வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

டிசம்பர் 16-31

தாசர்

தாஸ என்று வடமொழியில் சொல்லப்-படினும் இது வடமொழியன்று. தாஹி என்று பார்சி மொழியில் வழங்குவதால் இது பார்சி மொழியாகிவிட்டது.
தாதர் என்ற தூய தமிழ்ச் சொல்லையே ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்-அதாவது ஆரியர் நாவலந் தீவில் நுழைவதற்கு முன் -வடவராலும், பார்சிக்காரராலும் தாஸ, தாஹி என எடுத்தாளப்பட்டது என அறிதல் வேண்டும்.

தாத்தல்_-கொடுத்தல், இது தாத்து என்று இன்றும் வழங்குகிறது. அன்றியும் தாதம் என்றும் கொடுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. இதன் முதனிலை தா என்பதைக் காண்க தா-_கொடு, தாத்தல், தாத்து, தாதம், கொடுத்தல் கொடை என்க.

எனில், தாசர் என்ற சொல்லுக்கு, கொடையாளிகள், வள்ளல்கள் என்று பொருளா என்று கேட்போரை நாம் வேறென்ன தான் என்று கேட்கின்றோம்.
தாசர் என்றால் அடிமைகள் என்பதல்லவா பொருள் எனில், அது பின்னாளில் என்றும் எடுத்துக்காட்ட நம்மால் முடியும். ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டவர்கள் தமிழ்ச் சொல் ஒவ்வொன்றையுமே தலைகீழாக்கி வைத்தார்கள். அவர்களின் ஏமாற்று_–விழிப்புற்ற _ –ஆராய்ச்சிமிக்க இக்காலத்திலும் செல்லுமோ!

ஆரியர்_-மிலேச்சர் என்பது பிங்கலந்தை. அதை அநாரியர்_-மிலேச்சர் என்று இதே நூற்றாண்டில் உ.வே. சாமிநாத அய்யர் முயற்சியால் அகரவரிசை நூல் ஒன்றும் வந்திருப்பதை நாம் கண்டோம் அல்லவா? இருபது ஆண்டுகளின் நிலையே இப்படி-யானால், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிலைமை எவ்வாறு தலைகீழாக்கப் பட்டிருக்கும்?

பாலிமொழி ஆராய்ச்சியில் உலகப் புகழ் வாய்ந்த தருமானந்த கோசம்பி தம் “பகவான் புத்தர்” என்ற நூலில் அடியில் வருமாறு கூறுகின்றார்:

ஆரியர் வருமுன்பு சிந்து பஞ்சாப் பெருமாவட்டங்களில் தாசர்களின் ஆட்சி நிலவியிருந்தது. இப்போதுதான் தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனால், ஆரிய மறையில் தாச, தாஸ் என்ற இரண்டு வினைப் பகுதிகளுக்கு கொடுத்தல் என்ற பொருளே அமைந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த அகரவரிசை நூற்களிலும் கொடுத்தல் என்ற பொருளிலேயே தாஸ, தாச் என்ற சொற்கள் அமைந்துள்ளன. எனவே, தாசன் என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் கொடைவள்ளல், நாவலந்தீவின் உயர்குடித் தோன்றல்! என்று யாகும். ஆவெஸ்தாவில் பர்வதின்யஸ்து என்ற வட்டாரத்தில் தாச நாட்டு பிதிரர்கள் வழிபாடு பற்றி செய்தி வருகிறது. அதில் அவர்களை “தாஹி” என்று  குறித்துள்ளார்கள்.

தாஸ, தாச் என்ற தமிழ்ச் சொற்களை ஆரிய மறை எடுத்தாண்டதும் இங்கு நோக்கத்தக்கது. தாசன் -தமிழ்ச் சொல்லே என அறுதியிட்டுக் கூறுக!
(குயில்: குரல்: 1, இசை: 19, 07-10-1958)

மளிகை

இது தமிழ்ச் சொல்லா? விளக்கித் தருக என ஒரு அன்பர் கேட்கின்றார். மலிகை என்ற தூய தமிழ்ச் சொல் மளிகை என்று மருவிற்று. ஆதலின் தமிழ்ச் சொல்லே, அன்றியும் ஒரு தமிழ்ச்சொல் சிறிது வேறுபாடு ஆயினும் அதன் தூய்மை கெடாது என்ற உண்மையை மனதிற் கொள்க! ஆகவே மளிகை என்பது தமிழ்ச்சொல் என்று மட்டும் சொல்லி அமையாமல், தூய தமிழ்ச் சொல் என்றே சொல்லுக!

மலிகை_நிறைதல். பெருகல் இத்தொழிற் பெயர் மலிதல் எனத் தல் இறுதிநிலை பெற்று வரும்.

இனி மளிகை எனில் பல்பொருள் நிறைதல் என்க. மளிகைக் கடை எனின் பல்பொருள் நிறைந்த விற்பனை இல்லம்.

(குயில்: குரல்: 1, இசை: 21, 21-10-1958)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *