ஓ.பி.ஆர். என்று அன்பாக அழைக்கப்படும்
ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள்!
– புதுவை மு.ந.நடராசன்
சமூகநீதிச் சிந்தனையாளர்! உண்மைக்கும் நியாயத்திற்கும் முதன்மை அளித்தவர்! அரசுப் பணியில் லஞ்ச லாவண்யத்திற்கு இடமளிக்காதவர்! எதையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படும் தன்னம்பிக்கையும் தன்மானமும் உடையவர்!
தாடி வைக்காத ராமசாமி என்று அக்கிரகாரத்தால் சாடப்பட்டவர்!
– ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார்!
ஓமாந்தூரார் என்று அழைக்கப்படும் விடுதலைப் போராட்டத் தியாகி காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னோடி பட்டறிவு மிக்கவர்! சமூகநீதியில் பற்றுள்ளவர்! வடலூர் வள்ளலாரின் அப்பழுக்கற்ற தொண்டர். தன் சொத்துக்களை வள்ளலார் நெறி பரப்பப் படவேண்டும் என்று அறக்கட்டளை ஏற்படுத்தியவர்! வள்ளலாரை அவர் ஏன் பின்பற்றினார் என்பதை அறிந்தால், ஓமாந்தூராரின் சிறப்பை அறிய முடியும்.
வள்ளலார் பார்ப்பனீய எதிர்ப்பையும், தமிழர்களின் சமநீதிக்கும் பாடியவர். அதற்காக உழைத்தவர்! தன் பட்டறிவின் வாயிலாக அறிந்து அதை மக்களுக்கு தெரியப்படுத்தியது மட்டுமின்றி பாடல்களாக பதிவும் செய்து வைத்தார்.
வளமையாக பார்ப்பன திரிபு வாதங்களால் அவர் சொல்ல வந்த செய்திகள் மறைக்கப்பட்டு, மூடநம்பிக்கைகள் புகுத்தப்பட்ன! வள்ளலார் ஆறாம் திருமறையில் பட்டறிவின் வாயிலாக அறிந்த செய்திகளை பெரியார் அவர்களுக்கு 16 வயதிருக்கும்போதே பாடி வைத்த வள்ளலார்!
சாதிகளிலோ, மதங்களிலோ, சாத்திரச் சண்டைகளிலோ, கோத்திரப் பூசல்களிலோ அபிமானித் தலைகின்ற உலகீர்! என்று சாதி, மத, சாத்திர, கோத்திரப் பூசல்களை புளுகுகளைக் கண்டிக்கிறார்!
பார்ப்பன நட்பு கூடாது என்று நண்பருக்கு மடல் வரைகிறார்! இப்படிப்பட்ட வள்ளலாரின் தொண்டர் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் எந்த அளவுக்கு சீர்திருத்த மனோபாவமும், சமத்துவ எண்ணமும் கொண்டவர் என்பதை அறிந்திடலாம்!
அவர் சென்னை மாகாணத்திற்கு 1948களில் முதன்மை அமைச்சராக இருந்தபோது, ஒரு தகுதியான ஒருவரை தகுதியான பொறுப்பிற்கு நியமனம் செய்யவிருந்தார். அந்த பொறுப்பிற்கு ஒரு பார்ப்பனரை நியமிக்க ஓமாந்தூராரிடம் காங்கிரஸ் பார்ப்பனர்கள் அழுத்தம் கொடுத்தனர். பல வகையிலும் அவர்கள் சொல்லிய நபர் தகுதியற்றவர்! அந்த காரணத்தால் இராமசாமியார் யாரை நியமிக்க இருந்தாரோ அவரை நியமனம் செய்துவிட்டார்!
அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து மவுண்ட்ரோடு மகாவிட்டுனுவான இந்து இதழ் எழுதியது! ஓமாந்தூராரின் நியமனம் ஜாதி நோக்கம் கொண்டது, தன்னிச்சையானது என்று இந்து எழுதியது.
இந்தியப் பிரதமர் நேருவிடம் புகார் கூறப்பட்டது! நேரு இது தொடர்பாகப் பேச டெல்லிக்கு அழைத்தார், ஓமாந்தூர் இராமசாமியார் அவர்களை! ஓமாந்தூரார் டெல்லிக்கு பதவி விலகல் கடிதத்துடன் சென்றார். நேரு பார்ப்பனர்கள் பேச்சிற்கும், சிபாரிசிற்கும் இணக்கமாகப் பேசினார்! அப்போது ஓமாந்தூரார் அவர்கள் சென்னை மகாணப் பொறுப்பை என்னிடம் அளித்துள்ளீர்கள்! அங்கு எதைச் செய்ய வேண்டும்; எதைச் செய்யக் கூடாது என்பதை நான் அறிவேன்.
பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டு அவரவர் கருத்துக்கு நான் நடந்துகொள்ள முடியாது! அப்படித்தான் நடக்க வேண்டும் என்றால் நீங்கள் விரும்புகிறவரை முதல்வராக நியமித்துக் கொள்ளுங்கள் என்று கூறி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஓமாந்தூர் இராமசாமியார் கொடுத்தார்!
நிலைமை புரிந்தவுடன் நேரு அவர்கள் ஓமாந்தூராரிடம் தவறுக்கு வருந்துகிறேன், நீங்கள் உங்கள் முடிவின்படி நடந்துகொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார்! இருப்பினும் சென்னையில் பார்ப்பனத் திமிரும் பத்திரிகைகளின் பார்ப்பன ஆதிக்கமும் தாடியில்லாத இராமசாமி பெரியார் இவர் என்று ஓமாந்தூராரை எழுதின.
பெரியார் அவர்கள் மாகாணப் பிரதமரான ஓமாந்தூராரை பலப்படப் பாராட்டினார். அப்போது தந்தை பெரியாரிடம் ஓமாந்தூரார் கேட்டுக் கொண்டது என்னவென்றால்? என்னைப் பாராட்டிப் பேசாதீர்கள், எழுதாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்! ஓமாந்தூராரின் சமூகநீதிச் சிந்தனைகள், தன்னடக்கம், தன்னம்பிக்கை, தன்மான உணர்வு எப்படிப்பட்டது என்பதை அரசியல்வாதிகளும், இளைஞர்களும், அரசியலுக்கு வரத் துடிப்பவர்களும் அறிந்திட வேண்டுகிறோம்.
வாழ்க ஓமாந்தூராரின் புகழ்!