Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நீட் தேர்வால் நிலைகுலைந்து செங்கல் சுமக்கும் சேலத்து மாணவி!

பனிரெண்டாம் வகுப்பில் 1152 மதிப்பெண்கள் எடுத்தும் குடும்ப வறுமை காரணமாக மேலே படிக்காமல் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார் ஒரு மாணவி.

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களில் சதவீதம் அடிப்படையில் பெண்கள் தொடர்ந்து தேர்ச்சி பெற்று வந்தாலும், ஆண்கள்தான் உயர் கல்வியில் அதிகம் இடம் பெறுகின்றனர். பெண்களுக்கான கல்வி பல காரணங்களால் தடைபட்டுப் போகும் சூழல்தான் இன்றளவும் இருந்து வருகிறது. அதில் முக்கிய காரணமாக கூறப்படுவது வறுமை. அப்படி குடும்ப வறுமை காரணமாகத் தொடர்ந்து படிக்க இயலாத சூழ்நிலையில் தனது தாயாருடன் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் பிரியங்கா.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பக்கநாடு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குண்டுமலைக்காடு மாதேஸ்வரன் கோவில் பகுதியில் வசித்து வரும் பாவாயி, ராஜேந்திரனின் மகளான பிரியங்கா பிளஸ் டூ படித்து வந்தார். இவருடன் பிறந்தவர்கள் கோகில பிரியா, ரம்யா. ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவர் இறந்ததால் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பாவாயி கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் தனது 3 மகள்களையும் பள்ளிக்கு அனுப்பி வந்தார். பிரியங்கா கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1152 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், “எனக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு, மருத்துவராக வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக இரவும் பகலும் கடுமையாக படித்தேன். கடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1152 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தேன்.

 எங்கள் பகுதி மிகவும் மலைப்பாங்கான கிராமப் பகுதி, மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வுக்கு தயார் செய்ய பயிற்சி மையங்கள் ஏதும் அருகில் இல்லை. 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்டத் தலைநகருக்கு சென்று பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க முடியாத குடும்பச் சூழலில் இருக்கிறேன்.

மேலும் எங்கள் பகுதியில் இணையதள வசதிகூட இல்லாத நிலையில் என்னால் இந்த ஆண்டு, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்விற்குகூட விண்ணப்பிக்க முடியாத நிலை. எனது தாய் வேலைபார்க்கும் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறேன்’’ என்றார்! நீட் தேர்வின் கொடுமையை விளக்க இது ஒன்று போதுமே!