சட்டம் கடமையைச் செய்யட்டும்

ஜனவரி 01-15

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, சில காலம் முன்பு ஓய்வு பெற்ற _- மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஜஸ்டிஸ் ஏ.கே.கங்குலி அவர்கள்பற்றி, பயிற்சி பெண் வழக்குரைஞர் கொடுத்த பாலியல் புகார்பற்றி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மூவர் (ஒருவர் பெண் நீதிபதி உட்பட) விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் தங்களது விசாரணை அறிக்கையைத் தந்தனர்.

 

இவர்மீது சொல்லப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை விசாரணை செய்த மூன்று நீதிபதிகளின் அறிக்கை தெளி வாக்கி விட்டது.

இதனை ஒளிவு மறைவின்றி உண்மைகளை விசாரித்து தக்க தண்டனையை குற்றம் புரிந்தவருக்கு வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டியது _- நாட்டின் நிர்வாகத் துறையின் தலையாய கடமையாகும்.

டில்லியில் பாலியல் நீதிக்காக பல நாள் நிர்வாகமே நிலை குலையும் அளவுக்கு மக்கள் திரண்டு கிளர்ச்சிகள் நடந்தன.

வளர் இளம் பிராய வாலிபர்களுக்குக் கூட  _ துள்ளித் திரியும் பொறுப்பற்ற வயது என்றால்கூட -_ சட்டம் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை.

குற்றங்கள் நாட்டில் நடைபெறாது தடுக்க வேண்டிய பெருங் கடமை நீதித் துறைக்கே உண்டு; மக்களின் கடைசி நம்பிக்கையே இன்றைய நிலையில் நீதித்துறைதான்!

நீதியரசர்கள், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கினால்தான் நாட்டில் பொது ஒழுக்கமும், ஒழுங்கும் காப்பாற்றப்பட முடியும்.

இந்த கங்குலி விவகாரத்தில் இதுவரை மறைத்து வைக்கப்பட்ட பல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

தனது பேத்தி வயதுள்ள _- பயிற்சி வழக்குரைஞரை தன்னுடைய அறையில் தங்கும்படி நீதிபதி கங்குலி வற்புறுத்தினார். உரையாடும்போது இரட்டை அர்த்தமுள்ள பேச்சாகவே அவரது பேச்சிருந்தது; தன்னுடன் மது அருந்தவும் அப்பெண்ணை வற்புறுத்தினார் என்றெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருவதைக் கேட்கும்போது, வெட்கமும் வேதனையும் படமெடுத்து ஆடுகின்றன!

இந்த ஏ.கே. கங்குலி இப்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராகவும் உள்ளார். அவரை உடனே பதவி நீக்கம் செய்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வற்புறுத்தி வருகிறார்.

16.12.2013 அன்று வந்துள்ள பல செய்திகளைக் கண்டு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் அவர்கள், அவர்மீது உடனே நடவடிக்கையை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்துள்ளார்!

மகளிர் அமைப்புகள் பலவும் கிளர்ச்சிகளுக்கு முன்னோட்டமாகக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன! ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்மீது பாயாமல் அவர் ராஜநடை போட்டு, நான் பதவி விலக மாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்!

நீதி பரிபாலனத்தில், நீதியை வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கப்பட்டுள்ளது என்று மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் அமைய வேண்டும் என்று கூறுவது உண்டு; (Not only Justice done; it is also important Justice appears to be done) இப்பிரச்சினை மேலும் நாடு தழுவிய கிளர்ச்சியாக, பெருந்தீயாக ஆகுமுன்பே நீதிபதி கங்குலி மீது கிரிமினல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். அவர் நிரபராதி என்று காட்டி நிரூபித்துப் பிறகு வெளியே வரட்டும். அடிக்கடி நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரைகளில் எழுதுவார்களே சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று.

வெறும் சந்தேகத்திற்கே அவ்வளவு முக்கியத்துவம் அச்சொற்றொடரில் இருக்கையில், அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் மூன்று நீதிபதிகளின் விசாரணை மூலமே வெளியாகியுள்ள நிலையில், மவுனமாக நீதித்துறையும் உள்துறையும் இருக்கலாமா?

அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சுமத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்திருக்க வேண்டிய ஒரு தாழ்த்தப்பட்ட (கிறித்துவ) நீதிபதியை அவருடைய தீர்ப்புகள் பலவும் மிகவும் சிறந்தவை என்ற நிலை இருந்தாலும், கட்டுப்பாடான பிரச்சாரத்தின் மூலமே அவரை விரட்டினரே!

இங்கே என்ன அளவுகோல்? இந்தக் குற்றம் புரிந்ததாக குற்றச் செயல்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும் நபர் உயர் ஜாதி என்பதால் அவருக்கு இப்படி ஒரு மென்மையான அணுகுமுறையா?

நாட்டில் மனுதர்ம ஆட்சியா  பச்சையாக நடைபெறுகிறது என்று மக்கள் கேட்க மாட்டார்களா?

எனவே நீதியின் மாண்பைக் காப்பாற்ற உடனடியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்; அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்மீது நடவடிக்கை சார்பின்றி நடைபெற வாய்ப்பு ஏற்படும்.

உடனே செய்ய வேண்டும்; இதை வற்புறுத்தி திராவிடர் கழக மகளிரணியினர் சென்னையில்  தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு க. பார்வதி அவர்களின் தலைமையில் நடத்தியுள்ளனர்.

ஆங்காங்கே தொடர் பிரச்சாரம் நடைபெறும்.

– கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *