Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் (ஏப்ரல் 29) பாவேந்தர் ஒருவருக்கே உண்டு!– பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்

நன்முத்தாய்க் கருவான நாளிருந்து
நற்றமிழைத் தாய்மொழியக் கேட்டு ணர்ந்து
தன்மானத் தாலாட்டில் அயர்ந்து றங்கித்
தமிழ்வானப் பரப்பெல்லாம் பறந்த ளந்து
இன்னுயிரின் மேலெங்கள் தமிழே என்றே
எண்திசையும் தமிழிசையை இசைத்து வந்த
தண்டமிழ்க்கோ பாவேந்தர் பாட்டி சைக்குந்
தமிழனுக்கு வீழ்ச்சியென்றும் இல்லை இல்லை!

சாதிமதம் சனாதனப் பொய்க்க ருத்தைத்
தன்மானம் சாய்க்கவந்த சாத்தி ரத்தை
வேதியத்தின் முயற்சிகொல்லும் விதிப்பி ணக்கை
வேற்றுமையைப் போற்றுநரி ஆரி யத்தை
நீதியற்ற சூழ்ச்சிவஞ்சப் பார தத்தை
நேர்மையற்ற இராமகாதைப் புனைச்சு ருட்டைப்
போதிபுத்தர் போற்கருத்தால் போட்டு டைத்த
பாவேந்தர் பாட்டிசைத்தால் வீழ்ச்சி யில்லை!

உணர்ச்சியினை பாட்டுவழி நாளும் பாய்ச்சி
ஊனமுற்ற சிந்தைகொண்ட மடமை நீக்கி
இனமானம் போற்றுதலைக் கடனென் றாக்கி
யாவர்க்கும் யாவுமெனும் நெறியை வாழ்த்திச்
சினங்கொண்ட சிறுத்தைகளாய் நம்மை மாற்றித்
தினவெடுத்த பகையழிக்கும் திறத்தைக் கூட்டி
வனப்பளித்த பாவேந்தர் பாட்டைப் போற்றி
வாழ்ந்திருக்கத் தமிழனுக்கு வீழ்ச்சி இல்லை!

பகுத்தறிவு மணம்பரப்புஞ் செம்பூச் செண்டு!
பகைநடுங்கச் சொல்வெடிக்கும் பாட்டுக் குண்டு!
வகுத்தநெறி வழுவாத பெரியார் தொண்டு
வழிநடந்து வாகைகொண்ட கொள்கைக் குன்று!
தொகுத்தளித்த பாட்டெல்லாம் பனங்கற் கண்டு!
தொல்லைதுயர் தூரவைக்கும் துணையாய் நின்று!
மிகுபுகழார் பாவேந்தர் பாட்டைச் சொல்ல
வீழ்ச்சியில்லை தமிழனுக்கு! வெற்றி உண்டு!

நல்வாய்ப்பாய்த் தமிழருற்ற கணியன் பேரன்!
நாதியற்றார் நலம்பேண வாய்த்த பேகன்!
சொல்வாய்ச்சொல் சேதமறச் செயல்செய் தீரன்!
சுடரெழுத்தால் சூடுதந்த கதிர்வெல் மாறன்!
வெல்வாய்ப்பை ஏழைகொள உழைத்த தோழன்!
வில்லம்பாய்ப் பாடலெய்ய முகிழ்த்த சேரன்!
சொல்வாக்கால் செல்வாக்கைப் பூண்ட வேந்தன்
சொல்லிருக்கத் தமிழனுக்கு வீழ்ச்சி இல்லை!

புரட்டர்களின் பொய்க்கருத்தைச் சிதைத்துப் போட்டுப்
பெண்ணுரிமை பேணிநின்ற தாய்மை நோக்கு!
திரள்செல்வம் ஓரிடத்தில் குவிந்தி டாதே
திரள்கொள்ளப் பரிந்துரைக்கும் பொதுமை நாக்கு!
உரமுடனே மதமடத்தை சாதி நோயை
ஒழித்திடவே ஊறிவந்த அறிவின் தேக்கு!
புரட்சிக்கவி எனுமடையின் பொருத்தப் பாடு
பாவேந்தர் ஒருவருக்கே உண்டென் றாடு! 