Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கட்டாய தேர்ச்சி ரத்து கண்டத்துக்குரியது!

கே: அப்துல்கலாம் நினைவிடத்தில் அவர் சிலையில் பகவத்கீதை புத்தகம் வைக்கப்பட்டிருப்பது மதச்சார்பின்மைக்கு உகந்ததா?

    – – வே.ஆறுமுகம், வந்தவாசி

ப:    ‘குலாம் காதருக்கும் கோகுலாஷ்டமிக்கும் என்ன சம்பந்தம்?’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், அதைக்கூட சம்பந்தப்படுத்த முடியும்; கோகுலாஷ்டமி அன்று குலாம் காதருக்கு மீனும் இறைச்சியும் குறைந்த விலைக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத் கீதையையோ, மற்ற மதநூல்களையோ, மதச்சார்பற்ற அரசின் முன்னாள் தலைவரான அவருக்கு வைத்ததற்கு அனுமதி _ மனுநீதியின் வீச்சு!

கே:    2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்க்க ஆளில்லை என்று நிதிஷ்குமார் கூறுவது சரியா?         

— ந.மாரிமுத்து, வேலூர்

:    பாவம், நிதிஷ்குமார். அதனால்தான் அவர் பக்கம் சாய்ந்தாரோ! _ இவர் தயாரில்லை என்பதே கசப்பான உண்மை!

கே:    நீட் தேர்வில் தமிழக அரசின் செயல்பாடுகள் மாணவர் துரோகமல்லவா?

   – – — – கா.விஸ்வமூர்த்தி, தர்மபுரி

:    மானங்கெட்ட பதவியாசை! ஏமாற்ற இருவேடம்!

கே   8ஆம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு இடைநிற்றலை அதிகப்படுத்தும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான செயல் அல்லவா?

    – – – சூ.சிவா, தஞ்சை

:    அது மட்டுமில்லை. முன்னே செய்த கல்வி நிபுணர்களை முட்டாளாக்கும் விபரீத வேடிக்கை; கண்டனத்திற்குரியது. கல்வி அறிஞர்கள் கருத்திற்கு எதிரானது.

கே:    மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் குதிரை பேரம் நடத்திய பாஜக, கர்நாடக அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி மிரட்டும் செயலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    – கெ.நா.சாமி, சென்னை-72

ப:    கூவத்தூர் பற்றிப் பேசிய குல்லூகபட்டர் ஏடான ‘துக்ளக்’, ‘இனமலர்’ இதுபற்றி நியாயப்படுத்துவார்களா? அவர்கள் எம்.எல்.ஏ.க்களிடம் அவர்களுக்கு நம்பிக்கையின்மை _ குதிரை பேரத்திற்கு வழிவகுக்கிறது!

கே:    பாஜக.வுடன் கூட்டு வைத்துக்கொண்டே துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்று நிதிஷ் கூறுவது பச்சோந்தித்தனம்தானே?

    – சீ.காளிமுத்து, நாகர்கோயில்

:    துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வாக்குகளை “வாங்கியுள் ளார்களே!’’ மோடி வித்தைக்கு எதிரான நிதிஷின் வேடிக்கை வாண வேடிக்கை!

கே:    தமிழகத்து விளை நிலங்களைப் பெட்ரோலியத் தொழில்கள் மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழகத்தைப் பாலை நிலமாக்க சூழ்ச்சித் திட்டமா?

– மா.வேல்முருகன், விருத்தாச்சலம்

ப:    ஆம்; அதிலென்ன சந்தேகம்? தமிழ்நாட்டு மக்களின் சோதனைக்குச் சோதனை மத்திய அரசால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகுகிறது!

கே:    காவிக் கட்சி ஆளும் 15 மாநிலங்களில் அவர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமர்களா? எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மட்டும் சி.பி.அய்., வருமானவரிப் பாய்வதேன்?

    – – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:    வியாபம், பெங்களூர் அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் மற்றும் பலப்பல கூறலாம்; அடுக்குவோம் _ விரைவில்!

கே:    ஆர்.எஸ்.எஸ். அத்துமீறலைச் சகிக்க முடியாமல், நிதி ஆயோக்கிலிருந்து கொலம்பியா பேராசிரியர் பனகாரியாவும் மற்றொருவரும் விலகியுள்ளது எதைக் காட்டுகிறது? 

    – மா.வேள்விழி, திருச்சி

ப:    மோடி ஆட்சியின், ‘குறைந்த அரசு, நிறைந்த ஆளுமையின் சாயம் வெளுக்கும் தருவாயில், வெளியேறும் நிபுணர் வரிசையே (ஒரு க்யூவே) இருக்கிறது.