சென்னை மாகாணத்தில் வைதீக இறுக்கமும் சாதிய நிலவுடமை ஒடுக்குதல்களும் நிரம்பப் பெற்றிருந்த பகுதி (பழைய) தஞ்சை மாவட்டம் ஆகும். அந்நாளில் தடையின்றிப் பாய்ந்த காவிரி நீரால் வளம் கொழித்திருந்த நிலவுடமைச் செருக்கும் அது ஏற்படுத்தியிருந்த மிதமிஞ்சிய உபரியும் இதற்கான முக்கியப் பின்புலங்களுள் சில. இத் தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய திருவாரூர் மாவட்டம்) தஞ்சாவூர் _- திருவாரூர் பெருவழியில் அமைந்துள்ள வளமிக்க ஊர்தான் நீடாமங்கலம். காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு இவ்வூரைத் தழுவிச் செல்கிறது. தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் என்ற முக்கோணங்களிடையே மன்னார்குடி தாலுகாவில் இவ்வூர் அமைந்துள்ளது.
வேதப் பார்ப்பனர்களின் முற்றுரிமை உடைய பகுதி என்பதை உணர்த்தும் பெயர்ச்சொல் ‘மங்கலம்’ என்பது. நீடாமங்கலமும்1 இதற்கு விலக்கல்ல. வைதீகர்கள் மற்றும் நிலவுடமையாளர்கள் ஆதிக்கம் பெருத்த இவ்வூரில் உடமை வளம் படைத்த சைவ, வைணவக் கோயில்கள் உண்டு. அவற்றுள் சந்தான ராமசாமி கோயிலும் ஒன்று. இத்தெய்வத்தின் பெயர் தாங்கிய பெருநிலவுடமையாளர்தான் டி.கெ.பி.சந்தான ராமசாமி உடையார்2. இவர் டி.கெ.பாலசுப்பிரமணிய உடையார் என்பவரின் மகன். இளவயதிலேயே மன்னார்குடி தாலுக்கா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த இவர் 1937இல் பாபநாசத்தில் நடந்த காங்கிரஸ் அரசியல் மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
நீடாமங்கலத்தின் வடபுறமாயுள்ள அரவூரைச் சேர்ந்த ஏ.எஸ்.பி. ரெத்தினசபாபதி உடையார் என்பார் இவரது உடன்பிறந்த தமையன். பெருநிலவுடமையாளரும் அரிசி ஆலை அதிபருமான ஏ.எஸ்.பி.ஆர்.உடையாரும் தஞ்சை பகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஒரு முக்கியத் தலைவராவார். இவரது மாளிகையும் அதன் பின்புறம் இவரது அரிசி ஆலையும் நீடாமங்கலத்தில் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தன. வல்லபாய் படேல் போன்ற காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பெருந்தலைவர்கள் பலரும் இவரது மாளிகைக்கு வந்துள்ளனர். 1937இல் 21 வயதேயான டி.கெ.பி.சந்தான ராமசாமி உடையார் மன்னார்குடி, கும்பகோணம், பாபநாசம் தாலுகாக்களில் பரவிக் கிடந்த சுமார் 900 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு உடமையாளர். தஞ்சையில் ‘ஸ்ரீ வெங்கடேசுவரா பிலிம்ஸ்’ என்ற நிறுவனமும் இவருக்கு உண்டு. இவரது மாளிகையும் அரிசி ஆலையும் நீடாமங்கலம் அருகே ஒரட்டூரில் அமைந்திருந்தன. சிறு வயதிலேயே தாய்வழிப் பாட்டனாரால் சுவீகாரம் செய்து கொள்ளப் பட்டுத் தனிக் குடும்பமாகவே இருந்துவந்த இவரைப் ‘பார்ப்பனர்களாலும் சுவாதீனப்படுத்தப்பட்டவர்’ எனக் ‘குடிஅரசு’ கணித்திருந்தது. பின்னாட்களில் நீடாமங்கல வன்கொடுமை தொடர்பாக ‘விடுதலை’ மீது இவர் தொடுத்த வழக்கில் வாக்குமூலமாக இவர் அளித்தனவற்றில் விரவிக்கிடக்கும் இவரது ‘சமூகப் பார்வை’ ‘குடிஅரசின்’ கணிப்பை உண்மையெனக் காட்டும்.
இவ்வூரில் சு.ம. இயக்கமும் வெகு வலுவோடு இருந்துள்ளது. அ.ஆறுமுகம்3 என்பார் அதன் தலைவர். கே.சி.ரெங்கராஜன், தங்கையன் என்ற சு.நாராயணன், அண்ணாமலை, ராதா, எஸ்.கே.வி.ராஜகோபால், கே.ராஜகோபால், முல்லைவாசல் பி.எஸ்.ரத்தினசபாபதி, பழைய நீடாமங்கலம் கனகசபாபதி, சி.ஞானாநந்தம்4 போன்றவர்கள் அப்பகுதியில் இயங்கிய சு.ம.காரர்களில் முக்கியமான சிலர். தேர்தல் நிதி திரட்டலுக்காக ஏ.எஸ்.பி.ஆர்.உடையார் மாளிகைக்கு வந்திருந்த வல்லபாய் படேல், சத்தியமூர்த்தி, சி.பி.சுப்பையா, சர்தார் வேதரத்தினம் ஆகியோருக்குச் சு.ம. இயக்கத்தினரால் கருப்புக்கொடி காட்டப்பட்ட நிகழ்வும், சந்தான ராமசாமி கோயில் தேர்த் திருவிழாவில் டி.கெ.பி.எஸ்.உடையார் தலைமையில் தேரின் மீது, முன் இல்லாத வழக்கமாகக் காங்கிரஸ் கொடி பறக்கவிடப் பட்டபோது அதனைக் கண்டித்து சு.ம. இயக்கத்தினர் மறியல் நடத்தியதும், பின்னர் இப்பிரச்சினை வழக்கு மன்றம் வரை சென்று இறுதியில் சு.ம. இயக்கத்தினர் அவ்வழக்கில் வெற்றி பெற்றதும் இவ்வூர் சு.ம. இயக்கத்தின் வலிமைக்கும் அது தொடர்ந்து காங்கிரஸ் கட்சியோடும் அதனைச் சேர்ந்த உடையார் சகோதரர்களின் ஆதிக்கத்தோடும் முரண்பட்டு வந்ததற்கும் சான்றுகளாகும்.
இவ்வூரில்தான் தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3ஆவது அரசியல் மாநாடு 28.12.1937 (திங்கள்) அன்று நடைபெற்றது. டி.கெ.பி.எஸ். உடையார்தான் இம்மாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவர். அவரது மாளிகையில்தான் இம்மாநாடும் அதனையொட்டி நிகழ்ந்த சமபந்தி விருந்தும் நடைபெற்றன5. மேலும் இம்மாநாட்டைத் திறந்து வைத்தவர் மராமத்து இலாகா அமைச்சரான யாகூப் ஹாசன் ஆவார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் மாலை 10 மணிக்குத் தொடங்கிய இம்மாநாட்டில் சர்தார் அ.வேதரத்தினம், என்.எஸ்.வரதாச்சாரி, சி.பி.சுப்பையா, பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை, டி.கெ.சீனிவாசய்யர், பூவராக அய்யங்கார், கோபாலகிருஷ்ணய்யர், சிவசுப்பிரமணிய அய்யர், ஆர்.எம்.கோவிந்தசாமி செட்டியார், சுவாமிநாதன் செட்டியார், அனுமந்தபுரம் பண்ணை உரிமையாளர் சுவாமிநாதய்யர் உள்ளிட்ட காங்கிரசின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக மாநாட்டில் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர் சென்னை சட்டமன்ற உறுப்பினரான மன்னார்குடி குழந்தைவேலு நயினார் பிள்ளை மட்டுமே. எஸ்.கே.மகாலிங்கம் பிள்ளை6, எஸ்.சி.வெங்கட்ராமன், ஆலங்குடி மாணிக்கம் பிள்ளை, எஸ்.ராஜகோபால் முதலியவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் ஆவர். இவர்கள் தவிர நீடாமங்கலத்திலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருக்கும் அனுமந்தபுரம் சுவாமிநாதய்யரின் பண்ணையாட்களான முக்கட்டை வேளாங்கண்ணி மகன் தபஸ்ராயன் என்ற தேவசகாயம், பள்ளப்பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகம், பழைய நீடாமங்கலம் காமாக்ஷி மகன் ரெத்தினம் உள்ளிட்ட சில தாழ்த்தப்பட்ட மக்களும் மாநாட்டை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர்.
28.12.1937 முற்பகல் மாநாடு முடிந்ததும் பிற்பகல் சுமார் 12 மணிக்கு மேல் சாப்பாட்டு வேளைக்காக மாநாடு தற்காலிகமாகக் கலைந்தது. பிற்பகல் உணவு சாதி மத பேதமின்றி அனைவரும் பங்கு கொள்வதற்குரிய சமபந்தி போஜனமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அதில் எல்லாச் சாதியாரும் கலந்துகொண்டு சாப்பிடலாம் என மாநாட்டார் அறிவித்ததை ஒட்டியும்7, எல்லாரும் வரலாம் என்று 2, 3 முறை அழைத்ததின் பேரிலும் பயந்தபடி வெளியில் நின்றுகொண்டிருந்த அத்தாழ்த்தப்பட்ட மக்கள் சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, டி.கெ.பி.எஸ். உடையாரின் தூண்டுதலின் பெயரில் அவரது ஏஜென்டான சபாபதி உடையார்8 வந்து அவர்கள் தலைமுடியைப் பிடித்து, ‘ஏண்டா பள்ளப் பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா? இந்தக் கூட்டத்தில் வந்து சாப்பிடலாமா?’ என்று கேட்டு பக்கத்தில் கிடந்த சவுக்குக் கட்டையை எடுத்து அம்மூவரையும் அடித்தார். அடி பொறுக்க முடியாமல் அவர்கள் அலறியபோது அங்கிருந்த போலீசார் வந்து அவர்களை அடிக்காமல் தடுத்து சமாதானம் செய்து அவர்களை மாநாட்டிலிருந்து வெளியேற்றினார்கள். அடிப்பட்ட மூவரில் ஒருவரான ரெத்தினம், அடிதாங்க முடியாமல் வெண்ணாற்றில் விழுந்து அக்கரை ஏறித் தப்பினார். பின்னர் அவரும், தாக்குதலுக்கு உள்ளான மற்ற தோழர்களும் வெண்ணாற்றுக்கு வடபுறம் கும்பகோணம் சாலையில் இருந்த கிளியூரைச் சார்ந்த சோமு கொண்ணமுண்டார்9 என்பார் நடத்தி வந்த நாடகக் கொட்டகையில் பாதுகாப்புக்காக ஒளிந்துகொண்டனர்10. தேவசகாயம் உள்ளிட்ட மூன்று தாழ்த்தப்பட்டோர் மீதும் தாக்குதல் தொடங்கியவுடன் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பி.சாமியப்பன், பி.உத்தராசி, ம.கோவிந்தசாமி, வை.வீரமுத்து, முருகையா, சாமியப்பன், பேச்சிமுத்து உள்ளிட்ட பிற தாழ்த்தப்பட்ட தோழர்களும் பந்தியைப் பாதியில் விட்டுவிட்டு எழுந்து சென்றனர். மாநாட்டில் உணவருந்திய தாழ்த்தப்பட்ட தோழர்கள் அனுமந்தபுரம் பண்ணையைச் சேர்ந்தவர்கள் என அறிந்த டி.கெ.பி.எஸ். உடையார் அங்கும் இதுபற்றி தெரிவித்தார். எனவே 19.12.1937 (செவ்வாய்) அன்று காலை மேற்படி பண்ணையில் அவர்கள் அறுவடை வேலை செய்துகொண்டிருந்தபோது அப்பண்ணை ஏஜெண்ட் கிருஷ்ணமூர்த்தி அய்யர் அங்கு வந்தார். ‘கூட்டத்தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர்களைக் கொண்டுவா’ என்று சொன்னார். முதலில் தேவசகாயம் போனார். அப்போது அய்யர், ‘அவனை சும்மா கொண்டு வருகிறாயே, அடி படவாவை!’’ என்று ஆணையிட்டார். உடனே தலையாரி மாணிக்கம், தடிக்கம்பால் அடித்துக்கொண்டே அவரை நடத்திக்கொண்டு வந்தார். அடி பொறுக்க முடியாமல் ஓடிய தேவசகாயத்தைப் பிடித்துக்கொண்டு வந்து விளா மரத்தில் கட்டிவைத்து மீண்டும் தடிக்கம்பால் தாக்கினர். பின்னர் நாட்டாண்மைக்காரர்11 அடைக்கலம், சின்ன நாட்£ண்மை ராமன் ஆகியோரை அழைத்து அவர்களுக்கு மொட்டையடிக்கும்படி அய்யர் கட்டளை இட்டார். அவரது ஆணைப்படி பள்ளப்பரியாரி12 கதிர்வேல் மகன் ஆறுமுகம் தன்னைப்போலவே பந்தியில் கலந்துகொண்ட தேவசகாயம் உள்ளிட்ட சில தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு மொட்டையடித்தார். பின்னர் அதே பந்தியில் கலந்துகொண்ட ஆறுமுகத்திற்கும் மொட்டையடிக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டபோது அவரது தந்தை கதிர்வேல், ‘தன் மகன் திருமணம் செய்துகொள்ளப்போகும் புது மாப்பிள்ளை, எனவே அவனுக்கு விதிவிலக்குக் கொடுங்கள்’ என ஏஜெண்டு அய்யரின் கால்களில் விழுந்து கதறினார். உடனே அய்யர் உச்சியில் மட்டும் சிறிது முடியை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை மழித்துவிட ‘தயை’ கூர்ந்தார். பழைய நீடாமங்கலம் காமாஷி மகன் ரெத்தினம், அவ்வூரைச் சார்ந்த பொன்னுச்சாமி வீரமுண்டார்13 என்பார் உதவியுடன் அனுமந்தபுரத்திற்கு அடித்து இழுத்துவரப்பட்டார். அவருக்கும் மொட்டையடிக்கப் பட்டது. மொட்டையடிக்கப்பட்ட அனைவரின் தலையிலும் வாயிலும் சாணிப்பாலை14 ஊற்றி அவமானப்படுத்தினார்கள்15. பந்தியில் உணவருந்திய சுமார் 20 தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கும் அன்றே மொட்டையடிக்கப்பட்டுச் சாணிப்பால் ஊற்றப்பட்டது. அவர்களின் பெயர்களை அவர்களுக்கு மொட்டையடித்துத் தானும் அரைகுறையாக முடியிழந்த பரியாரி ஆறுமுகம் நினைவிலிருந்து ‘விடுதலை’ ஏடு பதிவு செய்துள்ளது. அவை வருமாறு: தேவசகாயம், செல்வம், துளசி, ராமையன், கூத்தன், செங்கோல், சின்னப்பன், எஸ்.ஆரோக்கியம், செல்ல ஆரோக்கியம், சூசை மாணிக்கம், கோபாலன், வீரையன், சாமியப்பன், பொ.ரெத்தினம், கா.ரெத்தினம், தங்கமுத்து, ஆறுமுகம் ஆகிய பதினேழு பேர் ஆவர். இவர்கள் தவிரவும், அப்பாசாமி த/பெ.காமாட்சி, தனக்கோடி த/பெ.அருணாசலம் ஆகியோரும் அடங்குவோர் எனக் களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீடாமங்கல வன்கொடுமை அம்பலமாதல்
தாழ்த்தப்பட்ட மக்கள்மீது நடத்தப்பெற்ற இக்கொடிய இழிவன்முறையைச் சு.ம. இயக்கமே முதன்முதலில் வெளியுலகிற்குக் கொண்டுவந்தது. “ஹரிஜனங்களுக்கு’ காங்கிரஸ் மரியாதை -_ பந்தியில் இருந்து சாப்பிட்டவர்களுக்கு அடி, தலைமயிர் மொட்டை, சாணி அபிஷேகம், தென் தஞ்சை அரசியல் மாநாடு, அலங்கோலம்’’ என்று தலைப்பிட்டு இவ்வன் நிகழ்வை ‘விடுதலை’ பதிவு செய்திருந்தது. இச்செய்தி வெளியிடுவதற்கான பின்னணியில் நீடாமங்கலத்தில் இயங்கிய சு.ம. தோழர்களே இச்செய்தி ‘விடுதலை’யில் வெளிவரக் காரணமாக இருந்திருக்க வேண்டும்’’ என்பதாக அமைந்த டி.கெ.பி.எஸ். உடையாரின் வாக்குமுலப் பதிவும் இதனை உறுதி செய்கிறது. இது தவிரவும் நீடாமங்கலத்திலிருந்து கிடைக்கும் களத் தகவல்களும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. வன்நிகழ்வினை அறிந்த உடனேயே உள்ளூர் சு.ம.காரர்கள் இதுகுறித்த கண்டனத் துண்டறிக்கையைத் தயாரித்துப் பொதுமக்களுக்கு விளம்பியுள்ளனர். நீடாமங்கலம் அருகேயுள்ள லெடசுமாங்குடி என்ற ஊரில் இருந்த காலால் உதைத்து அச்சடிக்கும் இயந்திரத்தின் (டிரெடில்) மூலம் இத்துண்டறிக்கை தயார் செய்யப்பட்டது. “ஹரிஜனங்களுக்கு காங்கிரஸ் மரியாதை’’ என்பதே அதன் தலைப்பு. அது ‘விடுதலை’யில் வெளிவந்த இதுகுறித்த செய்தியின் தலைப்பும் மேற்கண்ட துண்டறிக்கையின் தலைப்பும் ஒன்றுபோல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிரவும் வன்நிகழ்வினை அறிந்தவுடன் நீடாமங்கல சு.ம. சங்கத் தலைவர் அ.ஆறுமுகம், ஈ.வெ.ரா.வுக்குத் தந்திவழி அதனைத் தெரிவித்திருந்தார். தந்தியைப் பெற்ற கையுடன் ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியர் குழுவிலிருந்த அ.பொன்னம்பலனாரைக் கள விசாரணைக்காக நீடாமங்கலத்திற்கு ஈ.வெ.ரா. அனுப்பி வைத்தார். நீடாமங்கலத்தில் உள்ள அ.ஆறுமுகம் இல்லத்திலும், அருகிலிருக்கும் கொரடா சேரியிலுள்ள தன் உறவினர்கள் இல்லத்திலும் தங்கி, வன்நிகழ்வு குறித்து அவருக்குக் கிடைத்துவந்த புலன்விசாரணை செய்திகளை ‘விடுதலை’க்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.
‘விடுதலை’யில் இச்செய்தி வெளியான பிறகே இக்கொடுமை பொதுமக்களுக்கும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சென்று சேர்ந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என அவதானிக்க முடிகிறது. எவ்வாறெனில், நீடாமங்கலம் கொடுமை நிகழ்ந்த ஒரு சில நாட்களுக்குள், அதாவது 3.1.1938 அன்று, அருப்புக்கோட்டையில் ‘அருப்புக்கோட்டை தாலுக்கா 2ஆவது பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு’ என்ற ஓர் மாநாடு நடைபெற்றது. ஆனால் இதன் தீர்மானங்களில் நீடாமங்கல வன்முறை குறித்த கண்டனம் காணப்படவில்லை என்பதும், இவ்வன்நிகழ்வு குறித்த முதல் கண்டனமானது ‘விடுதலை’யில் இச்செய்தி வெளியான 3.1.1938க்கு மறுநாள், அதாவது 4.1.1938ஆம் நாளன்று ஆம்பூரில் நடந்த ஆதிதிராவிட அபிவிருத்தி சங்க கூட்டத்தில்தான் எழுந்துள்ளது என்பதுமாகிய இரு பதிவுகள் மேற்குறித்த அவதானிப்பை உறுதி செய்கின்றன. ‘விடுதலை’யைத் தொடர்ந்து ‘குடிஅரசு’ம், “காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் சித்ரவதை, தாழ்த்தப்பட்டோர் கைகண்ட பலன், எம்.பி.சொக்கநாதன் வேண்டுகோள்’’, என்று தலைப்பிட்டு நீடாமங்கலம் இழிவன்முறையைப் பதிவு செய்திருந்தது. இக்கொடுமையைச் சித்ரவதை என்ற சொல்லால் ‘குடிஅரசு’ அடையாளப்படுத்தியிருந்தமை, இவ்வன் நிகழ்வின் முக்கியத்துவத்தை அதன் பண்பளவில் கனம் கூடச் செய்வதாக அமைந்தது. ‘விடுதலை’, ‘குடிஅரசு’ வெளியிட்ட நீடாமங்கலம் வன்நிகழ்வு பற்றிய செய்திகள் மக்களிடம் குறிப்பாக சு.ம. இயக்கத்தவரிடமும் தாழ்த்தப்பட்டோரிடமும் கடும் எதிர்வினைகளை எழுப்பின. இவற்றை ஆட்சியாளர்களிடமும் பொதுமக்களிடமும் கொண்டு செல்கின்ற தளங்களாக ‘விடுதலை’யும், ‘குடிஅரசு’ம் தொடர்ந்து செயல்பட்டன.
குறிப்பு
1. நீராட்டு மங்கலம் அல்லது நீடாழி மங்கலம் என்பதே மருவி நீடாமங்கலம் ஆயிற்று என்பர். தஞ்சை மராட்டியமன்னர் பிரதாப சிங் (1739 – 1763) காலத்தில் அவரது மனைவி யமுனாம்பாளின் பெயர் நீடாமங்கலத்திற்குச் சூட்டப்பட்டு அது யமுனாம்பாள்புரம் என அழைக்கப்பட்டது. இன்றைய பழைய நீடாமங்கலமே முன்னர் யமுனாம்பாள்புரமாக பெயர் மாற்றம் பெற்ற பகுதியாகும். (புலவர் செ.இராசு(பதி) தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், பக்.156_157). பெரிய கோயில்களில் இறைத்திருமேனிக்கு நீராட்டுச் சடங்கு நிகழ்த்தும்பொருட்டு அச்சடங்கினை இயற்றும் பார்ப்பனர்களுக்கு இவ்வூர் கொடையாக வழங்கப்பட்டிருக்கலாம். எனின் அதன் பொருட்டு இவ்வூர் இப்பெயர் பெற்றிருக்கக்கூடும்.
2. இவரது பெயரின் ஈற்றில் வரும் ‘உடையார்’ எனும் சொல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும். ‘மலையமான்’ என்பது இச்சாதியின் பழந்தமிழ்ப் பெயர் என்பர். இச்சாதியைச் சேர்ந்த பெரும்பாலோர் சிறிதளவு நிலத்தையேனும் உடமையாகப் பெற்றிருப்பர். இது தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட சாதிகளுள் ஒன்று ஆகும்.
3. நீடாமங்கலம் பகுதியில் சு.ம. இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களுள் இவர் முக்கியமானவர். காளாச்சேரி கிராம முன்சீப்பாக இருந்தவர். 1934-1939, 1946-1953 ஆகிய காலகட்டங்களில் யூனியன் போர்டு தலைவராகவும் இருந்துள்ளார். நீடாமங்கலம் ‘சமதர்ம சங்கத்திற்கும்’ இவரே தலைவராக இருந்துள்ளார். ஆரம்பகாலம் முதலே ‘குடிஅரசு’ இதழின் வாசகராக இருந்துவந்தவர். பிணம் எரித்தல், பறை அடித்தல் போன்ற தொழில் செய்த பாவாடை என்ற தாழ்த்தப்பட்ட தோழரை போர்டு உறுப்பினராக்கியவர். போர்டு கூட்டங்களில்அவரை அனைவரோடும் சமமாக அமரச் செய்தவர். மின்சார வசதி நீடாமங்கலத்திற்கு வந்தபோது தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு தந்தவர். மேலும் நீடாமங்கல வன்நிகழ்வின் தொடர்பில் சு.ம.காரர்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே எழுந்த சண்டையின்போது டி.கெ.பி.எஸ். உடையார் தன் ஆட்களிடத்தில் சு.ம.காரர்களை எங்கு பார்த்தாலும் வெட்டுங்கள் என்று பேசியதாகக் கேள்விப்பட்ட இவர் அதன்பின் உடையாரின் மாளிகை வழியாகச் செல்ல நேர்ந்தபோதெல்லாம் அதன் வாசலுக்கு சற்று முன்னரே தன் வண்டியிலிருந்து இறங்கி அவ்வாசலைக் கடக்கும் வரை நடந்து சென்று பின்னர் வண்டியிலேறிச் செல்வதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்தவர். (தகவல் அளித்தவர் ஆ.சுப்பிரமணியன், நீடாமங்கலம்).
4. நீடாமங்கலத்தில் வளர்ந்தவர். இவருடைய சகோதரர் செல்லையா முதலியார் ஆவார். இவர் இவ்வூரில் குடியேறியவர். இவர் பொறுப்பில் தான் ஞானானந்தம் வளர்ந்தார். பி.லிட்., வரை படித்தார். கைவல்ய சுவாமியிடம் சீடராக இருந்துள்ளார். ஆங்கிலப் புலமையுள்ள இவர் ‘ரிவோல்ட்’, ‘குடிஅரசு’ ஏடுகளில் நிறைய எழுதியுள்ளார். பின்னாளில் ஞானானந்த சுவாமிகள் எனவும் அறியப்பட்டவர். (தகவல் அளித்தவர்: ஆ.சுப்பிரமணியன், நீடாமங்கலம்).
5. இது அங்கு வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களின் கூற்று. (விடுதலை, 19.1.1938, ப.1) இக்கொடுமையை முதன்முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய ‘விடுதலை’ நாளேட்டின் நிருபரும் இவ்விதமே கூறுகிறார். (விடுதலை, 3.1.1938, ப.2) ஆயின், இப்பிரச்சனை தொடர்பாக ‘விடுதலை’ மீது வழக்கு நடந்தபோது, டி.கெ.பி.எஸ். உடையார் அளித்த வாக்குமூலத்தில் நீடாமங்கலத்தில் உள்ள தனது தமையனார் ஏ.எஸ்.பி.ஆர்.உடையாரின் அரிசி ஆலை வளாகத்தில்தான் இம்மாநாடு நடந்ததாகவும், மாநாட்டின் இடையே நடைபெற்ற சமபந்தி விருந்தும்கூட அம்மாநாட்டு பந்தலிலேயே நடைபெற்றதாகவும் கூறுகிறார். (‘விடுதலை’, 9.4.1938, ப.2) மாநாடு நடந்த வளாகத்தில் எந்தெந்த இடத்தில் என்னென்ன நடைபெற்றன என்று குறிக்கப் பெற்ற வரைபடம் (Exhibit) ஒன்றும் உடையார் தரப்பினரால் நீதிமன்றத்தில் அளிக்கப் பெற்றிருந்ததை அவரின் வாக்குமுலம் கொண்டு அறிய முடிகிறது. 7.3.2011 அன்று ஆய்வாளர் நீடாமங்கலத்திற்கு நேரில் சென்று மேற்கொண்ட கள ஆய்விலும், வன்முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி அன்று வாழ்ந்துகொண்டிருந்த சா.அப்பாசாமி (86)யுடன் ஆய்வாளர் நிகழ்த்திய நேர்காணலில், ஏ.எஸ்.பி.ஆர்.உடையாரின் மாளிகையும் அரிசி ஆலையும் நீடாமங்கலத்தில் ஒரே வளாகத்தில்தான் இருந்தது எனவும், மாளிகை முன்புறமும் அரிசி ஆலை பின்புறமும் அமைந்திருந்தன எனவும், மாளிகையில் இருந்து ஆலைக்குப் போகும் பாதையில்தான் சமபந்தி விருந்து நடைபெற்றது எனவும் தெரிகிவிக்கிறார் (நேர்காணல், 7.3.2011). ஆய்வாளரின் கள ஆய்வில், அரிசி ஆலை இடிக்கப்பட்டு அது இருந்த இடம் பெரிய மைதானமாகவும், மாளிகை பின்பகுதி முழுக்க இடிக்கப்பட்டு முன்புறம் ஒரு சிறுபகுதி மட்டுமே எஞ்சி இருப்பதையும் கண்டார். உடையார் குறிப்பிடுகின்ற இடமே கூட மாநாடு நடந்த இடமாக இருக்கலாம். உடையாரே வரவேற்புக் கழகத் தலைவராக இருந்த நிலையிலும் அவரது குடும்பத்தாருக்குச் சொந்தமான மாளிகை வளாகத்தில் மேற்படி மாநாடு நடந்த நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்கள் அதனை டி.கெ.பி.எஸ். உடையாரின் மாளிகை எனக் குறிப்பிட்டிருக்கக்கூடும். மாநாடு எங்கு நடந்தது என்பது இங்கு முக்கியக் கேள்வி அல்ல. மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேர்ந்த கொடுமையும் அதற்கு பரிகாரம் தேடிய சு.ம. இயக்கத்தின் நடவடிக்கைகளுமே முக்கியமானவை. மாநாடு நடந்த இடம் குறித்துக் கிடைக்கும் இரு முரண்பட்ட விவரங்களால் இம்முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைத்து விடமுடியாது.
6. 1934இல் மன்னார்குடி தாலுக்கா ஹரிஜன சேவா சங்கத் தலைவராக இருந்தவர். தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற விஷயத்தில் இத்தாலுக்கா சங்கத்தில் உள்ள பார்ப்பன ரல்லாத நிர்வாகிகளின் கருத்துகளுடன் மாகாணச் சங்கம் தொடர்ந்து முரண்பட்டு வந்தாலும் இதன் தொடர்பில் பார்ப்பன நிர்வாகிகளின் கருத்துகளுக்கே ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாலும் அதனைக் கண்டித்து அச்சங்கத்திலிருந்து விலகியவர் (‘குடிஅரசு’, 15.4.1934, ப.16)
7. இது வன்முறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களின் கூற்று. ஆனால், இது தொடர்பாகப் பின்னர் நடைபெற்ற வழக்கின்போது தான் அளித்த வாக்குமூலத்தில் டி.கெ.பி.எஸ். உடையார் இதனை மறுத்திருக்கிறார். (விடுதலை, 18.4.1938, ப.3.) ‘சமபந்தி’ என்பதன் பொருள் உடையாருக்கே வெளிச்சம்.
8. சபாபதி உடையார் என்ற பெயரில் தனக்கு ஏஜெண்ட் யாரும் இல்லை எனத் தனது வாக்குமூலத்தில் டி.கெ.பி.எஸ். உடையார் மறுத்தார் (விடுதலை, 9.4.1938, ப.2). ஆனால், வன்முறைக்கு ஆளான தேவசகாயம், ரெத்தினம், ஆறுமுகம் ஆகியோர் சபாபதி உடையாரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் (விடுதலை, 29.1.1938, ப.2,3) எனவே, மேற்படி நபர் சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து தலைமறைவாகி யிருக்கக் கூடும் என ஊகிக்கலாம். மேலும் டி.கெ.பி.எஸ். உடையாரின் வண்டிக்காரரான உத்திராபதி என்பாரும் அடித்தவர்களில் ஒருவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர் குறித்த பதிவுகள் ‘விடுதலை’, ‘குடிஅரசு’ ஏடுகளில் காணக் கிடைக்கவில்லை. (தகவல்: நீடாமங்கலம் ஆ.சுப்பிரமணியன், 8.10.1909ஆம் நாளிட்ட கடிதம்.)
9. கொண்ணமுண்டார் ‘வீரமுண்டார்’ போன்ற பட்டப் பெயர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியினரான தஞ்சைக் கள்ளர் சமூகத்திற்கு உரியனவாகும்.
10. தகவல்: நீடாமங்கலம் ஆ-.சுப்பிரமணியன், 8.10.1909 நாளிட்ட கடிதம்.
11. தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நாட்டாண்மை.
12. பள்ளர் சாதியினருக்கு மட்டும் முடிதிருத்தும் தொழிலாளி ‘மேல்’ சாதியினருக்கு இவர்கள் முடிதிருத்துவதில்லை. மேல் சாதியினருக்கு இவ்வேலைகளைச் செய்யும் தொழிலாளி-களுக்கும் இவர்களுக்கும் மண உறவு கிடையாது. இவர்கள் பறையர்களுக்கும் தொழில் செய்வதில்லை. மாறாக அவர்களுக்குக் கத்தி, கத்தரிக்கோல் ஆகிய கருவிகளைத் தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளும் பறையர்கள் அவர்களுக்கு அவர்களே முடிதிருத்திக் கொள்வார்கள். கருவிகளைத் திரும்ப வாங்கும்போது நீரால் கழுவி, ‘சுத்தப்படுத்தியே’ வாங்குவார்கள் (நேர்காணல்: கா.அப்பசாமி, 7.3.2013, நீடாமங்கலம்)
13. இவ்வன்நிகழ்வு தொடர்பாகப் பின்னாளில் வழக்கு நடைபெற்றபோது டி.கெ.பி.எஸ். உடையாருக்கு ஆதரவாகச் சாட்சி சொன்னவர்களில் இவரும் ஒருவர். (தகவல்: நீடாமங்கலம் ஆ.சுப்பிரமணியன், 8.10.1909 கடிதம்).
14. சாணிப்பால் புகட்டுதல், சவுக்கால் அடித்தல் என்பன அன்றைய தஞ்சை மாவட்ட கிராமங்களில் பரவலாக வழக்கில் இருந்த தண்டனைகள், தண்ணீர் ஊற்றிக் கரைத்த சாணத்தைத் துணியால் வடகட்டி எடுப்பதே சாணிப்பால். இதைக் குடிக்க வைப்பது தஞ்சை மாவட்ட நிலக்கிழார்களின் தண்டனை முறை ஆகும். இதனைக் குடிக்க மறுத்தால், ‘கொட்டம்’ எனத் தென் தமிழகத்தில் அழைக்கப்படும் மாடுகளுக்கு மருந்து புகட்டும் மூங்கில் குழாயில் ஊற்றி வலுக்கட்டாயமாகப் புகட்டுவார்கள். இதை அருந்தியவர் வயிறு உப்பி வலியால் துடிப்பார். சில வேளைகளில் மரணமும்கூட நிகழும். (ஆ.சிவசுப்பிரமணியன், ‘நீடாமங்கல கொடுமை’ (1937), ‘சிந்தனையாளன்’ பொங்கல் சிறப்பு மலர் 2007, ப.305, 308)
15. இத்தோழர்களின் மொட்டை யடிக்கப்பட்ட தலைகளில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அனுமந்தபுரத்தில் ஊர்வலம் விட்டதாகவும் களத் தகவல்கள். (நேர்காணல் : கா.அப்பாசாமி, 7.3.2011, நீடாமங்கலம்) கூறுகின்றன. ஆனால் இச்செய்தி சு.ம. இயக்க ஏடுகளில் காணக் கிடைக்கவில்லை.
பேராசிரியர் ஆ.திருநீலகண்டனின், ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’ நூல்: ‘காலச்சுவடு’ வெளியீடாக விரைவில் வெளிவரவிருக்கின்றது.
மின்னஞ்சல்: alagiyaneelan@gmail.com
நன்றி: ‘காலச்சுவடு’
-பேராசிரியர் ஆ.திருநீலகண்டன்


Leave a Reply