உண்மை (நவம்பர் 16-_30, 2017) மாதமிருமுறை இதழில் ஆகாயத்தில் பறவைபோல மனிதன் பறப்பான் என்ற தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை வியக்க வைக்கிறது.
இனிவரும் காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சிபெற்று பறவைகள் போல நீங்களே சாவி கொடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறப்பீர்கள் என்று 1972ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறியிருப்பது இளைஞர்களையும், மாணவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தத்துவஞானி _ அறிவியல் மேதை பெரியார் அன்று கூறியதை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது சிங்கப்பூர் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ‘வானில் மகிழ்வாகப் பறக்கும் கருவியை’ வடிவமைத்துள்ளனர் என்பது பாராட்டுக்குரியது. இக்கருவி பற்றி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில், நீங்கள் பறவைபோல பறக்க விரும்புகிறீர்களா? உங்கள் கனவு விரைவில் நனவாகப் போகிறது என்ற தகவல் மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் இக்கருவி விரைவில் வணிக நோக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது என்றும் அந்நாளேடு தெரிவித்துள்ளது.
அவ்வகையில் தந்தை பெரியார் எழுதிய ‘இனிவரும் உலகம்’ என்ற நூலில் தொலைநோக்குச் சிந்தனையோடு அன்று பெரியார் கூறிய அறிவியல் தொழில்நுட்பச் சாதனங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு _ பயன்பாட்டுக்கு வரத் துவங்கிவிட்டன. அதனை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று நாளும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகவே, காலம் தாழ்ந்தாலும், தாழ்த்தப்பட்டாலும் பெரியார் கொள்கை வெற்றி முனையை அடைந்தே தீரும் என்பதற்கு, சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
– சீதாலட்சுமி, மேற்கு தாம்பரம், சென்னை-45