இந்த விழா எனது பிறந்த நாளை முன்னிட்டும், காலஞ் சென்ற டாக்டர் அம்பேத்கர் அறிஞர் அண்ணா ஆகியவர்கள் பிறந்த நாள் என்ற பெயராலும் நடைபெறுகின்றது. எங்கள் மூவருடைய உருவப் படமும் இங்கு திறந்துவைக்கப்பட்டு உள்ளன.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை மனிதன் என்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் கொண்டாடவேண்டும். அம்பேத்கர் செய்த காரியம் வேறு யாரும் செய்ய முடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை சதவிகிதம் உண்டோ அத்தனை சதவிகிதம் உத்தியோகம் பதவி முதலியன சட்டப்படி கிடைக்க வகை செய்தார்.
இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒருவருடைய தயவு இல்லாமல் சகல துறைகளிலும் பதவி உத்தியோகம் கிடைக்கச் செய்தவர்.
காந்தியார் மேல்நாட்டில் தாம் இந்தியாவின் பிரதிநிதி என்று கூறினார். உடனே அம்பேத்கர், ‘‘நீங்கள் இந்தியாவின் பிரதிநிதி அல்ல இந்துக்களுக்கு வேண்டுமானால் பிரதிநிதியாக இருக்கலாம்’’ என்று கூறினார்.
மற்றும் ஓர் தடவை இந்தியாவின் பிரதிநிதி தாம் என்று கூறி ஆரம்பித்த உடனே நான் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீங்கள் இந்தியாவின் பிரதிநிதி அல்ல என்று கூறியும் சும்மா இந்தியாவின் பிரதிநிதி என்று கூற வெட்கமாய் இல்லையா என்று கேட்டார். கூட இருந்தவன் எல்லாம் வாபஸ் வாங்கவேண்டும் என்று கூப்பாடு போட்டார்கள். அம்பேத்கர் பயப்படவில்லை.
காந்தியார் தாம் சொன்னதை வாபஸ் வாங்க வேண்டுமே ஒழிய, நான் வாபஸ் வாங்க மாட்டேன் என்று கூறியவர். கீதையை பைத்தியக்காரன் உளறல் என்று இந்த சென்னையிலேயே அவர் சொன்னார். ‘‘அரசியல் சட்டத்தை நான் தான் எழுதினேன் என்று கூறுகின்றார்கள். உண்மை. அதைக் கொளுத்த வேண்டுமானாலும் நான் முன்னணியில் இருப்பேன்’’ என்று எடுத்துரைத்தார்.
சிறந்த ஆற்றல்மிக்க அறிவாளி. தங்கள் இனமக்கள் இந்து மதத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பதைவிட புத்தமதத்தில் சேர்ந்து விடலாம் என்று எண்ணினார். அதன்படி பல லட்சம் மக்களையும் சேர்த்தார்.
அண்ணா அவர்களும் டாக்டர் அம்பேத்கர் போல அதிசயமான தொண்டு செய்தவர் ஆவார். அண்ணா அவர்கள் கொள்கை கடவுள் மதம், சாஸ்திரம் இல்லாத கொள்கையைக் கொண்டு கழகத் தொண்டற்றியவர். இந்தக் கொள்கையினைக் கொண்ட ஆட்சியையே ஏற்படுத்தியவர் அண்ணா .
இந்தக் கொள்கை வேறு எந்த நாட்டிலேயும் நடைபெறவே இல்லை. ரஷ்யாவில் நடைபெற வில்லையா என்று கேட்கலாம். ரஷ்யாவில் நடை
பெறுகின்றது என்றால், அங்கு பலாத்காரத்தின் மூலம் அமலுக்கு வந்தது; பணக்காரனை, பாதிரிகளை, அரசர்களைக் கொன்று கோயிலை இடித்துத்தான் பொது உடைமைக் கொள்கை யினைக் கொண்டுவந்தார்கள்.
அடுத்து எனது பிறந்த நாள் என்பது நீங்கள் என் மீது கொண்டு உள்ள அன்பின் காரணமாகவே எனது பிறந்த நாளையும் சேர்த்துக் கொண்டு உள்ளீர்கள். என்னுடைய கொள்கையும் அம்பேத்கர் அண்ணா ஆகியவர்கள் கொள்கையும் ஒன்றாகவே இருக்கின்ற காரணத்தினால் என்னையும் அவர்களோடு சேர்த்து உள்ளீர்கள்.
இங்கு நமது இயக்கக் கொள்கைகளை உங்களுக்கு விளக்கியாக வேண்டும்.
எங்கள் கொள்கை கடவுள் மதம், சாஸ்திரம் முதலியவைகளை ஒழிக்க வேண்டும் என்பது. ஏன்? இவைகள்தான் நமது மடமைக்கும் இழிவுக்கும் காரணமாக இருக்கின்ற காரணத்தால் இவைகளை ஒழிக்க வேண்டும் என்கின்றோம் என்று எடுத்துக் கூறி தெளிவுபடுத்தினார்கள்.
– ‘விடுதலை’, 27.1.1972
டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பணி இதுவரை இந்நாட்டில் யாரும் ஆற்றாத பணியாகும். அம்பேத்கர் அவர்கள் நாமெல்லாம் மகாத்மா என்று போற்றுகிறவரை, “உனக்கு அறிவு இருக்கிறதா” என்று கேட்டவர். அவ்வளவு துணிவு யாருக்கும் வராது. இலண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் காந்தியாரவர்கள் “நான் இந்தியாவின் பிரதிநிதியாகப் பேசுகிறேன்” என்று குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார். அம்பேத்கர் அவர்கள் எழுந்து “நீங்கள் இந்துக்களின் பிரதிநிதியாக இருக்கலாமே ஒழிய, இந்தியாவின் பிரதிநிதி என்பதை நான் ஒப்புக் கொள்ள மறுக்கிறேன்” என்று குறிப்பிட்டதும் மீண்டும் காந்தியார் “நான் இந்தியாவின் பிரதிநிதியாக” என்று குறிப்பிட்டதும் அம்பேத்கர் அவர்கள் “நான் முன்னமேயே தாங்கள் இந்தியாவின் பிரதிநிதி அல்ல என்பதை எடுத்துச் சொல்லிவிட்டேன் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறீர்கள். உனக்கு அறிவு இருக்கிறதா இல்லையா?” என்று துணிந்து கேட்டார்.
மனித சமுதாயத்தில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டு மென்று சொன்னவர். ஒரு மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும்படி கேட்டுக் கொண்டு, அவரது தலைமையுரையினை அச்சிட்டு வெளியிட வேண்டுமென்று கேட்டிருந்தார்கள். அந்த உரையில் இந்துமதம் ஒழியாமல் ஜாதி ஒழியாது. ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் இந்து மதம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதை விளக்கியிருந்தார். இதைக் கண்டதும் மாநாட்டுக்காரர்கள் இக்கருத்தினை நீக்கிவிட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர் மறுத்துவிட்டதோடு, நான் அதிலுள்ளபடிதான் பேசுவேன். பின்னால் பேசுகிறவர்கள் அதைக் கண்டித்துப் பேசட்டும். நீக்கிவிட்டுப் பேச முடியாது என்று மறுத்து விட்டார். அந்த உரையை வாங்கி நான் தமிழில் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
இரண்டொரு மாநாட்டில் இராமாயணத்தைக் கொளுத்தியிருக்கிறார். அவர் மந்திரியாக இருந்த போது சென்னை வந்தார். அப்போது அவர் “கீதை, பைத்தியக்காரனின் உளறல்” என்று சொன்னார். பத்திரிகைகளெல்லாம் மந்திரியாக இருந்து கொண்டு அம்பேத்கர் இப்படி பேசக்கூடாது என்று கண்டித்து எழுதின. அவர் அதை இலட்சியம் செய்யவில்லை. அவரது கருத்துகள், கொள்கைகள் மிகச் சிறந்தவையாகும். அதை யாராலும் கண்டிக்க முடியவில்லை. அவர் இந்தியாவிலேயே செயற்கரிய செய்தவராவார்.
– ‘விடுதலை’, 26.10.1970