Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறியாமையின் அவலங்கள்- செந்துறை மதியழகன்

வீட்டில் சிறுக்குழந்தை அடுப்பங்கரைப் பக்கம் சென்றால். “அறிவு இருக்கா, நெருப்பு சுட்டுடாதா?” என்பார்கள். அவ்விடத்தில் புத்தி வேலை செய்யும். புத்திக்குள் பக்தி புகுந்துவிட்டால் நெருப்பு என்று சொல்ல வாய் எழாது, பூ மிதிக்கிறோம் என்பார்கள்.

எரிக்கப்பட்ட விறகின் நெருப்பை அடித்து நொறுக்கி, சமமாகப் பரப்பி, அதிலுள்ள சாம்பலை அகற்றுவதாலும், விரைவாக நடப்பதாலும் தான் நெருப்புச் சுடுவதில்லை. மாறாக மேடுபள்ளமான நீறுபூத்துள்ள நெருப்பில் நிலையாக நின்று யாரும் தீ மிதிக்க  முடியாது” என்று மஞ்சை வசந்தன் அவர்கள் ‘தீர்ப்பு’ என்ற தமது நூலில் விளக்கியுள்ளார். பக்தியால் தீ சுடாது என்றால் பழுக்கக் காய்ச்சிய தகட்டில் நடப்பார்களா? முடியாது.

தீ மிதித்தலில் விறகுகளை எரித்து ஓய்ந்தபிறகு. வெறும் கங்குகளைப் பரப்புவர். அதில் படிந்திருக்கும் சாம்பலை ஈரத் தழைகளைக் கொண்டு விசிறியடித்து வெறும் கங்குகளைப் பரப்புவர். இதன் சூடு குறைவாகவே 200–300 டிகிரி இருக்கும். உழைப்பாளிகளுக்குத் தக்க பாதங்களின் தோல் கடினமாக இருக்கும். மேலும் மஞ்சள்நீரை உடல்களில் ஊற்றி பாதங்களை நனைத்து
தீ மிதிப்பர். அதனால் சூடு ஏற சில வினாடிகள் பிடிக்கும். அதனால் அகலக்கால் வைத்து வலது இடது பாதத்தை முதலில் மிதிக்கும்போது சூடு அவ்வளவாக ஏறியிருக்காது. மூன்றாவது நாலாவது அடி நடக்கும்போது பாதம் சூடாகிவிடும். அய்ந்தாவது ஆறாவது அடிக்குள் கங்குகளைக் கடந்து, அங்குள்ள நீரில் காலை நனைத்துக் கொள்வார்கள். சூட்டைத் தாங்கிவிடலாம். எப்படியும் 4 வினாடிகளுக்குள் கங்குகளைக் கடந்து விடுவார்கள். ஒரு 10வினாடிகள் நடந்தால் கொப்புளங்கள் ஆவதைத் தடுக்க முடியாது. ‘எனக்குப் பக்தி அதிகம்’ என்று நெருப்பில் 2 நிமிடம் உட்கார்ந்து எழுந்துவர யாராவது சம்மதிப்பார்களா? அல்லது தீக்குழி நீளத்திற்கு 10, 12 அடி நீளம் உள்ள இரும்புத்தகட்டைச் சூடுபடுத்தி அதில் நடக்கச் சொன்னால் நடக்க முடியுமா? தீக்குண்டத்தில் கொஞ்சம் சர்க்கரையை விசிறிவிட்டாலே பக்தனின் பாதத்தைப் பதம்பார்த்து விடும் என்கின்றனர்.

“மடைமையை நாட்டில் மலிவு செய்தால்

உடைமையை லேசாய் உறிஞ்சலாம்’’

பார்ப்பனர்களின் சூழ்ச்சியைக் கவிதையில் வடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். “பொங்கி
வரும் ஆரியத்தின்

பொய்க்கதைகள் ஒப்பாதீர்!’’ என்று எச்சரித்தார்.

45 நாட்களாக உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா என்ற பெயரில், மடைமையை நாட்டில் மலிவு செய்து, பக்தி வியாபாரத்தை அமோகமாக நடத்தி மக்களை உறிஞ்சி விட்டனர். அங்கு புனித நீராடச் சென்ற பக்தர்கள் 62 கோடி பேர். மொத்த வருமானம். 3 லட்சம் கோடி என்று தொடை தட்டுகிறார் உத்தரப்பிரதேச சாமியாரும் – முதல்வருமான யோகி ஆதித்யநாத். ஆனால், அங்கே கூட்ட நெரிசலில் மாண்டவர் எண்ணிக்கை எவ்வளவு என்று சரியான புள்ளிவிவரத்தை இதுவரையில் காட்டாது பாவக்கணக்கில் எழுதிவிட்டனர்.

மக்களவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி,
ஜூன் 2024 தரவுகளின்படி,  உத்தரப்பிரதேசத்தில் ஆறு வயதுக்குக் குறைவான 46.36% விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலை, பா.ஜ.கவைச் சார்ந்த அமைச்சரே தெரிவித்திருக்கிறார். அது பற்றியெல்லாம் அந்த முதல்வருக்குக் கவலையே இல்லை.

“கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது, சிறு குழந்தையின் கையில் கிடைத்த நெருப்புப் பந்தம் வீட்டையே – ஊரையே எரித்துச் சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்றுவிட்டது என்று சொல்லலாம்” என்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்தான் ‘கடவுள் ஒரு கற்பனையே’ என்ற கட்டுரையில் சொல்லுகிறார்.

தீச்சட்டி ஏந்துவது,

நாக்கில், கன்னத்தில் அலகு குத்துவது, பால்குடம் எடுத்தல், சறுக்கு மரம் ஏறுதல், காவடி தூக்குவது, நடைப்பயணம் செல்வது, மொட்டை போடுவது, முதுகில் அலகு குத்திக்கொண்டு லாரி, வேன் இழுப்பது, ராட்சத கிரேன் மூலம் அந்தரத்தில் பருந்து போல் தொங்குவது. தலையில் தேங்காய் உடைப்பது. உடல் முழுவதும் மிளகாய்த் தூள் பூசிக்கொள்வது. உயிருடன் இருக்கும் ஆடு, கோழியின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடிப்பது போன்ற எத்தனை எத்தனை வேடிக்கை, எல்லாமும் மூடபக்தனுக்கு வாடிக்கை. இதில் எதையாவது பார்ப்பனர்கள் செய்வது உண்டா? அதனால்தான் பார்ப்பனர்களைப் பார்த்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்றார் தந்தை பெரியார்.

தீ மிதித்தலுக்காக, பக்தர்கள் கையில் காப்புக் கட்டி, ஒரு மண்டல காலத்துக்கு விரதம் இருந்து ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக் கொண்டு, இரு வேளைக் குளியல் செய்து, காலணிகள் அணியாது இருக்கவேண்டுமாம். இந்த விதிகளை மீறினால் ஒன்றிய அரசின் ‘பாரதிய நியாய சன்ஹிதா’ சட்டப்படி ஆத்தா தண்டித்துவிடுவாள் போல! இரவு முழுவதும் மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து, ஒலிபெருக்கிகளில் பக்தி கீதம், வாணவேடிக்கை, என்று மேளதாளம் முழங்க ஆத்தா ஊர்வலம். முதியவர்கள் குழந்தைகள் நோயாளிகள் என்று ஊரில் யாரையும் உறங்க விடுவதில்லை.

தங்களை ஜாதி இந்துகள் என்று நம்புகிறவர்கள்.தீ மிதிப்பதற்கு முந்தைய நாட்களில் அவரவர் வகையறா பெருமைக்காக மண்டகப்படி சடங்கு செய்து. அம்மன் வீதிஉலா நடத்துகின்றனர். ஒரு காலத்தில் ஆத்தாளை அலங்கரித்து தோளில் தூக்கிச் சுமந்தனர். பிறகு மரத்தில் ‘சகடைவண்டி’ செய்து இழுத்தார்கள். பின் அதில் மாடுகட்டி ஓட்டினார்கள். டிராக்டர் கண்டுபிடித்த பிறகு, அதனைப் பயன்படுத்தினார்கள். இப்போது குட்டி யானையில் பவனி வருகிறது. சில இடங்களில் பெரிய அளவில் தேர் செய்து வடம்போட்டு இழுக்கிறார்கள். குறிப்பிட்ட ஜாதி வட்டத்துக்குள்ளேயே தான் இத்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

மகாபாரதத்தின் முக்கிய பெண்
கதாநாயகி என்று வர்ணிக்கப்படும் திரவுபதி. பஞ்சபாண்டவ
சகோதரர்களான யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய அய்வரின் அழியா பத்தினியானவள் தீயில் பிறந்ததாக நம்பப்பட்டு, அந்த அம்மையாரைப் போற்றி வணங்கித்தான் தீமிதி ஊர்தோறும் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனை எப்படி ‘அவன் எங்கள் ஜாதிதான்’ என்று 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் உரிமை கொண்டாடுகிறார்களோ, அதுபோலவேதான். திரவுபதியைச் சில ஜாதிய அமைப்புகள் ‘எங்கள் தெய்வம்’ என்று உரிமை கொண்டாடுகின்றன.

கர்நாடகாவின் திகலா சமூகத்தினர் திரவுபதியை ஆதி பராசக்தியின் அவதாரம் என்றும், அவர்களின் சமூகங்களின் வீட்டுத் தெய்வம் என்றும் நம்புகிறார்களாம். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தீமிதிக்கின்றனர். பாவம் அவர்கள் இங்கிருந்து சென்றவர்கள் தானே! அந்நாட்டைச் சார்ந்தோர் சிலர் திரவுபதியைப் பற்றிய கதையை அறியாமலே தீக் குண்டத்தில் வேடிக்கையாக நினைத்து இறங்குகின்றனர். அதனை நம் பக்த சிகாமணிகள் படம்பிடித்து புளகாங்கிதம் அடைகின்றனர்.

“மாரியம்மனை எல்லோரும் கும்பிட்டாலும் அந்தத் தேரைத் தொட்டு இழுக்கிற போதுதான் சிக்கல் வருகிறது. இது ஜாதி அடிப்படையில் கோயிலைப் பேண முயலுகின்ற போது வருகிற தகராறு. பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அடித்தளத்தில் பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான நிலையில் இருந்தாலும் வழிபடுவதில் ஒருமித்த கருத்து இல்லையே, சண்டை சச்சரவுகள் அதிலிருந்து தானே கிளம்புகின்றன ” என்று தனது ஆய்வுச் செய்தியை பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்கள் ‘சாதி என்பது குரூரமான யதார்த்தம்’ என்ற நூலில் சொல்கிறார். ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சல் தானே!

தீமிதி நடக்க இருக்கும் கோயிலுக்கு முன்பு ஒரு குழியைவெட்டி. டன் கணக்கில் விறகுக் கட்டைகளைக் குழிக்குள் போட்டுத் தீமூட்டி. தகதகவென நெருப்பு கனன்று கொண்டிருக்கையில், அதில் பூப்பந்தை உருட்டி விளையாட ஒரு வகையறா லைசென்ஸ் வைத்திருப்பார்கள். மல்லிகைப் பூவைச் சரமாகத் தொடுத்து, பந்து போன்று சுருட்டி, அந்தப் பூவை நெருப்பில் உருட்டுவது என்பது மனிதனின் மென்மையான உணர்வுகளைக் கொல்லும் செயலா, இல்லையா? பூப்பந்தை நெருப்பில் உருட்டிவிடும் உரிமைக்காக பெரியப்பா, சித்தப்பா மக்களுக்குள் போட்டி – சண்டை – மண்டை உடைப்பு என்பதோடு, உரிமையை நிலைநாட்டுவதற்கு நீதிமன்ற வாசலில் ஆண்டுகணக்கில் நிற்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன் சீர்காழிப் பகுதியில் கோவில் தீமிதி நடத்துவதில் இரு தரப்புக்கி
டையே யார் பெரிய ஆள்? என்று மோதல் ஏற்பட்டு கோவில் வன்முறைக் களமாகி உச்ச நீதிமன்றம் வரையில் சென்றனர்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் பிறப்பித்த உத்தரவு. “தினமும் இதுபோன்ற வழக்குகளை, இந்த நீதிமன்றம் விசாரிக்கிறது திருவிழாவை யார் நடத்துவது என, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இரு குழுக்களால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது. கோவில் திருவிழாக்களுக்குப் போலீஸ் பாதுகாப்புக் கோரி, ஏராளமான வழக்குகள் தாக்கலாகின்றன. கடவுளைப் பிரார்த்தித்து, பக்தர்கள் தங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றைப் பெறத் தான் கோவில்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலும் கோவில் விழாக்கள் வன்முறை உருவாக்கும் களங்களாகின்றன. கோவில் திருவிழா என்பது, யார் தங்கள் பகுதியில் பெரிய நபர் என்பதை நிரூபிக்கும் ஒரு களமாக உள்ளது. இதுபோன்ற கோவில் திருவிழாவில், பக்தி என்பதற்கு இடமே இல்லை. மாறாக, இரண்டு தரப்பினரின் பலத்தை நிரூபிப்பதாக அமைகிறது. இது, திருவிழாக்களின் உண்மையான நோக்கத்தைச் சிதைக்கிறது. இதுபோல வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, வன்முறையைத் தவிர்க்க, கோவில்களையே மூடி விடலாம்.” என்று நீதிபதி குறிப்பிட்டதும். இரு தரப்பும் திகைத்து நின்றுவிட்டார்கள்.

மேலும் நீதிபதி, “இதுபோன்ற கோயில்
திருவிழாவுக்குப் பாதுகாப்பு வழங்கத் தேவை
யில்லை. கோயில் திருவிழாவை நடத்தும் பொறுப்பை அந்தக் குழுக்களுக்கே விட்டு விடுகிறேன். ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை
ஏற்பட்டால். அதற்குக் காரணமான நபர்கள் மீது சம்பந்தப்பட்ட போலீசார் சட்டப்படி நடவடிக்
கையை எடுக்க வேண்டும். கோயில் திருவிழாவை
யும் மேற்கொண்டு நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி விட வேண்டும்.” என்று திருடன் கையில் கல்லாப்பெட்டிச் சாவியை ஒப்படைப்பது போன்ற, அதிரடியான தீர்ப்பை எழுதினார். இந்தச் செய்தி 22.7.2023 அன்றைய செய்தித்தாள்களில் வெளிவந்து பக்த கோடிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை 30 அன்று. திருவள்ளூர் மாவட்டம் தாராட்சி கிராமத்தில் நடந்த
தீ மிதித் திருவிழாவில்.

ராஜேஷ் என்பவர் தனது பேத்தியான ஒரு வயது பெண் குழந்தை தர்ணிஜாவைத் தூக்கிக் கொண்டு குண்டத்தில் இறங்கினார். அப்போது ராஜேஷ், கால் இடறி குழந்தையுடன் நெருப்பில் விழுந்தார். இருவரையும் தீக் காயங்களுடன் மீட்ட கிராமத்தினர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனைப்போன்று பக்தியின் பெயரால் அல்லல்படும் பக்தர்களைச் செய்தித்தாள்களில் நாளும் காண்கிறோம்.

அறிவியல் உலகில் இப்படிப்பட்ட அவலங்
களை அகற்ற அனைவரும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவது கட்டாயக் கடமையாகும். m