எல்லாரும் போற்றுகிற தலைவர் ஆனார்!
இனியநறுஞ் சிந்தனைகள் விதைத்தார்; என்றும்!
நல்லவராய் வல்லவராய் நாட்டு மக்கள்
நலம்பெறவே அம்பேத்கர் உழைத்தார்! வேண்டாப்
பொல்லாத சனாதனம் மனுதர் மத்தை,
பொய்யுரைக்கும் கீதையினை வெறுத்துச் சொன்னார்!
செல்வமெனக் கல்வியினைப் போற்றி நாட்டில்
சீர்திருத்தம் சமூகத்தில் மலரச் செய்தார்!
சாதிமத எதிர்ப்பாளர்! ஒடுக்கப் பட்ட
தலித்மக்கள் உரிமைக்கே பாடு பட்டார்!
நீதியெலாம் சமத்துவமாய் எவர்க்கும் கிட்ட
நேரடியாய் ஆரியத்தை எதிர்த்து வென்றார்
வேதியர்கள் பொய்புரட்டை விளக்கிக் கூறி
வீறுணர்ச்சி மேலோங்கச் செய்தார்! வாழ்வில்
ஏதிலியாய் அடிமையென வாழ்ந்த மக்கள்
ஏற்றத்தை மாற்றத்தை எய்தச் செய்தார் !
இந்நாட்டின் முதல்சட்ட அமைச்சர் ஆனார்!
ஏழைகளும் உயர்வதற்கே வாழ்நாள் எல்லாம்
இந்தியாவின் வரலாற்று உண்மை யாவும்
ஏற்புடனே நுட்பமாக ஆய்ந்து சொன்னார்!
இந்தியநாட் டரசியலின் சாச னத்தை
இயற்றியஓர் உயர்சிற்பி! சட்ட மேதை!
வெந்திறலால் அரசியலை, தத்து வத்தை
விருப்புடனே பொருளியலை உணர்ந்து தேர்ந்தார்!
இந்துமதக் கொடுமைகளை எடுத்துக் கூறி
இழிவினின்றும் மீள்வதற்கே வழிகள் சொன்னார்!
இந்துமதம் தனில்விலகி எண்ணற் றோரை
இசைவுடனே புத்தமதம் சேரச் செய்தார்!
தந்தைநம் பெரியாரால் தலைவ ராகத்
தகவுடனே அம்பேத்கர் ஏற்கப் பெற்றார்!
இந்நாட்டுப் பெண்களுக்கும் சொத்தில் பங்கும்
இருப்பதற்குப் போராட்டக் களம்கண் டாரே!