நாதியில்லாத சாமி
இயற்கைப் பேரழிவினை
ஆழிப் பேரலை ஊரை
கபளீகரம் செய்யும் வேளையில்
கண்களில் அகப்பட்டதை
அள்ளிக்கொண்டு ஓடுகையில்
அபயக்குரல் ஒன்று
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் – என்று
கரை சேர்ந்துவிட்டு
திரும்பிப் பார்க்கிறேன், காப்பாற்ற நாதியில்லாததால்
சலனமின்றி அடித்துச் செல்லப்படுகிறது
சர்வசக்தி வாய்ந்த அந்த
சாமி சிலை….!!
தண்டனைக்குரியவர்கள்
உலகை இயக்குபவன் நானே
என்று சொன்ன கண்ணனையும்
எல்லாப் புகழும் இறைவனுக்கே
என்றுரைத்த நபிகளையும்
கடவுளை நம்பினோர்
கைவிடப்படார் என்று
சொன்ன ஏசுபிரானையும்
சர்வதேச நீதிமன்றத்தில்
நிறுத்தி தண்டிக்க வேண்டும்
ஈழப் படுகொலைக்காக
குருட்டு நம்பிக்கை
மகப்பேறு காலத்தின்போது
சுவாசிக்க மறந்து
உலகைப் பிரிந்த
என் சகோதரிக்குத் தெரியவில்லை
ஒளியின் மூலம் பிள்ளை பெறும்
அந்த சூட்சமம்
மருத்துவம் பார்த்த
மருத்துவர்களுக்கும் புலப்படவில்லை
விலா எலும்பை எடுத்து
உயிரை உருவாக்கும் விந்தை
ஆனாலும்
என் சமூகத்தாரும் அந்த மருத்துவ சமூகத்தாரும் இன்னும்
பிரார்தனைகளைச் செய்துகொண்டுதான்
இருக்கிறார்கள், அவரவர் மதங்களில்
சொல்லப்பட்டிருப்பது உண்மைகள் தான்
என்ற குருட்டு நம்பிக்கையில்…!!
– புதுவை ஈழன்
துளிப்பா
தொடர்
போராட்டம்
வறுமை!
கழிவுநீர்
தாகந்தணிந்தது
நாய்!
சலவைத் தொழிலாளி
ஒற்றைக் கழுதை,
சகுனம் மாண்டது?
எரிபொருள்
உயர்வு,
வாகனப் பேரணி?
நாய்கள்
காதலர்கள்,
கடற்கரை அசுத்தங்கள்!
பொய் வாழ்வு
தற்கொலை,
திரையினர்!
கலை – கல்வி
பேரம்
கலைமகள்?!
பசி
மரணம்,
கடவுள்?
பிச்சைக்காரன்
பார்ப்பான்,
கோவில் மாடுகள்!
– உயிரூட்டிகள் கவிஞர் இயற்பெயர்
துளிப்பா
திக்குத் தெரியாமல்
மிதக்கிறது கடலில்
மீனவர் பிரச்சினை
கிடைத்து விடுவதில்லை
தேடாத மனிதனுக்கு
வாழ்வின் இரகசியம்
உறங்க முடியவில்லை
கொஞ்சநேரம்
நிம்மதி
ரத்த வெள்ளத்தில்
மூழ்குகின்றன
மதப் பிரச்சினைகள்
முளைக்கின்றன வேதங்கள்,
அகோரப் பற்களுடன்
ஆயுத பூஜை
– வாலிதாசன், பனையடியேந்தல்