எண்பத்தைந்து வயதிலும் எத்தனை செயல் திறன்கள்!

டிசம்பர் 01-15

உங்களுக்கு 85 வயதாகும்போது 25 வயது இளைஞரைப் போன்று உங்கள் மனம் கூர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்போது, அவ்வாறு இருப்பது சாதாரணமானது அல்ல என்ற உண்மையான உணர்வு உங்களுக்குள் தோன்றும். இளம் ஆண்களும், பெண்களும் உங்களை அவர்களில் ஒருவராகக் கருதி, தாங்கள் கூறுவதை அன்புடன் கேட்டுப் போற்றி, திரும்பவும் எதனையும் எதிர்பாராமல் அவர்கள் காட்டும் அன்பு அசாதாரணமானது.

தந்தை பெரியாரது சிந்தனைகளை விளக்கும், கருத்துகளை நடைமுறைப்படுத்தும் பணி செய்யும் நான் பெரியாரைப் பின்பற்றும் ஒரு மாணவன் என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவர் கூறிக் கொண்டே இருந்தபோதிலும்,  இவர்பால் மக்கள் செலுத்தும் கவனமும், அளிக்கும் மரியாதையும் தொடர்ந்து  அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களில் பலரும் தந்தை பெரியாரைக் கண்டதும் இல்லை; அவரது பேச்சைக் கேட்டதுமில்லை. அவர்களைப் பொருத்தவரை பெரியார் என்பவர் ஆசிரியர் எவ்வாறு எடுத்துக் காட்டுகிறாரோ, அவ்வாறு இருப்பவரே ஆவார். கடவுள்கள் மட்டுமே அவ்வாறு உருவாக்கப்பட்டு,  அவர்களைச் சுற்றிப் புனையப்பட்ட கதைகளின் மூலம் அவர்களது தோற்றம் கட்டமைக்கப்படுகிறது.  மதங்களை உருவாக்க முயன்ற தலைவர்களும் கூட காலத்தின் சோதனைக்கு முன் நிலைத்து நிற்கவில்லை. அதிகாரம் மிகுந்த அரசுகளின் பின்பலத்தில் உருவாகும் சில தலைவர்கள் குறிப்பிடப்படுகின்றனர் என்றாலும் பெரும்பாலான அவர்களது கருத்துகள் நாட்டுக்கோ மக்களுக்கோ பயன்படாதவைகளாகவே போய்விட்டன.

ஒரு மனிதனாகவும், தலைவனாகவும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற அரிதான உணர்வு கொண்ட இவரது கருத்துகளும் தத்துவமும்  செழித்தோங்குவதும் வரலாற்றுச் சாதனையேயாகும்! அவை உலகம் முழுவதிலும் பொங்கிப் பரவுவதும் அசாதாரணமானதே. 10 வயது சிறுவனாக இருந்த போது இவர் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து இந்த 75 ஆண்டு காலமாக இவரின் எழுத்துப் பணியும், மேடைப் பிரச்சார பேச்சுப் பணியும் இன்னமும் சிந்தனை மிகுந்தவையாகவும்,  உண்மை நிறைந்தவையாகவும், பொருத்தமானவையாகவும், களத்தில் இருக்கும் தலைவர்களால் மதிக்கப்படுபவையாகவும்  விளங்குகின்றன.  தெளிவும் நோக்கமும் கொண்ட எழுத்தாளராக இவர் எப்போதும் படித்துக் கொண்டே இருப்பவராகவும் இருக்கிறார். அனைத்துப் பிரிவு மக்களுக்கும் இவர் எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் ஓர் ஊக்க மருந்தாகவும் பயன்படும், அளவுக்கு பயன்நிறைந்த பல செய்திகளைத் திரட்டி வழங்கி வருகின்றார். அன்புடன் இவர்பின் அணிவகுக்கும் தொண்டர்களுக்கு இவர் ஒரு தலைவர்; இவரது கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கூட இவர் ஓர் ஆசிரியர்தான்! எவர் ஒருவர் கூறுவதையும் பொறுமையுடன் கேட்கும் இவர், அனைத்து நேரங்களிலும் அவற்றிற்கு மிகவும் பொருத்தமான போதுமான பதில்களை அளிப்பவர். இவருடன் பொழுதைக் கழிப்பதற்கான நல்வாய்ப்பு பெற்றவர்கள், அவரது அன்பான பழகுமுறையையும், மனம் திறந்த சிரிப்பையும் கண்டு களித்திருக்கின்றனர். எந்த ஒரு சிக்கல் நிறைந்த சூழ்நிலையிலும் கூட, அதனை ஆழமாகப் புரிந்து கொண்டு, அவற்றிற்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகளைத் தரக் கூடியவர் இவர்.

காலம் என்பது பொன் போன்றது என்பதால் அதை இவர் வீணாக்குவதில்லை;  பயணத்தின்போதும் இவர் எழுதிக் கொண்டோ அல்லது படித்துக் கொண்டோதான் இருப்பார். எதைப் பற்றி பேசினாலும், பெரியாரின் கோட்பாட்டையே வெளிப்படுத்தும். இவரை நான் ஒரு பெரியார் கணினி என்றுதான் அழைப்பேன். பலன் எதிர்பாராமல் சமூகத்திற்கு உங்களால் எதைக் கொடுக்க முடியுமோ அதைத் தாருங்கள் என்று வேண்டி தொண்டர்களைச் சேர்க்கும் இயக்கம். சொந்த பணத்தைச் செலவிட்டு உழைக்கும் உறுப்பினர்களைக் கொண்டது இதன் சிறப்பு. பெரியாரால் தொடங்கப்பட்ட இந்தப் பகுத்தறிவு இயக்கம் அனைத்து எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் எதிர்த்து நின்று, அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி கண்டு, மிகப் பெரிய அளவில் வளர்ந்து பரவியுள்ளது. இந்த நோக்கத்துக்காகத் தனது வாழ்க்கை முழுவதையுமே இவ்வளவு காலமும் அர்ப்பணித்த பிறகும், இளைஞர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதைக் கேட்டு  இன்னமும் இன்புறுபவராக விளங்குபவரே தலைவர் வீரமணி அவர்கள்!  அவர் ஒரு அரும்பெரும் தலைவர்! இவர் மக்களை மட்டுமல்ல, அரசையும் நெறிப்படுத்தி வருபவர். ஆட்சியாளர்கள் இவர் சுட்டிக் காட்டுவதற்கேற்ப தங்களை மாற்றியமைத்துக்கொண்ட நிகழ்வுகள் பல. இந்த அதிசயத் தலைவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து பணியாற்ற வேண்டும்; அரசுக்கும் மக்களுக்கும் வழிகாட்ட வேண்டும். 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *