மகவு இறந்தது மகிழ்ச்சி பறந்தது
– மதுமதி
தனக்குப் பிறந்த
மகவின் மூலம்
தான் பிறந்த பேற்றை
நாகம்மை அடைந்தார்;
ஆறாவது மாதத்தில்
சுக்கு நூறாய் உடைந்தார்;
ஆம்..
குழந்தை அது
பிறந்தது;ஆறாவது
மாதத்தில் இறந்தது;
பாலூட்டிய மார்பு
காய்ந்து போவதற்குள்
பாலருந்திய மகவு
மாய்ந்து போனது..
பெயர் தெரியா
நோய் ஒன்று குழந்தையைக் கொன்றது;
அத் துக்கம் குடும்பத்தாரைத் தின்றது;
பத்துமாத பரிதவிப்பு
பேறு கால மறுபிறப்பு
ஆறு மாத அரவணைப்பு
எல்லாம் அணைந்து
மண்ணுக்குள் போனது;
பெண்ணுக்குள் தீயானது;
நாகம்மை
மனம் நொந்து
அழுது களைத்துப் போனார்;
துக்கத்தில் பாதியாய்
இளைத்துப் போனார்;
சோகம் நாகம்மைக்குச் சொந்தம் ஆனது;
துக்கம் நாகம்மையின்
பந்தம் ஆனது;
தாய்மையை இழந்த தவிப்பு
நாகம்மையை வாட்டி வதைத்தது;
குடும்பத்தையும் அது
ஆட்டிப் படைத்தது;
மகளை இழந்த பலரின்
கதைகளை நாகம்மைக்குச் சொல்லி
அவரை ஆறுதல்படுத்த முயன்றனர்..
நாகம்மையின் மனம்
ஏற்கவில்லை; காதால்
அதைக் கேட்கவில்லை;
மகவை மறக்க
நாகம்மையின் மனம் மறுத்தது;
இறந்த காலத்தை
மனம் வெறுத்தது;
சுவற்றில் சாய்ந்து
துக்கத்தில் தோய்ந்து
கண்கள் வெறித்து
உணர்வுகள் மரித்து
ஆறு மாத தாய்மையை எண்ணி
உடலம் கலங்கினார்;
உள்ளம் புழுங்கினார்;
குழந்தையில்லா தொட்டில்
சேர்ந்துறங்கிய கட்டில்
தூக்கி வைத்த தோள்கள்
நீராட்டிய கால்கள்
கொஞ்சி மகிழ்ந்த
சத்தங்கள்
கொடுக்க வேண்டிய முத்தங்கள்
பாடி முடித்த தாலாட்டு
மிச்சமிருக்கும் சீராட்டு
போன்றவை நாகம்மையின்
துக்கத்தைத் தூண்டிவிடும்
காரணிகளாக இருந்தன;
கண்ணீர்த்துளிகள்
பேரணிகளாக திரண்டன;
குழந்தைக்கு உயிர்
கொடுத்தது இறைவன் என்றால்
உயிரைப் பறித்ததும்
இறைவன் தானோ!?..
கணவனைக் காட்டிலும்
இறைவனை நம்பியவளின்
குழந்தையைக் கூட
காப்பாற்ற முடியாதவன்
இறைவனென்றால்
அவனை நம்பித்தான்
பயனென்ன?
இறைவன் மீதான
பக்தியின் சதவீதம் குறைந்து
அவன் மீதான
சந்தேகத்தின் சதவீதம் அதிகமானது..
சூரியன் உதிக்கும்…