வெள்ளை இருளைக் கிழித்த கருப்பு வெளிச்சம்

டிசம்பர் 16-31- 2013

ஒரு உயிர் எப்போது விடுதலை பெறுகிறதோ அப்போதுதான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்க முடியாது. போராடித்தான் பெற்றாக வேண்டும்

– (நெல்சன் மண்டேலா)

கொடும் சிறையில் அடைக்கப்பட்ட பலரின் வரலாறு உலகில் உண்டு. அவற்றில் பெரும் கொடுமையை அனுபவித்தவர் தென் ஆப்பிரிக்க கருப்பின மக்களின்  தலைவர் நெல்சன் மண்டேலா. கடும் குற்றவாளிகளுக்குத்தான் அதிக ஆண்டுகள் ஆயுள் தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், விடுதலைக்காகப் போராடிய ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது நெல்சன் மண்டேலாவுக்குத்தான். அய்ந்தாண்டு பத்தாண்டல்ல, 27 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் மண்டேலா. விடுதலைக்குப் போராடிய போராளி ஒருவர் இவ்வளவு அதிக நாட்கள் சிறையில் இருந்தவர் உலக அளவில் உண்டென்றால் அவர் நெல்சன் மண்டேலாதான். அந்த மாமனிதர் கடந்த 2013 டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

 

மண்டேலா சிறைப்படுத்தப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்த அதே உலகம்தான் அவர் மறைந்தபோது அழுதது. உலகத் தலைவர்கள் எல்லாம் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்; பல்வேறு நாடுகளும் அரசுமுறைத் துக்கம் அனுசரித்தன. இறுதி நிகழ்வில் பன்னாட்டு அதிபர்களும் பங்கேற்றனர்.அய்.நா.அவையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

வெள்ளை நிறவெறிக்கு எதிராகப் போராடி வந்த தென் ஆப்பிரிக்க காங்கிரசில் சேர்ந்த மண்டேலா, அதன் மிதவாத அணுகுமுறை பலன் அளிக்காது எனக் கருதி ஆயுதம் ஏந்தியவர். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாய் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டவர். அரசுக்கு எதிராக நாசவேலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டபோது, 1964 ஏப்ரல் 20 அன்று தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில், மண்டேலாவின் அந்த உரை உலகை உலுக்கியது. அவரது நீண்ட உரையின் நிறைவில் இப்படிக் கூறினார்.

“என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன், கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். எல்லாரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லாருக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய, ஜனநாயகப்பூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற லட்சியத்தையே நான் போற்றிவந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த லட்சியத்தைத்தான்; நான் வாழ நினைப்பது இந்த லட்சியத்துக்காகத்தான். தேவை என்றால், என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த லட்சியத்துக்காகத்தான். -இந்த உறுதியுடன் சிறையில் பொறுமை காத்த 27 ஆண்டுகளும் தனது கொள்கை நெருப்பை அணையாமல் காத்தார் மண்டேலா.

அவரது பொறுமையின் பொருளை உலகம் அறியத் தொடங்கியது. மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் லண்டன் பி.பி.சி. வானொலி 11.6.88 அன்று 2 மணிநேர தெடர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்றோர் அனைவரும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய் என்று முழக்கமிட்டனர். அந்தப் பேரொலி உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டது.

இதனைப் பார்த்த தென் ஆப்பிரிக்க அரசு அதிர்ச்சி அடைந்தது. 40க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பாடிய நிகழ்ச்சியில் பாடி முடித்த ஒவ்வொருவரும்,
மக்கள் நெஞ்சில் நிறைந்துவிட்ட மண்டேலாவை விடுதலை செய்! விடுதலை செய் என முழக்கமிட்டனர். தென் ஆப்பிரிக்க அரசின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற எப்.டபிள்யு.டி.கிளார்க் செய்தியாளர்களை அழைத்து, நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்கிறோம் என அறிவித்தார்.

மண்டேலாவும் அவருடன் சிறையில் வைக்கப்பட்டிருந்தவர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து வெளியில் வந்த மண்டேலா தன்னை வரவேற்க ஆனந்தக் கண்ணீருடன் நின்ற மக்களைப் பார்த்து,
உங்களால் வரவேற்கப்படும் நான் யார்? உங்களின் ஒருவன். உங்களில் நானிருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். நான் உங்கள் தலைவனல்ல. உங்களின் தொண்டன் என்று கூறினார்.

மேலும், நமது சுதந்திரப் போராட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம் உள்ளது. நமது தென்ஆப்பிரிக்க மக்கள் விரைவில் எல்லா உரிமைகளையும் பெற்றுச் சிறப்பார்கள். நம்மிடையே இனி நிறம், இனம் என்ற பாகுபாடு கூடாது. எல்லோரும் ஒன்றாக உழைத்து வெற்றி என்ற குறிக்கோளை அடைந்து இந்த உலகத்தில் உயர்ந்து நிற்போம் என்று ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் வித்திட்டு லட்சியப் பயணத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர். உலகின் நெருக்குதலில் 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டபோது மண்டேலாவின் வயது 71.

மண்டேலாவின் போராட்டம் வென்றது. 80 ஆண்டுகால நிறவெறி ஆட்சிக்கு விடைகொடுத்தது. தென் ஆப்பிரிக்காவின் முதல் தேர்தலில் வென்றார். 1994ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராகப் பதவி ஏற்றார். 1999ஆம் ஆண்டு பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டார். அரசுப் பதவியை விடுத்து அதன் பின் முழுமையாக மக்கள் நலனுக்காகப் பாடுபட்டார்.

அடிமை நாட்டில் வாழ்பவர்களுக்கு சுதந்திர நாடுகளைப் பார்த்தால் என்ன மனநிலை தோன்றும்? அதனை அனுபவித்த மண்டேலாவின் மனவோட்டம் இது. ஒரு முறை தனது வெளிநாட்டுப் பயண அனுபவம் குறித்து மண்டேலா சொன்னபோது,

என் வாழ்நாளிலேயே முதன்முதலாய் சுதந்தர மனிதனாய் இருந்தேன். வெள்ளை ஒடுக்குமுறை இல்லை; இன ஒதுக்கல், இனத் திமிர் என்கிற மடத்தனம் இல்லை; போலீஸ் தொல்லை இல்லை. அவமானமும் அவமதிப்பும் இல்லை. சென்ற இடமெல்லாம் என்னை மானிடப் பிறவியாய் மதித்தார்கள் என்றார். இந்தச் சுதந்திர வாழ்க்கை தனது இன மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அதுவும் தனது மண்ணிலேயே வேண்டும் என்ற விடுதலை உணர்ச்சிதான் அவரைப் போராளியாக்கியது. நான் இனவெறியன் அல்லன்; இன வெறியைக் கட்டோடு வெறுப்பவன். இனவெறி என்பது கருப்பரிடமிருந்து வந்தாலும் வெள்ளையரிடமிருந்து வந்தாலும் அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது.

எனது காலம் திரும்பி வருமானால், இதுவரை செய்ததையே மீண்டும் செய்வேன்.

தன்னை மனிதன் என்று அழைத்துக் கொள்கிற எவனும் இப்படித்தான் செய்வான்.

அரசாங்க வன்முறையால் அதற்கெதிரான வன்முறையைத்தான் வளர்க்க முடியும். முடிவில், அரசாங்கத்துக்கு நல்ல புத்தி வராமற்போனால், அரசாங்கத்துக்கும் எனது மக்களுக்கும் இடையிலான பூசல் வன்முறை வழியில் தீர்க்கப்படும் என்று எக்காளமிட்டார் மண்டேலா.

1986 இல் அன்றைய வெள்ளை அரசாங்கம் மண்டேலாவை விடுதலை செய்யத் தயார் என்றது. ஆனால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை என்றது. இதுதான் அந்த நிபந்தனை:- “மண்டேலா வன்முறையைக் கைவிட வேண்டும். ஆதிக்க ஆட்சியின் செவிப்பறையைக் கிழிக்கும் பதிலை எச்சரிக்கையாக விடுத்தார் மண்டேலா. அரசுக்குச் சொல்லவேண்டிய பதிலை மக்களுக்கு அறிவித்தார்.

என் சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அதைவிடவும் உங்கள் சுதந்திரத்துக்காகக் கவலைப்படுகிறேன். நான் சிறைப்பட்டதிலிருந்து எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் சுதந்திரத்தை நேசித்து இன்னலுற்றிருக்கிறார்கள். கணவரை இழந்து கைம்பெண் ஆனவர்களுக்கு, ஆதரித்தோரை இழந்து அனாதை ஆனவர்களுக்கு, பெற்ற செல்வத்தைப் பறிகொடுத்த தாய் தந்தையருக்கு _ அன்புக்குரியவர்களை இழந்ததால் வருந்தி அழுதவர்களுக்கெல்லாம் நான் கடன்பட்டிருக்கிறேன். தனிமையும் வெறுமையும் சூழ்ந்த இந்த நீண்ட ஆண்டுகளில் அல்லலுற்றது நான் மட்டுமல்ல. வாழ்க்கையை நேசிப்பதில் உங்களுக்கு நான் சளைத்தவன் அல்லன். ஆனால், விடுதலை பெற்று வெளியே வர வேண்டும் என்பதற்காக எனது பிறப்புரிமையையும் நான் விற்க முடியாது. மக்களது பிறப்புரிமையையும் நான் விற்கத் தயாரில்லை. மக்களின் பிரதிநிதியாகவும், தடை செய்யப்பட்ட உங்கள் ஸ்தாபனமாகிய ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் பிரதிநிதியாகவுமே நான் சிறையிலிருக்கிறேன்.

மக்கள் ஸ்தாபனம் தடை செய்யப்பட்டிருக்கிறபோது, எனக்குச் சுதந்திரம் தருவதாகச் சொல்கிறார்களே, இது என்ன சுதந்திரம்? தனது இலட்சியத்திலிருந்து இறுதிவரை விலகாதவராகப் போராடிய அந்த மாவீரன்  அடிமை நாட்டில் பிறந்தவர்; ஆனால் தன்னுடைய மக்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தவர்.

அடிமைத்தனத்தைக் கடைப்பிடித்த வெள்ளை இருளை ஒழித்த கருப்பு வெளிச்சம் மண்டேலா மறையவில்லை.  உலகெங்கும் நடந்துவரும் விடுதலைப் போராளிகளின் உள்ளங்களில் வாழ்கிறார்.

– அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *