ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அயலாரால் வஞ்சிக்கப்பட்டு வரும் ஓர் இனம் தமிழினம் அயலாரால் துன்புறுத்தப்பட்டு வரும் இனம் தமிழினம். அயலாரால் இகழ்ச்சியைச் சுமந்துவரும் ஓர் இனம் தமிழினம். ஆதலால், அக வாய்ப்பு நேரும் போது அந்த அயலாரைப் பழிவாங்கப் பின்வாங்காதே!
பட்டு வரும் துன்பத்தால் கெட்டுவரும் இனம் தமிழினம் என்று தோன்றலாம். ஆனால், தன் உள்ள உறுதியை விட்டுவரும் என்று எந்த மனிதனும் கொள்ளவேண்டாம். உலக வரலாறு கூட அவ்வாறு எண்ணவில்லை.
தமிழகம் கேடுற்றுக் கேடுற்று மிகக் கேடான நிலையில் வீழ்ந்துவிட்டது என்று கூறுவதில் நூற்றுக்கு அய்ந்து விழுக்காடு கூட சரியில்லை. தமிழினம் வாழ்ந்த இனம். தமிழினம் பண்பட்ட உள்ளம் படைத்தது. பகைவரால் அழிக்க முடியாத மொழியிருக்கிறது. உயர்ந்த செம்மையான – உண்மையே செறிந்த இலக்கியத்தைக் கொண்டது.
தமிழினத்தைப் பற்றிப் பகைவர் போடும் கணக்கு சரியல்ல. சமயங்கள் ஜாதிகள், மூடப்பழக்கங்கள் கட்சிப்பூசல்கள் இவை கொண்டு தமிழினத்தை அலைக்கழித்து விட்டோம் என்று பகைவர் எண்ணலாம். அவை இன்றைய வரைக்கும் ஒரு தமிழனின் உள்ள உறுதியைக் கூட மாற்றவில்லை.
ஆயிரம் ஆண்டுகளாகப் பாரதம் படிக்கிறது தமிழினம். ஆயிரம் ஆண்டுகளாகத் துரோபதை அம்மனுக்குப் பொங்கலிடுகின்றது. தமிழினம். ஆயிரம் ஆண்டுகளாக அய்ந்து பேருக்குத் துரோபதையைத் திருமணம் பண்ணி வைத்துத் தேங்காய் உடைக்கின்றது தமிழினம். ஆனால், அதே தமிழினம் ஒரு தமிழச்சிக்கு, ஒரு கணவனுக்கு மேற்பட்ட பல கணவன்மாரைத் தேட எண்ணியதுண்டா? அப்படி எண்ணும்படி தூண்டப்பட்டதுண்டா? தூண்டியவன் உண்டானால் அவன் உயிர் தப்பியதுண்டா?
பகைவர் இங்கு வளர்த்ததாக எண்ணி மகிழும் வைதிகம், கட்சிப் பூசல்கள் அனைத்தும் தமிழினத்தின் முதன்மையை அணுவளவும் அசைக்கவில்லை. அசைக்க முடியாது.
இனம் என்பது தனி மனிதனைக் குறிப்பதன்று. இனம் என்பது எண்ணிக்கை பற்றியதன்று. இனம் என்பது உருவமுடையதன்று. அது நிலைத்த ஒரு பண்பாட்டின் பெயர்.
தமிழினம் தொன்மையானது, மானமுடையது, தன்னிலையினின்று வீழாததும்; வீழ்ந்தால் வாழாததும் எதுவோ அதுதான் மானம் என அறிதல் வேண்டும்.
– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
(‘குயில்’, குரல்-1, இசை-28, 9.12.1958)