நான் ஒர் இந்துவாக சாக மாட்டேன்

ஜனவரி 16-31

 

நூல்:
நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர்
மொழிபெயர்ப்பு: தாயப்பன் அழகிரிசாமி
வெளியீடு: தலித் முரசு,
எஸ் – 5, மகாலட்சுமி அடுக்ககம்,
26/13, குளக்கரை சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034.
பேசி: 044 28221314
விலை: 150   பக்கம்: 175

15.8.1936 இந்து மதத்தை விட்டு வெளியேற வில்லையெனில், பறையராகப் பிறந்த நீங்கள் பறையராகவே இறப்பீர்கள்

இந்து மகாசபை தலைவரான மூஞ்சே, 18.06.1936 அன்று மும்பையில் டாக்டர் அம்பேத்கரை சந்தித்து, மதமாற்றம் குறித்து ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்தினார். இவ்வுரையாடல் குறித்து எம். சி. ராஜா அவர்களுக்கு 30.06.1936 அன்று ஒரு கடிதத்தை மூஞ்சே எழுதினார். மதமாற்றம் குறித்து எம்.சி. ராஜா வின் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்காகவே இக்கடிதத்தை எழுதியதாகவும் எந்த முடிவாக இருந்தாலும் அம்பேத்கருடனான தனது உரையாடல் குறித்து கண்டிப்பாக எவருடனும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கடிதத்தில் மூஞ்சே குறிப்பிட்டிருந்தார். இதையும் மீறி மூஞ்சேவுக்கும் அம்பேத்கருக்கும் மதமாற்றம் குறித்து நடந்த முதற்கட்ட உரையாடலின் செய்திகளை எம்.சி.ராஜா பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தினார். இதைக் கண்டித்து 15.08.1936 அன்று அம்பேத்கர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

தீண்டத்தகாத மக்கள் சீக்கியத்திற்கு மாறுவதற்கான சாத்தியங்கள் குறித்து, ராவ் பகதூர் எம். சி.ராஜாவுக்கும் டாக்டர் மூஞ்சேவுக்கும் இடையே நடந்த கடிதப் பரிவர்த்தனைகள் இன்றைய மாலை ஊடகங்களில் வெளியாகி யுள்ளதை நான் படித்தேன். தொடக்கத்திலேயே இதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தனிப்பட்ட இருவருக்கு இடையே நிகழ்ந்த கடிதப் போக்குவரத்தை செய்தித்தாள்களில் வெளியிடச் செய்த திரு. ராஜா அவர்களின் நடவடிக்கையானது, அடிப்படையிலேயே ஒரு நாகரிகமற்ற செயல். மதமாற்றம் பற்றிய இறுதியானதொரு முடிவை எட்டும் வரை இந்தக்கடிதம் தனிப்பட்ட ஒன்றாகவும் கமுக்கமான ஒன்றாகவும் கருதப்பட வேண்டும் என்று டாக்டர் மூஞ்சே தன்னுடைய கடிதத்தின் இறுதியில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இந்த உண்மை திரு. ராஜாவின் கவனத்தில் படவில்லை என்று நம்ப முடியாது. இக்கடிதங்களை செய்தியாளர்களிடம் வெளியிடுவதற்கு முன் திரு. ராஜா, டாக்டர் மூஞ்சே அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். திரு. ராஜா அவர்களின் இந்தச் செயலானது நாகரிகமான ஒருவர் செய்யக்கூடிய செயலே அல்ல.

மதமாற்றத்திற்காக தீண்டத்தகாதவர்கள் சீக்கிய மதத்தைத் தேர்வு செய்யலாம். இந்த உண்மையை என்னுடைய இந்து நண்பர்கள் பலரும் மத மாற்றம் பற்றி அக்கறை கொண்ட தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அறிந்தே இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, அம்பேத்கரைப் பற்றி யாரும் அறியாத பெரும் ரகசியம் ஒன்றை, தான் அம்பலப்படுத்திவிட்டதாக திரு. ராஜா களிப்படைய எந்தக் காரணமும் இல்லை. திரு. ராஜாவின் கடிதங்களுக்கு நான் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

என் கருத்துப்படி, ராஜா அவர்களுக்கு தீண்டத்தகாத மக்களின் மத்தியில் பெரிய மரியாதை ஏதுமில்லை. மதமாற்றம் பற்றிய அவருடைய கருத்துகளுக்கும் எந்தவித மதிப்போ, மரியாதையோ இல்லை. ஒருவேளை அவருடைய கருத்துகள் மதிப்புமிக்கவை யாக இருந்திருக்குமே யானால், இப்போதைய அவருடைய மன நிலையை மாற்றிக்கொள்ள நானே அவருக்கு என்னாலான உதவிகளைச் செய்திருப்பேன்.
வட்டமேசை மாநாட்டில் தீண்டத்தகாதோர் சார்பாகக் கலந்து கொள்ள ராவ்பகதூர் சீனிவாசன் அவர்களும் நானுமே அழைக்கப் பட்டோம். ராவ்பகதூர் ராஜா கண்டுகொள்ளாமல் விடப்பட்டார். அது, ராஜாவின் மனதில் பெரும் எரிச்சலையும் விரோதத்தையும் ஏற்படுத்தியதால் அன்றிலிருந்து என் மீது ஏதாவது குற்றம் சொல்லிக்கொண்டும் என் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டும் இருக்கிறார்.

நான் என் மக்களுக்கு தொண்டாற்ற முயற்சி செய்கிறேன். திரு. ராஜா என்னை எதிர்ப்பதோடு என் செயல்பாடுகளிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறார். இது தவிர, செய்தித்தாள்களின் வாயிலாக தன்னைப் பற்றிய சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் கலையிலும் அவர் நன்றாகத் தேறிவிட்டார். நான் அவருடைய கூற்றுகளுக்கெல்லாம் பெரியதொரு முக்கியத் துவத்தை கொடுக்கத் தேவையில்லை என்றாலும் ஒன்று மட்டும் எனக்குப் புரியவேயில்லை. இந்து மதத்தை விட்டு விலகி, வேறொரு மதத்தைத் தேர்வு செய்ய நினைக்கும் தீண்டத்தகாதோருடைய செயலானது, எந்த வகையில் திரு. ராஜா அவர்களின் மனதைப் புண்படுத்தி விட்டது ? இந்து மதத்தை விட்டு வெளியேற விருப்பமில்லையானால் திரு. ராஜா அவர்களை யாரும் கட்டாயப்படுத்தப் போவதில்லை எனும்போது, இது தொடர்பாக விமர்சிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

ராஜா சொல்கிறார், ‘நான் இந்துவாக வாழ்கிறேன், இந்து வாகவே சாவேன்’ என்று. அப்படிச் சொல்லிக் கொள்ள அவருக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது. தவிர, தன் திறமை முழுவதையும் பயன்படுத்தி செய்தித்தாள்களுக்கு அறிக்கை கொடுப்பதன் வாயிலாக இந்து மதத்தின் மீது தனக்குள்ள காதலையும் அவர் வெளிப்படுத்திக் கொள்கிறார். ஆனால் இந்து மதத்தைவிட்டு வெளியேறி தன் மதத்தை மாற்றிக் கொள்ளும் வரை, அவர் தொடர்ந்து பறையனாகவே வாழ்வார்; பறையனாகவே செத்தும் போவார் என்பதை அவருக்குச் சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன். அவருடைய சாதியின் பெயரால் அவர் மீது பிணைக்கப் பட்டிருக்கும் தீண்டாமை என்கிற அவமானம், இந்து மதத்திற் குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் வரை துளியளவும் மறையாது என்கிற உண்மையை அவர் நன்றாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்மிகக் காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்வது அறிவற்ற பேச்சு. நான் திரு. ராஜாவைக் கேட்க விரும்புகிறேன். வெறும் ஆன்மிகக் காரணங்களுக்காக மட்டும்தான் அவர் இந்து மதத்திற்குள்ளேயே இருக்க விரும்புகிறாரா? அவருக்கு அப்படிப்பட்ட “ஆன்ம திருப்தியைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லையென்று சொன்னால், பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயங்-களைப் பெற்றுத்தரும் சட்ட மன்றங்களுக்கான இட ஒதுக்கீடுகள் பற்றி ஏன் அவர் கவலைப்பட வேண்டும்? இந்துவாகவே வாழ்ந்து இந்துவாகவே இறப்பதில் அவர் இவ்வளவு ஆர்வமாக இருப்பாரென்றால் ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் மீது அவருக்கு ஏன் அவ்வளவு ஆசை?

ஒடுக்கப்பட்டோருடைய மதமாற்றம் பற்றிய எதிர்க்கருத்து எதனையும் சொல்வதற்கு திரு. காந்திக்கும் திரு. மாளவியாவுக்கும் எந்தவித அறத்தகுதியும் இல்லை என்று நான் நம்புகிறேன். பூனா ஒப்பந்தம் கையெழுத்தான போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர்கள் மிக மோசமாகத் தவறிவிட்டார்கள்.

என்னுடைய நிலைப்பாட்டைத் தன்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லையென்று திரு. காந்தி சொல்கிறார். நானும் சொல்கிறேன்: அவருடைய மொழியையும் செயல்பாடுகளையும் என்னாலும் கூட விளங்கிக் கொள்ளவே முடிவதில்லையென்று. அவரைப் பொருத்தவரை தீண்டத்தகாதோரை முன்னேற்றுவது என்பதும் தீண்டாமையை ஒழிப்பது என்பதும் தன்னளவில் தனியான சிக்கல். காந்தியார் பயன்படுத்தும் இதுபோன்ற மொழியாடல்களை ஒரு துறவி மற்றொரு துறவியிடம் சொன்னால் வேண்டுமானால் அவர் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அன்றாட வாழ்வில் சமூகத்தின் சாதாரண கொள்கைகளால் வழிநடத்தப் பெறும் என்னைப் போன்ற எளிய பிறவிகளுக்கு காந்தியின் இது போன்ற மகாத்மாத்தனமான மொழிகள் எவ்விதப் பொருளையும் தரப் போவதில்லை.

காந்தி, “பண்டமாற்று செய்து கொள்வதற்கு மதம் ஒன்றும் சரக்கு அல்ல” என்று சொல்கிறார். இதற்கு என்னுடைய பதில் என்பது, இந்த வாதம் அவருடைய வாயிலிருந்து வரக் கூடாது. பூனா ஒப்பந்தக் காலத்தில் அவரே அதை ஒரு பண்டமாற்று சரக்காகக் கருதினார். தங்களுடைய அடிப்படை மனித உரிமைகளான பசியைப் போக்கவும் சாதாரண அடிப்படைத் தேவைகளான உணவுக்கும் நீருக்கும் போராடி வருபவர்களை வெறுமனே ஆன்மிக அமைதி பெறுவதற்காக வாழும்படி ஏமாற்றிய காலம் எல்லாம் போய்விட்டது.

தீண்டத்தகாதவர்கள் தங்களுடைய மதத்தைப் பண்டமாற்றம் செய்து கொள்கிறார்கள்’ என்று காந்தி சொல்கிறார். அவர் ஒன்றைத் தெளிவாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். மதமாற்ற இயக்கம் என்பது எந்தவொரு தன்னல நோக்கத்திற் காகவோ, வேறுவகையான தனிப்பட்ட ஆதாயங்களுக்-காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல.

காந்தியைப் பொருத்தவரை, சவர்ண இந்துக்கள் தாங்களாகவே மனம் வருந்தித் திருந்த வேண்டும்; பிராயச்சித்தம் செய்து கொள்ளவேண்டும். பின் அவர்களாகவே தீண்டாமையை ஒழிக்க முன்வர வேண்டும். தீண்டாமையை ஒழிப்பதற்காகவோ, தங்களுடைய முன்னேற்றத்திற்காகவோ வெல்லாம் தீண்டத்தகாதவர்கள் எதுவும் மெனக்கெடத் தேவையில்லை; அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமைதியாக சம்மணமிட்டு ஒரிடத்தில் உட்கார்ந்து கைகளைக் குவித்து, “ஆண்டவனே சவர்ண இந்துக்களுக்கு நல்ல புத்தியையும் தைரியத்தையும் ஞானத்தையும் கொடு. அவை கிட்டினால்தான் தங்களுடைய தீய செயல்களுக்காக அவர்கள் மன்னிக்கப் படுவார்கள். அவர்களுடைய பாவங்களை மன்னித்து, தங்கள் சமூகத்தை சீர்திருத்து-வதற்குத் தேவையான அறிவையும் வலுவையும் அவர்களுக்கு வழங்கு” என்று தியானிக்க வேண்டியது மட்டும்தான்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காந்தியார் வழங்கும் ஆன்மிக அறிவுரை இதுதான். இது போன்ற ஆன்மிக சவடால்களால் யாருக்கும் எந்த நன்மையும் விளையப்போவதில்லை; எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகப் போவதுமில்லை. அறிவுத் தெளிவுள்ள யாரும் இது போன்ற யோசனைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இது எப்படி இருக்கிறதென்றால், பிளேக் நோயால் பாதிக்கப் பட்ட பகுதியிலிருக்கும் மக்களைப் பார்த்து யாரோ ஒரு முட்டாள் அறிவுரை சொன்னானாம் – ‘சகோதரர்களே நான் சொல்வதைக் கேளுங்கள். பிளேக் நோயைப் பார்த்து யாரும் பயப்படாதீர்கள். இந்த நோய் பரவுவதற்குக் காரணமான ஊழியர்கள் ஒரு நாள் தங்களின் நடத்தைக்காக வருத்தப்படுவார்கள். அதன் பிறகு நோயை ஒழிப்பதற்கு ஏதாவது திட்டம் வகுப்பார்கள், அதுவரை பொறுமையாக இருங்கள். அவசரப்பட்டு வீடு வாசல்களை விட்டு ஓடிவிடாதீர்கள்” – இந்த அறிவுரை எந்த அளவு அறிவுக்கு ஏற்புடையதாய் இருக்கிறதோ அதே அளவுக்கு ஏற்புடையதுதான் காந்தி தீண்டத்தகாதவர்களுக்கு வழங்கும் அறிவுரை-களுமாகும்.

திரு. ராஜகோபாலாச்சாரி தனது கோபத்தை வேறொரு வகையில் வெளிக்காட்டுகிறார். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அந்தக் கிழவர், முத்திரை குத்துவதற்கான புதிய புதிய சொற்களை உருவாக்கியதனால் ஏற்பட்ட அஜீரணக் கோளாறினால் அவதிப் பட்டுக்கொண்டு கிடக்கிறார். அந்த வகையில்தான் மதமாற்ற இயக்கத்திற்கு ‘சாத்தானின் இயக்கம்’ என்று பெயரிட்டிருக்கிறார்.

உண்மையில் சீக்கிய மதத்திற்கு மாறுவது குறித்து தீண்டத்தகாதவர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள் என்றால், தீண்டத்தகாதவர் களின் இந்த முயற்சி உண்மையிலேயே சாத்தான் தனமானது தானா என்பதை இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்து மதத்தின் எதிர்காலம் பற்றிய அக்கறை கொண்ட இந்துக்கள், இந்தப் பெருமைமிகு இந்துப் பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி, உண்மையிலேயே அறிவுத் தெளிவோடுதான் தீண்டத்தகாதோரின் சீக்கிய மதத்திற்கு மாறும் முடிவை சாத்தான் தனமான முடிவு என்று வர்ணித்தாரா என்று சிந்திப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

உண்மையில், ‘சாத்தான் தனம்’ என்று யாருடைய செயலையாவது குறிப்பிட வேண்டுமானால், டாக்டர் மூஞ்சேயின் அனுமதி பெறாமல், இரு நபர்களுக்கிடையே நிகழ்ந்த தனிப்பட்ட கடிதப் போக்குவரத்தைப் பகிரங்கமாக வெளியிட்ட எம். சி. ராஜாவின் செயலைத்தான் ‘சாத்தான் தனம்’ என்று குறிப்பிட வேண்டும். இது பற்றி இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

சங்கராச்சாரி, டாக்டர் குர்லகோட்டி மற்றும் பல முக்கிய இந்துத் தலைவர்கள் அனைவருமே தீண்டத்தகாதோர் சீக்கியத்திற்கு மாறும் யோசனையை வரவேற்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், அவர்கள் தான் இந்த யோசனையைப் பரப்பினார்கள். என்னையும் அவ்வாறே பரப்புமாறு அறிவுறுத்தினார்கள். நான் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுகொண்டதற்குக் காரணம், இந்து மக்களின் எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்வு எனக்கும் உண்டு என்பதனால்தான். செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கடிதப் போக்குவரத்து பற்றியதான என்னுடைய எண்ணங்களைப் படித்த பிறகு, தீண்டத்தகாதோர் சீக்கிய மதத்தைத் தேர்ந் தெடுத்தது பற்றி திரு. காந்தி, திரு. ராஜா மற்றும் திரு. ராஜகோபாலாச்சாரி ஆகியோர் கூறிய கருத்துகள் இந்து சமூகத்திற்கு நன்மை பயக்குமா, இல்லையா என்பது பற்றி இந்துக்கள் சுதந்திர மாக முடிவு செய்யலாம்.

ஜனதா (15.08.1936) மராத்தி இதழ் மற்றும் “திபாம்பே கிரானிக்கல்” (8.08.1936) இதழில் வெளியிடப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *