உங்களுக்குத் தெரியுமா?

ஆகஸ்ட் 01-15 உங்களுக்குத் தெரியுமா?

 

 புலவர் கோ.இமயவரம்பன்

தந்தை பெரியாரின் இலட்சியத் தொண்டராகவும் ‘உண்மை’ ஏட்டின் தொடக்க கால ஆசிரியராகவும் தொண்டாற்றிய புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒரு மிராஸ்தார் குடும்பத்தில் பிறந்தவர். தனது வாழ்நாளையே இலட்சிய இயக்கமாம் திராவிடர் கழகத்திற்கு ஒப்படைத்தவர். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மூலம் அய்யா, அன்னையாரின் அறிமுகம் பெற்று 1958ஆம் ஆண்டு முதல் அய்யாவின் உதவியாளராக, அம்மாவின் உதவியாளராக, தமிழர் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக, நம் கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து பெரும் பங்காற்றியவர்.

வீட்டிலிருந்து பணம் வரவழைத்துக் கொண்டு, ஊதியம் ஏதும் பெறாமல் தந்தை பெரியாரிடம் தொண்டு செய்தவர். ‘உண்மை’ ஏட்டின் ஆசிரியராக அவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஊதியம் இன்றி பணியாற்றியவர்.

“பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்’’ என்னும் இவரது நூல் ஆரியத்திற்கு அடிபணிந்து அதனால் அழிவுற்ற பல்வேறு அரசர்களின் வரலாற்றை விளக்குவதாகும். சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் மற்றும் குழந்தைத் திருமணம் குறித்த இவரது “வரலாற்றில் பெண் கொடுமைகள்’’ என்னும் நூல் அரிய கட்டுரைகளைக் கொண்ட ஆராய்ச்சிக் களஞ்சியமாகும்.
மேலும் ஏராளமான தனிக்கட்டுரைகளையும், தொடர்களையும் உண்மை, விடுதலை ஏடுகளில் எழுதியுள்ளார்.

அவரைப்பற்றி தந்தை பெரியார்,

“கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும், தொண்டாற்றவும், இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழுநேரத் தொண்டர்களாக இன்னும் சில பேர் வேண்டி இருக்கிறார்கள்.

இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு தனது பெரிய சொத்து நிர்வாகத்தையும் விட்டு மற்றும் பல பணத்தோடு வரக்கூடிய சவுகரியத்தையும் தள்ளிவிட்டு வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்து கொண்டு கழகத்திற்கு ஒரு வேலை ஆளாக 3, 4 ஆண்டுத் தொண்டாற்றி வருகிறார்’’ என்று கூறியுள்ளார்.

இறுதிவரை திருமணம் செய்யாமல் தொண்டறத் துறவியாக வாழ்ந்து 9.8.1994 அன்று மறைவுற்றார்.

 

பேராசிரியர் அ.இறையனார்
(மறைவு: 12.08.2005)

 ‘பெரியார் பேருரையாளர்’ பேராசிரியர் அ.இறையன் பற்றிய குறிப்புகள்

பெரியார் பேருரையாளர் அ.இறையன் அவர்கள் 4.6.1930 அன்று மதுரையில் அழகர்சாமி – இராமுத்தாய் இணையரின் தலைமகனாய்ப் பிறந்தவர். இவர் பொதுக்கல்வி இளங்கலை(தமிழ்) பட்டமும், தொழிற்கல்வி கற்பிப்புப் பட்டமும் (தமிழ், ஆங்கிலம்) பெற்றவர். ஆங்கில மொழிக் கற்பிப்புச் சிறப்புப் பயிற்சி, தமிழிசைப் பயிற்சி ஆகியவை இவரின் சிறப்புத் தகுதிகள்.
ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், கல்வித்துறை ஆய்வாளராகவும் அரசுப் பணிகள் ஆற்றியவர்.

தொடக்கக் கல்விக் கட்டத்திலிருந்து கல்லூரிக் காலம் முடிய மேடை மொழி, கட்டுரையாக்கம், இசைப் பொழிவு, நடிப்பாற்றல், பல்வகை விளையாட்டுத் திறன் ஆகியவற்றில் நூல்கள், பதக்கங்கள், கோப்பைகள் முதலியவற்றைப் பரிசுகளாக வென்றவர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி 1982இல் மூன்று தலைப்புகளில் மூன்று சொற்பொழிவுகள் பேரரறிஞர்கள் முன்னிலையில் நிகழ்த்திப் ‘பெரியார் பேருரையாளர்’ எனும் சிறப்பு விருதினைப் பெற்றவர்.

தனது மாணவப் பருவம் முதல் திராவிடர் கழகத்தில் இணைந்து இறுதி மூச்சு வரை அப்பணியைத் தொடர்ந்தவர்.

திராவிடர் கழகத்தின் பெரியாரிய பயிற்சிப் பட்டறைச் செயலாளர், மாநில கலைத்துறைச் செயலாளர், திராவிடர் கழக உதவிப் பொதுச் செயலாளர், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி என்ற உலகளாவிய அமைப்பின் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

திராவிடர் கழக ஏடுகளான விடுதலை, உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்ட் போன்ற ஏடுகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்.

சென்னை பெரியார் பகுத்தறிவு ஆய்வகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்த இறையன் அவர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள், செப்டம்பரின் சிறப்பு முதலிய நூல்களின் ஆசிரியர்; பெரியார் ஆயிரம், மஹாபாரத ஆராய்ச்சி ஆகிய தொகுப்புகளின் ஆசிரியர் குழு உறுப்பினர். இவர் இறுதியாக எழுதிய இதழாளர் பெரியார், பெரியாரியல் ஆய்வாளர்கள், திராவிடர் இயக்க ஆய்வாளர்கள் இதழியலாளர்கள் கையில் இருக்க வேண்டிய நூலாகும்.

தந்தை பெரியாரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பரமக்குடியைச் சேர்ந்த லட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட திருமகள் அவர்களை ‘சாதி’ ஒழிப்பு திருமணம் செய்துகொண்டார். இவருக்குப் பண்பொளி, இறைவி, மாட்சி எனும் மகள்களும், இசையின்பன் என்னும் மகனும் உளர். மூன்று மகள்களுக்கும் ‘சாதி’ ஒழிப்பு மணம் செய்து வைத்துள்ளமை இவரது கொள்கைப் பிடிப்பைக் காட்டும்.

உடலால் உலவ இறையனார் நம்மிடம் இல்லை என்றாலும், கொள்கை விளக்க உலா நடத்தி, அவர்கள் என்றும் நம்மோடு பயணிக்கிறார்; வாழ்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *