் நிலையை அவர் அறியச் செய்ய வேண்டுமா என்றுதான் கேட்கிறோம்.
ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எதற்கும் பயப்படமாட்டர்கள். ஏனெனில் ஐகோர்ட், கவர்மெண்டு, சட்டமெம்பர், சட்டசபை மற்றும் அதிகாரம் செல்வாக்கு முதலியவைகளில் அவர்கள் இருப்பதால் இதையெல்லாம் கால் தூசிக்கு சமானமாய்தான் நினைப்பார்கள். ஆனாலும் பாமர மக்கள் இவ்வாங்கில அரசாட்சியிலேயே தெருவில் நடக்கத் தெருவைத் தொடாமல் பைசைக்கிளின் மேல்போக உரிமை கொடுக்க மறுக்கும் இக்கல்நெஞ்ச கூட்டங்கள் தங்களுக்குச் சுயஆட்சி வந்தால் எப்படி நடப்பார்கள்? நம்மை எவ்வித கொடுமை செய்வார்கள்? நம்மை மனுதர்ம சாஸ்திரமோ பராசர ஸ்மிருதியோ அல்லது இதில்பட்ட ஆச்சாரிய சுவாமிகளோதான் ஆளுவார்கள். ஆனாலும் மக்களுக்குச் சுயமரி யாதை உணர்ச்சி வந்து விட்டால் பிறகு என்ன ஆகும் என்பதுதான் நமது கவலை. –
– ‘குடிஅரசு’ – துணைத்தலையங்கம்
– 13.03.1927