Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறிவுச் சொத்து – முனைவர் வா.நேரு

இளம் வயதிலிருந்தே நிறைய நூல்களை வாசிக்கும் பழக்கமுடையவராக, இன்றைக்கும் தன்னுடைய 92 வயதிலும் விடாது தொடர்ந்து வாசிக்கும் முன்னெத்தி ஏராக அய்யா ஆசிரியர் அவர்கள் இருக்கின்றார். அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத் தலைவராக இருந்த காலத்தில் 1974ஆம் ஆண்டு இந்தப் பெரியார் நூலகம் & ஆய்வகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.1984லிருந்து இந்த நூலகத்தின் வளர்ச்சியைப் படிப்படியாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.இன்றைக்கு முழுவதும் குளிரூட்டப்பட்ட அறையாக, மிக நேர்த்தியான முறையில் புத்தகங்கள் அடுக்கப்பட்டு, தனித்தனி தலைப்பு களில் தலைப்பிடப்பட்டு, தந்தை பெரியாரைப் பற்றி, அண்ணல் அம்பேத்கரைப் பற்றி, திராவிட இயக்கத்துத் தலைவர்களைப் பற்றி, திராவிட இயக்கம் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய கருவூலமாக இந்தப் பெரியார் பகுத்தறிவு நூலகம் திகழ்கிறது

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு
நடமாடும் நூலகமாகத் திகழ்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அவருடைய தொண்டர்கள்,
நலம் விரும்பிகள் நல்ல நூலைக் கொடுத்தால் அதனைப் பெற்றுக்கொள்வதில் விருப்பம் காட்டுபவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.
எப்படி விருந்து சாப்பிட்டால், சாப்பிட்டு முடித்தவுடன் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் அவர்கள் சமைத்தவரை, விருந்தளித்த
வரை அழைத்துப் பாராட்டுவார்களோ, அப்படி நல்ல புத்தகத்தைக் கொடுத்
திருந்தால், படித்து முடித்துவிட்டு, நீங்கள் கொடுத்த புத்தகம் நன்றாக இருந்தது என்று பாராட்டும் வழக்கம் உள்ளவர் அய்யா ஆசிரியர் அவர்கள்’ சந்திக்கும் நண்பர்கள் பலரும் புத்தகங்
களைக் கொடுத்தவண்ணமே உள்ளனர்‘ என்று தன்னுடைய வாழ்வியல் சிந்தனை
கள் நூலில் (தொகுதி 10, பக்கம் 42) குறிப்பிடும் அய்யா ஆசிரியர் அவர்கள் ‘பெரியார் பகுத்தறிவு நூலகம் சென்னையில் உள்ள அருமையான அறிவுக் கருவூலம். அதற்கும் இதுவரை 10000 (பத்தாயிரத்திற்கும்) மேற்பட்ட  நூல்களை அன்பளிப்பாகத் தந்து மகிழ்ந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

1974இல் பெரியார் பகுத்தறிவு நூலகம் உருவாகி இருக்கிறது. அதுவரை அய்யா ஆசிரியர் அவர்களின் இல்லமே பெரியார் பகுத்தறிவு
நூலகமாக இருந்திருக்கிறது. அங்குச் சென்று சில  நாள்கள் தங்கிய தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் அய்யா ஆசிரியரின் இல்லத்தில் இருந்த நூலகத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.” சென்னை அடையாறு பகுதியில் உள்ள எனது இல்லத்தில் சில நாள்கள் அய்யாவும் அம்மாவும் (அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்) தங்கி இருக்கையில் எனது நூல்கள் பலவற்றை இயக்கக்கொள்கை அல்லாத பொதுக் கருத்துள்ளவைகளை எடுத்துப் புரட்டிப் படித்து அந்த நூலாசிரியர் கருத்தினை ஏற்றோ மறுத்தோகூடச் சில பல கட்டுரைகளை எழுதி ‘விடுதலை’யில் போட வாய்ப்பாக அமைந்த சூழ்நிலையும்கூட உருவானதுண்டு‘ என்று அய்யா ஆசிரியர் அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் நூலில் குறிப்பிடுகிறார்.

பெரியார் திடலுக்குச் செல்லும் தோழர்களே, உங்கள் குழந்தைகளையும் திடலுக்கு அழைத்துச் செல்லுங்கள். நமது பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்திலும்,
புதிய எணினி நூலகத்திலும் பல மணி நேரம் குழந்தைகளை,
மாணவ – மாணவிகளைச் செலவிடப் பழக்குங்கள்.

தந்தை பெரியார் அவர்கள் மிகப்பெரிய வாசிப்பாளர் என்பதையும் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.’ தந்தை பெரியாரைப் ‘படிக்காதவர்’ என்று சிலர் – நுனிப்புல் மேய்வதுபோல் கூறுவதுண்டு. அது கல்லூரியில் – பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பட்டம் பெறத் தவறியவர் என்ற பொருளில் மட்டுமே பொருந்தக்கூடிய சொல்லே தவிர, அவர் இறுதி மூச்சு அடங்கும்வரை ஏராளமான நூல்களை-அய்யா அவர்கள் படித்து அசைபோட்டுச் சிந்தித்து, நான் மட்டும் இப்படிக் கூறவில்லை. எனது இதே கருத்தை ‘இன்னின்னார் கூட’ கூறியுள்ளனரே என்று தனது சுயசிந்தனைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்துவார்கள்’ என்று ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

தமிழ் பருவ இதழ்கள் பலவும் நம் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்தில் நன்றாகப் பைண்டிங் செய்யப்பட்டு உள்ளன. 1947இல் வெளிவந்த தமிழ்ப்பொழில் இதழ், தீபம் 1985, செம்மலர், தலித் முரசு, சமரசம், தீராநதி, சட்டக்கதிர், அறிஞர் அண்ணா நடத்திய திராவிட  நாடு மற்றும் பல இதழ்கள் இங்குக் கிடைக்கின்றன. நம்மைக் கடுமையாக விமர்சனம் செய்த, செய்கின்ற எதிரிகளின் இதழ்கள் கூடப் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. நமது எதிர்காலச் சந்ததிகள், எப்படியெல்லாம் நமது பரம்பரை எதிரிகள் நம்மை வளரவிடாமல் செய்வதற்காக எழுத்துகளில் சூழ்ச்சி செய்தார்கள், செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளக்கூட உதவும், இந்தத் தொகுப்புகள்.தந்தை பெரியார் பற்றி, திராவிட இயக்கம் பற்றி  ஆய்வு செய்தவர்களின் ஆய்வேடுகள் எல்லாம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருப்பவை  நம் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்தில் இருக்கின்றன.

நூலகத்திற்குள் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்த பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் தலைவர் குடந்தை இராஜப்பா, “ஏங்க, இந்த நூலகத்தை மட்டுமே சுற்றிச் சுற்றிப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்
கிறீர்கள். வாருங்கள் புதிதாக அமைக்கப்
பட்டிருக்கும் பெரியார் எணினி நூலகத்தையும் வந்து பாருங்கள்! பெரிய பெரிய ரெபரன்ஸ் புத்தகங்கள் எல்லாம் அங்குதான் இருக்கின்றன, வாருங்கள்’’ என்று அழைத்துச் சென்றார்.

புதிய எணினி நூலகம்,திராவிட மாடல் ஆட்சியின் நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 24.12.2024ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. நல்ல வசதியாக, படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலையில் இருக்கும் இந்தக் கட்டடத்திலும் முழுக்கக் குளிரூட்டப்பட்ட அறைகள். பத்திரிகைகள் வாசிக்கும் தனிப்பகுதி. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றிய புத்தகங்கள் எந்தெந்த மொழிகளில் எல்லாம் வந்திருக்கிறதோ அந்த மொழிப் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பஞ்சாபி, இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு, ருஷ்யன், ஸ்பானிஸ், ஒடியா, ஜெர்மன், உருது, மராத்தி, பெங்காலி, கனடா இன்னும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன. கடல் கடந்து, கண்டங்கள் கடந்து தந்தை பெரியாரின் கருத்துகள் சென்று கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

எணினி நூலகத்தில் நம் திராவிடர் இயக்கத்தின்
பத்திரிகைகளின் முகப்பு பக்கங்கள் அல்லது முதன்முதலில் வந்த இதழின் முதல்பக்கம் கண்ணாடியில் பிரேம் போடப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ’Justice’, ’திராவிடன்’, ’குடி அரசு’, ’revolt’, ’புரட்சி’, ’பகுத்தறிவு’, ’விடுதலை’,’Justicite’, ’உண்மை’ ’The Modern Rationalist’,’பெரியார் பிஞ்சு’, ’திராவிடப்பொழில்‘ என்று நம்முடைய இயக்க இதழ்கள் அனைத்தும் எப்போது தொடங்கப்பட்டது போன்ற பல குறிப்புகளை உள்ளடக்கி வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எணினி நூலகம் என்பது இன்றைய தலைமுறைக்கான நூலகம். முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புத்தகங்கள். தந்தை பெரியாரின் நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றது. அதற்கு அடுத்து இருக்கும் பெரியார் வலைக்காட்சி, இணையத்தின் வழியாக, யூடியூப் வழியாகப் பல்வேறு நூல்களை, நம் இதழ்களை, நம் தலைவர்களின் உரைகளை ஒலிபரப்பும் மிகப்பெரிய ஊடகமாக வளர்ந்து வருகிறது.

தோழர்களே, பெரியார் திடலுக்குச் செல்லும் தோழர்களே, உங்கள் குழந்தைகளையும் திடலுக்கு அழைத்துச் செல்லுங்கள். நமது பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்திலும், புதிய எணினி நூலகத்திலும் பல மணி நேரம் குழந்தைகளை, மாணவ – மாணவிகளைச் செலவிடப் பழக்குங்கள். நம் தலைமுறைக்கு, அடுத்த தலைமுறைக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் புத்திக் கருவூலம் பயன்படுத்துவோம். பலன் பெறுவோம். அடுத்தடுத்தத் தலைமுறைக்கு
வழிகாட்டுவோம்! m