Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உயர் கல்வியில் 27% இடஒதுக்கீட்டுக்குத் தடையும் நம் எதிர்வினையும்-இயக்க வரலாறான தன் வரலாறு 361

தந்தை பெரியாரின் மருத்துவரான டாக்டர் இராமச்சந்திரா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு 18.03.2007 அன்று
பெரியார் திடலில் நடத்தினோம். அதில் முன்னாள் திருச்சி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணசாமி
அய்.ஏ.எஸ்., சென்னை மருத்துவக்கல்லூரி மேனாள் முதல்வர்கள் சீரிய பகுத்தறிவாளர்கள் டாக்டர் வெ.ப.நாராயணன், தருமராஜ் பிரபல மருத்துவர்கள், டாக்டர் பஷீர் அகமது, மருத்துவர்
சொக்கலிங்கம் மேனாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனையின் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா 19.3.2007 அன்று நடைபெற்றது. அவ்விழாவிற்கு
தலைமையேற்று அறக்கட்டளையின் மருத்துவப் பணிகளை விளக்கி உரையாற்றினோம். நவீன அறுவை சிகிச்சை அரங்கை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
இராமச்சந்திரன் திறந்து வைத்தார். அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன்
தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னையில் சட்டம் படித்து பட்டம் பெற்றவர்கள் தங்களைப் பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்துகொள்ளும் (Enrollment) நிகழ்ச்சிக்கு சிறப்பு. அழைப்பாளராகச் சென்று பங்கேற்றோம். இதில் 460 மாணவர்கள் புதிதாக பதிவு செய்துகொண்டனர். பார் கவுன்சில் செயற்குழு தலைவர் தனபால் வரவேற்புரையாற்றினார். பார் கவுன்சில் தலைவர் ஆர்.கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதன் நம்முடன் பங்கேற்றார். திறமை என்பது பிறப்பால் வரவில்லை உழைப்பால் வருகிறது என்பதை விளக்கினோம்.

‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரின் ‘சிந்தனைக்
களஞ்சியம்’ (3 தொகுதிகள்) தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், நியூசெஞ்சரி புக் ஹவுஸ் இயக்குநர் தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் சென்னை- கலைவாணர் அரங்கில் 24.3.2007 அன்று வெளியிட்டார். பேராசிரியர் முத்து. குணசேகரன், புலவர் பா.வீரமணி ஆகியோர் தொகுத்து வெளிக்கொணர்ந்த இந்நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்
தா.பாண்டியன், திட்டக்குழுத் துணைத் தலைவர் பேரா.மு.நாகநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ந.வரதராசன் ஆகியோருடன் நாமும் கலந்துகொண்டோம்.

25.3.2007 அன்று காலை 10 மணிக்கு மன்னார்குடியில் தோழர்கள் செந்தில்குமார் – அனுசுதா ஆகியோர் இணையேற்பு விழாவையும், காலை 11 மணிக்கு தஞ்சையில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் பி.தருமராசன் அவர்களின் பேத்தியும் இராஜேந்திரன் மகளுமான டாக்டர் இரா.மலர்.வாசுதேவன் ஆகியோர் திருமணத்தையும் நடத்தி வைத்தேன். அன்று மாலை உரத்தநாடு ஒன்றியம் நெல்லுப்பட்டில் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு, தஞ்சை
கா.மா.குப்புசாமி நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் நம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழாக்கள் நடைபெற்றன.

நெல்லுப்பட்டு ஒரு சிறிய கிராமம். அங்கு ஊர் முழுவதும் கொடிகள் மின்விளக்குகள்
கட்டப்பட்டு ஊரே அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் நடைபெற்ற
இவ்விழாவிற்கு தோழர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் வரவேற்புரையாற்ற, வழக்கறிஞர் கோ.சாமிதுரை தலைமையேற்றார். ராசகிரி கோ.தங்கராசு தந்தை பெரியார் சிலையும் கா.மா.குப்புசாமி நினைவுப் படிப்பகத்தையும் நாம் திறந்து வைத்தோம். நம் பெயரில் அமைந்த நூலகத்தை ‘மனித நேயர்’ ராஜ்குமார் திறந்து வைத்தார்.

26.3.2007 அன்று திருச்சி சட்டக்கல்லூரியில் நடைபெற்ற சமூகநீதி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினோம். அப்போது இரண்டு கண்களி
லும் பார்வையற்ற தோழர் அ.ஸ்டிரானிக்ஸ் என்ட்ராஜ் என்பவர் பொன்னாடைப் போர்த்தி
“நான் இந்த சட்டக்கல்லூரியில் பயில்வதற்கு காரணமே நீங்களும், பெரியார் அறக்கட்டளை
தான்” என்பது நெகிழ்ச்சியோடு தெரிவித்து மாதாமாதம் அறக்கட்டளையிலிருந்து கல்வி உதவித் தொகை வருவதை நினைவு கூர்ந்தார். இவர் நாகை மாவட்டம் கோடியக்கரையைச் சார்ந்தவர்.

முன்னதாக சட்டக்கல்லூரி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த  கல்வெட்டை திறந்துவைத்தோம். மாநில மாணவர் கழக அமைப்பாளர்கள் கா.எழிலரசன், ரெ.ரஞ்சித்குமார் மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் மு.ராசா, அண்ணாதுரை மற்றும் வழக்குரைஞர் பூவை புலிகேசி, சதீஷ்குமார், அழகியமணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர். சட்டமும் சமூகநீதியும் என்னும் தலைப்பில் உரையாற்றினோம். நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ரெ.அழகர்சாமி தலைமை வகித்தார். பேராசிரியர் நிஜாமுதீன் வரவேற்புரையாற்றினார்.

அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தவுடன் வகுப்புரிமை செல்லாது என்று 1951இல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அதனை எதிர்த்து தந்தை பெரியார் செய்த கிளர்ச்சியின் விளைவாக அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் ஏற்பட்டது. அதன்படி மாநில
அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி
வேலைவாய்ப்பில் சமூகநீதி உறுதிப்படுத்தப்
பட்டாலும் ஒன்றிய அரசு பணிகளால் அந்த நீதி உரியவர்களுக்கு கிடைக்காத நிலை இருந்தது.

1979இல் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு,
அது தன் பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவரிடம்
வழங்கிய பின்னும் அதன் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்படாமல் இருந்து, நம் முயற்சியால் வைக்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 27% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அதனை அமலாக்க தொடர்ந்து பல்வேறு
போராட்டங்களும் மாநாடுகளை நடத்தி
அனைத்திந்திய தலைவர்களை ஒருங்கிணைத்தன
மூலம் அது 1990ஆம் ஆண்டு சமூகநீதிக்
காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில்  சட்டமாக்கப்பட்டது. ஆனாலும் உச்சநீதிமன்றத்
தில் ரங்கநாத் மிஸ்ராவால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பின்னர் செல்லும் என்று 1992 தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனாலும் இவை உயர்கல்வி நிறுவனங்களுக்கு
இல்லை. எனவே, அதன்பின் தொடர் முயற்சி
களால் 2007இல் அர்ஜுன் சிங் அவர்களால் தனி மசோதாவாகக் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து சிலர் வழக்குத் தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அரிஜித் பஷாயத், லோகேஷ்வர் சிங் பாண்டா ஆகியோர் தடை விதித்து உத்தரவிட்டனர். இது தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பில் தள்ளியது. உடனடியாக நம் வேண்டுகோளையேற்று முதலமைச்சர் கலைஞர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். உடனடியாக 31.03.2007 அன்று முழு
அடைப்புக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு முழு வெற்றியடைந்தது. நாம் பல்வேறு வரலாற்றுச்
செய்திகளைச் சுட்டிக்காட்டி ஓர் முக்கிய அறிக்கையை வெளியிட்டோம். இது தொடர்பாக 3.4.2007 அன்று பெரியார் திடலில் ஒரு சிறப்புக்
கூட்டத்தை நடத்தினோம். இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி பொதுச் செயலாளர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் ரவிவர்மக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

அதன்பிறகு ஒன்றிய அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.

அர்ஜுன் சிங் அவர்கள் கொண்டு வந்த
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்
பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கானச் சட்ட மசோதாவுக்குத் தடை வழங்கி நிலையில் உடனடியாக சீராய்வு மனு போட வேண்டும் என்று நாம் வலியுறுத்தி இருந்தோம். அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட சீராய் மனுவை விசாரித்த நீதிபதிகள் தடையை நீக்க மறுத்துவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர். இந்த ஆண்டில் வழங்கக் கூடாது என்பதையே ‘‘கெட்ட நோக்கமாகக் கொண்டு’’ வெளிப்படையாகவே இதைச் செய்தனர். இதனைக் கண்டித்து இரண்டு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் கூட்டி ஒரு புதிய சட்டம் வகுத்திடவேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கையை வெளியிட்டோம்.
முதலமைச்சர் அவர்களும் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அர்ஜுன் சிங் ஆகியோருக்கு கடிதங்களை எழுதினார். மேலும் மறுநாள் செய்தியாளர் கூட்டத்தில் இட ஒதுக்கீட்டு பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு சமூக நீதிக்கானச் சட்டங்களை 13ஆவது அட்டவணை ஒன்றினைப் புதிதாக உருவாக்கி பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தோம். இவ்வாறு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்ட நிலையில்
மே 8ஆம் தேதி இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்காக அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு தலையங்கம் எழுதியிருந்தது. அதற்கு நாம் ‘‘முதல்வர் மீது ”எக்ஸ்பிரஸ்’ ஏடு பாய்ச்சல்!’’ என்ற தலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு பதில் அளித்திருந்தோம்.

“நேற்று முன்னாள் (24.4.2007) தமிழ்நாடு சட்டமன்றத்தில், உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்தைச் செயல்படாமல் இவ்வாண்டு முடக்கி வைக்க சட்ட விரோத, நியாய விரோதத் தீர்ப்புகளைத் தந்தது பற்றி, உறுப்பினர்களின் கொந்தளித்த உணர்வுகளை, குமுறல்களைப் பிரதிபலிக்கும் வகையில், “100 கோடி மக்களின் தலையெழுத்தை இரண்டு பேர்களா தன்னிச்சையாக நிர்ணயிப்பது” என்று ஆத்திரத்துடன் முதலமைச்சர் அவர்கள் கேட்டுள்ள கேள்வியைக் கண்டு ஆரிய ஆதிக்க சக்திகள் அவாளின் “குருக்ஷேத்திரமான” ஆசிரியர் கடிதங்கள் பகுதியில், ‘‘முதல்வர் இப்படிப் பேசலாமா?’’ என்று பொரிந்து தள்ளி கடிதக் கணைகளை விடுகின்றனர்.

‘எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. “ஆகா, இப்படி முதல்வர் பேசலாமா” என்று ‘அக்கிரகார அம்மாஞ்சிகளை’ விட்டு எள்ளும், கொள்ளும் வெடிக்க எழுத்து அம்புகளை விடுகின்றது!

தமிழ்நாடு முதல்வர் பேசியதில் தவறு என்ன? அவர் மக்கள் தலைவர் மட்டுமல்லர், மக்களின் உணர்வுகளை, மன்றத்தில் பிரதிபலித்துக் காட்டி, அதற்குப் பரிகாரம் தேடவேண்டிய மகத்தான கடமைக்குச் சொந்தக்காரர் அல்லவா?

அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்த அந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதனை முறியடிக்க குறுக்குசால் ஒட்டி, “சமூகநீதியை” பொய்யாய், பழங்கதையாய் கனவாகிப் போகும்படிச் செய்யலாமா?

இதே 27 சதவிகிதப் பிரச்சினையில் 1992இல் வந்த மண்டல் குழு வழக்கில் தீர்ப்பை எழுதிய ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பைக் கூட மதிக்காது, தான்தோன்றித்தனமாக, இப்படி ஓர் ஆணையை, மக்கள் உணர்வுகள், நியாயம் பற்றிக் கவலைப்படாமல், தீர்ப்பு எழுதலாமா?!

அதன் விளைவாக நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டு, பொதுமக்கள், பொதுச்சொத்துகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய முக்கியக் கடமை முதல்வருக்குத்தானே முதலில் உண்டு.

குறிப்பிட்ட ‘இந்த’ நீதிபதி நாடாளுமன்றத்தின் உரிமையை, அதிகாரத்தையே பறிக்கும் வண்ணம் முன்பு நடந்துகொண்டு, நாடு தழுவிய அளவில் கண்டனத்திற்கு ஆளானவர்தானே! இதை முதல்வர் சுட்டிக்காட்டினால், எதற்காக அவர்மீது ஆரியம் பாயவேண்டும்?

எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் பணியை ‘எக்ஸ்பிரஸ்’ போன்ற ஏடுகள் செய்யக் கூடாது!” என்று பதிலடி கொடுத்திருந்தோம்.

திருச்சி மாவட்டம் லால்குடி வி.எஸ்.கணேசன்
அவர்கள் மகன் இளஞ்சேட் சென்னி- கா.குடியரசி ஆகியோர் திருமணத்தை 1.4.2007 அன்று நடத்தி வைத்தோம்.

ஏப்ரல் 6 அன்று காலை மன்னார்குடி பரவாக்கோட்டையில் நா. இளம்பரிதி- பா.கீதா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வடச்சேரி இளங்கோவன் இல்லத்தைத் திறந்து வைத்துவிட்டு மறைந்த அவரது படத்தினைத் திறந்து வைத்து ஆறுதல் கூறி க.சி.தமிழ்மணி இல்லம் சென்று வந்தோம். மாலை அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம். இதற்கிடையில் திருவாருரில் ‘பவர்’ அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்ட குடும்ப நல ஆலோசனை மய்யத்தின் தொடக்க விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றினோம். தமிழ்நாடு சமூகநல வாரியத்தின் தலைவர் கவிஞர் சல்மா, இணைச்செயலாளர் எஸ்.கே.பிரசாத், உதவி திட்ட இயக்குநர் எம்.எஸ்.பழனிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஆண் – பெண் சிறைக் கைதிகளுக்கு மனரீதியான மாற்றங்கள் தேவை என்றும் கல்வி சுயதொழில் பயிற்சி வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். மறுநாள் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டேன். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். 8.4.2007 அன்று சென்னை அருகில் செங்குன்றத்தில் தோழர் த.ஜனாதிபதி – ஜெ.வடிவுக்கரசி ஆகியோர் திருமணத்தை  நடத்தி வைத்தோம்.

சின்னமனூரில் மேனாள் நீதிபதி பொ.நடராசன் அவர்களது மகன் இளங்கோ அகிலாகுமாரி ஆகியோர் திருமணத்தை 12.4.2007 அன்று காலை நடத்தி வைத்துதோம்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில், 12.04.2007 அன்று, திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாடு நடைபெற்றது.

போடி வ.உ.சி. சிலையிலிருந்து மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது.

மதுரை கி.மகேந்திரன், முத்து மனோகரன், கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் உரைக்குப் பின் நாம் நிறைவுரையாற்றினோம். நமக்கு எடைக்கு எடை திராட்சை பழம், தேங்காய், அரிசி, மாங்காய், வெங்காயம் ஆகியவற்றை வழங்கினர்.

மறுநாள் (13.4.2007) காலை ‘முரசொலி’ அச்சகத்திற்கு புதிய அச்சு இயந்திரத்தை வாங்கியிருந்தனர். அதன் தொடக்க நிகழ்விற்கு நம்மையும் அழைத்திருந்தனர். நாம் பங்கேற்று கலைஞர் மற்றும் தோழர்களுடன் உரையாடி மகிழ்ந்தோம். பின்னர் வானொலி புகழ் எழுத்தாளர் கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேலு அவர்களின்  துணைவியார் அலர்மேலு அவர்களின் படத்தைச் சென்னையில் அவரது இல்லத்தில் திறந்து வைத்தோம். அன்று மாலை பேராசிரியர் கார்க்கி எனப்படும் சிவசுப்ரமணியம் அவர்கள் எழுதிய ‘கலைஞரின் கலாச்சாரப்புரட்சி’ என்னும் நூலின் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோம். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் மு.நாகநாதன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தா.பாண்டியன், தொல்.திருமாவளவன் தோழர் தியாகு ஆகியோர் பங்கேற்றனர்.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி 15.04.2007 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பங்கேற்றோம். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக உரிமைகளை வலியுறுத்தி வாதிடுவது என்றும், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்யப்பட்டது.

மறுநாள் (16.04.2007) தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் பகுத்தறிவாளர் கழக கிளை சார்பாக நடத்தப்பட்ட
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று வகுப்பு நடத்தி, இறுதியாக பங்கேற்ற பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினோம். அன்று மாலை மகளிர் மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்) சார்பில் ஊரக இளைஞர்களுக்கான தொழில்சார் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா தஞ்சையில் நடைபெற்றது.

இது ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் ஊரக மக்கள் மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு உதவியுடன் நடைபெற்ற திட்டமாகும்.  இதில் நம்முடன் மத்திய நிதி துறை இணையமைச்சர்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்பொழுது பவர் தொண்டு நிறுவனம் மகளிர் இளைஞர் கிராம மக்கள் முன்னேற 1500 சுய உதவிக் குழுக்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதைப் பாராட்டினார்.