ஆசிரியர் பதில்கள்

ஜூலை 01-15

கேள்வி: வை.கோ.வின் எதிர்காலம் என்னாகும்? வி. கலையரசி, அரியலூர்

பதில்: அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியது அவர்தான். நாமல்லவே!

கேள்வி : தந்தை பெரியாரை நீங்கள் முதன்முதலாய் சந்தித்துப் பேசியது எப்போது? – கே. ஆர். இரவீந்திரன், சென்னை -1

பதில்: 1944இல் – கடலூர் திருப்பாதிரிப்புலியூரில். (அய்யாவின் அடிச்சுவட்டில்  நூலில் விவரங்கள் காண்க)

கேள்வி : சி.பி.அய். அமைப்பை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் காங்கிரஸ் கறைபடியாத கட்சியா? – க. பூபாலன், ஈரோடு

பதில்: கல்மாடிகளைக் கண்ணெதிரே காணுகிறோமே! இதற்குமுன் பல நிகழ்வுகள் உண்டே கறை பற்றிப் பேச!

கேள்வி : பாபா ராம்தேவ் – கைது செய்ய வந்த போலீசாரிடமிருந்து தப்ப  சல்வார் கமீஸ் உடையணிந்தாராமே?  – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: ஆண்டவன் மோகினி அவதாரம் எடுப்பது உண்டே! தெரியாதா? உயிரை இழப்பவரா இவர்?

கேள்வி : அய்ந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக்கூட ஆக்காமல், பின்னுக்குத் தள்ள எது காரணம்? விண்ணைத் தொடும் விலைவாசியா? 5 ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர் மின் வெட்டா? (அல்லது) அனைத்துத் துறைகளிலும் அவரது குடும்ப வாரிசுகளின் தலையீடா? – தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில்: எல்லாமும் சேர்ந்ததே என்கிறார்கள் வாக்காளர்களை அறிந்தவர்கள்!

கேள்வி : ஊழல்வாதிகளின் உண்ணாவிரத நாடகத்தால் ஊழலை ஒழிக்க முடியுமா? – தொ. கயல்விழி, திசையன்விளை

பதில்: நாடகத்தால் நடக்காது. நாடு நினைத்தால்தான் நடக்கும்!  கேள்வி : உயர்ந்த கொள்கைகளும், உன்னதமான தொண்டர்களும், அளப்பரிய சாதனைகளும் இருந்தும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தோற்றதேன்?
– ச. பெரியசாமி, உடன்குடி

பதில்: தேர்தலில் மக்கள் மனநிலை என்பது எளிதில் அளக்க முடியாத ஆழம் நிறைந்ததால்!

கேள்வி : இலங்கையில் நடந்தேறியது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைதான். போர் அல்ல. இதை, போர்க்குற்றம் என்று அறிவித்த அய்.நா.சபைக் குழுவினரின் கண்ணில் கோளாறு உள்ளது என சோ ராமசாமி துக்ளக்கில் கூறியிருப்பது பற்றி?
ம. சத்யா, போடி

பதில்: அய்.நா.வின் கண்ணில் கோளாறு அல்ல. சோ அய்யரின் கண்ணில்தான் எப்போதும் காமாலைக்கண் கோளாறு என்பது உலகறிந்த உண்மை ஆயிற்றே!

கேள்வி : புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு ராணுவ மரியாதை செய்து உடல் அடக்கம் செய்யப்பட்டது சரியா? – எம். கே. கலைச்செல்வன், சிங்கிபுரம்

பதில்: நம் நாட்டில் சரியில்லாத செயல்கள் அன்றாடம் நடைபெறுவது வாடிக்கை! அதில் இதுவும் ஒன்று – அவ்வளவுதான்.

கேள்வி : சாமியார்களின் ஆன்மிகக் கூடங்களைத் தேடிச் செல்லும் இளைஞர்களை எப்படித் திருத்துவது? – ஆ. பாக்கியசாமி, கூவத்தூர்

பதில்: பிரச்சாரத்தால்! பிரச்சாரத்தால்!! பிரச்சாரத்தால்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *