இராஜ கோபாலாச்சாரியார் அறிவுரையை மறுத்த தொலைநோக்கு!

டிசம்பர் 16-31

இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக இந்த இயக்கம் நடக்கிறது.     தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்து போடுவதற்கு நாலணா வாங்கினார்; அவை அத்தனையும் இன்றைக்குப் பொதுமக்களுக்குப் பயன்படுகிறது என்று சொன்னால், எப்படி இந்த வாய்ப்புகள்?

தந்தை பெரியார் செய்த ஏற்பாடு! அன்னை மணியம்மையார் அவர்களுக்கு, இயக்கத்திற்குப் பாதுகாப்பான ஒரு ஏற்பாட்டைச் செய்தல்வேண்டும். அதற்குத் ‘திருமணம்‘ என்று பெயர் சொன்னாலும் பரவாயில்லை என்று துணிந்து செய்தார். இதனைக் காரணமாகக் காட்டி தி.மு.க.வினர் (அரசியல் ஆசை காரணமாக) வெளியேறினார்கள்.

பெரியாருடைய உற்ற நண்பராக இருந்ததோடு, ஈரோட்டில் பெரியாரின் தந்தையார் டிரஸ்ட் எழுதியது போன்ற எல்லாவற்றிற்கும் ஆலோசனை வழங்கியவர் ராஜகோபாலாச்சாரியார். அப்பொழுது இவர் சேலத்தில் நகராட்சித் தலைவர்; பெரியார் ஈரோட்டில் நகராட்சித் தலைவர். ஆகவே இருவருக்கிடையே நட்பு அதிகம். அந்த முறையில், அவர் கவர்னர் ஜெனரலாக வந்த பிறகும் மணியம்மையாருடன் திருமண ஏற்பாடு சார்ந்து அவரிடம் ஆலோசனை கேட்டார் பெரியார். இராஜகோபாலாச்சாரியார் ஆலோசனையை வழங்கினார். அந்த ஆலோசனை என்னவென்று யாருக்கும் தெரியாது. காரணம், தன் கருத்தை கடிதமாக எழுதி அது “இரகசியம்’’ என்று எழுதியிருக்கிறார். எனவே, அதை பெரியார் வெளியிடவில்லை. ராஜாஜி சொன்னபடி பெரியார் கேட்டார், அதனால்தான் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டன என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. பெரியார் அவர்கள் மறைந்த பிறகு, அந்தக் கடிதத்தை கி.வீரமணி அவர்கள் எடுத்துப் பார்த்தார். அதில் தெளிவாகக் கீழ்க்காணுமாறு தான் எழுதியிருக்கிறார் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள்.

ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம்
அந்தரங்கம்

அன்புக்குரிய ஆப்த நண்பருக்கு,

தங்களுடைய கடிதம் இன்றுதான் வெளியூரிலிருந்து திரும்பியதும் பார்த்தேன்.
என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு நாட்டுக்கு எந்த விதத்திலாவது உதவும்.

தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில் ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது என்னுடைய பதவி, இந்தப் பதவியை வகிப்பவன் அந்தப் பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையொப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது இதற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கவுரவத்துக்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோகக் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள். என் அன்புக்கு அடையாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேயொழிய சாட்சி கையொப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம்.

இரண்டாவதாக, உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம். 30 வயது பெண் தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும் சொத்தைத் தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்புவதில் பயனில்லை. அதற்காக நிபந்தனைகள் வைத்துச் சாசனம் எழுதினால், அது தகராறுகளுக்கும், மனோ வேதனைக்கும் நீடித்த வியாச்சியங்களுக்கும் தான் காரணமாகும். இதையெல்லாம் யோசித்து எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்வீர்கள். தங்களுடைய வயதையும், நான் தங்கள் பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால், ஒரு வருடமாவது ஒத்தி வைத்து பிறகு மனத்தில் எண்ணங்கள் ஊர்ஜிதப்பட்ட பின் செய்வது நலம்.
எழுதத் தோன்றியதெல்லாம் எழுதினேன். மன்னிக்க வேண்டும்.

இவை அன்புடன்

இராசகோபாலாச்சாரி.

என்றுதான் எழுதியிருந்தார். அன்னை மணியம்மையார் அவர்கள்மீது தந்தை பெரியார்  நம்பிக்கை வைத்தார். ராஜகோபாலாச்சாரியார் சந்தேகப்பட்டார். எது சரியென்று ஆயிற்று? தந்தை பெரியார்தாமே வென்றார்! ராஜகோபலாச்சாரியாருடைய கருத்து வெல்லவில்லை. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் அறிவு உள்ளவர் என்று சொல்லப்பட்ட இராஜகோபாலாச்சாரி யாருடைய கருத்து வெல்லவில்லை. அய்யாவின் சிந்தனையே, நம்பிக்கையே முடிவேதானே வென்றது. பெரியார் செய்த திருமண ஏற்பாடே இயக்கத்தைக் காத்தது. பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனையே வென்றது.

கட்டாய ‘இந்தி ஒழிக’ என்று சொன்னார்; ஆயிரக்கணக்கானோர் சிறைக்குப் போனார்கள்; அதே இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிறகு பெரியார் வழிக்குத்தானே வந்து, ‘பிமிழிஞிமி ழிணிக்ஷிணிஸி ணிழிநிலிமிஷிபி  ணிக்ஷிணிஸி’ என்று சொல்லவேண்டிய கட்டத்திற்கு வந்தாரே! பெரியார் வென்றாரா? இராஜகோபாலாச்சாரியார் வென்றாரா? தொலைநோக்கு என்பது எப்படிப் பெரியாருடைய தனித்தன்மையாக இருந்தது என்பதற்கு இது மிகப்பெரிய ஓர் எடுத்துக்காட்டாகும்.

உலகத் தமிழர் எதிர்கால வாழ்விற்குப் பெரியார் வழங்கிய அறிவுரை!

பெரியார் அய்யா அவர்கள் இரண்டுமுறை சிங்கப்பூர், மலேசியாவிற்குச் சென்றார். 1929, 1953 ஆம் ஆண்டுகளில், பர்மா, மலேசியா சிங்கப்பூருக்குச் சென்றார். அப்பொழுது அந்த மக்களுக்கு யாரும் சொல்லாத அறிவுரையைத் தந்தை பெரியார்தாம் சொன்னார்.

அப்பொழுது நாடு வெள்ளைக்காரர் களிடமிருந்து சுதந்திரம் அடைகின்ற காலகட்டம் அது. நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு உடனே வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். இந்த நாட்டுக் குடிமக்கள் ஆகுங்கள்; இங்கேயே வசதியாக இருங்கள்; அதுதான் மிக முக்கியம். குடியுரிமை பெறுவதற்கு யோசிக்காதீர்கள். சீனர்கள், மற்றவர்கள் எல்லாம் மலாய்க்காரர் குடியுரிமை பெற்றார்கள். நீங்கள் அதுபோல் வாங்கிக்கொள்ளுங்கள் என்று தன்னுடைய  கழகத் தோழர்களை வீட்டுக்கு வீடு அனுப்பி, தோட்டத் தொழிலாளிகள் மற்றவர்களுக்கெல்லாம் சொல்லச் சொன்னார். அன்றைக்கு அதனை ஏற்றவர்கள் இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அன்றைக்கு அதனை ஒப்புக்கொள்ளாதவர்கள் இன்றைக்கு வாழ்வில்லாதவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். இன்றைக்கும் அந்த மக்கள் பேசுகிறார்கள்.

‘மலேசியாவில் பெரியார்’ என்னும் புத்தகத்தைப் படியுங்கள். பெரியாருடைய மலேசிய, சிங்கப்பூரின் வருகை, அவருடைய அறிவுரையின் தாக்கம் எப்படி மலேசியாவையும், சிங்கப்பூரையும் மாற்றியிருக்கிறது. குறிப்பாக, மலேசியாவினுடைய பொருளாதாரத்தையும், மக்களுடைய வாழ்வுத் தரத்தையும் எப்படி மாற்றியிருக்கிறது என்பதனை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், நேஷனல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஓர் அம்மையார், பி.எச்டி.,க்கு உரிய தலைப்பாக எடுத்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். என்னை அவர் “பேட்டி” கண்டார்.

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், பெரியாருடைய தொலைநோக்கு; இன்றைக்குச் சமுதாயத்தினுடைய இலாபம். அஃது இந்த நாட்டிற்கு மட்டுமன்று, உலக நாடுகள் எந்த நாட்டில் இருந்தாலும் அது பயனுள்ளது. அதேபோல, 1935 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களுடைய சங்கடங்கள் என்ன என்று பெரியார் அவர்கள் ஈரோட்டில் தீர்மானம் போட்டார். ஈழத் தமிழர்கள் இன்னல்களைக் காப்பாற்றவேண்டும் என்று சொன்னார்.  ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்கள், பெரியார் அவர்களை இங்கே வந்து பார்த்தார்.

எங்களுக்கு நீங்கள் உதவி செய்யவேண்டும் என்று சொன்னார். அப்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் அற்புதமான ஒரு வார்த்தையைச் சொன்னார், ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு என்ன உதவி செய்யப் போகிறான். நீங்கள் என்ன எங்களிடம் பெரிதாக எதிர்பார்க்கிறீர்கள். நாங்கள் என்ன சுதந்திரமானவர்களா? என்று கேட்டார்.

இங்கே 1947இல் ஆட்சி மாற்றம் வந்திருக்கிறதே தவிர, காட்சி மாற்றமாக இருக்கிறதே தவிர, கொள்கை மாற்றம் வந்திருக்கிறதா? என்ன காரணம்? இதுவே சுதந்திரத் தமிழ்நாடாக இருந்திருக்குமேயானால், அந்தச் சூழ்நிலை எப்படி இருந்திருக்கும். ஆகவேதான், அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்; பெரியாருடைய தொலைநோக்கு என்பதும், பெரியாருடைய அந்த அணுகுமுறை இருக்கிறதே, அப்பட்டமான உண்மை; பச்சையான உண்மை; மறைக்கப்படாத உண்மை; நளினப்படுத்தப்படாத, ஒப்பனை இல்லாத உண்மை. அதுதான் மிக முக்கியம். ஆகவே, அதனை நன்றாகச் சிந்திக்கவேண்டும்.
                                          (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *